Menu Close

ஏழாவது முத்திரை – வெளிப்படுத்தல் 8:1

1.பரலோகத்தில் காணப்பட்ட அமைதி:

வெளிப்படுத்தல் 8 : 1 “ அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. “

வெளிப்படுத்தல் விசேஷம் முழுவதிலும் பரலோகத்தில் இடிமுழக்கம் போன்ற சத்தங்களையும், இரைச்சலையும், ஆர்ப்பரிப்பையும் கேட்பதாக உள்ளது ஆனால் எல்லா முத்திரைகளும் உடைத்தபோது முதன்முறையாக அரை மணிநேரம் அமைதல் உண்டாயிற்று என்று உள்ளது. இந்த அமைதி பரலோகத்தில் மட்டுமே உண்டாயிருக் கிறது. பூமியில் நமது மணிக்கணக்கில் வரும் அரைமணி நேரமல்ல. அது பரலோக அளவில் கணக்கிடப்படும் நேரமாக இருப்பதால் அது எவ்வளவு என்பதை நம்மால் கூறமுடியாது. இருபத்து நான்கு மூப்பர்கள், நான்கு ஜீவன்கள், எண்ணக்கூடாத தேவதூதர்கள், பலிபீடத்தின் கீழ் இருந்த ஆத்மாக்கள், கைகளில் குருத்தோலை களுடனிருந்த பரிசுத்தவான்கள் அத்தனைபேரும் தேவன் அனுப்பவிருக்கும் வாதைகளினிமித்தம் துக்கமடைந்தவர்களாய் அமைதியாய் இருந்திருப்பார்கள். 

செப்பனியா 1:7 லும் “கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்;”

சகரியா 2 : 13 லும் “ மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்;” ஆபகூக் 2 : 20 லும் “ கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.” என்று கூறப்பட்டுள்ளது. 

ஆறாவது முத்திரை உடைக்கப்பட்டு இயற்கையின் கொந்தளிப்புக்குப் பிறகு பலமான மனிதர்களும் பலவீனப்படுகிறார்கள். தேவன் இரக்கத்தினின்று நியாயத்தீர்ப்புக்குத் திரும்புவதை இந்த அமைதி தெரிவிக்கிறது. பரலோகத்திலுள்ள அனைவரும் அமைதி யாயிருக்கத் தேவன் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய அனுமதியின்றி ஒரு அணுவளவும் அசைக்க முடியாது. இயற்கையின் சக்திகளுக்கும் கட்டளை கொடுத்து விடுவார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நியாயத்தீர்ப்பின் செயலில் ஒரு அமைதி காணப்படுகிறது. பரலோகத்திலும் நிசப்தம் காணப்படுகிறது. புயலுக்குமுன் அமைதி என்பது போலாகும்.தேவனுக்கு இந்த நியாயத்தீர்ப்பின் செயல் வேறுபட்ட செயலாகும். கர்த்தரின் நியாயத்தீர்ப்பு உண்மையானது. இதை, 

ஏசாயா 28 : 21 ல் “ கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.” என்றுள்ளது. 

2பேதுரு 3 : 9 ல் “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” 

நாம் ஆண்டவர் தாமதிக்கிறார் என்று எண்ணாதபடி நாம் மனந்திரும்புவதற்கு காலத்தைக் கொடுத்திருக்கிறாரென்று எண்ண வேண்டும். இது கிருபையின் காலம். எப்பொழுது முடியுமென்று தெரியாது. வெளிப்படுத்தல் புத்தகத்தில் அடையாளங்கள் பயன்படுத்தும் பொழுது அவற்றின் அர்த்தத்திற்கான திறவுகோல்களும் கொடுக்கப் பட்டிருக்கிறது. நிலைதவறி ஓடிக்கொண்டிருக்கிற இந்த உலகத்தை நியாயந்தீர்த்து, சரிப்படுத்த வரப்போகிறார். தேவன் இந்த உலகத்தை நீதியாக நியாயந்தீர்க்கப் போகிறார். சாந்தகுணமுள்ள இயேசுவாக, நன்மையானவைகளைச் செய்து கொண்டி ருக்கும் இயேசுவை இதுவரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருநாள் ஆட்டுக்குட்டி யானவரின் கோபம் என்னவென்பதைப் பார்க்கப் போகிறோம். உலக மனிதர்கள் பாவம் செய்ததால் நித்தியத்தை இழந்து போகமாட்டார்கள். இயேசுவை புறக்கணித்தால் மட்டுமே இழந்து போவார்கள். இயேசு நம்முடைய வாழ்க்கையில் பாவமன்னிப்பை மட்டும் கொடுக்கிறவரல்ல. .நாம் பாவத்தைச் செய்யாமல் அவருடைய பிள்ளையாக வாழ வேண்டிய பெலத்தை ஆவியினால் நமக்குத் தருகிறார். 

