Menu Close

சுகம் கொடுக்கும் தேவ வார்த்தை

கர்த்தருக்குள் பிரியமானவர்களே மருத்துவம் வளர்ச்சியடைந்த இந்த நாட்களில் வியாதிகள் நீங்க அனேகக் கண்டுபிடிப்புகளைப் பார்க்கிறோம். ஆனாலும் எல்லோரும் எல்லா வியாதிகளிலுமிருந்தும் பரிபூரண சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. மருத்துவர்களால் சுகமாக்க முடியாத பல வியாதிகள் இன்னும் இருக்கின்றன. அப்படிப்பட்ட வியாதிகளைக் கூட இயேசு குணமாக்கியதைப் பார்ப்போம்.

பெதஸ்தா குளத்தின் பக்கத்திலுள்ள மண்டபத்தில் 38 வருடமாய் வியாதியில் படுத்திருந்த ஒரு மனிதனைத் தேடி இயேசு சென்றார். அவனோ வருடக்கணக்காகப் படுத்திருந்ததால் நாளுக்கு நாள் மிகவும் பலவீனமடைந்து தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ளக் கூடாதவனாக இருந்தான். அவனுக்கென்று உதவி செய்ய யாருமில்லை.

ஒரு தாய் தன் குழந்தைகளைத் தேடி அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது போல நம் தேவன் நம்மைத் தேடி வருவார். ஆதாம் பாவம் செய்த பொழுது தேவனுக்குப் பயந்து ஒளிந்திருந்தான். தேவன் அவனைத் தேடி ஆதாமே எங்கிருக்கிறாய்” என்றார். பிரியமானவர்களே கார்மேகத்துக்குப் பின்னால் கதிரவன் ஒளி மறைந்திருப்பதைப் போல ஒவ்வொருவரின் கஷ்டத்தின் பின்னும் பெரிய ஆசீர்வாதத்தைத் தர சந்தோஷத்துடன் நம் அருகில் நிற்பவர் நம் இரட்சகராகிய இயேசு.

அந்த பெதஸ்தா குளத்தைச்சுற்றிலும் குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்பு உடையவர்கள் போன்ற அனேகர் அங்கு வாசம் பண்ணினார்கள். ஏனெனில் சில சமயங்களில் தேவ தூதன் ஒருவன் வந்து அந்த குளத்திலிறங்கி தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலக்கப்பட்ட பின்பு யார் முந்தி அதில் இறங்குவார்களோ அவன் எப்பேர்பட்ட வியாதியஸ்தனாக இருந்தாலும் சொஸ்தமாவான். இந்த நாளுக்காக வியாதியஸ்தர்கள் அங்கு காத்திருந்தனர். 38 வருடமாய் தீராத வியாதியிலிருந்த அந்த மனிதனை நோக்கி இயேசு , “சொஸ்தமாக்க வேண்டுமென்று விரும்புகிறாயா ” என்று கேட்டார். “அதற்கு வியாதியஸ்தன் : ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும் போது என்னைக்குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை. நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் என்றான்” (யோவா 5:6,7) அவனுடைய பேச்சில் உதவி செய்ய ஆளில்லை என்ற ஏக்கம் தான் இருந்தது. கர்த்தராகிய இயேசு சுகமாகு என்று ஒரு வார்த்தை சொல்வாரானால் அந்த வினாடியே சுகம் கிடைக்கும். குளம் கலக்கப்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை. இதை அவன் அறியவில்லை.

நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூற விரும்புகிறேன். கப்பல் ஒன்றில் உயர்ந்த வகுப்பில் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு பிரயாணி சோர்ந்த முகத்துடன் இருப்பதைப் பார்த்த கப்பல் தலைவன் அவனிடம் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டான். பிரயாணியோ அவரிடம் “நான் கொண்டு வந்த ரொட்டிகள் தீர்ந்து விட்டன. இனி நான் எதைச் சாப்பிடுவேன் என அங்கலாய்த்தான்”. கப்பல் தலைவனோ அவனுடைய டிக்கட்டின் பின்பறம் “இந்தக் கப்பலில் பிரயாணம் செய்கிறவர்கள் சாப்பாட்டிற்கும் சேர்த்து நீங்கள் பணம் கட்டியிருக்கிறீர்கள். எனவே உணவு இலவசம் ” என்று எழுதியிருப்பதைக் காண்பித்து “இங்கேயே வகை வகையான உணவுகள் உங்களுக்கு வழங்கப்படும்” என்றார். அதைக்கேட்ட பிரயாணி தனது அறியாமையை நினைத்து வெட்கப்பட்டான். இதைப் போலத் தான் அந்த வியாதியஸ்தன் எதையெதையோ கூறிப் புலம்புகிறான். சர்வவல்லதேவனிடம் வேண்டியதைக் கேட்காமல் விட்டு விட்டான். அதைத்தான் தேவன்.

“என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள்…” (ஓசி 4:6) என்கிறார். ஆனாலும் “இயேசு அவனை நோக்கி: எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.” (யோவா 5:8) உடனே அவன் எழுந்து படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து சென்றதைக் காண்கிறோம்.

தேவன் நமக்கு ஒரு அற்புதம் செய்ய வேண்டுமானால் அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டும். 38 வருடமாக படுக்கையில் இருக்கிறவன் எழ முயற்சிக்க வேண்டும். ஏனெனில் ஆண்டவர் கூறிய வார்த்தையின்படி நடக்க முயற்சிக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்வதைக் காண்கிறோம். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிந்த உடன் வியாதி அவனை விட்டு நீங்கிற்று. ஆரோக்கியமான புதிய சரீரத்தைப் பெற்றுக் கொண்டான். முன்பு இருந்த இயலாமை, பெலவீனம், வியாதி இப்பொழுது அவனிடம் இல்லை ஏனெனில்

“கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடை சத்தம் மகத்துவமுள்ளது.” (சங் 29:4)

“கர்த்தர் தமது வசனத்தை அனுப்பிக் குணமாக்குகிறார்” (சங் 107:20)

பிரியமானவர்களே நாம் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் தள்ளப்படும் போது அல்லது தோல்விகளைச் சந்திக்கும் போது துவண்டு போகிறோம். “ஏன் தான் தேவன் நம்மைச் சோதிக்கிறாரோ” எனக் கலங்குகிறோம். கலங்காதிருங்கள். கஷ்டத்தின் பாதையிலும் நமக்கு எதிர்பாராத ஆசீர்வாதங்களைத் தேவன் தரக் காத்திருக்கிறார். 38 வருடம் வியாதிப் படுக்கையில் உபத்திரவப் பட்டதால் தான் இயேசுவை நேரில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றான். நீங்களும் உபத்திரவங்களைப் பார்த்து மனம் தளராதீர்கள். அதனால் தான் தாவீது ராஜா கூறுகிறார். “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன்” (சங் 119:71)

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இந்த நேரத்தில் பத்திரிகையில் படித்த ஒரு செய்தி ஞாபக்தில் வருகிறது. அதை உங்களிடத்தில் கூற விரும்புகிறேன். பிரபல தொழிலதிபர் ஹென்றி போர்டை பேட்டி காணப் பத்திரிகை நிருபர் சென்றார். அவரைப் பார்த்த நிருபருக்குத் தூக்கிவாரி போட்டது. அதற்கான காரணம் என்னவென்றால் ஹென்றி வயது முதிர்ந்தவராக, முகமெல்லாம் சுருக்கமாக இருப்பார் என்று நிருபர் நினைத்திருந்தார். அவரோ வயது முதிர்ந்த நிலைமையிலும் மகிழ்ச்சியுடனும், சுறு சுறுப்புடனும் காணப்பட்டார்.

