Menu Close

புதிய ஏற்பாடு முன்னுரை

பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான மல்கியா தீர்க்கதரிசன புத்தகத்திற்கும், புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள். இந்தக் காலத்தை அமைதி காலம் அல்லது மௌனகாலம் என்றழைக்கப்படுகிறது. இந்த அமைதி காலத்தில் கர்த்தருடைய வார்த்தையைக் கூறுவதற்கு ஆட்கள் இல்லை என்றாலும் அவருக்கு சேவைசெய்யும் மனிதர்கள் இருந்தனர். பழைய ஏற்பாட்டின் முறைப்படி கர்த்தரின் பணியைச் செய்து வந்த சகரியாவிடமிருந்தே புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் துவங்குகிறது.

மல்கியா முதல் கிறிஸ்து வரை நடந்த காலங்கள்

  1. பெர்சியரின் காலம்
  2. கிரேக்கர்களின் காலம்,
  3. ஆஸ்மோனியரின் காலம்
  4. ரோமர்களின் காலம்.

இந்த அமைதி காலத்தில் யூதர்கள் தங்கள் மதத்திலிலுள்ள பல பிரிவுகளைக் கொண்ட குழுக்களாகப் பிரிந்து நின்றனர்.  அவைகளில் சில

1. பரிச்சேயர்கள் – மாற் 10 : 12

2. சதுசேயர்கள் – மாற் 12 : 18

3. எஸ்ஸேனர் –  (துறவிகள்)

4. ஏரோதியர் –  மத் 22 : 16  மாற் 3 : 6  5. தீவிரவாதிகள் –  லூக்  6 : 15

புதிய ஏற்பாட்டில் பழைய ஏற்பாட்டின் மதம் முற்றிலும் நீக்கப்பட்டு புதிதான மார்க்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலக வரலாற்றை கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என இயேசுவின் பெயரால் பிரிக்கப்பட்டது. வேதாகமத்தையும் கிறிஸ்துவுக்கு முன்னுள்ள பகுதியை பழைய ஏற்பாடென்றும், பின்புள்ள பகுதியை புதிய ஏற்பாடென்றும் இயேசுவுவின் பிறப்பு இரண்டாகப் பிரித்தது. ஏற்பாடென்றால் இருவர் தங்களுக்குள் ஏற்படுத்தும் உடன்படிக்கை என்று பொருள். மோசேயின் வழியாக தேவன் இஸ்ரவேலரோடு செய்த உடன்படிக்கையை பழைய ஏற்பாடென்றும், இயேசுவின் வழியாக மனுக்குலம் அனைத்துடனும் செய்த உடன்படிக்கையை புதிய ஏற்பாடென்றும் கூறப்படுகிறது.

பழைய ஏற்பாட்டின் மையப்பொருள் நியாயப்பிரமாணம். புதிய ஏற்பாட்டின் மையப்பொருள் கிறிஸ்துவின் மூலம் வந்த இரட்சிப்பின் சுவிசேஷமே. பழைய ஏற்பாட்டில் தொடங்கும் தேவனின் வெளிப்படுத்தல்கள் புதிய ஏற்பாட்டில் முற்றுப்பெறுகின்றன. புதிய ஏற்பாட்டின் தொடக்கத்திலுள்ள நான்கு சுவிசேஷ புத்தகங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவைகளை புதிய ஏற்பாட்டின் ஆதியாகமமாகக் கொள்ளலாம். திருச்சபையின் தொடக்கத்தையும், ஆன்மீக பாதைகளையும் கூறும் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை புதிய ஏற்பாட்டின் யாத்ரகாமம் எனலாம்.

பேதுரு எழுதியுள்ள 1 பேதுரு, 2 பேதுருவும், யாக்கோபு எழுதியுள்ள யாக்கோபு நிருபமும், யோவான் எழுதியுள்ள 1 யோவான் 2 யோவான் 3 யோவான் நிருபங்களும் யூதா எழுதிய யூதா நிருபமும் ஆகிய ஏழு நிருபங்களும் விசுவாசிகளின் வாழ்வில் ஏற்படும் சிக்கல், தீர்வுகளைப் பற்றிக் கூறுவதால் புதிய ஏற்பாட்டின் எண்ணாகமம் எனலாம். கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் சபைகளைப் பற்றிய மதிப்பீட்டையும், அனைத்து தீர்க்கதரிசிகளின் நிறைவேறுதலையும் கூறும். இதனை புதிய ஏற்பாட்டின் உபாகமம் எனலாம்.

யூதர்கள் பல நூறு ஆண்டுகள் தங்களை மீட்க வரும் இரட்சகர் உலகப் பிரகாரமான அரசியல் தலைவரைப் போல யூதர்களுக்கென தனி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து அவர்களை அவரே ஆளுகை செய்வார் என நினைத்தனர். அவர்களை மீட்கும் மேசியா இராஜகுலத்திலிருந்தோ, இராஜாக்களின் அரண்மனையிலிருந்தோ வராமல் ஏழை தச்சனுடைய குடும்பத்தில் யூதரின் ராஜாவாகப் பிறந்தார். அவர் ஆத்மாவை மீட்கும் இரட்சகராக வந்தாரேயன்றி ஆட்சியை மீட்கும் மன்னராக வரவில்லை.

Related Posts