நிக்கொதேமு ஒரு பரிச்சேயர், யூதர்களுக்குள்ளே ஒரு அதிகாரி, போதகர் – யோ 3:10 பரிச்சேயரோடும், பிரதான ஆச்சாரியாரின் குழுவினரோடும் உரையாடும் அளவிற்கு மதிக்கப்பட்டவராயிருந்தார் – யோ 7:32, 50-52 பகலில் வந்தால் யாவருக்கும் தெரியும் என்று அஞ்சியதால் இரவில் வந்து இயேசுவைப் பாராட்டிய நிக்கொதேமு ஒரு இரகசிய சீடரானார். இயேசு தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார். இயேசு அவனிடம் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்றார். நிக்கொதேமு மறுபடியும் ஒருவன் எப்படி பிறக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினான். அதற்கு இயேசு ஒருவன் தண்ணீரினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் செல்ல முடியாது என்றார்.
ஆவியினால் பிறப்பதற்கும் இயேசு அவனுக்கு விளக்கமளித்தார். காற்றின் பிறப்பிடத்தையும், முடிவடையும் இடத்தையும் அறியாத போதிலும் காற்று வீசுவதை ஒருவன் உணர்ந்து செயல்படுவது போன்று, ஆவியினால் பிறந்தவன் ஆவியானவரைப் பற்றி முழுவதும் தெரிந்திராத போதும் அவரது செயல்களை உணரவும், அனுபவிக்கவும் அவரது அகத்தூண்டுதலைப் புரிந்து கொண்டு செயல்படவும் முடியும். மேலும் கொள்ளிவாய் பாம்பினால் கடிக்கப்பட்டவன் மோசேயினால் உயர்த்திப் போடப்பட்ட வெண்கல சர்ப்பத்தைப் பார்த்தவுடன் பாம்பின் நஞ்சு நீங்கி பிழைத்தது போன்று – எண் 21:5-9 மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகாமல் உயர்த்தப்படவேண்டும் என்றார். இதற்கு பொருள் பாவத்தால் தாக்கப்பட்டிருக்கும் மக்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை நோக்கிப் பார்த்தால் இரண்டாம் மரணம் என்னும் நரகத்திற்குத் தப்பி நித்தியஜீவனை (தேவனுடன் இணைந்து வாழும் பேரின்ப வாழ்க்கை) அடைவார்கள்.
மேலும் இயேசு நிக்கொதேமுவுடன் தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அனுப்பினார். இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வர் என்றார்.