மத்தேயு 9 : 1 – 8; மாற்கு 2 : 1 – 12; லூக்கா 5 : 1
இயேசு வீட்டில் வசனத்தைப் போதித்தார்:
மாற்கு 2 :1,2 “சில நாட்களுக்குப் பின்பு இயேசு மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு; உடனே வாசலுக்கு முன்னால் நிற்க இடம்போதாதபடிக்கு அனேகர் கூடி வந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தை போதித்தார்.”
குஷ்டரோகியை இயேசு குணமாக்கினதால் எல்லா திசைகளிலுமிருந்து ஜனங்கள் இயேசுவைத் தேடி வந்தனர். கெர்கெசேனர் நாட்டில் உள்ளவர்கள் தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி கூறியதால், இயேசு தம்முடைய பட்டணமாகிய கப்பர்நகூமுக்கு மறுபடியும் வந்தார். கப்பர்நகூமை ரோமர்கள் துறைமுகமாகப் பயன்படுத்தினர். ரோம போர்வீரர்களில் ஏராளமானோர் அங்கிருந்தனர். இவர்கள் லத்தீன் மொழி பேசுகிறவர்கள். அவர்கள் கப்பர்நகூம் வரவேண்டுமானால் வரி கட்டித்தான் வரமுடியும். கப்பர்நகூம் துறைமுகம் ரோமர்களுக்காக அமைக்கப்பட்ட துறைமுகம். ரோமர்கள், கிரேக்கர்கள், யூதர்கள் என்று மூன்று வித ஜனங்கள், மூன்று வித மொழிகளைப் பேசுகிறவர்கள், மூன்று வித கடவுள்களை வழிபடுகிறவர்கள் அங்கு வாழ்ந்தனர்.
மத்தேயு 8 : 14 – 16 ல் இயேசு சீஷர்களுடன் பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது அநேகர் சுகம் பெற்றார்களென்று பார்க்கிறோம். மத்தேயு 9 : 9 – 13 ல் மத்தேயுவின் வீட்டில் அநேக ஆயக்காரர்களும், பாவிகளும் இயேசுவுக்கு அறிமுகமானார்களென்று பார்க்கிறோம். யோவான் 12 ம் அதிகாரத்தில் மார்த்தாள், மரியாளின் வீடு இயேசுவுக்கு இளைப்பாறும் இடமாக இருந்ததைப் பார்க்கிறோம். ஜனங்கள் இயேசு அங்கு இருக்கிறாரென்பதை அறிந்து, அநேகர் அங்கு கூடி வந்தனர். வீட்டிற்குள் யாரும் பிரவேசிக்க முடியாதபடி கூட்டம் நெருக்கியது. அங்கிருந்த ஜனங்களுக்கு வசனத்தைப் போதித்தார். இயேசு மேடை போட்டோ, மைக்கைப் பிடித்தோ பேசவில்லை. ஜனங்களின் மத்தியில் நின்று பேசினார். இயேசுவின் பிரதான பணி வசனத்தைப் போதிப்பது தான். அதேபோல் நாமும் நம்முடைய ஊழியத்திலும் முக்கியமாக வார்த்தைகளைப் போதிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இயேசு நோயாளியின் பாவங்களை மன்னித்தார்:
மாற்கு 2 : 3 -5 “ அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதவாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.”
