- தூதர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது:
வெளிப்படுத்தல் 8 : 2 “பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.”
ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்ட ஏழு தூதர்களும் தேவனுக்கு முன்பாக நிற்கிற அந்தஸ்தையுடையவர்கள். லூக்கா 1 : 19 ல் காபிரியேல் தான் தேவ சந்நிதானத்தில் நிற்கிறவன் என்று தன்னை அறிமுகப்படுத்தியதைப் பார்த்தோம். இந்த ஏழு தூதர்களுக்கும் ஏழு வித்தியாசமான எக்காளங்கள் கொடுக்கப்படுகிறது. எக்காளங் களைக் கொடுத்தது யாரென்று சொல்லப்பட வில்லை. ஒரே எக்காளத்தை அவர்கள் ஊதப்போவதுமில்லை. ஏழு எக்காளங்களும் ஒரே நேரத்தில் ஊதப்படப் போவதுமில்லை. இதைக் குறித்த எச்சரிப்பை யோவேல் தீர்க்கதரிசி,
யோவேல் 2 : 1 ல் “ சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.”
என்கிறார். எக்காளம் ஊதப்படுவது மனிதனுடைய சரித்திரத்தில் தேவன் நேரிடையாக இடைப்படுவதைக் குறிக்கிறது. சீனாய் மலையில் கர்த்தர் இறங்கும் போது பலத்த எக்காளச் சத்தம் உண்டானது (யாத்திராகமம் 19 ; 16, 19) என்றும், சகரியா 9 : 14 ல் ஆண்டவர் எக்காளம் ஊதி சுழல் காற்றுகளோடே நடந்து வருவார் என்றும், 1 கொரிந்தியர் 15 : 52 ல் கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது எக்காளம் தொனிக்குமென்றும் 1 தெசலோனிக்கேயர் 4 : 16 ல் தேவன் தேவ எக்காளத்தோடே இறங்கி வருவாரென்றும் கூறப்பட்டுள்ளது.
- எக்காளங்களை ஊத ஆயத்தப்பட்டனர்:
வெளிப்படுத்தல் 8 : 6 “ அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.”
பலிபீடத்து நெருப்பு பூமியில் கொட்டப்பட்ட பின்பு தான் ஏழு தூதர்களும் ஒன்றன்பின் ஒருவராக எக்காளம் ஊத ஆரம்பிக்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நாட்களில் ஆரோனின் குமாரர்களே எக்காளங்களை ஊத அனுமதிக்கப்பட்டார்கள். எக்காள மானது இஸ்ரவேலரை சபையாகக் கூடிவரச் செய்ய, அவர்களைப் பிரயாணத்துக்கு ஆயத்தப்படுத்த, யுத்தத்தைக் குறித்து எச்சரிக்க, பண்டிகைகளை முன்னறிவிக்க (எண்ணாகமம் 10 : 2 – 10, லேவியராகமம் 23 : 24, 25) என்று பல்வேறு தொனிகளில் எக்காளம் ஊதப்பட்டது.
- இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும்
வெளிப்படுத்தல் 8 : 7 “முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.”
முதலாம் தூதனுடைய எக்காளம் ஊதப்படும்போது இரத்தம் கலந்த கல்மழையும், அக்கினியும் உண்டாகி , பூமியிலே கொட்டப்படுகிறது. இதனால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமடைகிறது. பசும்புல்லானது முற்றிலுமாக எரிந்து போகிறது எசேக்கியேல் தீர்க்கதரிசியும், யோவேல் தீர்க்கதரிசியும் முன்னமே,
எசேக்கியேல் 38 : 22 ல் “கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின் மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.” என்றும்
யோவேல் 2 : 30 ல் “ வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகை ஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.”
என்று முன்னமே தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளனர். இந்த வசனங்களில் கூறப்பட்ட எச்சரிக்கைகள் நிறைவேறுவதை இங்கு பார்க்கிறோம். கல்மழை நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாகும். இதை,
ஏசாயா 28 : 2, 17 ல் “ இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.”
“ நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.”
வெளிப்படுத்தல் 11 : 19 ல் “அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.”
வெளிப்படுத்தல் 16 : 21 ல் “ தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.”
எகிப்தின் ஏழாவது வாதையில் கர்த்தர் யாத்திராகமம் 9 : 18 ல் “எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.”
ஆகிய வசனங்களில் கர்த்தரின் நியாயத்தீர்ப்பைப் பார்க்கிறோம். ஆனால் அந்தக் கல் மழையினால் இரத்தம் வரவில்லையென்றும், மரம், புல்களை அது சேதப்படுத்த வில்லையென்றும் பார்க்கிறோம். இரத்தம் கலந்த கல்மழை அபூர்வமானது. மூன்றில் ஒரு பங்கு சேதமடைவதால் மற்ற இடங்களிலுள்ளவர்களுக்கு மனந்திரும்புவதற்கு தேவன் வாய்ப்பளிக்கிறார். அக்கினியானது தேவ கோபாக்கினையை வெளிப்படுத்து கிறது (உபாகமம் 32 : 22, ஏசாயா 33 : 14, லூக்கா 16 : 24, வெளிப்படுத்தல் 20 : 10, 14 : 15). கல்மழையானது பூமியில் விழுந்தது என்று சொல்லப்படாமல் கொட்டப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனவே அது வேகமாக, அதிக பெலத்தோடு விழுந்திருக்க வேண்டும். அதன் விளைவாக மரங்களில் மூன்றில் ஒரு பங்கும், பசும்புல்லும் எரிந்து போகிறது.