Menu Close

கிறிஸ்மஸ் செய்தி – இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

இயேசுவானவர் யூத குலத்தில் தோன்றிய ராஜாதி ராஜா. பரலோக ராஜா, மனித வரலாற்றை இரண்டாகப் பிரித்த அவதார ராஜா, இரட்சிப்பை அருளும் ராஜா, விண்ணையும் மண்ணையும் ஒரே நேரத்தில் ஆளும் பிரபஞ்ச ராஜா. சமாதான ராஜா, அன்பின் ராஜா, பாதாளத்தை வென்ற ராஜா, பரிசுத்த ராஜா, சாந்தகுணமுள்ள ராஜா, சமாதானத்தின் ராஜா, அதிசயமான ராஜா, பாவமே செய்யாத ராஜா, பாவிகளை இரட்சிக்க வந்த ராஜா, என்றென்றும் ஆளும் நித்திய ராஜாவைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். மனுக்குலத்திற்குத் தெய்வீகம் அருளப்பட, பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவர் இயேசு. இருளில் வாழ்ந்த மக்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர, பாவத்துக்கு மன்னிப்பு அருள வந்தவர் இயேசு. கிறிஸ்துமஸ் என்பது தேவன் நமக்குக் கொடுத்த பரிசு. அந்தப் பரிசை அனுபவிக்காத வரை அதை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. இயேசு பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக,

ஏசாயா 9 : 6, “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” கூறினார்.

இது மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவிக்கின்றது. அவருடைய பிறப்பு சரித்திரத்தில் ஒரு திட்டவட்டமான காலத்தில், திட்டவட்டமான இடத்தில் நடைபெறும் என்றும், அவர் ஒரு தனிப்பட்ட விதமாக அற்புதமான முறையில் பிறப்பார் என்றும் இப்பகுதி போதிக்கின்றது. மேசியாவாக அவர் செயல்படுவதைக் காட்ட அவருக்கு நான்கு பெயர்களை ஏசாயா கொடுக்கின்றார். அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமானவர் ஆதலால் அவரை அதிசயமானவர் என்றும், அவர் இரட்சிப்பின் முழுமையான திட்டத்தை வெளிப்படுத்தும் ஆலோசனைக் கர்த்தர் என்றும், அவர் தெய்வத்தின் பரிபூரணமெல்லாம் சரீரத்தில் அடங்கியிருக்கும் வல்லமையுள்ள தேவன் என்றும், அவர் நித்திய நித்தியமாய் நம்மோடு கூட இருந்து, நமது தேவைகளைச் சந்திக்கும் மனதுருக்கமுள்ள, அன்பு செலுத்தும் நித்திய பிதாவாக நம்மோடு கூட இருப்பார் என்றும், பாவம் மரணம் இவற்றிலிருந்து உண்டாகும் விடுதலையை மனித இனத்துக்கு கொடுத்து சமாதானத்தை உண்டு பண்ணுவதற்காக அவரை சமாதானப் பிரபு என்றும் ஏசாயா கூறியிருக்கிறார். 

ஏசாயா 11 : 1 “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.” என்று முன்னறிவித்தார்.

ஈசா என்பது தாவீதின் தகப்பனின் பெயர். அந்த ஈசாயின் அடிமரத்திலிருந்து துளிர்க்கின்ற கிளையாக இயேசுவானவர் இருப்பார் என்றும் அவரைக் குறித்து கூறப்பட்டுள்ளது. இவர் சமாதானம், நீதி, நன்மை இவற்றால் மீட்கப்பட்டு உலகை ஆளுவார். இந்த தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேறுதல் அவர் பிறந்தபோது நடைபெற்றது. அதன் முழு நிறைவேறுதல் அவரது இரண்டாம் வருகைக்காய் காத்திருக்கின்றது.

யோவான் ஸ்நானனின் பிறப்பு பற்றி தூதன்:

சகரியா என்ற ஆசாரியன் ஆரோனின் குமாரராகிய எலிசபெத்தை மணமுடித்துத்திருந்தான். அவர்கள் இருவரும் வயது சென்றவர்களாக, பிள்ளை இல்லாதவர்களாக இருந்தனர். அப்பொழுது ஆசாரியனான சகரியா தூபம் காட்டுகிற வேளையில் கர்த்தருடைய தூதன் தூப பீடத்தின் வலது பக்கத்தில் நின்று சகரியாவுக்குத் தரிசனமானார். தரிசனமாகி சகரியாவிடம் உன் மனைவியாகிய எலிசபெத்து ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும் அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும் என்றும் கூறினான். அதேபோல் அந்தக் குழந்தையின் பிறப்பின் நிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள் என்றும் கூறினான். அவன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாக இருப்பான் என்றும், வயிற்றில் இருக்கும் பொழுதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படி எலியாவின் ஆவியையும், பலத்தையும் கொண்டு நடப்பான் என்றும் கூறினான். அதற்கு சகரியா “இதை நான் எவ்வாறு அறிவேன் மிகவும் வயது சென்றவர்களாக நாங்கள் இருக்கிறோம்” என்றான். அதற்குக் காபிரியேல் அவனுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்காகத் தான் வந்ததாகவும், ஆனால் அவனுடைய வார்த்தைகளைச் சகரியா விசுவாசிக்காதபடியானால் அந்தச் சம்பவம் நடக்கும் மட்டும் ஊமையாயிருப்பாய் என்றும் கூறிச் சென்றான். அதேபோல் சகரியா யோவான் பிறக்கிற வரை ஊமையாகவே இருந்தான்.

