- பூமி, சூரியன், சந்திரனில் மாற்றம்:
வெளிப்படுத்தல் 6 : 12 “ அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று. “
ஆறாம் முத்திரை உடைக்கப்படும்போதுதான் வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவ கோபாக்கினை நேரிடையாக வெளிப்படுகிறது. இதற்கு முந்தின முத்திரைகள் உடைக்கப்படும்போது பல அழிவுகள் சம்பவித்தது. இவைகள் ஒரு ஆட்சியின் கீழ் நடக்கும் இயற்கையான காரியங்கள்தான். இப்பொழுது தேவ கோபாக்கினையின் நாள் ஆரம்பமாகிறது (வெளிப்படுத்தல் 6 : 17). இது மகா உபத்திரவ காலத்தின் கடைசி பகுதியில் ஆரம்பம் என்று வெளிப்படையாகத் தெரிகிறது. மகா உபத்திரவ காலம் இயற்கையின் எழுச்சிகளிலே ஆரம்பமாகி அவற்றிலே முடிவடையும். இந்த ஆறாவது முத்திரை உடைக்கப்படும் போது ஆறு பௌதீக மாறுதல்கள் பூமியில் ஏற்படுகின்றன. மாற்கு 13 : 8 ல் இயேசு பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும் என்றார். வெளிப்படுத்தல் 11 13ல் பூமி மிகவும் அதிர்ந்ததால் நகரத்தின் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது என்றுள்ளது. மேலும் பூமி அதிர்ச்சியானது தேவனிடமிருந்து வந்த நியாயத்தீர்ப்பாகும். இதை ஆமோஸ் 1 : 1 லும், சகரியா 14 : 5 லும், மத்தேயு 27 : 51, 28 : 2, அப்போஸ்தலர் 16 : 26 லும் காணலாம்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆறாம் முத்திரை உடைக்கப்பட்ட போதும் (6 : 12), எக்காளம் ஊதப் படுவதற்கு சற்று முன்பாகவும் (8 : 5), இரண்டு சாட்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் (11 : 3), பரலோகத்தில் தேவாலயம் திறக்கப்பட்ட போதும் (11 : 19) பூமி அதிர்ச்சியைக் காணலாம். இரண்டாவது பாதிப்பு சூரியன் இருளடைகிறது. யாத்திராகமத்தில் 10 : 21 ல் எகிப்தில் தடவிக் கொண்டிருக்கிறதான இருள் உண்டாயி ருந்ததையும், இயேசு கல்வாரி சிலுவையில் தொங்கும் போது, பூமியெங்கும் அந்த காரம் உண்டானதையும் மத்தேயு 27 : 45 லும், கர்த்தரின் நாளில் சூரியன் உதிக்கையில் இருண்டு போம் என்று ஏசாயா 13 : 10 லும், சூரியன் நாணமடையுமென்று ஏசாயா 25 : 23 லும் வாசிக்கிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில் நான்கு தடவை சூரியன் இருளடைவதை 6 : 12, 8 : 12, 9 : 2, 16 : 10 லும் பார்க்கிறோம். மூன்றாவது பாதிப்பு சந்திரன் இரத்தம் போலாயிற்று. இதை,
வெளிப்படுத்தல் 16 : 18 ல் “சூரியன் கறுத்து, சந்திரன் இரத்தம் போலாயிற்று” என்றும், யோவேல் 2 : 10, 31 ல் “ அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். என்றும், கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.” என்றும்,
யோவேல் 3 : 15 ல் “சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்.” என்றும்,
அப்போஸ்தலர் 2 : 20 ல் “ கர்த்தருடைய பெரிதும், பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்” லும் பார்க்கிறோம்.
2. நட்சத்திரங்களை பூமியில் விழ வைத்தார்:
வெளிப்படுத்தல் 6 : 13 “அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. “
நான்காவது பாதிப்பு பெருங்காற்றினால் அத்திமரத்திலுள்ள காய்கள் உதிருவதுபோல வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழும். இயேசு இதைத் தனது இரண்டாம் வருகையின் போது நடக்கும் என்று முன்னமே கூறியுள்ளார்.
