நியாயமில்லாமல் கோபித்துக்கொள்வது கொலைசெய்வது போன்ற குற்றமாகும். குற்றம் செய்வது மட்டும் குற்றமல்ல. குற்ற மனப்பாங்கும் குற்றமே. நியாயமான காரணங்களுக்காகக் கோபப்படலாம். ஆனால் கோபத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் எபே 4:26 நீ உன் சகோதரனுக்கு ஏதேனும் தீங்கு செய்ததாக உன் சகோதரன் கருதினால் அவனோடு மனம் பொருந்த வேண்டும். மற்றவர்கள் போல் நமக்குக் குறை உண்டானாலும் நாம் அதை மன்னிக்க வேண்டும். மேலும் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். என்றும், தன் சகோதரனை வீணனென்று கூறி கோபப்படுகிறவன் ஆலோசனை சங்கத்திற்கு ஏதுவாயிருப்பான் என்றும், மூடன் என்று சொல்லுகிறவன் எரிநாகத்துக்கு ஏதுவாயிருப்பான். என்றும் இயேசு எச்சரிக்கிறார்.
பழைய காலத்தில் ஒருவர் கடன்வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தமுடியாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவர். யாராவது அவனது கடனைச் செலுத்தமுடியாவிட்டால் கடனைப் பெற்றவர் சிறையிலேயே மடிய வேண்டும். எனவே வழக்குகள் நீதிமன்றத்துக்குச் செல்லுமுன் பேசித்தீர்ப்பது சிறந்தது. அதைத்தான் இயேசு எதிராளி உன்னை நியாயாதிபதியினிடம் ஒப்புக்கொடுக்கும் முன்னும், நியாயாதிபதி உன்னை சேவகரிடத்தில் ஒப்புக்கொடுக்கும் முன்னும், நீ சிறைச்சாலையில் வைக்கும் முன்னும் எதிராளியிடம் மனம் பொருந்த வேண்டும் என்றும், அப்படி மனம் பொருந்தாதபட்சத்தில் ஒரு காசு கூடக் குறைக்காமல் உன்னை விடமாட்டான் என்று இயேசு எச்சரிக்கிறார்.