பேதுரு இயேசுவிடம் “என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால் நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டான். அதற்கு இயேசு “ஏழுதரம்மாத்திரம்
அல்ல, ஏரெழுபதுதரம் மட்டும்” என்று கூறி இந்த உவமையைக் கூறினார். ஆண்டவனுக்கு முன்பாக பதினாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டு
வந்தனர். கடனைத் தீர்க்க ஒரு வழியும் இல்லாததால் அவனையும், அவன் மனைவி, பிள்ளைகளையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் தீர்க்கும்படி கட்டளையிட்டான்.
அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து “ஆண்டவனே பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்” என்று கெஞ்சினான். அவனுடைய ஆண்டவன் மனமிரங்கி அவனை விடுதலை பண்ணி கடனையும் மன்னித்து விட்டான். ஆனால் அவன் புறப்பட்டுப் போகும்போது தனக்கு நூறு வெள்ளிப்பணம் தரவேண்டிய ஒருவனைக் கண்டு அவனது தொண்டையை நெரித்து நீ பட்ட கடனைத் தா எனக் கேட்டான். அவனோ பொறுமையாயிரும் எல்லாவற்றையும் தந்து விடுகிறேன் என்று வேண்டியும் கேட்காமல் அவனைக் காவலில் வைத்தான். நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரன் கண்டு மிகவும் துக்கப்பட்டு ஆண்டவனிடத்தில் அதைத் தெரிவித்தான்.
அப்பொழுது ஆண்டவன் அவனை அழைத்து “ நான் உனக்கு இரங்கினது போல் நீயும் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ என்று கூறி கோபத்தில் அவனுடைய கடனையெல்லாம் கொடுத்துத் தீர்க்குமட்டும் உபாத்திக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் நமது தவறுகளைக் கர்த்தர் மன்னிப்பது போல நாமும் நமக்கெதிராகச் செய்தவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும். மற்றவர்களின் தவறுகளை மன்னிக்காதவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பு கிடைக்காது.