Menu Close

சமாரிய ஸ்திரீ

சமாரியா:

சாலமோனின் மகனான ரெகோபெயாம் காலத்தில் நாட்களில் இஸ்ரவேல் தேசம் 3 பிரிவுகள் ஆனது. 1. இஸ்ரவேலின் தென்பகுதி யூதா 2. மத்திய பகுதி சமாரியா 3. வட பகுதி கலிலேயா என்றும் பிரித்தனர். யெரொபெயாம் வடபகுதி ராஜ்ஜியத்திற்கு அரசனானான். அதற்குப் பின் வந்த உம்ரி சேமேரின் கையிலிருந்து ஒரு மலையை 2 தாலந்து வெள்ளிக்கு விலைக்கு வாங்கி, அதன்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு சமாரியா என்று பெயரிட்டான் (1 இராஜாக்கள் 16 : 24). இதன் உயரம் 100 மீட்டர். இதுவே வடக்கு ராஜ்ஜியமான இஸ்ரவேலுக்குத் தலைநகரமானது. ஆகாப் ராஜாவும், ஏரோது ராஜாவும் இந்த இடத்தில் பலிபீடங்களைக் கட்டினர். இயேசு சமாரியாவிலுள்ள சீகார் என்ற இடத்துக்குச் சென்றார். சமாரியா யூதேயாவுக்கும், கலிலேயாவுக்கும் இடையே சீகாருக்கு அருகில் இருந்தது. இந்த ஊரை பழைய ஏற்பாட்டில் சீகேம் என்று அழைத்தனர். 

20 வருடங்கள் யாக்கோபு தன்னுடைய மாமனான லாபனுடைய வீட்டில் தங்கியிருந்து பின் திரும்பி வரும் போது, சீகேம் என்ற இடத்தில் ஒரு இடத்தை வாங்கி, ஏல்எல்லோகே என்ற பலிபீடத்தைக் கட்டி, கர்த்தரை ஆராதிக்கும்படி அநேக நாட்கள் தங்கியிருந்தான் (ஆதியாகமம் 33 : 18). யாக்கோபு அங்கிருந்து தன்னுடைய பிரயாணத்தைத் தொடராமல் தாமதித்ததினால் அநேக போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. யோசேப்பின் எலும்புகள் அங்குதான் புதைக்கப்பட்டது (யோசுவா 24 : 32). சீகேம் ஊருக்கு வெளியே இரண்டு மலை இருந்தது. 1. கெர்சீம் மலை, 2. ஏபால் மலை. ஏபால் மலை வறண்ட மலை. தண்ணீரோ, தாவரமோ அங்கு கிடையாது. கெர்சீம் மலை செழுமையான மலை. யூதர்கள் மோரியா மலையிலுள்ள எருசலேம் தேவாலயத்தில் தேவனைத் தொழுது கொண்டனர். சமாரியர்கள் கெர்சீம் மலையில் உள்ள தேவாலயத்தில் தேவனைத் தொழுது கொண்டனர். 

கி. மு 722 – 721 ல் அசீரிய ராஜா சமாரியாவின் மேல் படையெடுத்து அங்குள்ளவர்களைச் சிறைபிடித்துக் கொண்டு போனான். புறஜாதியரை அங்கு குடியேற்றுவித்தான் (2 இராஜாக்கள் 17 : 23, 24). யூதர்கள் நியாயப்பிரமாணத்தின் படி வாழ்ந்து, தங்களைக் கறைபடாதபடி காத்துக் கொள்கிறவர்கள். சமாரியர்களோ கலப்புமணம் புரிபவர்கள். எனவே யூதர்களால் வெறுக்கப்பட்டவர்கள், தள்ளப்பட்டவர்கள். இவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லை. இதன் மூலம் தேவன் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய காரியத்தை கற்பிக்கிறார். கலிலேயாவிலிருந்து எருசலேம் தேவாலயம் செல்ல சமாரியா வழியாகச் செல்வது எளிது. ஆனால் அவர்கள் சமாரியா வழியாகச் செல்லாமல் சுற்று வழியில் செல்வர். ஆனால் யூதனான இயேசுவோ அங்கு சென்றார். 

