ஜெபஆலயத் தலைவனின் மகள் மரணத்தருவாயில் இருப்பதால், அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் பெரும்பாடுள்ள ஸ்திரீ அங்கு வருகிறாள். அவள் பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவள். அவளிடமிருந்த பணத்தையெல்லாம் செலவழித்து விட்டாள். ஆனால் வைத்தியர்களால் அவளைக் குணப்படுத்த முடியாமல் நிலைமை மோசமானது. சுகம்பெறுவேன் என்ற நம்பிக்கையும் அற்றுப் பொய் விட்டது. அவள் இயேசுவைப் பற்றியும், அவருடைய அன்பையும், இரக்கத்தைப் பற்றியும், அற்புதங்கள் பற்றியும் கேள்விப்பட்டாள். இயேசுவிடம் சென்று இவைகளை எடுத்துச் சொல்லி, எப்படி விடுதலை பெறுவது என்று கலங்கினாள்.
ஏனெனில் அவள் ஒரு யூதப்பெண்மணி. யூதப்பெண்மணி வெளியே ஒரு யூதனுடன் பேசக்கூடாது என்பது அவர்கள் பழக்கம். மேலும் இத்தகைய வியாதியுள்ளவர்கள் சுத்தமில்லாதவள் என்று கருதப்பட்டு ஏழு நாட்கள் தீட்டாயிருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டாயிருப்பான். (லேவி 15:19) 12 வருடகால வேதனை அவள் பயத்தையெல்லாம் தூக்கிப்போட்டது. இயேசுவின் வஸ்திரத்தையாகிலும் தொட்டால் குணமாவேன் என்று முடிவுக்கு வந்ததால். அவள் யாரிடமும் எதுவும் கேட்காமல் கூட்டத்தின் நடுவில் வந்து அவரது வஸ்திரத்தைத் தொட்டாள். தொட்ட நிமிடத்திலேயே இயேசுவிடமிருந்து வல்லமை புறப்பட்டு அவளைக் குணமாக்கியது.
அடுத்த வினாடி இயேசு “யார் என்னைத் தொட்டது” என்ற வினாவை எழுப்பினார். அந்தப் பெண்ணோ இயேசு தன்னைக் கடிந்து கொள்வார் என்று எண்ணினாள். அவள் நடுக்கத்தோடு இயேசுவுக்கு முன்பாக வந்து, தாழவிழுந்து உண்மையெல்லாம் அவளிடம் சொன்னாள். ஒரு பெண் எப்படி என்னைத் தொடலாம் என்று எந்தக் கேள்வியும் இயேசு கேட்கவில்லை. இயேசு அவளைப் பார்த்து “மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. நீ சமாதானத்தோடே போய் உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றார்.” இதில் தேவனின் மனஉருக்கத்தையும் இரக்கத்தையும் காணலாம்.
இயேசு யூதர்களுக்கு மட்டும் தேவன் அல்ல. அல்லது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உள்ள தேவன் அல்ல. உலகிலுள்ள அனைவருக்கும் தேவன் விசுவாசத்தோடு யார் கூப்பிட்டாலும் உடனடியாகப் பதில் கொடுத்து பலன் கொடுப்பார்.