Menu Close

ஏழாம் எக்காளம் – வெளிப்படுத்தல் 11:15

  1. தேவனைத் தொழுது கொண்டனர்:

வெளிப்படுத்தல் 11 : 15 “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

ஏழாம் எக்காளம் ஊதப்பட்டபோது உடனடியாக எந்த நியாயத்தீர்ப்பும் நடக்கவில்லை. வானத்தில் கேட்ட கெம்பீரச் சத்தம் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி பூமியில் வரவிருப்பதை முன்னறிவிக்கின்றன. அவை உலகத்தின் ராஜ்ஜியங்கள் பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் உரியவை. தேவன் சதா காலங்களிலும் ராஜ்ஜியபாரம் பண்ணுவார் என்பதை அறிவிக்கிறது. உலகின் ஆளுகையானது பிதாவாகிய தேவனால் இயேசுவுக்கு நித்தியத்திலே வாக்களிக்கப்பட்டிருந்ததை,

சங்கீதம் 2 : 8 ல் “ என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;’ 

தானியேல் 2 : 44 ல் “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை;” 

தானியேல் 4 ; 3 ல் “ அவருடைய ராஜ்ஜியம் நித்தியராஜ்ஜியம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.”

தானியேல் 6 : 26 ல் “அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.”

தானியேல் 7 : 14 “ சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.”

சகரியா 14 : 9 “ அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்;”

இந்த வசனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. உலகத்தின் ராஜ்ஜியங்கள் தேவனுடையதாகிறது என்று சொல்லப்பட்டாலும், இதையடுத்து மூன்றரை ஆண்டு காலகட்டத்தில் கோபக்கலசங்கள் ஊற்றப்பட வேண்டும். மகாபாபிலோன் அழிக்கப்பட வேண்டும். அர்மகெதோன் யுத்தம் நடைபெற வேண்டும். அந்திகிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் என்பதை,

லூக்கா 1 : 32 ல் “ அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.” 

 என்று காபிரியேல் தூதனின் அறிவிப்பின்படி கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சி பூமியில் நடைபெறும். எனவே ஏழாவது எக்காளம் இயேசுவின் இரண்டாம் வருகை வரையுள்ள ஏழு கோபக்கலசங்களையும் குறிக்கிறது. ஏழாவது எக்காளத்தைத் தொடர்ந்து ஒரு இடைவெளி உபத்திரவ காலத்துக்குத் தொடர்பான (12 : 1 – 15 : 4) சில சம்பவங்களை வெளிப்படுத்துகின்றன. 

  1. 24 மூப்பர்களும் தேவனைத் தொழுகின்றனர்:

வெளிப்படுத்தல் 11 : 16, 17 ”அப்பொழுது அவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.”

இதில் சொல்லப்பட்ட இருபத்துநான்கு மூப்பர்களும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையின் பிரதிநிதிகள். இயேசுகிறிஸ்து சதாகாலங்களிலும் ராஜ்ஜியபாரம் பண்ணப் போகிறார் என்ற கெம்பீர சத்தம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்க வேண்டும். எனவே இந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் என்று ஸ்தோத்தரித்தனர். வெளிப்படுத்தின விசேஷத்தில் மொத்தம் ஏழு இடங்களில் இயேசு ஸ்தோத்தரிக்கப்பட்டவரென்று ( 5 : 12, 7 : 12, 11 : 17, 12 : 10. 14 : 2 ) கூறப்பட்டுள்ளது. அவைகளிலெல்லாம் இதுவே முக்கியமானது. ஏனென்றால் இந்த ஒரு இடத்தில்தான் “உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்” என்ற வார்த்தை காணப்படுகிறது. இவர்கள் கிறிஸ்து வின் ஆட்சியின்போது அவரோடிணைந்து உலகை ஆட்சி செய்யப் போகிறார்கள். வெளிப்படுத்தல் 4 : 10, 5 : 8, ,14, 19 : 4 ல் இவர்கள் வணக்கமாய் விழுந்தார்கள் என்றுள்ளது. இதில் முகங்குப்புற விழுந்ததைப் பார்க்கிறோம். 

  1. முடிவில் நடக்கப்போவதை சொல்லி ஜெபிக்கின்றனர்:

வெளிப்படுத்தல் 11 : 18 “ ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.”

ஆயிரவருஷ அரசாட்சியின் முடிவில் என்ன சம்பவிக்கப்போகிறதென்பதை இருபத்துநான்கு மூப்பர்களும் சுருக்கமாக முன்னறிவிக்கின்றனர். முதலாவது ஜாதிகள் கோபித்தனர். இரண்டாவதாக வெளிப்படுத்தல் 20 : 7, 8ன் படி ஆயிர வருஷம் முடியும்போது சாத்தான் விடுதலையாக்கப்பட்டதும் கடற்கரை மணலத்தனையான ஜனங்கள் தேவனுக்கு விரோதமாகத் தங்களை அவனோடு இணைத்துக் கொள்கிறார்கள். அப்பொழுது தேவன் கோபமடைகிறார். அதன் விளைவாக வானத்திலிருந்து அக்கினி இறங்கி ஜாதிகளை பட்சித்துப் போடுகிறது. (வெளிப்படுத்தல் 20 : 9). மூன்றாவதாக மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறார்கள். இது தேவனுடைய வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை முன்னறிவிக்கிறது (வெளிப்படுத்தல் 20 : 11 : 15). தேவனுடைய ஊழியக்காரரும், பரிசுத்தவான்களும் அவர்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர், பெரியோர் யாவரும் பலனளிக்கப்படுகின்றனர். இது இரகசிய வருகைக்கும், பகிரங்க வருகைக்கும் இடைப்பட்ட காலங்களில் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கும். அடுத்தாற்போல் பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம் வந்தது என்கின்றனர். அவர்கள் யாரென்றால் 1. வலுசர்ப்பமாகிய சாத்தான் (12 : 3, 9, 20 : 8, 9). 2. அந்திகிறிஸ்து (13 : 1, 16 : 15 – 21). 3. கள்ளத்தீர்க்கதரிசி (13 : 1, 16 : 15 – 21). 4. மூன்று அசுத்த ஆவிகள் (16 : 13). 5. மதரீதியான பாபிலோன் ( 17) 6. அரசியல் ரீதியான பாபிலோன் ((18)7. மரணமும், பாதாளமும் (20 : 14). 