சீகாரில் இயேசு:

இயேசு சமாரியா வழியாகச் செல்ல வேண்டுமென்பது தேவனுடைய திட்டமும் விருப்பமுமாயிருந்தது. சமாரியாவிலுள்ள ஒரு ஸ்திரீயைச் சந்திக்கச் சென்றார். இயேசு மாம்சத்திலிருந்த நாட்களில் தனி மனிதர்களைச் சந்தித்து, அவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்க, அவர்களைத் தேடிப் போனார். ஒவ்வொரு தனி மனிதர்களைக் குறித்தும் தேவன் அக்கறை உள்ளவர். கரிசனையுள்ளவர். ஒருமுறை இயேசு சபிக்கப்பட்ட எரிகோ பட்டணத்திற்குச் சென்று ஒரு குருடனைச் சந்தித்தார். அதேபோல் அங்கு சகேயுவை சந்தித்தார். பேதுரு மீன்கள் கிடைக்காமல் வலையை அலசிக் கொண்டிருந்த போது அவரைச் சந்திக்கச் சென்றார். மத்தேயுவை சந்திக்க இயேசு வரி வசூலிக்கும் இடத்திற்குச் சென்றார். யூதர்களுடைய பார்வையில் சமாரியர்கள் அற்பமானவர்களாகக் காணப்பட்டாலும், இயேசு பாரம்பரியங்களையும், மனுஷர்களுடைய எண்ணங்களையும் உடைத்தெறியத் தன்னுடைய சீஷர்களுடன் அங்கு சென்றார். இருளில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்க அங்கு சென்றார். 

கெர்சீம் மலைக்குப் பக்கத்திலுள்ள கிணறு தான் யாக்கோபுக்குச் சொந்தமான கிணறு. யாக்கோபு தன்னுடைய மகனான யோசேப்புக்கு ஒரு நிலத்தைக் கொடுத்திருந்தார். அது இந்தப் பகுதியில் தான் இருந்தது. அந்தக் கிணற்றில்தான் அங்குள்ள ஜனங்கள் காலம்காலமாகத் தண்ணீர் எடுத்துச் செல்வர். அப்படிப்பட்ட பாரம்பரிய சிறப்புமிக்க, சரித்திரப் பின்னணி கொண்ட இடத்திற்குத் தான் இயேசு சென்றிருந்தார். அங்கு 12 மணி உச்சி வெயிலில் இயேசு தன்னுடைய பிரயாணத்தில் களைப்படைந்தவராய் யாக்கோபின் கிணற்றருகே உட்கார்ந்தார். சீஷர்களின் படகு சுழல் காற்றில் சிக்கிய போது, அவர்களைக் காப்பாற்ற நாலாம் ஜாமத்தில் கடலின் மீது நடந்து சென்றதைப் போல, ஆதியாகமம் 18 : 1 ல் பகலின் உஷ்ண வேளையில் 3 புருஷர்கள் ஆபிரகாமைச் சந்திக்க வந்ததைப் போல, இயேசு ஒரு சமாரிய ஸ்திரீயைச் சந்திக்க அந்த உச்சி வெயிலில் சென்றார். இயேசுவின் சீஷர்கள் அந்த உச்சி வெயிலில் ஏதாவது போஜனம் வாங்குவதற்காக ஊருக்குள் சென்றனர் (யோவான் 4 : 4 : – 7). 

இயேசுவும், சமாரிய ஸ்திரீயும்:

பெண்கள் பொதுவாகத் தண்ணீர் எடுக்கக் காலை அல்லது மாலை வேளையில் ஒருசிலரோடு கூடச் செல்வர். ஆனால் 12 மணி உச்சி வெயிலில் தண்ணீர் எடுக்க ஒரு சமாரிய பெண் தனியாக அங்கு வந்தாள். அவள் ஒரு தள்ளப்பட்ட, வெறுத்து ஒதுக்கப்பட்ட பெண் ஆனதால், யாரும் வராத உச்சி வெயிலில், யாக்கோபின் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தாள். இவளுடைய பெயர் வேதத்தில் கொடுக்கப்படவில்லை. இவளைப் பற்றி வேதத்தில் யோவான் நான்காம் அதிகாரத்தில் மட்டுமே உள்ளது. அந்நாட்களில் ரபியான இயேசு ஒரு பெண்ணிடம் பேசுவது தவறு. ஆனால் இயேசு எல்லா சமுதாயக் கட்டுப்பாடுகளையும் கடந்து அவளை நோக்கி இயேசு தன்னுடைய தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். பொதுவாக யூதர்கள் பெண்ணிடம் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள். அவள் இயேசுவைத் தேடி வரவில்லை. இயேசு அவளைத் தேடி வந்தார். நாம் அவரைத் தெரிந்து கொள்ளவில்லை. அவர் நம்மைத் தெரிந்து கொண்டார். நாம் அவரிடம் அன்புகூரவில்லை. அவர் நம்மிடம் அன்பு கூர்ந்தார். தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். அவள் இயேசுவின் உடையைப் பார்த்து அவர் யூதனென்று அறிந்து தண்ணீர் தருகிறேனென்றோ, தரமாட்டேன் என்றோ கூறாமல் “நீர் யூதனாயிருக்க சமாரிய ஸ்திரீயாகிய என்னிடம் எப்படி தண்ணீர் கேட்கலாம்” என்றாள். 

