மத்தேயு 20 : 29 – 34; மாற்கு 10 : 46 – 52; லூக்கா 18 : 35 – 43
எரிகோவிலிருந்து இயேசுவின் பயணம்:
மாற்கு 10 :46 “பின்பு இயேசுவும் சீஷர்களும் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிற போது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.”
இயேசு பஸ்கா பண்டிகையின் போது கடைசி பஸ்காவை ஆசாரிப்பதற்கு எருசலேமுக்குப் போனார். இயேசு போகிற இடங்களிலெல்லாம் பிணியாணிகளைக் குணமாக்கிக் கொண்டும், அற்புதங்களைச் செய்து கொண்டுமே வந்ததால், இயேசு எங்கிருந்தாலும் ஜனங்கள் அவரைத் தேடி வந்தார்கள். இயேசுவும் சீஷர்களும் எரிகோவை விட்டு எருசலேமை நோக்கிப் போகும் போது திரளான ஜனங்கள் ஆடல் பாடலோடு இயேசுவுக்குப் பின் சென்றனர். அவர்கள் போகும் வழியில் சொந்தபந்தங்களால் ஓரம் கட்டப்பட்ட ஒரு மனிதனைப் பார்க்கிறோம். அவனுடைய தகப்பன் திமேயு. அவனுடைய பெயர் பர்த்திமேயு. அவன் இரண்டு கண்களும் தெரியாத நிலமையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அவனால் இயேசு போய்க் கொண்டிருப்பதைப் பார்க்க முடியாது.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
பர்திமேயுவின் கூக்குரல்:
மாற்கு 10 : 47 “ அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.”
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பர்திமேயுவுக்கு இந்த ஆரவார சத்தம் கேட்டது. பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து இயேசு போகிறார் என்பதை அறிந்து கொண்டான். உடனே அந்தத் தருணத்தைத் தான் இழந்து விடக்கூடாது என்பதை உணர்ந்தவனாய், தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டான். லூக்கா 9 : 4 ல் வேதத்தில் சகேயுவும் இயேசு அவனிருக்கிற பக்கம் வருகிறாரென்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்க மரத்தில் மேல் ஏறினான். இயேசு ராஜா என்பதைக் குருடன் அறிந்திருந்தான். ஒரு கானானியப் பெண் இயேசுவைத் தாவீதின் குமாரனே என்று அழைத்தபோது அவள் அவ்வாறு அழைப்பதற்கு எந்த உரிமையும் இல்லையென்பதை இயேசு கூறினார். ஆனால் இவனைப் பார்த்து அவ்வாறு கூறவில்லை. ஏனெனில் இவர்கள் யூதர்கள். இந்தக் குருடன் இயேசுவைப் பார்க்காவிட்டாலும், இயேசு மிகவும் அன்புள்ளவர், மனதுருக்கமுள்ளவர், அநேக அற்புதங்களைச் செய்கிறவர், பிணியாளிகளைக் குணமாக்குகிறவர் என்று கேள்விப்பட்டிருந்தான். இவனுடைய மாம்சக்கண்கள் முடியிருந்தாலும், அகக்கண்கள் திறந்தேயிருக்கும். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கத்தில் ஒன்று சங்கீதம் 146:8 ல் குருடரின் கண்களைத் திறப்பார் என்றும் மடங்கடிக்கப்பட்டவர்களைத் தூக்கி விடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பர்திமேயுவை இயேசு அழைத்தார்:
மாற்கு 10 : 48,49 “ அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன்னார். அவர்கள் அந்த குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.”
