பெத்லகேமில் எலிமெலேக்கின் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவனது மனைவி நகோமி, மகன்கள் மக்லோன், கிலியோன். பெத்லகேமில் பஞ்சம் ஏற்பட்டபோது எலிமெலேக்கு தன்னுடைய குடும்பத்துடன் மோவாபிய தேசத்துக்குச் சென்றான். அங்கும் வசதியாகத்தான் வாழ்ந்தனர். திடீரென்று எலிமெலேக்கு இறந்து விட்டான். நகோமி தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் ராஜாவின் குமாரத்திகளான ஓர்பாள், ரூத் என்பவர்களை தன்னுடைய மகன்களுக்குத் திருமணம் முடித்து வைத்தாள். பத்து வருடங்களாக அவர்கள் சேர்ந்து வாழ்ந்தும் அவர்களுக்குப் பிள்ளைகளில்லை. பத்து வருடங்களுக்குப் பின் நகோமியின் இரண்டு மகன்களும் நோயினால் இறந்தனர். பெத்லகேமில் கர்த்தர் தமது ஜனங்களுக்கு ஆகாரம் அருளுகிறார் என்று கேள்விப்பட்ட நகோமி அங்குபோகத் தீர்மானித்தாள்.
தன்னுடைய இரண்டு மருமகளையும் அவர்கள் தாய் வீட்டிற்குச் செல்லக் கூறினாள். ஓர்பாள் அவளுடைய சொல்லுக்கு இணங்கி தன்னுடைய தாய் வீட்டிற்குச் சென்றாள். ஆனால் ரூத்தோ நகோமியை விட்டுச் செல்ல விரும்பாமல், கஷ்டத்திலும் அவளுடனேதான் இருப்பேன் என்று தன் தாய் வீட்டுக்குச் செல்ல மறுத்தாள். இருவரும் பெத்லகேமுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற நேரம் வாற்கோதுமை அறுப்பின் நேரம். ரூத் தன்னுடைய மாமியின் ஒப்புதலோடு தாங்கள் பிழைக்க வயல்களில் சிந்தும் கதிர்களைப் பொறுக்கச் சென்றாள். கர்த்தர் அவளை போவாசின் வயலுக்குச் செல்லும்படி வழி நடத்தினார். ரூத் போன வயல் தன்னுடைய உறவினரான போவாஸின் வயல் என்பதை நகோமி அறிந்தாள். போவாஸ் ருத்திடம் ஒவ்வொரு நாளும் காட்டுகிற அன்பை ரூத் சொல்லி நகோமி அறிந்தாள். எனவே அவள் ருத்திடம்,
ரூத் 3 : 18 “ அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.”
ஏனெனில் போவாஸ் ரூத்திடம் இஸ்ரவேலின் செட்டைகளுக்குள் அவள் வந்து விட்டதால் அவளுக்கு நிறைவான பலன் கிடைக்கும் என்று ஏற்கனேவே ஆசியளித்திருந்தான். கர்த்தர் ருத்தின் பொறுமையையும் அவள் அந்நிய ஜாதியாயிருந்தாலும் அந்நிய தேசத்தாளாக இருந்தாலும் அவைகளையெல்லாம் விட்டு, தன்னுடைய தேசத்துக்கு வந்ததைப் பார்த்த கர்த்தர், அவள் மூலம் தன்னுடைய திட்டத்தைச் செயலாற்ற நினைத்தார். நாம் எதிர்பார்க்கும் முடிவைக் கர்த்தர் நமக்கு கொடுக்கும்படி செயல்படுவார். மேலும் கர்த்தர் தன்னை நோக்கிப் பொறுத்திருக்கும் பிள்ளைகளுக்கு மேலானவைகளையே செய்வார். ரூத்தும் தன்னுடைய மாமியின் சொற்கேட்டுப் பொறுத்திருந்தாள். அவள் கூறியபடி போவாஸ் ரூத்தை தன்னுடைய மனைவியாக்கினான். ரூத் மற்ற வாலிபர்களின் பின்னே போகாமல், கர்த்தர் அவளை மறுபடியும் கட்டுவிக்கும்வரை பொறுத்திருக்கச் செய்தார். அவள் பொறுத்திருந்ததால் அவளுடைய சந்ததியில் ஓபேத், ஈசாய், தாவீது, இயேசு வந்தனர். சங்கீதக்காரனான தாவீது தனது 37 ம் சங்கீதத்தில் 5ம் வசனத்தில் நம்முடைய வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாயிருக்கும் போது அவரே அந்தக் காரியங்களை வாய்க்கப் பண்ணுவார் என்றார். ஆமென்.