இயேசு ஒரு யூதனாக உலகத்தில் பிறந்தாலும் அவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல என்பதை அவள் அறியவில்லை. அவளது அறியாமையை அறிந்த இயேசு, அவளிடம் நீ தேவனுடைய ஈவையும், நான் யார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் கேட்டிருப்பாய், நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன் என்று நிச்சயமாகக் கூறுகிறார் (யோவான் 4 : 8 –10). யோவான் 3ம் அதிகாரத்தில் யூதனான, நியாயப்பிரமாணத்தை முழுமையாக அறிந்த நிக்கொதேமுவிடம் நீண்ட நேரம் எடுத்துச் சத்தியங்களை அறிவித்ததைப் போல, சமாரிய ஸ்திரீயிடம் அவளையும், அவளுடைய கிராமத்தாரையும் அவள் மூலமாக இரட்சிப்புக்குள் வழிநடத்த ஜீவத்தண்ணீரையும், தேவனுடைய ஈவையும் பற்றிப் பேசினார். இயேசு கூறிய ஜீவத்தண்ணீர் பரிசுத்த ஆவியின் செயலாற்றலால் பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய ஜீவனைக் குறிப்பிடுகிறது. இயேசுவால் மட்டுமே தான் இந்த ஜீவத்தண்ணீரைக் கொடுக்க முடியும் (வெளிப்படுத்தல் 21 : 6, 22 : 17, யோவான் 7 : 37, ).

சமாரிய ஸ்திரீ இயேசுவை யாரென்று அறிந்தாள்:

இயேசு ஜீவத்தண்ணீரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவே அவளிடம் தண்ணீர் கேட்டார். இயேசுவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற தாகமல்ல,. அந்த ஊருக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமென்ற தாகம். இயேசு தான் யார் என்பதையும், தன்னால் அவளுக்கு என்ன கொடுக்க முடியுமென்பதையும் அதை அவள் எப்படி பெற்றுக் கொள்ள முடியுமென்பதையும் அவள் அறியாததைச் சுட்டிக் காட்டினார். சமாரிய ஸ்திரீயோ இயேசுவிடம் கிணறும் ஆழமாயிருக்கிறதே, மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, இதில் எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும் என்ற வினாவை எழுப்பினாள். இயேசுவை யூதனாகப் பார்த்த அவள், இந்தக் கிணற்றைத் தந்த யாக்கோபைக் காட்டிலும் பெரியவராய் இருப்பாரோ என்று நினைத்தாள். இயேசுவோ அவளுடைய கேள்விக்குப் பதிலாகத் தான் பெரியவன் என்று வாக்குவாதம் செய்யவில்லை. இயேசு தான் கொடுக்கும் தண்ணீர் சாதாரணத் தண்ணீரிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார். மாம்சத்தில் கொடுக்கும் தண்ணீர் மறுபடியும் தாகமெடுக்கும். தேவன் கொடுக்கும் தண்ணீரைக் குடித்தால் ஒரு போதும் தாகமடைவதில்லை என்கிறார்.

