Menu Close

ஐசுவரியவானும் லாசருவும் – லூக்கா 16 : 19 – 31

ஐசுவரியவான் ஒருவன் விலையுயர்ந்த இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து பெரிய வீட்டில் வாசம் பண்ணினான். அங்கு லாசரு என்ற தரித்திரன் பருக்கள் நிறைந்தவனாய் தனக்கு வீடு கூட இல்லாமல் ஐசுவரியவானின் வாசலருகே வாழ்ந்தான். அவனுடைய பருக்களை நாய்கள் நக்கிற்று. ஐசுவரியவானின் மேசையிலிருந்து விழும் துணிக்கைகளினாலே தன் பசியை ஆற்றினான்.

தரித்திரன் ஒரு நாள் மரித்த போது தேவதூதர்கள் அவனது ஆத்துமாவைச் சுமந்து ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். ஆனால் ஐசுவரியவனோ மரித்த போது அவனுடைய சொந்த பந்தங்களால் அடக்கம் பண்ணப் பட்டான், தூதர்கள் அவனது ஆத்துமாவைச் சுமந்ததாகச் சொல்லப்படவில்லை. அவன் பாதாளத்தில் தள்ளப்பட்டான்.  அங்கு அவன் மிகவும் வேதனைப்பட்டான். அவன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது ஆபிரகாமையும் அவன் மடியில் இருந்த லாசருவையும் பார்த்தான்.

ஐசுவரியவான் ஆபிரகாமை நோக்கி தான் அக்கினி ஜ்வாலையில் வேதனைப் படுவதாகவும்  லாசருவின் விரலினால் தண்ணீரில் தோய்த்து அவனுடைய நாவைக் குளிரப் பண்ணும்படி அனுப்ப வேண்டினான். இதிலிருந்து பாதாளத்திலிருந்து பரதீசைப் பார்க்கவும், பரதீசில் இருப்பவர்களோடு பேசவும் முடியும் என அறிகிறோம். மேலும் பாதாளத்தில் இருப்பவர்களையும், பரதீசிலிருப்பவர்களையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என அறிகிறோம். பாதாளமும், பரதேசும் பூமிக்கடியில் உள்ளன. (ஏசா14 : 9 மத்தேயு 12 : 40 எபே 4 : 8 – 10)
மரணமடைந்தவர்களின் உடலின் பாகங்கள் மட்டுமே அழிந்து போகும். ஆவி, ஆத்துமா வாலான உள்ளான மனிதன் மரணமடைவதில்லை. அவன் தேவதூதாரால் கொண்டு செல்லக் கூடிய ஒரு நபர் என்று அறிகிறோம்.

ஐசுவரியவானின் கேள்விக்கு ஆபிரகாம் “மகனே” என அழைத்து “நீ பூமியிலிருக்கும் பொழுது நன்மைகளை அனுபவித்தாய், லாசருவோ தீமைகளை அனுபவித்தான். இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான். நீயோ வேதனைப் படுகிறாய்.” என்றான். மேலும் பரதீசிலிருந்து பாதாளத்திற்கு வரமுடியாது என்றான். பாதாளத்திலிருப்பவர்கள் ஒரு சொட்டுத் தண்ணீருக்கு ஏங்குவார்கள் என்று அறிகிறோம்.

ஆபிரகாம் கூறியதைக் கேட்ட ஐசுவரியவான் தன்னுடைய ஐந்து சகோதரர்களும்
இங்கு வராதபடி லாசருவை அவன் வீட்டுக்கு அனுப்பி சாட்சியை அவர்களுக்குக் கூறினால், மரித்தொரிலிருந்து லாசரு அங்கு செல்லும் பொழுது அவர்கள் மனந்திரும்புவார்கள் என்றான். இதிலிருந்து பாதாளத்திலிருப்பவர்களுக்கு தங்கள் உறவினர்களின் நினைவு உண்டு. அவர்களின் மீது அன்பு இருப்பதோடு அவர்கள் பாதாளத்திற்கு வந்து விடக் கூடாது என்ற கரிசனையும் உண்டு என்று அறிகிறோம்.

இங்கு இருவரின் நிலைமையும் தலைகீழாக மாறி விட்டதைக் காணலாம்.
ஆபிரகாமின் மகனாக இருந்த போதிலும் ஐசுவரியவான் பாதாளத்திற்குச் சென்றான்.
ஏனெனில் அவனது வாழ்க்கை முழுவதும் சுயத்தைச் சார்ந்த வாழ்வாயிருந்தது. அவன் தன் வாழ்க்கையில் தவறான பாதையைத் தெரிந்து கொண்டு இறுதியில் நித்திய வேதனை அனுபவித்தான். அதேபோல் கிறிஸ்தவர்களாகப் பிறந்தவர்களும் பாவத்திலிருந்து மனந் திரும்பாமல் மரணமடைந்தால் பாதாளத்திற்குச் செல்ல நேரிடும் அவன் நன்மைகளை அனுபவிப்பது தவறல்ல. தனது வாசலில் உள்ள ஏழையான லாசருவுக்கு உதவி செய்யாதது தான் குற்றமாகும். தன்னலத்திற்கான தண்டனையும் பெற்றான்.

லாசரு தன் வாழ்நாள் முழுவதும் வறுமையிலும், துன்பத்திலும் வாழ்ந்தான்.
ஆனால் அவனுடைய இருதயம் தேவனோடு சரியான பிரகாரம் நீதியுள்ளதாயிருந்தது. அவன் தேவன் மீதுள்ள தனது விசுவாசத்தை ஒரு போதும் தளரவிடவில்லை. அவன் மரணமடைந்த போது உடனடியாக பரதீசுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆபிரகாமுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்றான். இந்த இருவரின் முடிவான இடமும் மரணத்தின் போது மாற்றக் கூடாததாய் இருந்தது.

நாமும் ஏழைகளுக்கு உதவி செய்து இயேசுவோடு இருக்கும் பாக்கியம் பெறுவோம்

Related Posts