மத்தேயு 24 : 29 ல் “சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.” என்றார்.
நட்சந்திரங்கள் என்ற வார்த்தை பூமியின் அதிபதிகளையும், பிரபுக்களையும் குறிப்பிடுவதாக எடுத்துக்கொண்டால் (எண்ணாகாமம் 24 : 17), ஆறாவது முத்திரை உடைக்கப்படும்போது பாமர மக்கள் மட்டுமின்றி ஐசுவரியவான்களும் அதிகாரிகளும் பாதிக்கப்படுவார்கள். ஐந்தாவது பாதிப்பு நட்சத்திரங்கள் பூமியிலே விழுந்து, வானம் சுருட்டப்பட்டப் புஸ்தகம் போலாகுமென்றுள்ளது. இதை,
ஏசாயா 34 : 4 ல் “வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.”என்றும்,
3. வானம் சுருட்டப்பட்டு மலைகளும் தீவுகளையும் அகன்றுபோய்ச் செய்தார்:
வெளிப்படுத்தல் 6 : 14 ல் வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.” என்றுமுள்ளது.
மேலும் “பூமியும் வானமும் அகன்று போயின” என்று வெளிப்படுத்தல் 21 : 1 லும், முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயிற்று” என்று வெளிப்படுத்தல் 21 : 1 லும் உபத்திரகாலத்தின் இறுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளாகக் கூறப்பட்டுள்ளது. ஆறாவதாக மலைகளும் தீவுகளும் தங்கள் இடங்களை விட்டு அகன்று போகுமென்ற பாதிப்பைக் கூறுகிறார். இதை ஆகாய் தீர்க்கதரிசி,
ஆகாய் 2 : 6 ல் “ சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக் காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.”
என்கிறார். எரேமியா 4 : 23 – 28 லும் இதைப் பார்க்கலாம். பர்வதங்கள் அதிரப் பண்ணு வதைப் பற்றியும், பூமியின் அழிவைப் பற்றியும் எரேமியா 4 : 24 லும், எசேக்கியேல் 38 : 20 லும் பார்க்கலாம்.
- ஜனங்கள் தேவகோபத்துக்கு பயந்து ஒளிந்தனர்:
வெளிப்படுத்தல் 6 : 15 “பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத் தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,”
ஆறாவது முத்திரை உடைக்கப்படும் போது ராஜாக்கள் அதாவது ஜனாதிபதிகள், பிரதமமந்திரிகள், பெரியோர்கள் – உலகத்தில் மதிக்கப்படுகிறவர்கள், ஐசுவரிய வான்கள் – கோடீஸ்வரர்களும், இலட்சாதிபதிகளும், சேனைத்தலைவர்கள் – ராணுவத் தளபதிகளும் போர்வீரர்களும், பலவான்கள் – சரீர பெலன் அறிவு நிறைந்தவர்கள், அடிமைகள் – சாதாரணத் தொழிலாளிகள், சுயாதீனர்கள் – வியாபாரிகளும் தொழிலதிபர்களும் இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாட்களில் எத்தனையோ எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் தைரியமாக சந்தித்து ஜெயங் கொண்டி ருப்பார்கள். மல்கியா 3 : 2 ல் கூறியுள்ளபடி கர்த்தர் வரும்நாளை சந்திக்கவும், அவர் வெளிப்படுகிறவரை நிலைநிற்கவும் தங்களை தேவ சமூகத்தில் மறைத்துக் கொள்ளும் படி பர்வதங்களையும், கன்மலைகளையும் தேடி அலைகிறார்கள்.
இதை ஏசாயா 2 : 19 ல் கர்த்தர் பூமியை தத்தளிக்கப் பண்ணும் போது அவருடைய கோபத்திற்கு விலகி கனமலையின் வெடிப்புகளிலும், குன்றுகளின் சந்துகளிலும் புகுந்து கொள்வாரென்றும்” கூறியுள்ளார்.