மேலும் அது இடைவிடாது நித்தியஜீவனைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என்றும் கூறுகிறார். உடனே அந்தப் பெண் தான் திரும்பவும் தான் தண்ணீர் எடுக்க அங்கு வராதபடி, இயேசு சொல்லும் தண்ணீரைத் தனக்குத் தரச் சொல்லிக் கேட்கிறாள். உலகப்பிரகாரமான குறையைத் தீர்க்க அவள் பேசுகிறாள். இயேசுவோ அவளுடைய ஆத்துமாவில் காணப்படும் குறையைக் குறித்துப் பேசுகிறார். அவளுடைய மனக்கண்கள் குருடாயிருந்தது. இயேசு அவளுடைய பாவ வாழ்க்கையை அறிந்திருந்ததால் அதைத் தன்னுடைய வாயால் அவள் ஒத்துக்கொள்ள அவளிடம் “நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா” என்றார். அவள் “எனக்குப் புருஷன் இல்லை” என்று பதிலளித்தாள். உடனே இயேசு கடந்த காலத்தில் அவள் ஐந்து மனிதர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தாள் என்பதையும், இப்பொழுது அவள் ஒரு மனிதனோடு உறவு கொண்டிருப்பதையும் கூறி அவளுடைய இருட்டான வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். 

மேலும் அவள் புருஷன் இல்லை என்று சொன்னதினால் “உள்ளபடி சொன்னாய்” என்றார். இயேசு அவளுடைய பாவ வாழ்க்கையைச் சுட்டிக் காட்டினாரே தவிர அவளைக் கடிந்து கொள்ளவில்லை. எந்த ஒரு பெண்ணும் ஒரு மனிதன் இவ்வாறு கூறினால், நீர் சொல்வது சரியில்லை என்று மறுத்திருப்பாள் அல்லது உண்மையைக் கூறிவிட்டார் என்று அவமானத்தில் ஓடியிருப்பாள். ஆனால் அவளோ வெட்கத்தில் ஓடாமலும், மறுக்காமலும் அவரைப் பார்த்து ஆண்டவரே என்கிறாள். முதலில் அவள் இயேசுவை ஒரு யூதன் என்றாள். இப்பொழுது ஆண்டவரே என்றழைத்து, மூன்றாவதாக :”நீர் தீர்க்கதரிசி” என்கிறாள் (யோவான் 4 : 11, 12). சமாரியர்கள் பொதுவாக மோசேக்குப் பின் வந்த யாரையும் தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

இயேசுவின் தீர்க்கதரிசனமும், அவளுடைய வாஞ்சைக்கான பதிலும்:

அவளுக்கு மெய்த்தேவனைத் தொழுது கொள்ள வேண்டுமென்ற வாஞ்சை இருந்ததால் அவரை எங்கே, எவ்வாறு ஆராதிப்பது என்பதை தீர்க்கதரிசியான இயேசு தனக்குக் விளக்கக் கேட்கிறாள். அவள் யாரை ஆராதிக்க வேண்டுமென்றோ, எப்படி ஆராதிக்க வேண்டுமென்றோ கேட்காமல் ஆராதிக்கப்படுகிற இடத்தைக் குறித்துக் கேட்கிறாள். சிறிது சிறிதாக இயேசுவை அறிகிற அறிவில் வளருகிறாள். இயேசு தான் சொல்லுகிறதை நம்பு என்று கூறி, இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளுங் காலம் வருகிறது என்றார். அவளிடம் இயேசு நீங்கள் அறியாததைப் புரிந்து கொள்ள முடியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள் என்றார். அதாவது அவர்கள் வேறு தேவர்களை வழிபடுகிறார்கள் என்பதுதான். யூதர்களாகிய நாங்கள் (தன்னையும் யூதர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டு) அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம் என்றார். யூதரான இயேசுவின் சிலுவை மரணமே மனிதனுடைய இரட்சிப்புக்குக் காரணமாக அமைவதால் இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது என்கிறார். பேதுரு இதை,

அப்போஸ்தலர் 4 : 12 “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”

ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வந்திருப்பதால் உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் உள்ளான இருதயத்தில், எந்தவிதமான வெளிப்பிரகாரமான தூண்டுதலுமின்றி ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். தேவனாகிய கர்த்தர் ஆவியாயிருப் பதினால், நாம் அவரை ஆவியின் வழியாகவே ஆராதிக்கவும், தொழுது கொள்ளவும் வேண்டும் (பிலிப்பியர் 3 : 3). 