நிருபர் அவரிடம் “ஐயா ஆயிரக்கணக்கான மக்கள் பணி புரியும் இந்தத் தொழிற்சாலையில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து விட்டு உங்களால் எப்படி இத்தனை மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது” என்று கேட்டார். இதைக் கேட்டு போர்டு சிரித்துவிட்டு “நண்பரே இந்தத் தொழிற்சாலையை நடத்துவது நானல்ல. எல்லாம் வல்ல கர்த்தரே, இதன் உரிமையாளர் பல வருடங்களுக்கு முன்னே நான் இதை அவரிடம் ஒப்படைத்து விட்டேன். எனவே தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது” என்றாராம்.

நீங்களும் உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கப் பாருங்கள். கர்த்தருக்காக அக்கினியாக பற்றி எரிய வேண்டும் என்று வாஞ்சியுங்கள். அந்த பரிசுத்த அக்னியின் ஜ்வாலை உங்களுக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்தால் சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக மாறும்.

பெதஸ்தா குளத்தருகே உட்கார்ந்தவனுக்கு தேவன் தேடி வந்து நடக்க முடியாத கால்களை நடக்க வைத்ததைப் போல, உதவி செய்ய யாருமேயில்லை என்று தவித்தவனுக்கு உதவி செய்ய தேடி வந்ததைப் போல உங்களையும் வேடருடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவித்து விடுதலை கொடுப்பார். கிறிஸ்துவின் அன்பையும், பாசத்தையும் நினைத்து துதிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. கிறிஸ்துவைப்போல நம்மை நேசிக்கிறவர்கள் ஒருவருமில்லை . அவரைப் போல நமக்காக தியாகமாக இரத்தம் சிந்தினவர் ஒருவருமில்லை . அந்த அன்பை நினைத்து துதியுங்கள்.

இந்த இடத்தில் “கேத்ரின் குல்மான்” என்ற உலகப் புகழ் பெற்ற ஊழியக்காரியைப் பற்றி உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இவர் கன்கார்டியா என்ற ஊரில் பிறந்தவர். எத்தனையோ துயரங்களுக்கும், பாடுகளுக்கும் மத்தியில் கிறிஸ்துவை அறியாதவர்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்ல ஆசையுடன் ஊழியத்தைத் தொடங்கிய பெண்மணி, இவர்களது பிரசங்கத்தின் கருப்பொளுளே விசுவாசமாகத்தான் இருக்கும். கேத்ரின் தன்னைப் போதகராகவோ நற்செய்தியாளராகவோ எண்ணாமல் எப்போதும் எளிமையாக தன்னைத் தாழ்த்திக் கொள்வார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு அனேக ஆத்மாக்கள் இரட்சிக்கப்பட்டனர். அவருடைய குணமளிக்கும் கூட்டங்களில் தீராத நோய்கள், அசுத்த ஆவிகள் மறைந்ததைக் காணலாம், பார்வையில்லாதவர்களுக்கு மிகவும் உதவிக்கரம் நீட்டினார். இளம் வயதிலேயே ஆண்டவருக்காக ஊழியம் செய்வதைப் பார்த்த தேவன் அவருடைய கூட்டங்களில் ஜெபிக்கத் தொடங்கின உடன் அற்புதங்கள் நடக்கும். அந்த அளவிற்கு உலகிலேயே சிறந்த சுகமளிக்கும் வல்லமை நிறைந்த ஊழியர். 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ஒவ்வொரு ஊழிய வாஞ்சை உள்ளவர்கள்களும் இப்படிப்பட்ட தேவபிள்ளைகளைப் பற்றி அறிந்து, அதே போல் நாமும் தேவனுக்காகச் செயல்பட வேண்டும் என்று மன்றாடுங்கள். தேவனின் அன்பை அறியாமல் நரகத்திற்குச் செல்ல இருக்கும் மக்கக்கு வழிகாட்டும் வழிகாட்டியாக திகழுங்கள்.

Related Posts