இயேசு அநேக அற்புதங்களைச் செய்ததால் அவருடைய புகழ் யூதேயா, சமாரியா, கலிலேயா மற்றும் அருகாமையிலிலுள்ள நாடுகளில் காட்டுத்தீயெனப் பரவியது. இயேசுவுக்கும், சீஷர்களுக்கும் இளைப்பாறக் கூட நேரம் கிடைக்காததால் வனாந்தரமான ஒரு இடத்திற்கு இளைப்பாறச் சென்றார்கள். அவர்கள் கலிலேயாக் கடல் வழியாகக் படகில் சென்றார்கள். ஆனால் திரள்கூட்டமான ஜனங்கள் இயேசுவும் சீடர்களும் செல்வதைக் கவனித்து கரை வழியாய் விரைந்து இயேசுவும் சீஷர்களும் வருவதற்கு முன் அங்கு வந்து குவிந்து விட்டனர்.
திரளான மக்களைக் கண்ட இயேசு அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் இருந்ததால், அவர்கள் மீது மனதுருகினார். இளைப்பாற வந்த இயேசு திரளான ஜனங்களைக் கண்டு சிறிதும் கோபப்படாமல் ஜனங்களுக்கு மனமிரங்கி பிரசங்கிக்கத் தொடங்கினார். பொழுது சாய்ந்து போனதால் சீஷர்கள் ஜனங்களை அனுப்ப அவசரப்பட்டனர். ஆனால் இயேசு தமது சீடர்களைப் பார்த்து “அவர்களுக்கு புசிக்க ஏதாகிலும் கொடுங்கள்” என்றார். அவர்களைப் பசியோடு அனுப்ப இயேசு விரும்பவில்லை சீஷர்கள் இயேசுவிடம் இருநூறு பணத்திற்கு அப்பம் வாங்கினாலும் இத்தனை ஜனங்களும் போஷிக்க முடியாதே என்றனர்.
இயேசு அவர்களிடம் “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன” என்றார். சீஷர்கள் அதற்கு “இங்கு ஒரு பையனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன” என்றனர். இயேசு அவைகளை அவரிடத்தில் கொண்டு வரச்சொல்லி, ஜனங்களை புல்லின்மேல் வரிசை வரிசையாக உட்காரச் சொன்னார். இயேசு அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீஷர்களிடம் கொடுத்து பரிமாறும்படி சொன்னார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தனர். மீதியான துணிக்கைகளை பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தனர். சாப்பிட்டவர்களில் ஆண்கள் மாத்திரம் 5000 பேர்.
இந்த அற்புதத்தால் இயேசுவே ஜீவஅப்பம் என அறிகிறோம் (யோ 6:33) இயேசுவே சரீரத்திற்கும், ஆத்துமாவுக்கும் தேவையானதைத் தந்து போஷிக்கிறவர் என்று அறிகிறோம். மக்களுக்கு உதவி தேவைப்படும் போது இயேசு அனுதாபத்தையும், இரக்கத்தையும் காட்டுகிறவர் என்றும் அறிகிறோம்.
நமக்குள்ள கொஞ்ச பொருளை தேவனுடைய கரத்தில்கொடுக்கும் போது, அது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பன்மடங்காகப் பெருகும். நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் இருப்பவைகளை உற்சாகமாக ஆண்டவரிடத்தில் கொடுத்து தேவ ஆசிகளைப் பெற்றுக் கொள்வோம்.