இயேசுவை மேசியாவாக அறிகிறாள்:

அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வரப்போகிறார் என்பதைத் தான் அறிவதாகவும், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். “நமக்கு என்று சமாரியர்களை மட்டுமல்லாமல் இயேசுவையும் சேர்த்துக் கூறினாள். இவள் மேசியா வருவார் என்ற தீர்க்கதரிசனத்தை நன்கு அறிந்து, அந்த நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். அதற்கு இயேசு: “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். இதுவரை இயேசு தன்னை யூதர்களும், சமாரியர்களும் எதிர்பார்க்கும் மேசியா தான் என்பதை ஒருபோதும் அறிவித்ததில்லை. பாவப் பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண், முதன் முறையாக இந்த மகத்துவமான வெளிப்பாட்டைப் பெற்றாள். ஆபிரகாமுக்கும் (ஆதியாகமம் 15 : 1), இஸ்ரவேலுக்கும் (ஆதியாகமம் 46 : 2), எசேக்கியேலுக்கும் (37 : 1), அனனியாவுக்கும் (அப்போஸ்தலர் 9 : 10), பேதுருவுக்கும் (அப்போஸ்தலர் 10 : 3, 11), பவுலுக்கும் (அப்போஸ்தலர் 18 : 9, 22 : 18, 23 : 11, 2 கொரிந்தியர் 12 : 1), யோவானுக்கும் (வெளிப்படுத்தல் 1 : 12) கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தியதை அறிகிறோம். சீஷர்கள் அங்கு வந்த போது இயேசு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப் படுகிறார்கள். ஆனால் அதைக் குறித்து ஒன்றும் அவரிடம் கேட்கவில்லை. ரபீ என்றழைக்கப்படும் யூத ஊழியக்காரர்கள் வீதிகளில் நின்று கொண்டு பெண்களுடன் பேசுவதில்லை. மேலும் அவர்கள் சமாரியருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதுமில்லை (யோவான் 4 : 25 – 27). 

சமாரியாவில் ஸ்திரீ அறிவித்த சுவிசேஷம்:

அப்பொழுது அந்த ஸ்திரீ, உடனே இயேசுவைப் பற்றித் தெரிவிக்கத் தன் குடத்தை வைத்து விட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள், அவர் கிறிஸ்துதானோ என்றாள். காணாமற் போன வெள்ளிக்காசை ஒரு ஸ்திரீ கண்டு கொண்டதும் அயல் வீட்டிலுள்ளவர் களையெல்லாம் கூட்டிச் சந்தோஷப்பட்டதைப் போல இந்த சமாரிய ஸ்திரீயும் செயல்பட்டாள். இயேசு தன்னைப் பற்றிக் கூறியது எதுவும் அவர்களிடம் கூறவில்லை. அவர்தான் மேசியா என்பதையும் அவர்களிடம் அறிவிக்கவில்லை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்வதுதான் அவளுடைய பிரதான நோக்கமாயிருந்தது. 

பிலிப்பு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தும் போதும் “வந்து பார்” என்று தான் கூறினான். அதேபோல்தான் இவளும் கூறினாள். அப்பொழுது சமாரிய ஸ்திரீயும், கிராமத்து ஜனங்களும் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவை சந்திக்க வந்தார்கள். அந்தப் பெண் சொல்லுகிற நபர் உண்மையான தீர்க்கதரிசியா அல்லது போலியானவரா என்று அறிந்து கொள்ள இயேசுவிடம் வந்தனர். அந்த ஸ்திரீ அறிவித்த காரியத்தை அவர்கள் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள வாஞ்சிக்கிறார்கள். தேவனுடைய வார்த்தை இயேசுவால் ஒரு பெண்ணிடம் விதைக்கப்பட்டது. அப்பொழுது கிராமமே அவருடைய வார்த்தையைக் கேட்கும்படியாக புறப்பட்டு வந்தது. (யோவான் 4 : 28 – 30). 

சீஷர்களும் இயேசுவும்:

இயேசுவுக்காக உணவை வாங்கிக் கொண்டு வந்த சீஷர்கள் அங்கு வந்து இயேசுவிடம் போஜனம் பண்ணச் சொன்னார்கள். இதில் சீஷர்கள் அவர்மேல் வைத்த அன்பைப் பார்க்கிறோம். இயேசு சீஷர்களிடம் அவர்கள் கொண்டுவந்த உணவு தற்பொழுது அவசியமில்லையென்றும், அவர்கள் அறியாத ஆவிக்குரிய ஆகாரம் தனக்கு உண்டு என்றும் கூறுகிறார். சீஷர்கள் தங்கள் உணவு வாங்கிவரப் போயிருக்கும் போது, வேறு யாராவது உணவு கொண்டு வந்து கொடுத்திருப்பார்களோ என்று நினைத்தனர். அவர்களுடைய நினைப்பை அறிந்த இயேசு, 

யோவான் 4 : 34 “ இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” 

என்றார். இயேசு இதில் பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியைகளை முடிப்பதே அவருடைய போஜனம் என்கிறார் (யோவான் 9 : 4). இயேசு தன்னுடைய சிலுவை மரணத்திற்கு முந்தின தினம் பிதாவை நோக்கி, 

யோவான் 17 : 4 “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.” 

