Menu Close

ரோமர் 8 : 14 – Romans 8 : 14 in Tamil – தேவனுடைய புத்திரர்

“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14).

தேவனுடைய புத்திரர்களாகிய நாம் தேவ ஆவியால் நடத்தப்படுகிறோம். தேவ ஆவியால் போஷிக்கப்படுகிறோம். தேவ ஆவியால் கிறிஸ்துவின் பூரணத்தை நோக்கி வளருகிறோம். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் என்று கிறிஸ்து சொன்னார் அல்லவா? ஆம், பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்த நாம் ஒப்புக்கொடுக்க வேண்டுமே தவிர நாம் பரிசுத்த ஆவியானவரை நடத்திக் கொண்டிருக்க முடியாது.

குதிரை வண்டியை இழுக்குமே தவிர, வண்டி ஒருக்காலும் குதிரையை இழுக்காது. அநேகர் பரிசுத்த ஆவியானவரை மட்டுப்படுத்துகிறார்கள், துக்கப் படுத்துகிறார்கள். தாங்கள் நினைக்கிறபடியெல்லாம் அவர் செயலாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி அல்ல; பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆளுவதற்கும், வழி நடத்துவதற்கும் நம்மை பரிபூரணமாய் ஒப்புக் கொடுக்கும் போதுதான் நாம் குழந்தை நிலையிலிருந்து வளருகிற சந்தர்ப்பத்திற்கு வந்து சேர முடியும்.

பரிசுத்த ஆவியை தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குப் பெரிய ஈவாகத் தருகிறார். இந்தப் பரிசுத்த ஆவியை அவர் “பிள்ளைகளின் அப்பம்” என்று ஒரு முறை சொன்னார். “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப்பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என்று வாக்குத்தத்தம் செய்தார் (லூக். 11:11,12,13).

பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உள்ளத்திலே வாசம் செய்கிறபடியினால் அவர் அசுத்தத்திற்கு எதிர்த்து நிற்கிறார். அசுத்தமான கிரியைகளைச் செய்ய நாம் முற்படும்போது அவர் துக்கப்படுகிறார். நம் மனசாட்சியைக் கூர்மையாக்குகிறார். நமக்குள் ஒரு போராட்டம் உண்டாகிறதை நாம் காணலாம். பரிசுத்த ஆவியானவர் துக்கப்படும்போது நம்மால் வேதத்தை வாசிக்க முடியாது, அதே நேரத்தில் முழங்கால் போட்டாலும் ஜெபம் ஓடாது. ஒரு காரில் நிறைய பெட்ரோல் இருந்தாலும் ரிப்பேரானால் அது ஓடாது அல்லவா? அது போலவே பரிசுத்த ஆவியானவர் துக்கப்படும்போது, முதலாவது வாழ்க்கையைச் சரி செய்யாமல் ஜெபிக்க முற்பட்டாலும் ஜெபம் ஓடாது.

நம்முடைய பாவங்களுக்காக மனம்கசந்து அழுது அறிக்கை செய்ய வேண்டும். இனிமேல் செய்யமாட்டேன் என்று தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் தேவ சமாதானத்தையும் பெற முடியும்; பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தையும் உணர முடியும். அநேகர் தங்களுடைய பாவத்தைவிட மனமில்லாமல் வியாதி சுகமாகி விட வேண்டும். பிரச்சனைகள் நீங்கிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் என்னப் பிரயோஜனம்?

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் செய்யும் போது அவர் நம்மை பரிசுத்த பாதையில் நடத்துகிறார். பரிசுத்த முள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று அவர் நமக்கு ஆலோசனைத் தருகிறார். நாளுக்கு நாள் நாம் கிறிஸ்துவின் சாயலில் வளரவேண்டும். நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சுபாவங்களையும், குணாதிசயங் களையும் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்.

Related Posts