இயேசு மக்களுக்கு அறிவிக்கப்படும் நற்செய்தி அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை விளக்கும்படி இந்த உவமையைக் கூறினார். இதில் மூன்று உண்மைகளைக் கற்றுக் கொள்ளலாம்.
- கர்த்தருடைய வார்த்தையை ஒருவர் எப்படி ஏற்றுக் கொள்ளுகிறார் என்பதை பொறுத்து மனந்திரும்புதலும், கனிதருதலும் அமையும் – யோ 14:1-10
- நற்செய்தியைக் கேட்டும் அது பலருக்குப் புரியாது – மாற் 4:15 வேறு சிலர் நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்து மனந்திரும்புவார்கள். ஆனால் சிறிது காலத்திற்குள் விசுவாசத்தை விட்டுப் பின்வாங்கிப் போவார்கள் – மாற் 4:16-19
- இன்னும் சிலர் நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்து, மனந்திரும்பி நற்கனிகளைத் தருவார்கள் – மாற் 4:20
தேவனுடைய வார்த்தையின் எதிரிகள் யாரென்றால் சாத்தான், உலகக் கவலைகள், ஐசுவரியம், இன்பங்கள் ஆகியவை. சிலர் வசனத்தைக் கேட்டு அரைகுறையாக மனந்திரும்புவார்கள். இவர்கள் பாவமன்னிப்பை வேண்டுகிறார்கள், ஆனால் ஆவியின் அனுபவம் இவர்களிடம் இல்லை. இவர்கள் இரட்சிப்பையும், மறுபிறப்பின் அனுபவத்தையும் பெற்றுக் கொள்வதில்லை. விசுவாசிகளோடு இணைந்து ஐக்கியப்படுவதுமில்லை. உலகத்திலிருந்து பிரிந்து பரிசுத்த வாழ்வு வாழ்வதுமில்லை.
வழியருகே விதைக்கப்பட்டவன் கவனமின்றி வாழ்கிறான். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் முற்றிலும் ஒப்புக்கொடாதவன், எளிதில் பின்மாற்றமடைகிறவன். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் சரியானவற்றிற்கு முக்கியத்துவம் தராதவன். நல்ல நிலத்தில் விதைக்கப் பட்டவனோ, நன்றாக வசனத்தைக் கேட்டு மனதில் ஆழமாகப் பதித்து நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருகிறவன் என்றார்.
இந்த உவமை நாம் எங்கே விதைக்க வேண்டும், நமது காணிக்கைகளை யாருக்கு, எதற்குக் முன்னுரிமை அளித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொள்கிறோம். ஆத்துமா ஆதாயம் செய்யும் ஊழியங்களுக்கும், ஆவியின் வரங்களும், ஆவியின் கனியும் காணப்படும் ஊழியங்களுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னவெனில் நம் உள்ளத்தை நல்ல நிலமாக வைத்து, தேவவசனங்களை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து தேவராஜ்ஜியத்துக்குப் பலன் தருகிறவர்களாக மாறுவோம்.