நடக்க முடியாத ஒரு மனிதனை நான்கு நண்பர்கள் சேர்ந்து சுமந்து கொண்டு வந்தார்கள். செத்துப்போன ஒருவனை நாலுபேர் சுமந்து செல்வார்கள். ஆனால் இங்கு நடக்க முடியாதவனை வாழ வைக்க நான்குபேர் முயன்றனர். இந்த மனிதனுக்கு மூளையில் ஏற்பட்ட சிதைவினால் அவனுடைய கை, கால்கள் உணர்விழந்து விட்டது. இதனால் அவன் பக்கவாத நோயினால் முடக்கப்பட்டான். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பார்வை இருக்கும், பேச்சுத் திறன் இருக்கும், ஆனால் கை கால்கள் செயலிழந்து நடக்க முடியாது. கூட்டத்தால் சுமந்து வந்தவர்களுக்கு உள்ளே போக முடியாததால் அந்த நாலு பேரும் சேர்ந்து கூரையின் வழியாக அவனை இறக்கினார்கள். இந்த சப்பாணிக்கு விசுவாசம் இருந்ததோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவனுடைய நண்பர்களுக்கு இருந்த விசுவாசம் பெரிய காரியத்தைச் செய்ய வைத்தது. தூக்கி வந்தவர்களுக்கு எதுவும் தடையாகத் தெரியவில்லை. எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்தனர். அந்த வீடு இயேசு வாசம் பண்ணியிருந்த வீடு, ஆதலால் பிரித்தால் கோபப்படமாட்டார்கள் என்று நினைத்திருக்கலாம்.
விசுவாசமானது தடைகளைப் பார்க்காது. வாய்ப்புகளைத்தான் பார்க்கும். கூட்டமாக இருந்ததால் நாளை பார்க்கலாம் என்று அந்த நால்வரும் போகவில்லை. இயேசுவை சந்திக்காமல் போகமாட்டேன் என்று விடாப்பிடியாக முயன்றதைப் பார்க்கிறோம். இதேபோல் வேதத்தில் யாக்கோபு போராடி ஜெபித்து ஆசி பெற்றதை ஆதியாகமம் 32 : 26 ல் பார்க்கிறோம் இயேசு இதைப் பார்த்தார். பிரசங்கம் நின்றது. அந்த நாலு பேரும் இந்தத் திமிர்வாதக்காரனைக் கொண்டு வர எவ்வளவு பிரயாசப்படுகின்றனர் என்பதை இயேசு அறிந்தார். இந்த நான்கு பேரும் சரியான நேரத்தில் சரியான தீர்மானம் எடுத்ததைப் பார்க்கிறோம். மாற்கு 9 : 24 ல் பிசாசு பிடித்த தன் மகனுக்காக ஒரு தகப்பன் இயேசுவிடம் வந்து சுகம் பெற்றதைப் பார்க்கிறோம். மத்தேயு 15 : 28 ல் பிசாசு பிடித்த தன் மகளுக்காக ஒரு கானானிய ஸ்திரீ இயேசுவிடம் வந்து சுகம் பெற்றதைப் பார்க்கிறோம். மத்தேயு 8 : 6 ல் ஒரு நுற்றுக்கதிபதி தன்னுடைய வேலைக்காரனுக்காக இயேசுவிடம் வந்து சுகம் பெற்றதைப் பார்க்கிறோம். அதேபோல் இங்கு நான்குபேரும் ஒரு திமிர்வாதக்காரனைக் கொண்டு வந்தனர்.
அந்த நான்கு பேரின் விசுவாசம் தான், இயேசுவைச் சந்திக்க, இத்தகைய சுகவீனமானவனைத் தூக்கி வரச் செய்தது. வேதத்தில் நுற்றுக்கதிபதியின் பெரிய விசுவாசத்தைப் போல இந்த நான்கு பேரின் கூட்டு விசுவாசத்தைப் பார்க்கிறோம். இவ்வாறு அந்த நோயாளியை இயேசுவண்டை கொண்டு வந்ததினால், அவனுக்கும் இயேசுவுக்கும் தனிப்பட்ட விதத்தில் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது இயேசுவைப் பிரமிக்கச் செய்தது. இயேசு அந்த வியாதிக்குக் காரணம் அவன் செய்த பாவம் என்றறிந்தார். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து அவனைக் குணமாக்கியது மட்டுமல்ல அவனுடைய பாவங்களையும் மன்னித்தார். பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு இயேசுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த மதத்தாலும் பாவமன்னிப்பு வழங்க முடியாது. இதைத்தான் யோவான் 1 : 29 ல் “உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான்ஸ்நானகன் கூறினார்.
