Menu Close

எபிரெயர் 13 : 5 – Hebrews 13 : 5 in Tamil

“நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” (எபிரெயர் 13:5). 

இன்றைக்கு உலகத்திலுள்ள கொடிய குற்றங்களுக்கு மூலகாரணம் பணஆசை தான். பண ஆசையினால் லஞ்சம் வாங்குகிறான், குறுக்கு வழிகளைத் தேடுகிறான், குதிரை ரேஸ், லாட்டரி, சூதாட்டம் என்று ஓடுகிறான். பணத்துக்காக கொலையும் செய்ய ஆயத்தமாகிவிடுகிறான். பணம் தேவைதான் ஆனால் பண ஆசையோ உயிர்க்கொல்லியாக இருக்கிறது. நிம்மதியைக் கெடுக்கிறது. வேதம் எச்சரித்து சொல்லுகிறது, “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவ தில்லை; செல்வப்பிரியன் செல்வம் பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே” (பிர. 5:10).

உனக்கு உண்டான யாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடுத்துவிட்டு எனக்கு பின்சென்று வா என்று கர்த்தர் மத்தேயு 19-ம் அதிகாரத்தில் ஒரு வாலிபனைப் பார்த்து சொன்னபோது அவன் தன் செல்வத்தையும், பணத்தையும் இழக்க மனமில்லாமல் துக்கத்தோடு திரும்பிப் போனான். பரலோகத்தை அவன் இழக்க ஆயத்தம். நித்திய ஜீவனை வேண்டாம் என்று தள்ள அவன் ஆயத்தம். ஆனால் பணத்தை விட்டு விட அவன் ஆயத்தமில்லை. எவ்வளவாய் பணஆசை அவனை இந்த உலகத்தோடு கட்டி இருந்திருக்கக்கூடும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அந்தப் பண ஆசையினால்தானே யூதாஸ்காரியோத்து சாத்தானுக்கு இடம் கொடுத்தான். முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். அந்தப் பணம் அவனை சந்தோஷமாக்கவில்லை. முடிவிலே அவன் நான்று கொண்டு மரித்தான் அல்லவா? “பணஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளினாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” (1தீமோ. 6:10).

கிறிஸ்தவர்களுக்குள் இன்னொருவிதமான பணஆசை உண்டு. அவர்கள் ஓய்வுநாளை அசட்டைப் பண்ணி கூடுதலாய் கிடைக்கிற பணத்துக்காக ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்கிறார்கள். மற்ற சிலர் டியூசன் எடுக்கிறேன், என்று சொல்லி தங்கள் ஜெய நேரத்தையும், வேத வாசிப்பையும் பணத்துக்காக விற்று விடுகிறார்கள். வேதம் பொருளாசையை விக்கிரக ஆராதனைக்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அந்த விக்கிரக ஆராதனைக்கு ஒரு போதும் இடம் கொடுத்து விடாதிருங்கள்.

பொருளாசை உள்ளவர்கள் தசம பாகத்தை கர்த்தருக்கு மகிழ்ச்சியோடு கொடுப்பதில்லை. கர்த்தர் கொடுத்த ஜீவன், சுகம், பெலன், செல்வத்திற்காக, கர்த்தர் கொடுத்த ஞானம் இவற்றைக் குறித்து எண்ணிப் பார்க்காமல் கர்த்தருக்கு சேர வேண்டிய பணத்தையும் வஞ்சித்து விடுகிறார்கள். தசமபாகம் விதையைப் போன்றது. விதை தானியத்தைப் புசித்து வீணாக்கிவிடாதிருங்கள். வேதம் சொல்லுகிறது, “தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது” (லேவி.27:30). நீங்கள் தசமபாகம் செலுத்தும் போது தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு கதவை திறக்கிறீர்கள். தசமபாகத்தின் மூலம் கர்த்தருடைய உள்ளமும் மகிழும்.

Related Posts