நேபுகாத்நேச்சார் தெரிந்தெடுத்தவர்கள்:
யோயாக்கீமின் வருஷத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைப்பிடித்து அழைத்துச் சென்றார். சிறையாகக் கொண்டு வந்த யூதர்களில் மாசுமருவில்லாதவர்கள், அழகானவர்கள், சகல ஞானத்திலும் தேறினவர்கள், அறிவில் சிறந்தவர்கள், கல்வியில் நிபுணர்களாகிய வாலிபர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்குக் கல்தேயர் எழுத்தையும், பாஷையையும் கற்றுக்கொடுக்க ராஜா தன் பிரதானிகளின் தலைவனுக்குக் கட்டளையிட்டார். அதன்படி தெரிந்தெடுத்தவர்கள் தான் தானியேலும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ என்பவர்கள். குறித்த நாட்கள் நிறைவேறிய போது ராஜா அவர்களை விசாரித்ததில் தன்னுடைய ராஜ்ஜியமெங்குமுள்ள சகல சாஸ்திரங்களிலும், ஜோசியத்திலும் அவர்களை 10 மடங்கு சமர்த்தாகக் கண்டான். தானியேலின் வேண்டுகோளின்படி அவனது மூன்று நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை பாபிலோனிய நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருந்தார்கள் – தானியேல் 1 : 1 -4, 18 – 20
நேபுகாத்நேச்சார் இயற்றிய சட்டம்:
தானியேல் 3 : 1, 2 “ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.”
“பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.”
பாபிலோன் சாம்ராஜ்ஜியம் விக்கிரக ஆராதனைக்குப் பேர்பெற்றது. அங்கு ஆயிரக்கணக்கான விக்கிரகங்கள் இருந்தாலும், நேபுகாத்நேச்சார் அவைகளில் திருப்தியடையாமல், தன்னுடைய பெருமையை மற்றவர்களுக்குக் காண்பிக்கவும், ஒரு பொது பக்தி மார்க்கத்தை உருவாக்கவும், எல்லாமொழி பேசும் மக்களும், எல்லா இனமக்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்ற வாஞ்சையிலே உலகசாம்ராஜ்ஜியத்தைக் கொடுத்த தேவனுக்கெதிராகக் கலகம் செய்ய 60 முழ உயரமும், 6 முழ அகலமுமான பொன்னினால் செய்யப்பட்ட ஒரு சிலையைப் பண்ணி, பாபிலோன் மாகாணத்திலிலுள்ள தூரா என்னும் சமபூமியில் அதை நிறுத்தினான். அந்தச்சிலையைப் பணிந்து கொண்டால் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைப் பணிந்து கொள்வதற்குச் சமமாகும். அந்தச்சிலையின் பிரதிஷ்டைக்கு நாடுகளிலுள்ள தலைவர்களையும், அதிகாரிகளையும் அழைத்திருந்தான். ஆனால் தானியேல் அதில் பங்கு பெறவில்லை. வேறு எங்காவது ராஜா அவனை அனுப்பியிருக்கக் கூடும்.
தானியேல் 3 : 4 – 6 “கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:”
“எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாக்கியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள்.”
“எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.”
அந்நாட்களில் ராஜா ஜனங்களுக்கு ஏதாவது தன்னுடைய கட்டளையையோ, செய்தியையோ அறிவிக்க வேண்டுமென்றால் கட்டியக்காரன் என்ற பொறுப்பிலுள்ள ஒருவனிடம் கூறி அதை மக்களுக்கு அறிவிக்கக் கூறுவான். அதையே தான் இதில் ராஜா கட்டியக்காரன் மூலமாக வந்திருந்த அனைவரிடமும் எக்காளம், நாதஸ்வரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலிய கீதவாத்தியங்களின் சத்தம் ஒலிக்கும் போது, அனைவரும் தாழவிழுந்து கட்டாயமாக தான் நிறுத்தின அந்தப் பொற்சிலையைப் பணிந்து கொள்ள வேண்டுமென்றும், யாராவது அதைப் பணிந்து கொள்ளாவிட்டால், அவனை அந்நேரத்திலேயே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படும் என்பதை அனைவருக்கும் அறிவிக்கச் செய்தான்.
சிலையை வணங்கியவர்களும், வணங்காதவர்களும்:
தானியேல் 3 : 7,12 “ஆதலால் சகல ஜனங்களும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாக்கியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொண்டார்கள்.”
“பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.”
