மத்தேயு நற்செய்தி நூல் இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாறுடன் தொடங்குகிறது. இது இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பின் பரம்பரைப் பட்டியல். யோசேப்பு இயேசுவின் உண்மையான உடல்வழி தந்தையாக இல்லாவிட்டாலும், உலக அமைப்பின்படி சட்டரீதியான தகப்பன் அவரே. மேசியா ஆபிரகாமின் சந்ததியிலும் – 12:3, 22:18, கலா 3 :16 தாவீதின் சந்ததியிலும் – 2சாமு 7:12-19 எரே 23:5 தோன்றுவார் எனத் தேவன் கூறியிருந்தார். மத்தேயு இந்த இரண்டு முற்பிதாக்களையும் தன் வம்ச வரலாற்றில் இணைத்துக் காட்டி, இயேசுவே மேசியா என்பதற்கு இது ஆதாரம் என நிரூபித்துக் காட்டியுள்ளான்.
இதில் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் 14 தலைமுறைகளும், தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைபட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் 14 தலை முறைகளும், பாபிலோனுக்குச் சிறைபட்டுப் போனகாலமுதல் கிறிஸ்து வரைக்கும் 14 தலைமுறைகளும் ஆக 42 தலைமுறை பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 1:1-17 இதில் “பெற்றான்” என்று தகப்பனைக் குறிப்பிடுவது யோசேப்பு வரை ஒவ்வொருவருக்கும் கூறப்பட்டுள்ளது. பின்பு அது மாறி “யோசேப்பு கன்னிமரியாளின் புருஷனாயிருந்தான். மரியாளிடத்தில் இயேசு பிறந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
இதில் ஆபிரகாமில் தொடங்கி யோசேப்பில் முற்றுப் பெறுகிறது. இதில் 41 பெயர்களைக் காணலாம். மேலும் இதில் ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது, ரூத் போன்ற விசுவாச வீரர்களும், கறைபட்ட வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட ராகாப், தாமார், பத்சேபாள் போன்றவர்களும் பாரேஸ், ஆராம், நாகசோன், ஆகீம் போன்ற சாதாரண மனிதர்களும் அபியா, மனாசே போன்ற கீழ் மக்களும் இடம் பெற்றுள்ளனர். மனித தோல்விகளோ, பாவங்களோ வரலாற்றில் செயலாற்றும் தேவனைத் தடுத்து விடவில்லை. அனைத்துத் தரத்து மக்களையும் தமது குமாரனை உலகிற்கு அனுப்பும் பாதையில் தேவன் பயன்படுத்திக் கொண்டார். அதில் யூதன், புறஜாதி என்ற வேறுபாட்டையும் பார்க்கவில்லை.
தாமார் – தன் மாமனாகிய யூதாவுடன் அவன் அறியாமல் சேர்ந்தவள் – ஆதி 38:6-30 பத்சேபாள் – தன் கணவனான உரியாவுக்குத் தெரியாமல் தாவீது ராஜா அழைத்தவுடன் பாவத்தில் ஈடுபட்டவள் – 2சாமு 11:3,4 ஒரு கானானியப் பெண்ணான ராகாப் வேசியாயிருந்த தன் வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி இஸ்ரவேலின் பிரபுவாகிய சல்மோனை திருமணம் செய்து கொண்டவள். – யோசு 2:1-21, 6:22-25, எபி 11:31, யாக் 2:25,26 மோவாபியப் பெண்ணான ரூத் தன் செல்வத்தையும் குடும்பங்களையும் விட்டு விட்டு கர்த்தரைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டவள்.
லூக்காவில் உள்ள பரம்பரைப் பட்டியலில் 74 பெயர்கள் சொல்லப்பட்டிருக்கிறது – லூக் 3:23-38 இது மரியாளின் பரம்பரைப் பட்டியல். இது யோசேப்பின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பில் தொடங்கி ஆதாமில் முடிகிறது. மத்தேயு யோசேப்பின் முன்னோர்களையும், லூக்கா மரியாளின் முன்னோர்களையும் கூறியுள்ளனர். இரண்டு அட்டவணைகளும் தாவீதில் சங்கமமாகின்றன. மரியாளும் தாவீதின் வம்சத்தைச் செர்ந்த்தவளே. அதாவது தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த இன்னொரு மகனான நாத்தானின் வழிமரபில் தோன்றியவள்.