வெளிப்படுத்தல் 2 : 26 – 28 “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன்.”
ஆசியா மைனரில் தியத்தீராப் பட்டணம் சர்தையிலிருந்து 20 மைல் தூரத் திலும், பெர்கமுவுக்கு அண்மையிலும் மாமன்னன் அலெஸ்சாந்தரால் ஒரு கிரேக்கக் குடியிருப்பாக ஸ்தாபிக்கப்பட்டது. தியாத்திராவின் சிறப்பு அதன் புவியமைப்பு ஆகும். ஒரு நீண்ட பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்தப் பட்டணம் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தக்க எந்த இயற்கையான பாதுகாப்பு அரண்களும் இல்லை. இங்குள்ளவர்கள் துணிகளுக்குச் சாயமேற்றும் தொழிலைச் செய்துவந்தனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கம்பளங்கள் அந்த நாட்களில் உலகப்புகழ் பெற்றிருந்தது. லீதியாள் இந்த நகரத்தைச் சேர்ந்தவள். இந்த சபை லீதியாள் மூலம் நிறுவப்பட்டிருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 16 : 14, 15). இந்த சபைக்கு எழுதப்பட்ட நிருபம் மிகவும் நீளமானது இது வெளிப்படுத்தல் 2 : 18 – 29 வரை உள்ளது. தியத்தீராவின் இன்றைய பெயர் அக்ஹிசார் என்பதாகும். துருக்கியர் பழைய நகரங்களையெல்லாம் அழித்தனர். இப்போது இங்கு துருக்கியரும், அர்மேனியரும் கொஞ்ச கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இங்கு வாழ்வோர் வறுமையில் உள்ளனர். இந்த நிருபத்தில் இயேசு தன்னை தேவகுமாரன் என்று அறிமுகப்படுத்துகிறார். “நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம்மை ஐநிப்பித்தேன்” என்று சங்கீதம் 2 : 7 ல் பிதா கூறுகிறார்.
“இவர் என்னுடைய நேசகுமாரன்” (மத்தேயு 3 : 17 என்ற பிதாவின் அறிக்கையை பல இடங்களில் வேதத்தில் காணலாம். இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மத்தேயு 2 : 15, 3 : 17, 8 : 29, 14 : 33, மாற்கு 1 : 1, லூக்கா 1 : 35, யோவான் 1 : 34, 3 : 18, 9 : 35, 10 : 36, 11 : 27, அப்போஸ்தலர் 9 : 20, எபிரேயர் 10 : 29, 1யோவான் 4 : 15 ஆகிய வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. தேவகுமாரனைப் பற்றிய இரண்டு வருணனைகள் இங்கு கூறப்பட்டுள்ளது. இயேசு உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அவருடைய கண்கள் இரக்கத்தையும், மனவுருக்கத்தையும் வெளிப்படுத்தியது. வெளிப்படுத்தின விசேஷத்தில் உலகை நியாயம் தீர்க்கும்படியாகவும், துன்மார் க்கரை அழிக்கும்படியாகவும் அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருக்கிறது என்றுள்ளது. தானியேல் தரிசித்த கண்கள் எரிகிற தீபங்களை போலிருந்ததாகத் தானியேல் 10 : 5,6 ல் குறிப்பிட்டார். வெண்கலம் போன்ற பாத ங்கள் அவருடைய வருகையில் நடைபெறும் நியாயத்தீர்ப்பை வெளிப்படுத் துகிறது. “நான் என் கோபத்தில் அவர்களை மிதிப்பேன்” என்று ஏசாயா 63 : 3 ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். தியத்தீரா சபை காட்டும் அன்பை முதலாவது இயேசு பாராட்டுகிறார். மேலும் அவர்களுடைய கிரியைகள் எதிர்ப்புகள் மத்தியிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் அனுதினம் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார் ( வெளிப்படுத்தல் 2 : 19).
