Menu Close

நல்ல சமாரியன் உவமை – லூக்கா 10:29-37

இயேசுவிடம் ஒருவன் “எனக்குப் பிறன் யார்?” என்று கேட்டதற்கு அவனிடம் இந்த உவமையைக் கூறினார். எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்லும் பாதையில் இருந்த மலைகளிலும், காடுகளிலும் பல கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்து வந்தனர்.  ஒருவன்  எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டதால் அவர்கள் அவனது வஸ்திரங்களை உரிந்து, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராய் விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் வந்த ஒரு ஆசாரியன் அந்த வழியாய்ப் போகும் பொழுது விலகிப் போனான். அதேபோல இன்னுமொரு லேவியனும் அந்த வழியாய் வந்து அந்த மனுஷனைப் பார்த்து விலகிப் போனான்.

ஆசாரியன் என்பவன் ஆலயத்திருப்பணியில் மிகவும் உயர்ந்த பொறுப்பான, பலியிடுவதற்கென தெரிந்தெடுக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவன். லேவியன் என்பவன்   ஆசாரியர்களுக்கு உதவி செய்வதும் ஆலயத்தைக் காவல்காப்பதுமான பணிகளைச் செய்து வருகிறவன்.  வேதத்தை நன்கு அறிந்திருந்தும் தங்கள் இனத்தவரான இன்னொரு யூதரின் ஆபத்தில் உதவி செய்ய அவர்கள் முன்வரவில்லை. காயப்பட்ட மனிதனுக்கு உதவி
செய்தால் கொள்ளையர் தங்களைத் தாக்கக்கூடும் என்ற பயத்தினால் இருந்திருக்கும்.
காயப்பட்ட மனிதனைத் தொட்டு உதவி செய்யும் பொழுது அவன் இறந்து விட்டால் தாங்கள் தீட்டுப்பட நேரிடும் என்று கருதியிருக்கலாம்.

ஆனால் அங்கு வந்த ஒரு சமாரியன் அடிபட்டவனைக் கண்டு மனதுருகி அவனுடைய காயங்களில் எண்ணையும் திராட்சரசமும் வார்த்து காயங்களைக் கட்டி அவனுடைய வாகனத்தில் ஏற்றி சத்திரத்துக்குக் கொண்டுபோய் அவனைப் பராமரித்தான். மறுநாள் அவன் சத்திரத்தை விட்டுப் புறப்படும் பொழுது இரண்டு பணத்தை சத்திரக்காரன் கையில்
கொடுத்து அவனைப் பார்த்துக் கொள்ளும்படியும் அதைவிட அவனுக்கு அதிகமாக செலவழித்தால் தான் திரும்பி வரும் பொழுது அந்தப் பணத்தை திருப்பித் தருவதாகவும் கூறினான்.

இஸ்ரவேலரும், புறஜாதிமக்களும் சேர்ந்த கலப்பின மக்களான சமாரியர் என்பவர்கள் யூதர்களால் தீண்டத்தகாத கீழ்மக்களாக கருதப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு மனிதன் தன்னை

இழிவாக நினைக்கும் ஒரு மனிதனின் ஆபத்தில் உதவினான். தனது ஆபத்தையும்,
நேரத்தையும் பணத்தையும் பொருட்படுத்தாமல் தியாகமாக உதவி செய்த சமாரியன்
போன்று நாம் செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்.

இந்த சமாரியனைப் போன்று சாத்தானாலும் அவனது தூதராகிய பிசாசுகளாலும், உலகத்தாலும் தங்கள் சுய இச்சைகளினாலும் காயப்பட்டு நரகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களை சந்தித்து, நமது நேரத்தையும் பொருட்களையும் செலவழித்து,
இயேசுவின் இரத்தத்தினால் பாவம் கழுவப்படுவதற்கும் ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கும் வாஞ்சிப்போம்.

இயேசுவிடம் பிறன் யார் என்று கேள்வி கேட்ட மனிதனை நோக்கி மேலே கூறப்பட்டவைகளைக் கூறி விட்டு “இந்த மூன்று பேரில் எவன் பிறனாயிருந்தான்” என்றார். அதற்கு அவன் சமாரியன் தான் என்று கூறாமல் “அவனுக்கு இரக்கம் செய்தவனே” என்று கூறினதிலிருந்து சமாரியர் எந்த அளவிற்கு வெறுக்கப்பட்டனர் என்பதை அறியலாம். இந்த
உவமையைப் பொறுத்தவரை கிறிஸ்து தேசங்கள், ஜாதிகள், தீண்டாமைகள், ஆசாரங்கள், அறிமுகங்கள் என்ற எல்லைகளை நொறுக்குகிறார். தேவையிலிருப்பவனும், அவனுக்கு உதவுபவனுமே பிறன். பிறன் என்ற உறவுக்கு வேறெந்த உறவும் தேவையில்லை.
தியாகமின்றி பிறன் என்ற உறவு இல்லை.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்  நமக்கு நல்ல சமாரியனான இயேசு நமது காயங்களைக் கட்டி, நமக்கு எண்ணெய் பூசி தேற்றுவார்.

Related Posts