  1. ஏழு தூதர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்படுத்தல்:

வெளிப்படுத்தல் 8 : 2 “பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. “

யோவான் தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்களைப் பார்க்கிறார். இந்த ஏழு தூதர்களுக்கும் ஏழு வித்தியாசமான எக்காளங்கள் கொடுக்கப்படுகிறது. எக்காளங்களைக் கொடுத்தது யாரென்று சொல்லப்பவில்லை. ஒரே எக்காளத்தை அவர்கள் ஊதப்போவதில்லை. ஏழு எக்காளங்களும் ஒரே நேரத்தில் ஊதப்படப் போவதுமில்லை. அவை ஒன்றன்பின் ஒன்றாக ஊதப்படும் போது உலகில் ஏழு வித்தியாசமான நியாயத்தீர்ப்புகள் உண்டாகின்றன. 

யோவேல் 2 : 1 “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.”

இந்த ஏழு எக்காளங்களும் மகா உபத்திரவத்தின் கொடுமையைக் கூறுகிறது. பாவத்தில் வாழும் மனிதனின் பாவங்களின் நிமித்தம் வரும் நியாயத்தீர்ப்பை இது கூறுகிறது. ஏழு எக்காளங்களும் தேவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்களைத் தேவன் நேரிடையாக தீர்ப்பு வழங்குவதைக் குறிக்கிறது. வேதத்தில் சீனாய் மலையில் தேவன் இறங்கும்போது பலத்த எக்காளச் சத்தம் உண்டானது என்று யாத்திராகமம் 19 : 16, 19 ல் உள்ளது. கர்த்தருடைய நாளைக் குறித்துப் பேசும் சகரியா 9 : 14 ல் கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி தென்திசை சுழல் காற்றுகளோடு நடந்து வருவாரென்றும், 1தெசலோனிக்கேயர் 4 : 16 ல் தேவ எக்காளத்தோடு வானத்திலிருந்து இறங்கி வருவாரென்றும், 1 கொரிந்தியர் 15 : 52 ல் தேவனுடைய இரகசிய வருகையில் எக்காளம் தொனிக்கும் போது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள் என்றுமுள்ளது. எக்காளம் ஊதப்பட்டபோது எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்ததைப்போல, மகா உபத்திரவ காலத்தில் தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்றவர்கள் இடிந்து நொறுங்கிப் போவார்கள். ஏழு முத்திரைகளும் மனிதனின் தீமையான செயல்களினால், அவன் மீது வருகின்ற நியாயத்தீர்ப்பினைக் கூறுகிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்பு பாவமனிதன் மேல் வருகிறது. பிதாவாகிய தேவன் இந்த உலகத்தில் இயேசுவை அனுப்பிய போதும், அவரைக்குறித்து கேள்விப்பட்ட போதும், அவரை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால் நியாயத்தீர்ப்பு நிச்சயம். 

  1. தூதனிடம் பொற்கலசத்தில் தூபவர்க்கம் கொடுக்கப்பட்டது:

வெளிப்படுத்தல் 8 : 3 “’வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.” 

ஏழு தூதர்களும் எக்காளங்களை ஊதுவதற்குத் தங்களை ஆயத்தப் படுத்துவதற்கு முன் பரலோகத்தில் அதுவும் பலிபீடத்துக்கும், சிங்காசனத்துக்கும் முன்பிருக்கும் பொற்பீடத்தின் அருகே நடக்கும் சம்பவத்தை யோவான் தரிசிக்கிறார். வெளிப்படுத்தல் 4 : 1 ல் யோவானுக்கு பரலோகத்தின் வாசல்கள் திறக்கப்பட்டதைப் பார்க்கிறார். வெளிப்படுத்தல் 8 : 13 ல் பலிபீடத்தைத் தரிசிக்கிறார். வெளிப்படுத்தல் 15 : 5 ல் சாட்சியின் கூடாரத்தைப் பார்க்கிறார். படிப்படிப்பாக யோவான் ஆழமான அனுபவத்துக்கும் கடந்து போகிறார். ஒரு புதிய தூதனிடம் தூபங்காட்டும் பொற்கலசம் காணப்படுகிறது. பொற்பீடத்தின் மேல் பரிசுத்தவான்களின் ஜெபங்களைச் செலுத்தும்படியான தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. பூலோகத்திலுள்ள பலிபீடத்தைத் தான் பரலோகத்தில் பொற்பீடம் என்கின்றனர். இந்தப் பொற்பீடம் பரலோகத்தில் ஜெபத்தை ஏறெடுக்கும் இடமாகும். தூதுன் சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும் பொற்பீடத்தில் தூபம் காட்டும்படியாக ஆயத்தப் படுகிறான். தூபவர்க்கம் என்பது கிறிஸ்து என்னும் நாமத்தின் மகிமையையும் ஜெபத்தையும் குறிப்பதாக இருக்கிறது. 

