- இரண்டாம் ஜீவன் யோவானைப் பார்க்க அழைத்தது:
வெளிப்படுத்தல் 6 : 3 “அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். “
ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைக்கும் போது இரண்டாவது ஜீவன் யோவானை வந்து பார்க்கும்படியாக அழைக்கிறது. இந்த ஜீவன் காளை முகத்தை உடையதாக இருக்கலாம் (வெளிப்படுத்தல் 4 : 7, சகரியா 1 : 8, 6 : 2). வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களின் ராஜாவாக இது கிராமங்களில் கருதப்படுகிறது. கடின உழைப்புக்குப் பேர்பெற்றது (1கொரிந்தியர் 9 : 1, 10, நீதிமொழிகள் 14 : 4). வெள்ளைக் குதிரையில் வெளிப்பட்ட அந்திகிறிஸ்துவுக்குக் கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் உலகத்துக்குக் கொண்டுவந்த சமாதானம் போலியானதும், தாற்காலிகமானதுமாகும்.
- பட்டயத்துடன் சமாதானத்தைக் கெடுக்கப் புறப்பட்டான்:
வெளிப்படுத்தல் 6 : 4 “அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.”
இப்பொழுது அந்திகிறிஸ்து சிவப்பான குதிரையில் தேவன் கொடுத்த பட்டயத்துடன் புறப்படுகிறான். இரத்தத்தின் நிறம் சிவப்பு என்பதால் யுத்தங்களினால் உண்டாகும் மரணத்தை இந்த முத்திரை தெரிவிக்கிறது. பட்டயமானது யுத்தத்திற்கு அடையாளம். இது இரத்தம் சிந்தும் பட்டயம். ஈவு இரக்கமில்லாமல் நியாயத்தீர்ப்பு செய்யும் பட்டயம். இந்தப் பட்டயத்தால் அநேகரைக் கொலை செய்யும் அதிகாரத்தை அவன் பெற்றுக் கொண்டதால் யுத்தம் செய்து அநேகரை அழிக்கிறான். அந்திகிறிஸ்து சமாதானத்தைப் பூமியிலிருந்து எடுத்துப் போடுவதை,
மத்தேயு 24 : 7 ல் ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; “ என்று முன்னமே இயேசு கூறியுள்ளார்.
சகரியா 14 : 13 ல் “அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.” என்றும்,
எசேக்கியேல் 38 : 21 ல் “ ….. அவனவன் பட்டயம் அவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.” பார்க்கிறோம்.
இவ்வுலகின்மீது தேவன் தமது கோபத்தை இதன்முலம் கொண்டுவர அனுமதித்தார். உலகத்தின் ஆளுகையைத் தன்வசப்படுத்திக் கொள்ள அந்திகிறிஸ்து பல நாடுகளோடு போரிடுவான். தானியேலின் தரிசனத்தில் கெடிதும் பயங்கரமுமான நாலாம் மிருகத் தில் (ரோம்) பத்து கொம்புகள் (ஐரோப்பிய பொதுச் சந்தை) இருந்தனவென்றும், அவர்களுக்கிடையே (அந்திகிறிஸ்து) எழும்பும்போது மூன்று கொம்புகள் பிடுங்கிப் போடப்பட்டனவென்றும் தானியேல் 7 : 8 ல் பார்க்கிறோம். மூன்று நாடுகள் அந்தி கிறிஸ்துவால் அழிக்கப்படுகின்றன. இந்த முத்திரை உடைக்கப்பட்டதால் சமாதானக் கேடும், போரும் ஏற்படுகிறது.