இயேசு பெத்சாயிதா ஊருக்கு வந்த போது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து அவனைத் தொடும்படி வேண்டினர். பெத்சாயிதா மக்களுக்கு எத்தனையோ வாய்ப்பு களைக் கர்த்தர் தந்திருந்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் அதற்கு ஐயோ என்று இயேசு கூறினார். மத்தேயு 11 : 21 எனவே இயேசு அந்த ஊருக்குள் அற்புதம் செய்யாமல் கண் தெரியாத வனை ஊருக்கு வெளியே கொண்டு வந்து அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் தன் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் நடக்கிற மனுஷர்களை மரங்களைப் போல் காண்கிறேன் என்றார்.
பின்பு இயேசு மறுபடியும் அவன் கண்களில் மேல்தன் கைகளை வைத்து அவனை ஏறிட்டுப் பார்க்கச் சொன்னார். அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து யாவரையும் தெளிவாகக் கண்டான். இயேசு கண்பார்வை பெற்றவனை நோக்கி இதை ஒருவருக்கும் கூற வேண்டாம் என்று கூறி வீட்டிற்கு அனுப்பினார். பெத்சாயிதா ஊருக்கு ஐயோ என்று கூறினாலும் அதிலிருந்து தன்னிடம் வரும் தனி நபர்களை கர்த்தர் சந்தித்தார். பார்வை பெற்றவர் வெளியூரைச் சேர்ந்தவர். இந்த அற்புதத்தில் இயேசு தமது கையினால் தொட்டு சுகமாக்கியதைப் பார்க்கிறோம்.