முந்தின மூன்று சபைகளுக்கும் மனம் திரும்பும்படியாக ஆலோசனை சொன்ன இயேசு, இந்த சபைக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. ஏனெனில் சபை அந்த அளவுக்கு பின்மாற்றம் அடைந்திருந்தது. இந்த சபையிலும் சிலரைத் தனக்கென்று தெரிந்து கொண்டார். இந்த சபையின் விசுவாசிகளின் பெரும் பாலானோர் உண்மையான இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறவில்லை. இந்த சபையில் நடக்கும் விக்கிரகாராதனையை இயேசு கண்டிக்கிறார். இந்த சபை பாவத்திலிருப்பவர்களையும், கள்ளப்போதகம் செய்பவர்களையும் சகித்துக் கொண்டு, அவர்கள் செயல்படுவதற்கு இடமளிக்கும் சபை. தியத்தீராவின் யேசபேல் என்பவள் அங்கிருந்த சபை முப்பரின் மனைவி என்பது ஒரு கருத்து. அங்குள்ள வியாபாரிகளுக்கு ஒரு சங்கம் இருந்தது. இந்தச் சங்கம் அவர்கள் நடுவில் சமூக விருந்தை நடத்துவதுண்டு. அது அங்குள்ள கோவிலில் வைத்து நடத்தப்பட்டது. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவுதான் அங்கு பரிமாறப்பட்டது. அந்த விக்கிரகங்களுக்குப் படைத்த உணவை பிறர் அனைவரும் உண்பதால் விசுவாசிகளும் உண்பதில் தவறில்லை என யேசபேல் வாதம் செய்தாள். அவர்கள் நடுவே ஒழுக்கக்கேடான வாழ்வு ஒரு கடமைபோல நடத்தப்பட்டது.
ஏனெனில் சரீரம் பாவத்தில் மூழ்கும்போது ஆவி தூய்மையாகக் காக்க முடிகின்ற திறமைதான், உண்மையான திறமையாக அவர்கள் அங்கீகரித்தனர். மாம்ச இன்பங்களை அறியாதவர் பரிசுத்தர் என்று கூறுவது பொருந்தாது என்பது அவர்கள் வாதம். எனவே சீர்கேடாக நடக்க வேண்டும், விக்கிரகப் படையலை உண்ண வேண்டுமென்று யேசபேல் போதித்தாள். மனம் திரும்பு என்ற ஆலோசனை தியத்தீரா சபைக்கு கொடுக்காவிட்டாலும் மனம் திரும்பும்படியாகத் தேவன் காலத்தை சபைக்குக் கொடுத்தார் (வெளிப்படுத்தல் 2 : 21). எபேசு சபையின் விளக்குத்தண்டு உடனடியாக நீக்கப்பட்டதைப் போல, தியத்தீரா சபையில் நடக்க வில்லை. யேசபேலை கட்டில்கிடையாக்கி, அவளோடு பாவஞ்செய்தவர்களை உபத்திரவத்துக்குள் தள்ளுவதோடு, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன் என்கிறார். மத்தேயு 16 : 27 ல் இயேசுவானவர் தன்னுடைய தூதனோடுகூட வரும்போது அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இந்த சபையில் ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் தெரிந்து கொண்டு, அவர்களை அன்பு, ஊழியம், விசுவாசம், பொறுமை ஆகியவற்றில் இயேசுவின் வருகை மட்டும் நிலைத்திருங்கள் என்கிறார். இந்த உலகம் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு யுத்தகளம்.
சாத்தானின் தந்திரம், உலகத்தின் கவர்ச்சி, மாம்சத்தின் இச்சை என்ற மூன்று தந்திரங்களை நாம் எதிர்த்து நின்று ஜெயம்பெற வேண்டும். சபையிலிருப்பவர்கள் பாவத்திலிருந்தால் மனந்திரும்ப வேண்டும். இல்லாவிடில் அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரிகள் என்பதால் கிறிஸ்து அவர்களோடு போரிடுவார். ஒவ்வொரு தேவ பிள்ளைகளிடமும் அன்பின் கிரியைகள் வெளிப்பட வேண்டும். நற்செயல்கள் செய்வதில் ஒவ்வொரு விசுவாசியும் ஒவ்வொரு சபையும் கவனம் செலுத்துவது அவசியம். அவ்வாறு வளர்ச்சியடைவதைக் கர்த்தர் விரும்புகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் அதன் விளைவாக நற்செயல்கள் செய்யுமாறு கர்த்தர் எதிர்பார்க்கிறார். நமது விசுவாசத்தையும், நற்செயல்களையும் ஊழியங்களையும் கடைசிவரைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்றும், வெற்றிபெற வேண்டுமென்றும் கர்த்தர் எதிர்பார்க்கிறார். இப்படிப்பட்ட சக்திகளின் மத்தியில் முடிவு பரியந்தம் ஜெயம் கொண்டால் கிறிஸ்துவுடன் இணைந்து உலகமனைத்தையும் ஆளுகை செய்யும் அதிகாரத்தைப் பெற முடியும். கிறிஸ்துவின் வசனத்தையும், அவரது நீதியின் தகுதிகளையும் பற்றிப்பிடித்து வாழ்ந்த சிலர் தியத்தீராவில் காணப்பட்டனர்.