சகல ஜனங்களும் ராஜா நிறுத்தின பொற்சிலைக்கு முன் தாழவிழுந்து பணிந்து கொண்டார்கள். கல்தேயரின் பொறுப்பிலுள்ள சிலர் ராஜாவினிடத்தில் வந்து யூத வாலிபர்களுக்கு எதிராக, அவர்கள் பெயரில் குற்றம் சுமத்த, பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லையென்றும், உம்முடைய தேவனுக்கு ஆராதனை செய்யவில்லையென்றும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளவில்லையென்றும் கூறினார்கள்.
தம்மை ஆள்பவர்களுக்குக் கீழ்ப்படிந்து, கவனம் செலுத்தி அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று வேதாகமம் நமக்குப் போதித்தாலும் (ரோமர் 13 : 1 – 7, 1பேதுரு 2 : 13 – 17), நமது முதல் கடமை, நமது தேவனைப் பிரியப்படுத்துவதுதான். நமது உண்மையான தேவனை நமது முழு இருதயத்தாலும், உன் முழு ஆத்துமாவினாலும், உன் முழு மனதாலும், உன் முழு பெலத்தாலும் நேசிக்க வேண்டுமென்ற முதலாவது கட்டளைக்கு நாம் கீழ்படிந்தால் (உபாகமம் 6 : 5, மத்தேயு 22 : 37, 38), வேறு எந்த பொய்யான தெய்வத்தையோ அல்லது ஒரு கடவுளுக்காகச் செய்யப்பட்ட சிலையையோ தெய்வீக மரியாதை கொடுத்து ஆராதிக்க முடியாது.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களும் தங்களுடைய தேவனையல்லாமல் வேறு தேவர்களை வணங்கக் கூடாது என்ற வைராக்கியத்தில் ராஜாவின் சட்டத்தை மதித்து அந்தப் பொற்சிலையைப் பணிந்து கொள்ளவில்லை.
ராஜாவின் கேள்வியும், யூதர்களின் பதிலும்:
ராஜாவின் கேள்வி:
தானியேல் 3 : 14, 15 “நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா?”
“இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாக்கியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணி வைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிரு ந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.”
ராஜா கோபத்தில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை அழைத்துவரக் கட்டளையிட்டார். அவர்களை நோக்கி ராஜா அந்தப் பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமல் இருந்தது உண்மைதானா என்று விசாரித்து, இப்பொழுதாவது அந்தச் சிலையைப் பணிந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் இப்பொழுதே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள் என்று கூறி, உங்களை அந்த அக்கினியிலிருந்து எந்த தேவனும் தப்புவிக்க முடியாது என்று சவால் விட்டார். ரோமர் 8 : 31, 33, 34 கூறுகிறது “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?” என்பதை ராஜா அறியவில்லை.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மூவரும் ராஜாவுக்குப் பயந்து தங்களது தனிப்பட்ட தீர்மானங்களை மற்றவர்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றிக் கொள்ளவில்லை. மாறாத ஒன்றான மெய்தேவனோடு அவர்களுக்கிருந்த தொடர்பைக் குறித்து தைரியமாய்ச் சாட்சி கொடுத்தார்கள். அரச கட்டளையை மீறத் துணிந்தனர். பதவியை இழக்கத் துணிந்தனர். உயிரைக்கூட விட்டுவிடத் துணிந்தனர். இரத்தசாட்சியாக மரிப்பதற்கும் அவர்கள் பயப்படவில்லை. மரணத்திற்கு முன்பு அவர்கள் மூவரும் நின்றார்கள். பின் விளைவுகளைச் சிந்திக்காமல் தேவனை நம்பி, அவருக்குக் கீழ்படியும் விசுவாசத்தை உடையவர்களாக இருந்தார்கள். வேதாகமத்திலிலுள்ள பல பெரிய பரிசுத்தவான்களின் விசுவாசம் சோதிக்கப்பட்டதைப் போல , இந்த மூன்று நண்பர்களின் விசுவாசமும் சோதிக்கப்பட்டது.
யூதர்களின் பதில்:
தானியேல் 3 : 16, 17, 18 “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.”
“நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.”
“விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக் கடவது என்றார்கள்.”
