இயேசு பரலோகராஜ்ஜியம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷருக்கு ஒப்பாயிருக்கிறது என்றார். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது களைகளும் சேர்ந்தே வளருகிறதைப் பார்க்கிறோம். வீட்டெஜமானுடைய வேலைக்காரன் அவனிடத்தில் வந்து “ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்.” அதற்கு அவன் சத்துரு தான் அதைச் செய்கிறான் என்றான். வேலைக்காரனோ அதைப் பிடுங்கிப் போட உத்தரவு கேட்ட போது எஜமான் அறுப்புகாலம் வரை அதை வளர விடுங்கள் என்றும் அறுப்புக் காலத்திலோ களைகளைப் பிடுங்கி முதலாவது அவைகளை சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள் என்றும், கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்றும் கூறினான்.
தேவனுடைய வார்த்தைகளை மக்கள் மத்தியில் விதைக்கிறவர்கள் விதைக்கும் போதே தவறான போதனைகளை அவர்கள் மத்தியில் விதைக்கின்றனர். இந்த உவமையில் வயல் என்பது இந்த உலகத்துக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. நல்ல விதை என்பது தேவராஜ்ஜியத்தில் இருக்கும் உத்தம விசுவாசிகளைக் குறிக்கிறது. களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்களைக் குறிக்கிறது. நற்செய்தியும் உண்மையான விசுவாசிகளும் உலகம் முழுவதும் நாட்டப்படும் போது சாத்தானும் தன்னைப் பின்பற்றுகிற பிள்ளைகளை தேவனுடைய மக்கள் மத்தியில் தேவனுடைய சத்தியத்திற்கு எதிராக கிரியை நடப்பிக்கும்படி நாட்டி வைப்பான்.
சாத்தானுடைய தூதர்களின் முக்கிய பணி தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தை கெடுப்பதாகும். (ஆதி 3:4) மேலும் அநீதி, அக்கிரமம், தீமைகள், ஆகியவற்றை ஊக்குவித்து தவறான உபதேசங்களை பரப்புவதும் அவனுடைய செய்கைகளாகும். (அப் 20:29. 30 2 2:7,12) தீமை செய்கிற சாத்தானின் பிள்ளைகளை மட்டும் அழித்திட கடைசி காலம் வரைக்கும் தேவன் உத்தரவு கொடுக்க மாட்டார்.
நாம் நம் இதயமாகிய நல்ல நிலத்தில் நல்ல உபதேசங்களைக் கேட்டு அதன்படி நடக்கப் பிரயாசப்படுவோம்.