மரியாளிடம் தூதன் தோன்றியது:

மரியாள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து கிருபை பெற்றவளே வாழ்க என்று வாழ்த்தி, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று ஆசீர்வதித்தவுடன் மரியாள் அவனைக் கண்டு கலங்கினாள். அப்பொழுது தேவதூதன் மரியாளை நோக்கி,

லூக்கா 1 : 31, 34, 35 “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். “

என்றான். தேவதூதன் சகரியாவின் குடும்பத்திற்கு யோவான் பிறப்பதாகச் செய்தி அறிவித்தது போல, மரியாளுக்கும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய செய்தியை அறிவித்தான். அதற்கு மரியாள் தான் இன்னும் திருமணம் ஆகாததால் இது எப்படி ஆகும் என்று வினா எழுப்பினாள். தேவதூதன் மரியாளிடம் பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் வரும் என்றும், உன்னதமானவருடைய பலம் அவள் மேல் நிழலிடும் என்றும், அதனால் அவள் கர்ப்பவதியாகி குழந்தை பெறுவாள் என்றும், அவளிடம் பிறக்கும் குழந்தை பரிசுத்தமான தேவனுடைய குமாரன் எனப்படும் என்றும் கூறினான். உடனே மரியாள் தான் ஆண்டவருக்கு அடிமையென்றும், தேவனுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்றும் கூறினாள். கன்னிப் பெண் ஒருத்திக்கு ஆணின் உதவியின்றி குழந்தை பெறுவாள் என்ற வாக்குத்தத்தமும், பிள்ளை இல்லாத பிள்ளை பெறத் தகுதியே இல்லாத மலடியான பெண்ணுக்கு நீ பிள்ளை பெறுவாய் என்ற வாக்குத்தத்தமும் மரியாளுக்கும், எலிசபெத்துக்கும் கொடுக்கப்பட்டது. இரண்டு பரிசுத்தமுள்ள பெண்களும் பரிசுத்தமுள்ள குழந்தைகளுக்குத் தாயானார்கள். எலிசபெத் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது மரியாள் முதல் மாத கர்ப்பிணியானாள். கர்த்தருடைய வார்த்தையானது மரியாளுக்குள் கருத்தரிக்க ஆரம்பித்தது. இதை ஏற்கனவே ஏசாயா தீர்க்கதரிசி, 

ஏசாயா 7 : 14 ல் “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.” 

என்று கூறியிருந்ததைப் பார்க்கிறோம். ஏசாயா ஆண்டவர் நமக்கு ஒரு அடையாளத்தை கொடுப்பார் என்று கூறியுள்ளார். இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் அடையாளம் என்று கூறப்படவில்லை. பிறப்பை மாத்திரமே அடையாளம் என்று கூறப்பட்டுள்ளது. சிலுவை மரணத்தை ஏன் அடையாளம் என்று சொல்லப்படவில்லை என்றால், ரோமாபுரியில் ஒவ்வொரு ஆண்டும் 2000 பேர் சிலுவையில் அறையப்படுவர். இயேசு அதில் ஒன்றாக ஆகிவிடும். ஆனால் கன்னியில் வயிற்றில் பிறந்தது தான் அடையாளம். ஆணின் உதவி இல்லாமல் பிறந்ததுதான் அடையாளம். ஆவியானவர் மரியாளின் மீது வந்து இயேசுவைப் பிறப்பித்தது போலவே, நம்மில் கிறிஸ்து உருவாகும்படி ஆவியானவர் நம்மிடம் வருகிறார். மரியாளின் கர்ப்பத்தில் ஒரு சரீரம் உருவாவதற்கு சில மாதங்கள் ஆனது போல, கிறிஸ்து நம் ஜீவியத்தில் உருவாகி வெளிப்பட சில காலங்கள் ஆகும். நம்முடைய பாவங்களுக்காகப் பாவ நிவர்த்தி செய்யப்பட்டு இரட்சிப்பைப் பெற இயேசுவானவர் மானிட உருவில் வெளிப்பட வேண்டும். பாவமற்றவராக இருக்கவேண்டும். முற்றிலும் தெய்வத்தன்மை உள்ளவராயும் இருக்கவேண்டும் (எபிரேயர் 7 : 25, 26). இயேசு ஒரு கன்னிகையிடம் பிறந்தது இந்த மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகத்தான். 

