Menu Close

காணாமற்போன ஆடு பற்றிய உவமை – மத்தேயு 18 : 12 – 14 லூக்கா 15 : 4 – 6

இயேசு இந்த உவமையில் ஒரு மேய்ப்பனைப் பற்றிக் கூறுகிறார். ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகள் இருந்தது. அதில் ஒரு ஆடு காணாமற் பொய் விட்டால் அந்த ஆட்டைத் தேடி தன்னிடம் உள்ள 99 ஆடுகளையும் விட்டுவிட்டு அதைக் கண்டுபிடிக்கும்வரை தேடுவான் லூக் 15 : 4 கண்டுபிடித்தவுடன் அதைக் கட்டி இழுத்து வராமல், தனது தோளில் சுமந்து
கொண்டு வருவான். அதோடு நிறுத்தாமல் அவனுடைய சந்தோஷத்தை தன் பக்கத்து வீடுகளிலெல்லாம் போய் அவர்களை அழைத்து தன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவான்.

தனிமையில் கண்ணீர் வடிக்கும் ஆடு, வனாந்தரத்தில் ஓலமிடும் ஆடு, முட்களில்
சிக்கி குரலெழுப்பும் ஆடு படுகுழியில் விழுந்து போன ஆடு, கால்கள் ஒடிந்து போன
நிலையில் இரத்தம் சொட்ட சொட்ட துடிக்கும் ஆடு, தம்முடைய சத்தம் யாருக்கும் கேட்கவில்லையே என்று அல்லல் படும் ஆடு, வயதானதால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஆடு இப்படிப்பட்ட ஆடுகளைத் தேடி ஒரு மேய்ப்பன் போகிறான்.

நம்மைக் குத்தும் கவலைகளிலிருந்து விடுவிக்க முள்முடி சூடி, காயங்களிலிருந்து விடுவிக்க காயப்பட்டு, நம்மைத் தனிமையிலிருந்து விடுவிக்க பிதாவினால் கைவிடப்பட்டு, நம்முடைய அழுகையிலிருந்து விடுவிக்க கதறி கதறி மடிந்து, நமக்காக மரித்து உயிரையும் கொடுத்த நல்ல மேய்ப்பன் தான் இயேசு – யோவான் 1 : 29, 10 : 11 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போன ஆத்துமாக்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை இரட்சிப்புக்குள் வழிநடத்துவது தேவனுடைய முக்கியப்பணியாகக் காணப்பட்டது. காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடித்தவன் சந்தோஷப்படுவதைப் போல பாவி மனந்திரும்பும் பொழுது பரலோகமே சந்தோஷப்படும். தேவனுக்கும், தேவதூதர்களுக்கும் பாவத்தில் வீழ்ந்து ஆவிக்குரிய மரணம் அடைந்திருக்கும் ஆத்மாக்கள் மீது மிகுந்த அன்பும் இரக்கமும் உண்டு.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில் பாவத்திலும், கட்டுகளிலும் வாழுகிறவர்களை நரகத்திற்குச் செல்லவிடாமல் அவர்களை  இரட்சிப்புக்குள் வழிநடத்துவது நமது கடமையாகும்.

Related Posts