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நேபுகாத்நேச்சாரே என்று ராஜாவைப் பெயர் சொல்லி அழைத்து, ராஜாவின் கேள்விக்குப் பதில் சொல்ல, தங்களுக்கு அவசியமில்லை என்றனர். அதன் விளக்கம் அரசு பொறுப்புகளும், கடமைகளுக்கும் தாங்கள் ராஜாவுக்குப் பதில் சொல்ல வேண்டும், ஆனால் தங்களுடைய தெய்வ வழிபாட்டைக் குறித்து ராஜாவுக்கு உத்தரவு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுதான். மேலும் அவர்கள் தாங்கள் ஆராதிக்கிற தேவன் தங்களைத் தப்புவிப்பார் என்றும், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் என்ற அவர்களுடைய தீர்மானத்தில் உறுதியாக நின்றனர். விடுவிக்கப்படாவிட்டாலும் தாங்கள் அந்தப் பொற்சிலையைப் பணிந்து கொள்ள மாட்டோம் என்று விசுவாச அறிக்கையிட்டனர். இங்கு விடுவிக்கா விட்டாலும் என்பதை அவர்கள் அவிசுவாசத்தில் கூறவில்லை. இந்தத் தீயில் விடுவித்தால் மட்டுமே அவர் தேவன் என்று விசுவாசிக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதுதான் அவர்கள் கூற்று. அங்கு தேவசித்தம் எப்படி அமைய வேண்டுமென உள்ளதோ அப்படியே அமையட்டும் என்று விட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் அந்தச் சிலையை வணங்கி நித்திய அக்கினியில் தள்ளப்படுவதை விரும்பவில்லை. யாத்திராகமம் 20 : 3, 5 ல் கூறப்பட்ட நியாயப்பிரமாணத்தின் முதல் இரண்டு கட்டளைகளைகளாகிய
“நீ என்னையன்றி உனக்கு வேறே தேவர்களை உண்டாயிருக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.”
என்பவைகளை மீறுவதற்கு அவர்கள் பிரியப்படவில்லை. அவர்கள் மூவரும் வைராக்கியமாகவும், தைரியமாகவும் நின்றதைப் பார்க்கிறோம். தேவன் தங்களை நிச்சயமாய்த் தப்புவிப்பார் என்ற விசுவாசம் அவர்களிடம் இருந்தது. விசுவாசத்திற்காகப் போராடத் துணிந்தால் பதவி உயர்வு பாதிக்கப்படும் இடமாற்ற நெருக்கடிகள் தொடரும், மிரட்டல்கள் பெருகும், வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றெல்லாம் பயந்து விசுவாச போராட்டத்தை விட்டுவிடத் துணிவோர் ஏராளமுண்டு. ஆனால் இவர்கள் மூவரும் விசுவாசத்திற்காக எதையும் இழக்கத் துணிந்தனர்.
ராஜாயிட்ட கட்டளையும், ஒப்புமையும்:
தானியேல் 3 :19 – 21 “அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்கு கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையை சாதாரணமாய்ச் சூடாக்குவதைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவு கொடுத்து,”
“சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச் சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.”
“அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.”
ராஜா கோபத்தில் அக்கினிச்சூளையை 7 மடங்கு அதிகமாக்கும்படி உத்தரவிட்டு, ராணுவத்தின் பலசாலியான புருஷர்களை வரச்சொல்லி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவினுடைய சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும், மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு அக்கினிச்சூளையில் போடக்கட்டளையிட்டார். ஆண்டவர் கட்டுகளை எரிக்கிறவர், கட்டுகளை உடைக்கிறவர் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த அக்கினிச்சூளை மகா உபத்திரவகாலத்தில் இடம் பெறப்போகிற வேதனையைக் குறிக்கிறது. இது உண்மையான சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின் நடைபெறுவதைக் காட்டுகிறது. ராஜா அந்திக்கிறிஸ்துவுக்கு ஒப்பனையாயிருக்கிறான். பொற்சிலை மத்தேயு 24 : 15 ல் கூறப்பட்ட பாழாக்கும் அருவருப்பைக் குறிக்கிறது. வணங்கச் செய்வது, அந்திகிறிஸ்து அனைவரையும் கட்டாயப்படுத்தி தன்னைத் தொழுது கொள்ளச்சொல்வதைக் குறிக்கிறது. யூத வாலிபர்கள் உபத்திரவகாலத்தில் மீதமிருக்கும் யூதர்கள் அற்புதமாக பாதுகாக்கப்படுவதைக் குறிக்கிறது. தானியேல் இல்லாதது, மகாஉபத்திரவகாலத்தில் மீட்கப்படுகிறவர்கள் பூமியில் இருக்கப்போவதில்லை என்பதையும், தேவனது அநாதித்தீர்மானத்தையும் காட்டுகிறது. அந்த நாலாவது ஆள் மத்தேயு 28 : 20 ல் கூறிய எப்பொழுதும் நம்மோடு கூட இருக்கிற இயேசுவைக் குறிக்கிறது.