இயேசு கிறிஸ்து ஒரு மானிடனாக அவதரிக்க வேண்டுமானால் 1. அவர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்க வேண்டும். 2. அவர் முற்றிலும் பரிசுத்தமுள்ளவராக இருக்க வேண்டுமானால் அவர் பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகி, தேவன் அவருடைய பிதாவாக இருக்க வேண்டும். அதன் பலனாக அவருடைய கருவுறுவதாலானது இயற்கையான முறையில் நடக்கவில்லை.. ஆனால் இயற்கை சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக முறையில் நடந்தது. மரியாள் வயிற்றில் பிறக்கப்போகும் பரிசுத்தமுள்ள குழந்தை தேவகுமாரன் என்று அழைக்கப்பட்டார் (லூக்கா 1 : 35). தூதன் மரியாளுக்கு எலிசபெத் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தியை அறிவித்ததும் (லூக்கா 1 : 36), நாசரேத்திலிருந்து மரியாள் 130 கிலோ மீட்டர் பயணம் பண்ணி யூதேயாவிலிருந்த எலிசபெத்தைப் பார்க்கச் சென்று அவளை வாழ்த்தினாள். அப்போது அவள் வயிற்றில் உள்ள பிள்ளை துள்ளியது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களுடைய வார்த்தைகள் கர்ப்பத்திலிருக்கும் சிசுவைக் கூடத் துள்ள வைக்கும் வல்லமை கொண்டவைகள் என்பதை இதிலிருந்து அறிகிறோம். 

மரியாளிடம் தூதன் பேசியது எலிசபெத்துக்குத் தெரியாது. ஆனாலும் அவள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து மரியாளைப் பார்த்து அவள் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், உன்னுடைய கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது என்றும், அவள் ஆண்டவருடைய தாயார் என்றும், விசுவாசித்த மரியாள் பாக்கியவதி என்றும், கர்த்தரால் அவளுக்குச் சொல்லப்பட்ட அனைத்தும் நிறைவேறும் என்றும் கூறினாள். அப்பொழுது மரியாள் சந்தோஷத்துடன் பாட்டு பாடினாள். அந்தப் பாடலில் முதலில் இரட்சகர் தனக்கு என்ன செய்திருக்கிறார் என்றும், இரண்டாவதாக இரட்சகர் மற்றவர்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்றும், மூன்றாவதாக இரட்சகர் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நினைவுகூர்ந்து அதன்படியே செய்தார் என்றும் பாடினாள் (லூக்கா 1 : 46 – 56). மரியாள் மூன்று மாதம் எலிசபெத்துடன் தங்கி அதன் பின் திரும்பிச் சென்றாள் மரியாளுடைய தாழ்மையைத் தேவன் நோக்கி பார்த்தார் நாசரேத்தில் உள்ள மக்களுக்கு தான் கர்ப்பமானதை அறிந்தால் புறங்கூறுவார்கள் என்றும், அந்தச் செயல் பரிசுத்தாவியின் கிரியை என்பதை ஒருவர் கூட விசுவாசிக்க மாட்டார்கள் என்பதையும் மரியாள் நன்கு அறிந்திருந்தாள். ஆனாலும் அந்த நிந்தைகளை சகித்திட மரியாள் மனமுவந்து தன்னை ஒப்புக் கொடுத்தாள். இதனால் எவ்வளவோ நிந்தைகளும், அவமானங்களும் அடைந்திருப்பாள். ஏனெனில் யூதா தன்னுடைய மருமகள் கணவன் இல்லாமல் கர்ப்பம் தரித்தாள் என்று அறிந்ததால் ஆதியாகமம் 38 : 24 ல் அவள் சுட்டெரிக்கப் பட வேண்டும் என்றான். இதுதான் அன்றைய சட்டம். ஆனால் பத்து மாதங்கள் மரியாளின் வயிற்றில் இயேசு இருந்தார். 