  1. பரிசுத்தவான்களின் ஜெபங்கள் தூபவர்க்கமாக எழும்பின:

வெளிப்படுத்தல் 8 : 4 “அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.” 

சகல பரிசுத்த வான்களுடைய ஜெபங்களும் தூபவர்க்கமாகப் பிதாவிடம் இந்த தூதனால் சமர்ப்பிக்கப்படுகிறது. பரலோகத்தில் மிருகங்கள் பலியிடப்படுவதில்லை. இந்த தூதன் ஆசாரியனாகச் செயல்படும் இயேசு கிறிஸ்து என்று சில வேதபண்டிதர்கள் கருதுகிறார்கள். கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கமிட்ட கோராகின் கூட்டத்தார் எண்ணாகமம் 16 : 1 – 19 லும் , உசியா ராஜா 2 நாளாகமம் 26 : 19 லும் , இஸ்ரவேலின் மூப்பர்கள் எசேக்கியேல் 8 : 11 லும் தண்டிக்கப்பட்டதை வேதத்தில் பார்த்தோம். ஆசாரிய அந்தஸ்த்தைப் பெற்றவர்கள் மட்டும் துபம்காட்ட அனுமதிக்கப் பட்டார்கள். தூதர்களுக்கு இந்த உரிமை கொடுக்கப்படவில்லை. இயேசுவானவர் பிரதான ஆசாரியரென்று எபிரேயர் 4 : 15, 6 : 20 லும் பார்க்கிறோம். அந்தத் தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து எழும்புகிறது. 

  1. இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின:

வெளிப்படுத்தல் 8 : 5 “பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.”

தூதன் அதோடு நின்று விடாமல் பலிபீடத்து நெருப்பினால் அதை நிரப்புகிறான். அதை பூமியில் கொட்டுகிறான். அதன் விளைவாக பூமியெங்கும் இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாவதை யோவான் தரிசிக்கிறார். தூபவர்க்கம் இருந்த தூபக்கலசம் தேவனுடைய கோபாக்கினையின் அக்கினியால் நிரப்பப்படுகிறது. பரிசுத்தவான்களுடைய ஜெபம் கோபாக்கினையாக மாற்றப்பட்டு பூமியில் ஊற்றப் படுகிறது. வெளிப்படுத்தலில் 6 : 10 ல் உள்ள உபத்திரகாலத்து இரத்தசாட்சிகளின் ஜெபம் கேட்கப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சியை எசேக்கியேல் 10 : 2லும் பார்க்கிறோம். பிதாவாகிய தேவன் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி,

எசேக்கியேல் 10 : 2 ல் “ அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.”

என்றுள்ளதைப் பார்த்தோம். பட்டணத்தின்மேல் தேவன் அனுப்பவிருக்கும் கொடிய நியாயத்தீர்ப்பை இது முன்னறிவிக்கிறது. சத்தம், இடி முழக்கம், மின்னல், பூமியதிர்ச்சி ஆகிய நான்கும் உண்டாகுமென்று, 

2 சாமுவேல் 22 : 8ல் “ அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.” என்றும், 

இயேசு லூக்கா 21 : 11 ல் “பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.”என்றார்.

வெளிப்படுத்தல் 4 : 5 ல் “வானத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து மின்னல்களும், இடிமுழக்கங்களும், சத்தங்களும் புறப்பட்டன.” என்றும், 

வெளிப்படுத்தல் 11 : 19 ல் “அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.” என்றும் 

வெளிப்படுத்தல் 16 : 18 ல் “சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.” 

என்றும் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். மேற்கூறப்பட்ட வசனங்கள் தேவனுடைய மகத்துவமான வல்லமையை வெளிப்படுத்துகிறது. இதுவரை கர்த்தராகிய இயசுகிறிஸ்துவினால் ஏழு முத்திரைகள் உடைக்கப்பட்டு நடக்கப்போகிற நிகழ்ச்சிகளை பார்த்தோம். எனவே நாம் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பில் நிற்காதபடி பாவம் ஏதும் செய்யாமல், கர்த்தருக்குப் பிடித்த வாழ்க்கை வாழ்ந்து அவரோடு கூட எடுத்துக்கொள்ள வாஞ்சிப்போம். ஆமென்.

Related Posts