இயேசு: லூக்கா 23 : 30 ல் “அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள் மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக் கொள்ளுங்க ளென்றும் சொல்லத்தொடங்குவார்கள். “ என்றும் இயேசு முன்னமே கூறினார். ஓசியா 10 : 8ல் “பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.” என்றுமுள்ளது.
5. ஜனங்கள் கன்மலைகளை நோக்கி விண்ணப்பித்தனர்:
வெளிப்படுத்தல் 6 : 16, 17 “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.”
வெளிப்படுத்தல் 6 : 15 ல் கூறப்பட்ட ஏழு வகையான மனிதர்கள் பூமியிலும், வானத்திலும் பிரளயம் உண்டாவதற்கு ஆட்டுக்குட்டியானவருடைய கோபமே காரணம் என்று உணர்ந்து கொண்டார்கள். அதனால் அந்தக் கோபத்திற்கு தங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டு ஜெபம் செய்கிறார்கள். ஒன்று பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற பிதாவாகிய தேவனுடைய முகத்திற்குத் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டுமென்றும், இரண்டாவது ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் தங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்றும் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் மேலே கூறப்பட்ட வசனங்களில் பூமி அதிர்ந்ததையும், சூரியன் இருளடைந்ததையும், சந்திரன் இரத்தம் போலானதையும், நட்சந்திரங்கள் விழுந்ததையும், வானம் சுருட்டப்பட்டதையும், மலைகளும், தீவுகளும் அகன்று போனதையும் பார்க்கிறோம்.
ஒளியைத் தடை செய்வது தேவனுடைய தண்டனைகளில் ஒன்று. எகிப்தில் தேவன் அனுப்பிய வாதைகளில் இதுவும் ஒன்று (யாத்திராகமம் 10 : 21 : 33). இதனால் ஜனங்கள் பீதியடைவார்கள். அவருடைய கோபாக்கினையின் மகா நாள் பூமியில் துவங்குகிறது என்பதை வெளிப்படுத்தல் 6 : 17 ம் வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. தொடர்ந்து எக்காளங்கள் ஊதப்படும் போதும் கோபக்கலசங்கள் ஊற்றப்படும்போதும், தேவ கோபாக்கினை தொடர்கிறது. ஆபேல் முதல் யோவான்ஸ்நானகன் வரை இயேசுவை ஆட்டுக்குட்டி என்றே அழைக்கின்றனர். யோவான் உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்றார். மத்தேயு 11 : 29 ல் இயேசு சாந்தகுணமுள்ளவரென்றும், மாற்கு 10 : 14 ல் தீங்கு விளைவிக்காதவரென்றும் பார்க்கிறோம். இயேசு யாரையும் பழி வாங்குகிறவரல்ல. அவர் நீதி வழங்குபவர்.
யெகோவா தேவன் யுத்த புருஷர். அவர் வலிமையுள்ளவரும், பலமுள்ளவருமா யிருக்கிறார். தேவனின் கோபாக்கினை அனைத்தும் இயேசுவிடம் வெளிப்படுகிறது. தேவாலயத்துக்குள் சாட்டை எடுத்து அங்கு வியாபாரம் பண்ணினவர்களைக் கோபத்தில் விரட்டியதைப் பார்த்தோம். இயேசு மதத்தலைவர்களைப் பார்த்து விரியன்பாம்புக்குட்டிகள் என்றும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் (மத்தேயு 23 : 27) என்றும் கோபத்தில் கூறியதைப் பார்க்கிறோம். இயேசு இப்பொழுதும் இயற்கையின் பலத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறார். அவற்றின் பலத்தை நியாயத்தீர்ப்பில் பயன்படுத்துவார். சீஷர்களின் கால்களையே கழுவி (யோவான் 13 : 14) தாழ்மையுள்ளவராக வாழ்ந்தாரென்றும் பார்க்கிறோம். வெளிப்படுத்தல் 15 : 1 ல் “அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது” என்று வாசிக்கிறோம்.