என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். 

சீகார் ஊர் ஜனங்கள்:

சமாரிய ஸ்திரீயின் சாட்சியினிமித்தம் அந்த கிராமத்தார் இயேசுவை இரண்டு நாட்கள் அங்கு வந்து அவர்களுடன் தங்கிப் போதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். மேசியாவைக் குறித்து அதிகமாக அறிந்திருந்த யூதர்கள் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் இந்த சமாரிய பெண்ணின் மூலம் சீகாரில் பெரிய அறுவடை உண்டானது. சமாரியாவில் முதன்முதலாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. சீரிய ராஜாவின் படைத்தலைவனாக இருந்த நாகமானின் வீட்டில் அடிமையாக வேலை செய்து கொண்டிருந்த சிறுபெண்ணின் முலம் நாகமான் எலிசா தீர்க்கதரிசியிடம் சென்று குஷ்டரோகம் நீங்கி விடுதலை பெற்றான். அதனால் நாகமான் கொடுத்த சாட்சி என்னவென்றால் 

2 இராஜாக்கள் 5 : 15 “இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்;” என்றான்.

அதேபோல் இவளும் தான் வாழ்ந்த இடத்தில் இயேசுவைப் பற்றி அறிய வைத்தாள். இயேசு 2 நாட்கள் அந்த ஊரில் தங்கி ஊழியம் செய்தார். அங்கே அவர் எந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்ததாகச் சொல்லப்படவில்லை. தீர்க்கதரிசனம் அறிவித்ததாகவும் சொல்லப் படவில்லை. அவருடைய வார்த்தைகளையே அந்த ஜனங்கள் கனப்படுத்தினர் (உபாகமம் 11 : 19, 20, மாற்கு 13 : 31). அங்குள்ளவர்கள் இயேசுவை “உலக இரட்சகர்” என்றனர். 

முடிவுரை:

வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள சமாரிய ஸ்திரீயின் காரியத்தில் இயேசு அவளைச் சந்திக்கக் கூடுதல் தூரம் நடந்து வந்ததைப் பார்க்கிறோம் அதுமட்டுமல்லாமல் சமாரியா வழியே செல்லக்கூடாது என்று யூதர்கள் கருதிய நாட்களில் சமுதாயத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட பெண்ணை சந்திக்க இயேசு சமாரியா வரை சென்றது, பாவிகளை மன்னித்துத் தம்மண்டை சேர்த்துக் கொள்கிறவர் என்றறிகிறோம். யாக்கோபின் கிணற்றண்டை அந்தப் பெண்ணுடன் தன்னுடைய நேரத்தை செலவழித்த இயேசு அவளுடைய சந்தேகமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். சமாரிய ஸ்திரீ இயேசுவின் சந்திப்பைப் பெற்றாள். இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்த அனுபவம், மகா பெரிய அனுபவம். சமாரிய ஸ்திரீ பெற்ற நற்செய்தி அவளுடைய வாழ்க்கையை மாற்றியது. சுவிசேஷ வார்த்தையானது விசுவாசத்தை எழுப்பவும், அதிகப்படுத்தவும் வல்லமையுள்ளது. எனவே சுவிசேஷத்தை பிறருக்கு அறிவிக்க நாம் எப்பொழுதும் தயங்கக் கூடாது. சமாரிய ஸ்திரீயின் தாகத்தைத் தீர்த்தவர் நம்முடைய தாகத்தையும் தீர்ப்பார். சமாரியா பட்டணத்துக்கு இயேசு சென்று இரட்சிப்பின் சந்தோஷத்தைக் கொடுத்தார். அதேபோல் இயேசு நமக்கு அளித்த இரட்சிப்பு, நம்மை நித்தியமான பரலோக ராஜ்ஜியத்தில் கொண்டு சேர்க்கும். தேவன் நம்மை அவரது ஜீவத்தண்ணீரால் நிரப்பவும் ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்ளவும் தேவனிடம் மன்றாடுவோம். ஆமென்.

Related Posts