குருடன் போடுகிற சத்தத்தைக் கேட்டு இயேசுவோடு இருந்தவர்கள், அவன் சத்தம் போடக்கூடாது என்று அதட்டினார்கள். ஏனெனில் இயேசுவோடு சென்றவர்களில் சிலர் இரக்கம் இல்லாதவர்களாகவும், உதவி செய்யப் பிரியமில்லாதவர்களாகவும் இருந்தனர். எந்த இடத்திலும் ஆசீர்வாதத்தைத் தடுப்பதற்கென்றே சாத்தான் ஒரு கூட்டமக்களை ஆயத்தப்படுத்தி வைத்திருப்பான். அவர்களுக்கு அந்த சத்தம் தொந்தரவாயிருந்தது. அதனால் பேசாதே என்று அதட்டினார். ஆனால் அவன் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இயேசு தன்னை விட்டுத் தூரமாய்ப் போய் விடக்கூடாது என்றும், அப்படி இயேசு போய்விட்டால் தனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் முன்னைவிட அதிகமான சத்தத்துடன்” தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டான். தாவீதின் குமாரன் என்பது மேசியாவைக் குறிக்கும் வார்த்தை. இயேசு தாவீதின் வம்சத்தில் வந்தவரென்று பார்க்கிறோம். இந்த சத்தியம் எல்லா யூதர்களுக்கும் தெரியும்.
அதேபோல் நம்முடைய வேதனைகளும், கண்ணீரும் மற்றவர்களுக்கு தொந்தரவாய் இருக்கலாம் ஆனால் இயேசு அவ்வாறு நினைக்க மாட்டார். நாமும் நமது ஜெபத்தில் கர்த்தரிடமிருந்து பதிலைப் பெற்றுக் கொள்ளும் வரை சோர்ந்து போகாமல் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். பர்திமேயு கூப்பிடுகிற சத்தமானது இயேசுவின் செவிகளில் கேட்டது. முதலில் கேளாதவர் போல் போனார். ஏனென்றால் அவனுடைய விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ண மறுபடியும் கூப்பிட வைத்தார். இயேசு அந்த சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றார். அசையாமல் நின்றார் என்று ஆங்கில வேதாகமத்தில் உள்ளது. சங்கீதம் 72 :12 ல் வேதம் கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் இயேசு விடுவிப்பார் என்றுள்ளது. வானத்தையும் பூமியையும் தனது வார்த்தையால் படைத்த சர்வவல்லவர், ஒரு குருடனான ஏழையின் கூக்குரலைக் கேட்டு நின்றார். அமைதியாயிரு என்று அதட்டியவர்களையே பர்திமேயுவை அழைத்துவர அனுப்பினார். அவர்கள் பர்திமேயுவிடம் போய் திடன்கொள், எழுந்திரு இயேசு உன்னை அழைக்கிறார் என்றனர்.
பர்திமேயுவின் வேண்டுகோள்:
மாற்கு10 : 50, 51 “உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்து விட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன் ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும் என்றார்.”
குருடன் இயேசுவண்டை போவதற்கு முன் தான் பிச்சை எடுக்கப் பயன்படுத்தும் மேல் வஸ்திரத்தை எறிந்து விட்டுச் சென்றான். அவன் இயேசுவிடம் உள்ள விசுவாசத்தைத் தன் செயலில் காட்டியதைப் பார்க்கிறோம். இனி நான் குருடன் அல்ல, இனி நான் பிச்சை எடுக்கப் போவதில்லை, எனவே அந்த வஸ்திரம் தனக்குத் தேவையில்லை என்று எண்ணினான். இயேசுவிடம் நான் போகிறேன் எனவே நிச்சயமாக அவர் தன்னுடைய குருட்டுக் கண்களைத் திறப்பார் என்று விசுவாசித்தான். நாமும் நம்முடைய பாவமான சுய நீதியான வஸ்திரத்தைத் தூக்கி எறியவேண்டும். கசப்பு, வைராக்கியம் குற்ற மனசாட்சிகளைத் தூக்கி எறியவேண்டும். இயேசு பர்திமேயுவிடம் “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அவன் “ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்” என்றான். தன்னுடைய இருளை வெளிச்சம் ஆக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய வேண்டுகோள். இவன் ஒரு ஏழை பிச்சைக்காரன், குருடன், நம்பிக்கையற்றவன். இவனுக்கு உதவி செய்ய உலகத்தில் ஒருவரும் இல்லை. அவனுக்கு என்ன தேவை என்பதில் மிகவும் தெளிவாயிருந்தான். நாமும் தேவனிடம் செல்லும் போது நிச்சயத்தோடும், விசுவாசத்தோடும் செல்ல வேண்டும். அவன் குருடன் என்று வெளியரங்கமாய் இயேசுவுக்கு தெரிந்திருந்தும், அவனுடைய வாயால் அவனுடைய தேவையைக் கூற வேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம். நாம் ஒரு பாவியாக இருந்து இயேசுவண்டை வந்தால், ஆண்டவரே நான் ஒரு பாவி நீர் என்னை இரட்சிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் நாம் இரட்சிக்கப்பட முடியாது. அது சிலுவைக்கு விரோதமான குற்றம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
இயேசு செய்த அற்புதம்:
லூக்கா 18 : 42, 43 “ இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.”
“உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.”
இயேசு அவனிடம் உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று கூறி அவனைப் போகச் சொன்னார். மத்தேயு 9 : 22 லும் பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசு அவளிருக்கிற பக்கம் வருகிறாரென்று கேள்விப்பட்டு, தன்னுடைய பலவருட வியாதியிலிருந்து விடுதலை பெறுவதற்காக விசுவாசத்துடன் இயேசுவுக்குத் தெரியாமல் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். இயேசு திரும்பி அவளைப் பார்த்து “மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். உடனே சுகம் கிடைத்தது” அதேபோல் நாமும் தேவன் நமக்கு நன்மைகளை அளித்தவுடன் நன்றி செலுத்தி தேவனை மகிமைப் படுத்த வேண்டும். அந்நிய தேவர்களை வணங்குகிறவர்களாக இருந்தால் அவைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றி இரட்சிப்பைப் பெற்று அவருக்குப் பின் செல்ல வேண்டும். ஜனங்களும் இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப்படுத்தினதை மத்தேயு 9 : 8ல் அறிகிறோம்.
அந்த நிமிடமே அந்தக் குருடன் பார்வை பெற்றான். இயேசுவுக்குப் பின் சென்றான். பர்திமேயுவிடம் மற்றவர்களைப் பற்றி கேட்டறியும் பண்பு, விடாப்பிடியாகக் கேட்கும் பண்பு, அவனுடைய நம்பிக்கை, வஸ்திரத்தை எரிந்தது போன்றவைகள் இயேசுவைப் பற்றி அவனுக்குள்ளிருந்த விசுவாசத்தைக் காட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக பார்வை பெற்ற பின் இயேசுவைப் பின் தொடர்ந்தான். இதே போன்ற பண்புகள் நமக்குள் வர நாம் பிரயாசப்பட வேண்டும். உலகத்தில் உள்ள இருளைப் போக்குவதற்கு சூரியனையும், சந்திரனையும் உருவாக்கின தேவன், நம்முடைய உள்ளத்தில் உள்ள இருளை நீக்குவதற்கு அவரே நீதியின் சூரியனாக இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளே இருளை விட்டு வெளிச்சத்திற்கு வாருங்கள். பாவத்தை விட்டு பரிசுத்தரண்டை வாருங்கள். காரிருளை விட்டு நீதியின் சூரியன் அண்டை வாருங்கள். சிலுவையண்டை வந்து நின்று இயேசுவின் இரத்தத்தால் பாவங்களைக் கழுவும்படி ஒப்புக்கொடுக்கும் போது கர்த்தர் நம்முடைய இருளை வெளிச்சமாக்குவார்
இதுவரை பார்வையற்றவனாக இருந்த பர்திமேயு இப்பொழுது பார்வை பெற்று இயேசுவைப் பார்த்தது மட்டும் அல்ல, அவரோடு கூடச் சென்றது மட்டுமல்ல, இயேசுவின் சிலுவை மரணத்தையும் தன்னுடைய கண்களால் பார்க்கப் போகிறான். ஏனென்றால் இயேசு எரிகோவிலிருந்து எருசலேமை நோக்கி கள்வர்களோடு சேர்ந்து மரணத்தைச் சந்திப்பதற்கும், நமக்காக நம்முடைய பாவத்தை மன்னிப்பதற்காகவும் சென்று .கொண்டிருந்தார். நாமும் நம்முடைய அகக்கண்கள் திறக்கப்பட, குருட்டுக் கண்கள் பார்வையடைய, இருளடைந்த கண்கள் ஒளி பெற, இயேசுவாகிய ஒளிக்குள் சென்று, பிரகாசமான ஒளியைப் பெறுவோம். ஆமென்.