  1. தேவனுடைய ஆலயம் திறக்கப்பட போது நிகழ்ந்தது:

வெளிப்படுத்தல் 11 : 19 “அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.”

யோவான் உடன்படிக்கைப் பெட்டியைக் காணவேண்டுமென்பதற்காகவே பரலோகத்திலுள்ள தேவாலயம் திறக்கப்படுகிறது. முதன்முதலில் சாலொமோன் கட்டிய தேவாலயம் நேபுகாத்நேச்சாரால் கி. மு 587 ல் அழிக்கப்பட்டது. பின்பு செருபாபேல் கட்டிய ஆலயத்தை ஆண்டிகஸ் எப்பிபேனஸ் என்பவன் கி. மு 168 ல் கொள்ளையிட்டு அதை ஜூபிடர் கோவிலாக்கினான். அதன்பின் ஏரோதின் நாட்களில் கட்டப்பட்ட ஆலயம் ரோமர்களால் டைட்டஸ் என்பவனால் கி. பி 70 ல் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த ஆலயத்திற்குப் பிறகு ஐந்தாவது ஆலயமாக ஆயிர வருஷ அரசாட்சியில் ஆலயம் வருவதை எசேக்கியேல் 40 முதல் 47 வரையிலான அதிகாரங்களில் காணலாம். வெளிப்படுத்தின விசேஷத்தில் திறக்கப்பட்ட ஆறு காரியங்களையும் பார்க்கிறோம். 1. பரலோகத்தின் வாசல் 4 : 1, 2. முத்திரிக்கப்பட்ட புஸ்தகம் 6 : 1 – 8 : 1. 3. பாதாளக்குழி 9 : 2. 4. பரலோகத்தில் ஆலயம் 11 : 19. 5. சாட்சிகளின் கூடாரம் 15 : 5. 6. நியாயத்தீர்ப்பின் புஸ்தகங்கள் 20 : 12. சாலொமோன் கட்டிய தேவாலயத்திலிருந்த உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க பிரதான ஆசாரியன் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர் (1இராஜாக்கள் 8 : 1 – 11). ஆனால் பாபிலோனிய மன்னரான நேபுகாத்நேச்சாரால் தேவாலயம் சூறையாடப்பட்டு மர்மமான முறையில் உடன்படிக்கைப்பெட்டி காணாமல் போய்விட்டது. அதனால் பிந்தின ஆலயங்களில் உடன்படிக்கைப்பெட்டி இல்லாமலிருந்தது. அதை தேவனுடைய உத்தரவின்படி எரேமியா தீர்க்கதரிசி நேபோ மலையிலுள்ள மலையில் ஒளித்து வைத்திருப்பதாகவும், ஆயிரவருஷ அரசாட்சியில் அமைக்கப்படும் ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படுமென்று பாரம்பரிய யூதர்கள் நம்புகின்றனர். 

பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன என்று எபிரேயர் 9 : 4 ல் வாசிக்கிறோம். மன்னா இயேசு கிறிஸ்துவையும் (யோவான் 6 : 48 _ 51), துளிர்த்த ஆரோனுடைய கோல் (எண்ணாகமம் 17 : 8), கிறிஸ்துவின் உயித்தெழுதலையும், பத்து கற்பனைகளடங்கிய கற்பலகைகள் தேவனுடைய நீதியையும் அறிவிக்கிறது. உடன்படிக்கை பெட்டி யூதர்களுக்கு எந்த அளவுக்கு ஆசீர்வாதமாக இருந்ததோ, (யோசுவா 3 : 14 – 17) அந்த அளவுக்குப் புறஜாதிகளுக்கும் அது சாபமாக இருந்தது (1சாமுவேல் 5 : 1 – 12). இதினிமித்தமாக உடன்படிக்கை பெட்டியிருக்கும் இடத்தை ஈராக்கு அரசாங்கம் கண்டுபிடித்ததும் அதை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருப்பதாக பத்திரிகை செய்திகள் அறிவிக்கின்றன. உடன்படிக்கை பெட்டி காணப்பட்டதும் மின்னல்கள், சத்தங்கள், இடிமுழக்கங்கள், பூமியதிர்ச்சிகள், பெருங்கல்மழை உண்டாயின என்று பார்க்கிறோம். வெளிப்படுத்தல் 8 : 5 ல் தூபக்கலசத்தைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி பூமியில் கொட்டின போதும் இதுபோன்று சம்பவித்தது. ஏழாவது கோபக்கலசம் ஊற்றப்படும்போதும் இது சம்பவிக்குமென்று வெளிப்படுத்தல் 16 : 17 – 21 ல் ல் உள்ளது. இவை வரப்போகின்ற நியாயத்தீர்ப்பின் கொடுமையை முன்னறிவிக்கின்றது. இவைகளையெல்லாம் நாம் படித்து வரப்போகின்ற உபத்திரவங்களுக்குத் தப்ப, பாவமோ, தேவனுக்குப் பிடிக்காத செயல்களோ செய்யாமல் அவரோடிருக்கப் பியாசப்படுவோம். ஆமென்.

Related Posts