Menu Close

இயேசு குஷ்டரோகிகளுக்கு சுகம் கொடுத்த அற்புதம் – மத்தேயு 8:1–4

இயேசு மலையிலிருந்து இறங்கின போது திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள். அப்பொழுது ஒரு குஷ்டரோகி இயேசுவைப் பணிந்து “ஆண்டவரே உமக்குச் சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்றான் – மத்தேயு 8 : 2 இதில் இந்த குஷ்ட ரோகி இயேசுவை ஆண்டவராக  ஏற்றுக்கொண்டிருந்தான். பணிந்து கொண்டான். இயேசுவால்  தன்னை முற்றிலும் குணமாக்க முடியும்  என்று நம்பினான். ஆனால் தனக்கு சுகம் தருவதற்கு தேவனுக்கு விருப்பமுண்டா என்பதை மட்டும் சந்தேகப்பட்டார். மிகவும்

பரிசுத்தமான கரம் ஒரு தீட்டான உடலைத் தொட்டது. “எனது விருப்பத்தை, திட்டத்தை, சித்தத்தை இம்மனிதன் சந்தேகப்பட்டு விட்டானே” என்ற மனவேதனை தமது கையினால் தொழுநோயாளியைத் தொடச் செய்தது. பாவமும் தொழுநோயைப் போன்றதாகும். எந்தப் பாவியும் இயேசுவிடம் வந்தால் அவர் தொட்டு மன்னிப்பார், மாற்றுவார்.

இன்றும் அநேகர் இதேபோல் “எனது துக்கத்திலிருந்து, வியாதியிலிருந்து, கடன் பாரத்திலிருந்து விடுதலை கொடுப்பது தேவனுடைய சித்தமா?” என்ற சந்தேகத்தில் உள்ளனர். இயேசு அவரை நம்பும் யாவருக்கும் “எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு” என்றுதான் கூறுகிறார். இப்பொழுதே இயேசுவை நம்பி விடுதலையையும், சுகத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு அவனிடம் இதை ஒருவருக்கும்  சொல்லாதே என்று எச்சரித்தார். மேலும் ஆசாரியர்களிடம் காண்பித்து மோசே கட்டளையிட்ட காணிக்கையை செலுத்தக் கூறினார் – லேவி 14 : 1 – 32 ஆனால் அவனோ இந்த சங்கதியை யாவரிடமும் கூறினான்.

இதேபோல் இயேசு எருசலேமுக்குச் செல்ல சமாரியா, கலிலேயா நாடுகள்
வழியாக கடந்து சென்ற போது ஒரு குறிப்பிட்ட கிராமத்தைக் கடக்கும் போது பத்து குஷ்ட ரோகிகள் இயேசுவை சந்தித்தனர் லூக்கா 17 : 12 – 19 அவர்களைத் தொட்டால் தீட்டு என்பதால் அவர்கள் தூரத்தில் நின்று “இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும்” என்று கூப்பிட்டனர்.
அவர்கள் இயேசுவை அறிந்திருந்ததினால் இயேசு சுகம் தருவார் என்ற விசுவாசமும் அவர்களுக்கிருந்தது. எனவே தான் “எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமிட்டனர்.

இயேசு அவர்களைப் பார்த்ததும் “நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு உங்களுக்குக் காண்பியுங்கள்” என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்கள்
சுகமாவது பற்றி இயேசு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சுகமாவதற்கு முன் எப்படி
ஆசாரியனுக்குக் காண்பிக்க முடியும் என்று கேட்கவில்லை. போகையில் சுத்தமானார்கள்.
ஒரு நொடிப்பொழுதில் ஒரு குஷ்டரோகியை சுகமாக்கிய – மத்தேயு 8:2 – 4  இயேசு, இதில் சிறிய இடைவெளியில் அதாவது போகையில் சுகமானார்கள்.

சுகமான பத்து பேரில் ஒருவர் மட்டும் வந்து இயேசுவுக்கு நன்றி தெரிவித்தான். இயேசு அவனை நோக்கி சுத்தமானவன் பத்து பேர் அல்லவா மற்ற ஒன்பது பேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துவதற்கு இந்த அந்நியனே ஒழிய மற்றொருவர் திரும்பி வரக் காணோமே” என்று கூறினார். நன்றிசொல்ல வந்தவனை நோக்கி “நீ எழுந்து வா, உன்
விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். இயேசுவிடம் நன்றி செலுத்த வந்தவன் சமாரியன். மற்ற ஒன்பது பேர்களும் யூதனாயிருந்திருக்க வேண்டும். யூதர்கள் சமாரியர்களைத் தொட மாட்டார்கள். இயேசு யூதர்களை வெட்கப்படுத்தும்படியாய், அவர்கள் சமாரியர்களுக்குப் பயன்படுத்திய பதம் அதாவது அந்நியன் என்ற சொல்லை பயன்படுத்தினார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் நன்றி சொல்ல மறந்த ஒன்பது பேரைப் போல் இல்லாமல் இயேசுவிடம் நன்றி சொல்ல வந்த சமாரியனைப்  போல நாமும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Related Posts