Menu Close

பாவமன்னிப்பைக் கொடுக்கும் வார்த்தை

என் பிரியமான சகோதர சகோதரிகளே, மனுக்குலத்தின் மீட்புக்காக பிதாவின் மடியில் செல்லக்குமாரனாய் தவழ்ந்து கொண்டிருந்த இயேசு தம்மையே தாழ்த்தி, இந்த பூமிக்கு இறங்கி வந்ததன் நோக்கம் பாவிகளை மன்னிக்க, அந்த மீட்பர் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு ஸ்திரீயை எப்படி விடுதலை பண்ணினார் என வேதத்திலிருந்து பார்ப்போம்.

பாவம் மிகவும் கொடியது. பாவம் செய்த ஆத்துமா சாகும். பாவத்தின் சம்பளம் மரணம். இப்படிப்பட்ட தண்டனைகளை வேதத்தின் மூலம் நாம் தெரிந்து கொண்ட பின்னும் ஒவ்வொரு நாளும் நாம் பாவத்தில் விழுகிறோம். அப்படி ஒருவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அவன் அமைதியை இழந்து விடுவான். சந்தோஷமும் சமாதானமும் இன்றி தவிப்பான். அவனுக்கு இளைப்பாறுதல் என்பது கிடையாது.

கர்த்தர் படைத்த முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் அதைப் பாதுகாக்கக் கூறி ஏற்ற துணையான ஏவாளையும் சிருஷ்டித்துக் கொடுத்தார். தேவனோடு பேசினான். ஆனால் சாத்தானின் வஞ்சனையால் ஏவப்பட்டு தேவன் புசிக்கக்கூடாது எனக் கூறிய பழத்தைப் புசித்ததால் தேவ மகிமையை இழந்தான். தேவன் ஆதாமைக் கூப்பிட்ட போது தேவனுக்கு முன்பாக வரமுடியாமல் ஒளிந்து நின்றான். பாவத்தை ஒரு மனிதன் செய்தால் அது இறைவனுக்கும், அவனுக்குமிடையே தடுப்புச்சுவரை உண்டு பண்ணி விடும். கர்த்தர் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி அவர்களுக்குச் சாபத்தையும் மரணத்தையும் கொடுத்து நியாயம் தீர்த்தார்.

ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தபோது தேவாலயத்திலுல்ள வேதபாரகரும், பரிசேயரும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு ஸ்திரீயை இயேசுவுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினார். அவர்கள் மனதிற்குள் ஒரு சூழ்ச்சி குடி கொண்டிருந்தது . என்னவெனில் என்ன காரணத்தினாலாவது இயேசுவைக் குற்றம் சுமத்த வேண்டும். அதனால் அவர்கள் இயேசுவிடம் “விபச்சார ஸ்திரீக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் கூறும்” என்கிறார்கள். ஏனென்றால், “இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்கு கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்” (யோவான் 8:5)

வேதபாரகரும், பரிசேயரும் நியாயப்பிரமாணத்துக்கு மதிப்புக் கொடுத்து இதைச் சொல்லவில்லை. மேலும் பாவத்தைத் தேசத்தை விட்டு அழிக்கும் ஆவலிலும் இதைச் சொல்லவில்லை. இயேசுவை எதிலாவது பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் கேட்டனர். இயேசுவோ அவர்களுடைய எண்ணத்தை அறிந்தும் பதில் பேசாமலிருந்தார். அவர்களோ இயேசுவை விடுவதாக இல்லை. விடாமல் திரும்ப திரும்பக் கேட்டனர். ஆனால் இயேசுவோ அமைதியாகத் தரையில் எழுதினார்.

இதே போல் அமைதியாக இயேசு இருந்த வேறு இடங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்ட வாஞ்சிக்கிறேன். இயேசு பூமியிலிருந்த நாட்களில் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். ஆனால் அக்காலத்திலுள்ள மதத்தலைவர்கள் அவருடைய நற்பெயரைக் கெடுக்கும்படி பொறாமையால் அவருக்கு விரோதமாகப் பேசினர். கிரியை செய்தனர்.

மத் 12:24ல் “பரிச்சேயர்கள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூல்” என்றனர். (லூ 7:34) ல் இயேசுவைப் போஜனப்பிரியன் மதுபானப்பிரியன், ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும் சிநேகிதன்” என்றனர். யோவான் 7:12ல் “ஜனங்களை வஞ்சிக்கிறவர்” என்றனர். (யோவான் 8:48)ல் “சமாரியன்” என்றும் “பிசாசு பிடித்தவன்” என்றும் (யோவான் 9:24)ல் “பாவி” என்றும் யோ10:20ல் பயித்தியக்காரன்” என்றும் கூறினர்.

இத்தனையும் கேட்டபின்பும் இயேசு யாரிடமும் கோபப்படவோ, சண்டை போடவோ கசப்பான வார்த்தைகளைப் பேசவோ இல்லை. அமைதியாகவே ஒவ்வொரு இடத்திலும் கடந்து போனதைப் பார்க்கிறோம். அதனால் தான் தேவனால் எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தைப் பெற்றுக் கொண்டார் – பிலி 2:11. இதேபோல் யோசேப்பின் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்ததை வேதத்தில் பார்க்கிறோம். யோசேப்பு போத்திபாரின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது போத்திபாரின் மனைவி யோசேப்பின் அழகில் மயங்கி தன்னோடு கூட பாவம் செய்ய வற்புறுத்தினாள். ஆனால் யோசேப்பு தேவனுக்குப் பயந்து நடப்பவன். ஆதலால் அவளுடைய பாவச்செயலுக்கு மறுத்து விட்டான். கோபம் கொண்ட பார்வோனின் மனைவி சத்தமிட்டு அங்குள்ளவர்களிடம் “யோசேப்பு தன்னைப் பாவம் செய்ய அழைத்தான்” என்று கூறுகிறாள். ஆனால் யோசேப்போ அமைதியாக இருந்தான். தேவன் அனைத்தையும் அறிந்தவர். ஆதலால் யோசேப்பை எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கி யோசேப்பின் பெயரை “சாப்நாத்பன்னேயா” என்று பார்வோன் மாற்றியதை (ஆதி 41:45)ல் பார்க்கிறோம்.