அக்கினிச்சூளையில் நடந்தது:
தானியேல் 3 : 22, 23 “ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியி னாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்று போட்டது.”
“சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.“
ராஜாவின் கட்டளையின்படி ராணுவத்தின் பலசாலியான புருஷர்கள் யூத வாலிபர்கள் மூவரையும் கட்டி அக்கினிச்சூளையில் தூக்கிப்போட்டபோது வெப்பத்தின் மிகுதியான அக்கினி பாய்ந்து வந்து அவர்களைப் பட்சித்தது. அக்கினியினுள் தூக்கி எறிந்தவர்கள் மாண்டனர். அக்கினியினுள் எறியப்பட்ட எபிரேய வாலிபர்கள் உயிர் பிழைத்தனர். கட்டப்பட்டவர்களாய் சூளைக்குள் விழுந்தவர்களுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. தூக்கிப்போட்டவர்களை பூமிக்குரிய அக்கினி பட்சித்தது. பரலோகஅக்கினி மூன்றுபேரையும் ஒன்றும் செய்யாமல் பாதுகாத்தது. பரலோக அக்கினியோடு தேவன் அந்தச்சூளையில் இறங்கியபோது சூளையின் அக்கினி செயல்படவில்லை.
அக்கினியை மிதிப்பவர்கள் ஓடுவார்கள். உலாவ மாட்டார்கள். ஆனால் அக்கினிக்குள் எறியப்பட்ட மூன்று வாலிபர்களும் உலாவினார்கள். விசுவாச வீரர்களுக்கு அக்கினியானது குளுகுளு அறை போலானது. அக்கினியின் தன்மை மாறவில்லை என்பதை செத்தவீரர்கள் நிரூபித்தனர். ஆனால் அந்த அக்கினி சத்திய வீரர்களைத் தீண்டவில்லை. தீமை செய்கிறவர்கள் அதன் பலனை நிச்சயமாக அனுபவிப்பார்கள் என்பதை தூக்கிச்சென்றவர்களின் நிலமையிலிருந்து அறிகிறோம். உலக அக்கினியானது வாலிபர்கள் மேல் பெலஞ்செய்யவில்லை. அவர்கள் கட்டியிருந்த கட்டுக்கள் மட்டும் எரிந்து போயின. அவர்களுடைய விசுவாசத்தைத் தேவன் கனப்படுத்தினார்.
ராஜா பார்த்ததும் செய்ததும்:
தானியேல் 3 : 24, 25 “அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.”
“அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுவதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவ புத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.”
தீவிரமாய் அக்கினிச்சூளையையே பார்த்துக் கொண்டிருந்த ராஜா, கட்டுண்டவர்களாய் போட்ட மூவரும் விடுதலையோடு அக்கினிக்குள் உலாவுவதையும், அவர்களோடு இன்னொருவர் நடமாடுவதையும் பார்த்து வியப்பிலாழ்ந்தார். அவரது வியப்பிற்குக் காரணம் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட அக்கினியின் நடுவில் உலாவுவதென்பது நடக்க முடியாத, நம்பமுடியாத ஒரு செயல்.. ராஜா தன் மந்திரிமார்களை நோக்கி, மூன்று புருஷர்களையல்லவா கட்டப்பட்டு அக்கினியில் போட்டோம் என்று உறுதிப்படுத்தக் கேட்டார். அவர்கள் ராஜாவிடம் 3 புருஷர்களைத்தான் போட்டோம் என்று கூறினர். அதற்கு ராஜா அவர்களிடம் மூன்றுபேர் அல்ல, நாலுபேர் விடுதலையுடன் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதை தான் பார்ப்பதாகவும், அந்த நாலாவது ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றும் கூறினார்.
ராஜா அக்கினிச்சூளையின் வாசலண்டைக்குப் போய் “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்” என்று அழைத்தார். ராஜா நாலாவது நபரை அழைக்கவில்லை. ராஜா அழைக்கும்வரை உக்கிரமான தீயின் நடுவில் ஒரு சேதமுமின்றி உலாவியது மட்டுமின்றி ராஜா அழைத்தவுடன் சாதாரணமாக வெளியே வந்தனர். அவர்கள் மூவரும் வெளியே வந்தார்கள். ராஜா மூவரையும் பார்த்து தேவனுடைய தாசரே என்று தன்னுடைய வாயால் அறிக்கை செய்ததைப் பார்க்கிறோம். தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் வந்து அந்த புருஷர்களுடைய சரீரங்களின் மேல் அக்கினியின் மணம் வீசாமலும், தலைமயிர் கருகாமலும், சால்வைகள் சேதமடையாமலும், இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர் — தானியேல் 3 :24 — 27
நான்காவது நபரின் செயல்:
அக்கினிச்சூளையில் நாலாவது ஆளாக உலாவினவர் உலகத்தோற்றத்துக்கு முன்பிருந்தவர்.