இயேசு ஒரு பரிசேயன் வீட்டில் பந்தியிருப்பதையறிந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ இயேசுவின் பாதத்தில் பரிமளத்தைலத்தைப் பூசினாள். இயேசு அவளைப் பார்த்து லூக்கா 7 : 48 ல் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்றார். மத்தேயு 9 : 2 ல் இயேசு அவனைப் பார்த்து “மகனே திடன்கொள்” என்றும் கூறியதைப் பார்க்கிறோம். அந்த நோயாளிக்கு கடந்த காலத்தில் செய்த பாவங்களினால் ஏற்பட்ட குற்ற உணர்வினால் பயப்படுகிறான் என்பதையறிந்து இவ்வாறு கூறினார். ஒரு மனிதனின் முதல் தேவை அவனது ஆத்துமா பாவத்திலிருந்து விடுதலை பெறுவதுதான். ஆத்தும சுகமே நிரந்தரமானது. ஒரு மனிதனை நரகத்துக்கு கொண்டு போவது அவனது ஆத்துமாதான். அந்த ஆத்துமா கெட்டுப் போயிருந்தால் அவன் நித்திய நித்திய காலமாய் நரகத்துக்குப் போவான். எல்லா அற்புதங்களைக் காட்டிலும் மிகப்பெரிய அற்புதம் இரட்சிப்புதான். குணமாக்குதலும், மன்னித்தலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதைப் பார்க்கிறோம்.
வேதபாரகரின் சிந்தனை:
மாற்கு 2 :6,7 “அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரே யன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.”
அங்கு உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர், பாவங்களை மன்னிப்பவர் தேவன் மட்டுமே, எனவே இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்களுடைய மனதில் நினைத்தனர். ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை. மனதால் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மனதில் இரண்டு கேள்விகள் எழுவதைப் பார்க்கிறோம். 1. இயேசு தேவ தூஷணம் கூறுகிறார். இந்த கேள்வி தவறானது. இயேசு தேவதூஷணம் சொல்லவில்லை. 2. பாவங்களை இயேசுவால் எவ்வாறு மன்னிக்க முடியும் என்பது. ஏனெனில் இயேசுவை அவர்கள் தேவனென்று எண்ணவில்லை. பாவங்களை மன்னிப்பவர் தேவன் ஒருவரே. தேவன் தான் ஒழுக்க நெறிகளை உண்டாக்கியவர், அவர் தான் சட்டதிட்டங்களைக் காத்துக் கொள்ளக்கூடியவர். அவர் ஒரு நீதிபரர். அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிகிறவர். அவர் நியாயப்பிரமாணத்தை முறிக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது. நமது பாவங்களுக்கான தண்டனையை இயேசுவே சுமந்து தீர்த்தார். தேவதூஷணம் சொல்லாத தேவனாய், பாவங்களை மன்னிக்கிற தேவனாயிருக்கிறார். எனவே தேவனான இயேசுவால் பாவங்களை மன்னிக்க முடியும்.
இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி:
மாற்கு 2 : 8,9 “ அவர் தங்களுக்குள்ளே இப்படி சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?”
இந்த வசனங்கள் இயேசு மனுஷனுக்குள்ளிருப்பதை தமது ஆவியில் அறிவார் என்பதைத் தெளிவு படுத்துகிறது. எனவே இயேசு அவர்களைப் பார்த்து “நீங்கள் உங்கள் இருதயங்களில் ஏன் இவ்வாறு சிந்திக்கிறீர்கள்” என்று கேட்டார். மேலும் இயேசு பாவங்களை மன்னிப்பது எளிதா, சுத்தமாக்குவது எளிதா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தனர். இயேசு சரியான பதிலடி கொடுப்பாரென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களால் இந்த இரண்டும் முடியாது. இயேசுவால் மட்டுமே இவைகளிரண்டும் முடியும். அவர்களுடைய இருதயத்தின் நினைவுகள் பொல்லாததாயிருந்தது.