தேவபிள்ளைகளே உங்களுடைய நற்பெயர் அநியாயமாய் கெடுக்கப்படும் போது நீங்கள் அதை பொறுமையோடு சகித்தால் தேவன் உங்களுக்கும் புதிய நாமத்தையும், புதிய ஆசீர்வாதத்தையும் தந்தருளுவார். வேதம் கூறுகிறது, “ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ… என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்”.

(வெளி 3:12) பரிச்சேயரும், சதுசேயரும் விபச்சாரஸ்திரீக்கு “… நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்” (யோவான் 8:5) “… இயேசுவோ குனிந்து விரலினால் தரையிலே எழுதினார் ” (யோவா8:5) இயேசு மனதுருக்கம் நிறைந்தவராய் தரையில் எழுதியிருப்பார். அவளுக்குப் பாவமன்னிப்புக் கொடுப்பதற்காக மன்னிப்புச் சட்டத்தை தன் கையால் தரையில் எழுதியிருப்பார்.

கர்த்தர் தன் கையினால் தான் மோசேயிடம் சீனாய் மலையிலே நியாயப்பிரமாணத்தை எழுதிக்கொடுத்தார். (யாத் 32:15, 16) அதேபோல் தாவீதிடம் தனக்கு ஆலயம் எப்படி இருக்கவேண்டுமென்று கர்த்தர் தெளிவாக எழுதிக்கொடுத்தார். (1 நாளா 28:19) அதே போல் தான் விபச்சார ஸ்திரீக்கும் எழுதி முடித்து விட்டு சுற்றி நின்றவர்களைப் பார்த்து

“… உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” (யோ8:7) என்று கூறிவிட்டு மறுபடியும் குனிந்து தரையிலே எழுதினார். ஆனால் அங்கு சுற்றி நின்ற சிறியோரிலிருந்து பெரியோர்வரை மனசாட்சியினால் வாதிக்கப்பட்டு அந்த இடத்தை விட்டு போய் விட்டனர். கிறிஸ்து முதலில் எழுதிய எழுத்து அந்த பாவியாகிய ஸ்திரீயின் தலை எழுத்தை மாற்றி அமைத்தது. அந்த நிமிடமே அவளுடைய பாவத்திலிருந்து அவளுக்கு விடுதலை கிடைத்தது. இரண்டாம் தடவை கிறிஸ்து எழுதிய எழுத்து குறை கண்டுபிடித்துக் கொண்டிருந்த பாவிகளை ஓட ஓட விரட்டியது. இயேசு எழுதி முடித்து விட்டு தலைநிமிர்ந்து சுற்றிலும் பார்த்தார். சுற்றிலும் ஒருவரையும் காணாததால் நின்று கொண்டிருக்கும் ஸ்திரீயைப் பார்த்து,

“ஸ்திரியே உன்மேல் குற்றம் சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.” (யோவான் 8:10)

அவள் இயேசுவிடம் இல்லை என்று பதிலளித்தாள். உடனே இயேசு அவளைப் பார்த்து

“… நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனி பாவஞ்செய்யாதே என்றார்.” யோவான் 8:11

எப்படிப்பட்ட தீர்ப்பை நமது இரட்சகர் வழங்கினார் பாருங்கள் நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவள் ஆனால் நமது அருமை மீட்பரோ அவளுக்கு பாவமன்னிப்பையும், விடுதலையும் கொடுத்தார். அவள் எத்தனை சந்தோஷம் அடைந்திருப்பாள். வேதத்திலுள்ள ஒரு அருமையான வாக்குத்தத்தத்தை நினைவுகூற விரும்புகிறேன்.

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9) யார் இயேசுவிடம் தங்கள் பாவத்தை அறிக்கையிடுகிறார்களோ, அவர்களுடைய பாவத்தை மீட்பர் மன்னிப்பார், சுத்திகரிப்பார். உங்கள் பாவசிந்தையை மாற்ற தேவ வசனங்களை நாடுங்கள். பாவக்கறை படியாமல் இருக்க எப்போதும் ஜெப சிந்தையோடு இருக்கப் பழகுங்கள். ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் ஜெபித்துக் கொண்டிருங்கள். ஜெப ஆவியும், ஜெப சிந்தையும் உங்களுக்குள் இருக்குமானால் பாவத்தைக் கொண்டு வருகிற சாத்தான் பயந்து ஓடுவான். உங்கள் பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டு பரிசுத்த தேவனின் மகிமையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இன்று உனக்காக வழக்காட ஒருவர் இருக்கிறார். உனக்காகப் பிதாவிடம் பரிந்து பேச இயேசு இருக்கிறார். சத்ருக்களின் சதித்திட்டங்களைத் தகர்த்தறிந்து உன்னை வாழவைக்க இயேசுவாகிய மீட்பர் இருக்கிறார். மனம் கலங்காதே, கண்ணீர் வடிக்காதே. உன் கண்ணீரைத் துடைத்துக் கொள். நீ தொடர்ந்து அந்த இடத்தில் வாழ்ந்து கனி கொடுக்கப் போகிறாய். உனக்காக இயேசு பரிந்துப் பேசி உனக்காக வழக்காடி உன்னை அந்த இடத்திலேயே வாழ வைக்கப் போகிறார். ஆமென்.

Related Posts