தேவன் அவர்களை அறிந்திருந்ததுடன் அவர்கள் தம்முடன் ஜாதிகள்மேல் அரசாளுவார்கள் என்கிறார். சாத்தானின் ஆலயங்கள் என்பது தேவனுடைய பூரண கிருபையையும், இரட்சிப்பையும் அடைய வேண்டுமெனில் பாவத்தின் ஆழத்துக்குச் சென்று, எல்லாவித தீமைகளையும் அறிந்திருக்க வேண்டுமென சிலர் போதிக்கும் தீய உபதேசத்தைக் குறிக்கிறது. அனைத்து இழிவான ஒழுக்கங் களிலும் மனப்பூர்வமாக மூழ்கி அதனை அனுபவித்தறிந்தவர்கள் தான் சாத்தானின் ஆழங்களை அறிந்தவர்கள் என்று கூறப்படுகின்றனர். இவ்வாறு பாவத்தின் ஆழம் அறிவதும் ஒரு கடமையேயென யேசபேல் வாதம் செய்தாள். உலகை ஆளுகை செய்யும் அதிகாரத்தைப் பிதாவாகிய தேவன் குமாரனுக்கு வழங்கியிருக்கிறார். பிதாவிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட அதிகாரத்தை இயேசு ஜெயங் கொள்ளுகிறவர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறார். இதைத்தான் இயேசு லூக்கா 22 : 29 ல் “என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.” என்றார். சங்கீதம் 2 : 8, 9 ல் “இரும்புக் கோலால் அவர்களை நொறுக்குவீர்” என்று உள்ளது. ஆயிரவருட அரசாட்சியின்போது பரிசுத்தவான்களின் ஆட்சி முழு அதிகாரத்தோடு செயல்படும்.
இதைத்தான் இயேசு மத்தேயு 19 : 28 ல் இயேசுவைப் பின்பற்றினவர்கள் ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்க பன்னிரண்டு சிங்காசனத்தின்களின் மேல் வீற்றிருப்பீர்கள்” என்றார். விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன் என்கிறார். அது சூரிய உதயத்துக்கு முன்பாகவே கிழக்குத் திசையில் உதிக்கும் இது தான் காலையை எழுப்பும். இதற்கு வீனஸ் என்று பெயர். இங்கு கூறப்படும் விடிவெள்ளி நட்சத்திரம் வேறு யாருமல்ல. இயேசு கிறிஸ்துவே. வெளிப்படுத்தல் 22 : 16 ல் “நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.” எனவே கிறிஸ்து ஜெயங்கொள்ளுகிறவரிடத்தில் வாசமாயிருப்பார் (வெளிப்படுத்தல் 21 : 3). விடிவெள்ளி நட்சத்திரத்தின் ஒளியை விட அதிகமாக ஒளிவீசும் கர்த்தர் உதிக்கும்போது அந்த விடிவெள்ளி மங்கும். பிலேயாம் தீர்க்கதரிசனமாக,
எண்ணாகமம் 24 : 17 ல் “ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.” என்றார்.
மல்கியா 4 : 2 ல் நீதியின் சூரியன் என்று அழைக்கப்பட்டார். கிறிஸ்துவின் வெளிச்சத்தைக் கிறிஸ்தவர்கள் உலகத்துக்குப் பிரகாசிக்க வேண்டும். இதைத்தான் மத்தேயு 5 : 16 ல் “உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது என்கிறார்” நாமும் ஜெயங்கொண்டவர்களாக நீதியின் சூரியன் நம்மேல் உதிக்கப் பிரயாசப்படுவோம். ஆமென்.