1.பெரிய நட்சத்திரம் எரிந்து விழுந்தது:
வெளிப்படுத்தல் 8 : 10 “ மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.”
யோவான் மூன்றாம் தூதன் எக்காளம் ஊதும்போது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல் எரிந்து கொண்டே பூமியில் விழுவதையும் அதன் விளைவாக ஆறுகளும், நீரூற்றுகளும் சேதமடைவதையும் தரிசிக்கிறார். பலிபீடத்தின் நெருப்பு கொட்டப்பட்டதின் விளைவாக முதல் மூன்று அழிவுகளும் நெருப்பினால் உண்டாவதைப் பார்க்கிறோம். இதை இயேசு கிறிஸ்து,
மத்தேயு 24 : 29 ல் “ நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். என்றார்.
வெளிப்படுத்தல் 6 : 13 ல் “அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.” என்றுள்ளது.
கர்த்தராகிய தேவன்தான் வானத்தின் நட்சத்திரங்களை உருவாக்கியவர் என்று ஆதியாகமம் 1 : 16 லிலும்,
யோபு 9 : 9 ல் ‘துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கியவர்” என்றும்
சங்கீதம் 147 : 4 ல் “கர்த்தர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” என்றும்
வெளிப்படுத்தல் 14 : 7 ல் “வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும், உண்டாக்கினவர்”
என்றும் உள்ளது. ஆறுகள் மட்டுமல்ல நீரூற்றுகளும் பாதிப்படைகின்றன. தேவ கோபாக்கினையின் வேகமும், அளவும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் செத்ததாகச் சொல்லப்படாமல் அநேகர் மரித்தார்கள் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.
- கசப்பான தண்ணீரால் சாவு:
வெளிப்படுத்தல் 8 : 11 “அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.”
எரிந்து கொண்டு விழும் நட்சத்திரத்தின் பெயர் எட்டி என்பதாகும். எட்டி என்றால் கசப்பு என்று பொருள். அந்த வார்த்தையானது தேவனுடைய கொடூரமான நியாயத்தீர்ப்பினால் உண்டாகும் வேதனையை குறிப்பிடுகிறது (உபாகமம் 29 : 18, எரேமியா 9 : 14, 15, 23 : 15). ஆறுகளும், நீரூற்றுகளும் விஷமாக மாறுவதின் விளைவாக மனிதர்கள் மரணமடைகிறார்கள். கல்வாரி சிலுவையில் இயேசுவுக்குக் கசப்பான காடியைக் குடிக்கக் கொடுத்த மனித இனம் (மத்தேயு 27 : 34)) இப்போது அவரிடமிருந்து கசப்பான தண்ணீரைப் பெறுகிறது. மாராவின் கசந்த தண்ணீரை மதுரமானதாக மாற்றின தேவன் (யாத்திராகமம் 15 : 23 – 25) கெட்டுப் போயிருந்த தண்ணீரை எலிசா மூலமாக ஆரோக்கியமான தண்ணீராக மாற்றிய தேவன் (2 இராஜாக்கள் 2 : 19 – 21), இதில்,
எரேமியா 23 : 15 ல் “ இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்;” என்றும்
எரேமியா புலம்பல் 3 : 15 ல் “ கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.” என்று முன்னமே உரைத்துள்ளனர்.