ஏசாயா 43 : 2 ல் “…..நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது”
என்று வாக்குத்தத்தம் செய்தவர். அந்த வாலிபர்களின் விசுவாசத்தைக் கனப்படுத்த அக்கினியின் உக்கிரத்தை அவித்தார். அவர்களோடு கூட உலாவினார். வாலிபர்களை 7 மடங்கு சூடான அக்கினி எந்த சேதமும் செய்யாதபடி அவர்களைப் பாதுகாத்தார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் கடந்து வரும் பாதையில் அவர்களோடு கூட இருப்பவர் நம் தேவன். தன்னுடைய பிள்ளைகள் எதிரிகளின் நாடான பாபிலோனில் இருந்தாலும் தேவன் அவர்களோடு கூட இருந்தார்.
ராஜா இட்ட கட்டளை:
தானியேல் 3 : 29 “ ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமான தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப்பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை என்றான்.”
கர்த்தர் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் பட்சத்தில் கர்த்தர் இருப்பதை நேபுகாத்நேச்சார் அறியவில்லை. ராஜா தனது தோல்வியை ஒப்புக்கொண்டது மட்டுமன்றி, தேவனைப் புகழக்கூடிய மனமும் அவரிடத்தில் காணப்பட்டதைப் பார்க்கிறோம்.. கோபக்காரராகிய நேபுகாத்நேச்சார் சமாதானம் கூறுகிறவராக மாறினார். உன்னதமான தேவனைக் கண்டு கொண்டார். தேவனின் மாபெரும் செயல்களை யாவருக்கும் அறிவித்தார். பூமியெங்கும் அவருடைய புகழைப் பறை சாற்றினார். அவருடைய ஆட்சி என்றுமுள்ளது என்று தலை வணங்கினான். உண்மையைக் ஏற்றுக்கொண்டு, தம்மைத் தாழ்த்தும் பண்பையும், தாம் அறிந்து கொண்ட உண்மையை (நற்செய்தியை) யாவருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆவலையும், முயற்சியையும் அவரிடத்தில் நாம் பார்க்கிறோம்..
தேவன் அவரை அதிகமாக நேசித்ததால் அவருக்குப் படிப்படியாகத் தம்மை வெளிப்படுத்தி, இறுதியில் தமது ஊழியக்காரனாக அவரைத் தெரிந்து கொண்டார் எரேமியா 25 : 9 ல் பார்க்கிறோம். ராஜா தன்னுடைய வாயால் இரட்சிக்கப்படத்தக்க தேவன் கர்த்தர் ஒருவரே என்று அறிக்கையிட்டார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தைகளை யாராவது கூறினால் அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த பாஷைக்காரராயிருந்தாலும், எந்த ஜனமாயிருந்தாலும் துண்டித்துப் போடப்படுவர் என்றும், அவர்களுடைய வீடு எருக்களமாக்கப்படும் என்றும் கட்டளையிட்டார். பாபிலோன் தேசத்திலே அந்த மூன்று பேரையும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தார் — தானியேல் 3 : 28 – 30
முடிவுரை:
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைப் போல நாமும் கர்த்தருக்காக வைராக்கியமாக நிற்க வேண்டும். தேவனை அவர்களை எல்லோரையும்விட உயர்த்தினார் எந்த நாட்டிலிருந்தாலும், எந்த இடத்திலிருந்தாலும் கர்த்தருக்கு விரோதமான செயல்கள் செய்யவே கூடாது. தேவன் நாம் எந்த சூழ்நிலையிருந்தாலும் நம்மைப் பாதுகாக்கவும், விடுவிக்கவும் ஆற்றலுள்ளவர். அவருடைய அனுமதியின்றி ஒன்றும் நடக்காது (மத்தேயு 10 : 28 — 30). சகலமும் அவரது திட்டப்படி நமது நன்மைக்காகவே நடக்கின்றன (ரோமர் 8 : 28). சூழ்நிலைகளுக்கு சாக்குப்போக்குச் சொல்லி பாவம் செய்யத் துணியாதிருப்போம். பின்விளைவுகள் எதுவாயிருந்தாலும் தேவனுக்கும், அவரது வார்த்தைக்கும் உண்மையாயிருக்க வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தை நாம் எடுக்கத் தேவன் நமக்கு உதவ வேண்டும் என்று அவரிடத்தில் கேட்போம்.