இயேசு செய்த அற்புதம்:
மாற்கு 2 :10 – 12 “பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரமுண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீ ட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படி கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”
மாற்கு இந்த இடத்தில் முதல்முறையாக மனுஷகுமாரன் என்று அறிமுகப்படுத்துகிறார். பாவங்களை மன்னிக்க இயேசு தனக்கு அதிகாரமுண்டென்பதை அவர்கள் அறிய வேண்டும் என்பதற்காகத் திமிர்வாதக்காரனைப் பார்த்து “நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ” என்றார். நடக்க முடியாமல் நான்கு பேரால் சுமந்து கொண்டு வரப்பட்டவன், இயேசுவின் வார்த்தையின் வல்லமையால் உடனே எழுந்தான். அதுமட்டுமல்லாமல் இயேசு கூறியபடி படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாகப் போனான். கட்டளை கொடுக்கும் இயேசு கட்டளையொடுகூட அதற்கு கீழ்ப்படிவதற்கான வல்லமையையும் கொடுக்கிறார். அவனுடைய பழைய நிலைமை முற்றிலும் மாறியது. புதிய மனிதனாய், புதிய நிலமையோடு, புதிய வாழ்க்கை வாழ புதிய நம்பிக்கையோடு, புதிய எதிர்பார்ப்போடு புறப்பட்டுப் போகிறான். இனி அந்த நான்குபேரை நம்ப வேண்டிய அவசியமில்லை. சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் அந்த இடத்தை விட்டு கடந்து போனான் .எல்லோரும் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அனைவரும் தேவனை மகிமைப்படுத்தினர். இதே போல் நாமும் மற்றவர்களை இரட்சிப்பின் பாதையில் நடத்த இயேசுவண்டை அவர்களை அழைத்து வரவேண்டும். கிறிஸ்தவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது “தான் ஒரு பாவி என்பதுதான்” அடுத்தது இயேசு ஒருவரே பாவங்களை மன்னிக்கிறவர் என்பதுதான். இதைத்தான் எபிரேயர் 8 : 12 ல் “நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் நினையாமலிருப்பேன்” என்றார்.”
இந்த அற்புதத்திலிருந்து இயேசு பாவங்களை மன்னிக்கிறவர் மட்டுமல்ல, நோய்களை குணமாக்குகிறவரும் அவர்தான் என்று அறிகிறோம். நம்முடைய விசுவாசத்தின்படியே நாம் தேவனிடமிருந்து ஆசிகளைப் பெற்றுக்கொள்கிறோம் என்ற உண்மையை இதிலிருந்து அறிகிறோம். இயேசு எப்போதுமே விசுவாச அடிப்படையில்தான் கிரியை செய்தார். ஆனால் இதில் யாரோ சிலருடைய விசுவாசம் தேவனுடைய ஆசீர்வாதத்தை அந்த மனுஷனுக்குக் கொண்டு வந்தது. மேலும் கிறிஸ்தவ ஜீவியத்தை நமக்காகவே வாழ்ந்து விடாமல் மற்றவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். எந்த ஒரு மனிதனும் செய்ய முடியாததை இயேசு இந்த அற்புதத்தின் மூலம் செய்தார். நடக்க முடியாமல் வந்த நோயாளியின் நோய், தூக்கி வந்தவர்களின் விசுவாசத்தால் சுகமடைந்தது. ஒவ்வொரு முறையும் மனிதர்களுக்குச் சுகத்தைக் கொடுக்கும் போது அதை இயேசு தமது சரீரத்தில் ஏற்றுக்கொள்கிறார். நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்துடன் இயேசுவை நெருங்கி ஆசி பெறுவோம். இந்த இயேசுவைப் பின்பற்றி நாம் விடுதலை பெறுவோம். ஆமென்.