“சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும் நில்லுங்கள்” (எபேசியர் 6:14).
நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே” (எரே.13:1). “உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி உன் அரையிலே கட்டிக்கொள்” அரை என்பது இடுப்பைக் குறிக்கிறது. ஒரு மனிதனுடைய முழு பெலமும் வீரியமும் அவனுடைய இடுப்பில் தான் இருக்கிறது. ஆகவேதான் போர் வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும் போது தங்களுடைய அரையை உறுதியாய்க் கட்டிக் கொள்வார்கள். அது அவர்களுடைய பெலனை ஸ்திரப்படுத்துகிறதாய் இருக்கும். மன உறுதியோடே யுத்தம் செய்யவேண்டுமென்று அவர்களை ஏவி எழுப்பும்.
அப்படியே ஓட்டப்பந்தயம் ஓடுகிறவர்களும் தங்களுடைய அரையைக் கட்டிக்கொள்வார்கள், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு ஓட்டப்பந்தயம். இது ஒரு யுத்தக்களம். அரை கட்டுதல் ஒரு திட்டமான தீர்மானத்தைக் குறிக்கிறது. இந்த ஓட்டப்பந்தயத்திலே நிற்கும்போது அப்போஸ்தலனாகிய பவுல் அரையைக் கட்டிக்கொண்டு எழுதுகிறார், “ஒன்று செய்கிறேன், பின்னான வைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி.3:13,14).
கர்த்தருடைய வருகையை நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். “உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்” என்று நம்முடைய ஆண்டவர் ஆலோசனை கூறுகிறார் (லூக். 12:35,36).
கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாகும்படி மட்டுமல்ல, யுத்தக்களத்திலே யுத்தம் செய்து வெற்றி பெறும்படியாகவும் நாம் கச்சையை அரையிலே கட்டினவர்களாய் நிற்கவேண்டும். “சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும் நில்லுங்கள்” (எபே.6:14). ஆம், இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் போராட்டம் உண்டு. உலகம், மாம்சம், பிசாசோடுகூட நாம் யுத்தம் செய்து வெற்றி பெறுவதற்கு சத்தியம் என்னும் கச்சை அரையிலே கட்டினவர்களாக நிற்க வேண்டும்.
சத்தியம் என்னும் கச்சையானது சத்திய வசனத்தைக் குறிக்கிறது. சத்திய பரனாகிய கிறிஸ்துவையும் குறிக்கிறது. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்றார். அவரே நமக்கு பெலனுமாக இருக்கிறார் (எரேமியா 13:1) மட்டுமல்ல, கச்சையை தண்ணீரிலே படவொட்டாதே என்றும் வேதம் எச்சரிக்கிறது. தண்ணீ ர் என்பது எதைக் குறிக்கிறது? வெளி. 17:15ல் வேசி உட்கார்ந்திருக்கிற திரளான தண்ணீரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அது உலகச் சிற்றின்பங்களாகிய வேசித்தன வாழ்க்கையைக் குறிக்கிறது. சத்தியத்தை இடுப்பிலே கட்டி இருக்கிறவன் உலகத்தால் கறைபடாதவனாக இருக்க வேண்டும்.