Menu Close

பர்திமேயு குருடன் பார்வை பெற்ற விதம் – மத்தேயு 20 : 29 – 34 மாற்கு 10 : 46 – 52 லூக்கா 18 : 35 – 43

இயேசுவும் சீஷர்களும் எரிகோவை விட்டுப் புறப்பட்ட போது பர்திமேயு என்ற ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் யாரோ இயேசு வருகிறார் என்று கூறினவுடனே “இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று கூப்பிடத் தொடங்கினான். அவனை பேசாதிருக்கும்படி அநேகர் அதட்டினர். அவனோ முன்னிலும் அதிகமாக “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று சத்தமிட்டான். அந்தக் குருடனுக்கு இயேசுவின் மூலம் கண்ணொளி கிடைக்கும் நம்பிக்கை, மற்றவர்கள் என்ன கூறினாலும் விடாப்பிடியாக இருக்கும் பண்பு, தடைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு இயேசுவிடம் வரும் முழுமையான நம்பிக்கை, தான் பார்வையடைய வேண்டும் என்ற ஆவல், எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவைப் பின்பற்றிச்செல்லும் பண்பு அவனிடம் இருந்தன.

இயேசு நின்று அவனை அழைத்து வரச் சொன்னார். அவனோ தன் வஸ்திரத்தை எரிந்து விட்டு இயேசுவிடம் வந்தான். இயேசு அவனிடம் “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென் றிருக்கிறாய்” என்றார். ஏனெனில் பிச்சை எடுக்கும் ஒருவன் பிச்சை தான் கேட்பான். கண் பார்வை கேட்டு அது கிடைத்தால் பிச்சை எடுக்க முடியாது. இருந்தாலும் “பார்வையடைய வேண்டும் என்று கேட்க வேண்டும்” என்று கர்த்தர் எதிர்பார்த்தார். இதிலிருந்து நாம் எதையும் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறியலாம். குருடனோ “ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்” என்றார். இயேசு அவனை நோக்கி “நீ போகலாம் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். உடனே அவன் பார்வையடைந்து இயேசுவுக்குப் பின் சென்றான்.

Related Posts