சகரியாவும் மரியாளும் “இது எப்படி ஆகும்” என்று ஒரே விதமான கேள்வியைத்தான் தூதனிடம் கேட்டனர் (லூக்கா 1 : 18, 34). ஆனால் சகரியா மாத்திரம் தண்டிக்கப்பட்டு ஊமையானான். மரியாளுக்கோ எந்தத் தண்டனையும் இல்லை. ஏனெனில் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. சகரியாவிற்கு முன் வயது சென்ற ஆபிரகாம், சாராள் பிள்ளை உண்டாகி பெற்றதை சகரியா நன்கு அறிந்திருந்தான். 2. பல ஆண்டுகளாக சகரியா ஆசாரியனாக இருந்து, வேதவாக்கியங்களைக் கற்றவன். எனவே அவன் சந்தேகப்படக் கூடாது. ஆனால் மரியாளோ கன்னி பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரித்ததை அவள் கேள்விப்பட்டதே இல்லை. எனவே அவள் தண்டிக்கப்படவில்லை. 

தூதனும், யோசேப்பும்: 

இயேசுகிறிஸ்துவினுடைய தாயாராகிய மரியாள் யோசேப்பை விவாகம் செய்வதற்கு நியமிக்கப்பட்டிருகையில் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள். மரியாள் தூதன் மூலமாக எலிசபத்தைப் பற்றிக் கூறியதால் அவளைப் பார்க்கப் போய் அங்கு மூன்று மாதம் இருந்து விட்டுத் திரும்பி வந்தாள். மரியாள் திடீரென்று எலிசபெத்தைப் பார்க்கப் போய்விட்டுத் திரும்பி வந்தவள் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டவுடன் யோசேப்புக்குக் கலக்கம் ஏற்பட்டது. யோசேப்பு அவளுடைய கர்ப்பத்தில் வளர்வது தேவனுடைய அதிசயமான செயல் என்பதை உணரவில்லை. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நிச்சயமாய் விபச்சாரி என்று சொல்லி அவளைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஆனால் அவன் நீதிமானாய் இருந்தபடியால் மரியாளை நிந்தனை செய்யாமல் அவளை இரகசியமாகத் தள்ளி விட விரும்பினான் (மத்தேயு 1 : 19). புதிய ஏற்பாட்டில் முதல் நீதிமானாக அழைக்கப்பட்டது இந்த யோசேப்பைத்தான். அவன் மரியாளின் பாவத்தை மறைத்து, அந்த நபரை நிந்தனை செய்யக்கூடாது என்ற மனப்பாங்குடன் இருந்தவன். மரியாளை அவன் ஒருபோதும் தூற்றித் தெரியவில்லை. யோசேப்பு மரியாளைத் தள்ளிவிட சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய திருமண வாழ்வில் எந்த விதமான களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அஞ்சினான். அவ்வாறு அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குத் தோன்றி, 

மத்தேயு 1 : 20 – 23 “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்.”

யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்தவுடன் தேவதூதன் தனக்குச் சொன்னபடியே மரியாளைச் சேர்த்துக்கொண்டு, அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்தான். தேவதூதன் கூறின வார்த்தையின்படி யோசேப்பு பாரம்பரியத்தையும், சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையும், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதையும் நினைக்காமல் மரியாளைச் சேர்த்துக் கொண்டதைப் பார்க்கிறோம். மத்தேயு 1 : 21 ல் யோசேப்பு பெயரிட வேண்டும் என்றும், லூக்கா 1 : 31 ல் மரியாள் பெயரிட வேண்டும் என்றும் தேவதூதன் கூறியிருப்பதைப் பார்க்கிறோம் இரண்டு பேருமே இயேசு என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்பதற்காகத் தூதன் இரண்டு பேரிடமும் கூறினான். இயேசு என்ற பெயர் ஒரு சாதாரண யூதப் பெயர். இயேசு என்பது கிரேக்க வார்த்தை. இயேசு என்பதும் யோசுவா என்பதும் ஒன்றுதான். இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள். இயேசு பாவத்திலிருந்து இரட்சிக்கும் பணியை பிரதானமாய்ச் செய்கிறார். அத்துடன் பிசாசின் பிடியிலிருந்தும், வியாதியின் கொடுமையிலிருந்தும் மக்களை இரட்சிக்கிறார். இயேசு நம்முடைய பாவங்களை மன்னிப்பார் என்பது மட்டுமல்ல, பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பார் என்பதுமாகும். அதாவது பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து நம்மை நீங்கலாக்கி இரட்சிப்பார் என்பதாகும்.

புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தம் மத்தேயு 1 : 21 ல் இருப்பதைப் போல, இரண்டாவது வாக்குத்தத்தம் மத்தேயு 3 : 11 ல் உள்ளது. இந்த இரண்டு வாக்குத்தத்தங்களிலும் சுவிசேஷத்தின் முழு செய்தியும் அடங்கி இருக்கிறது. நாம் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் அபிஷேகம் பெற வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. உலகத்தில் எந்த மதத்திலும் இந்த அர்த்தமுள்ள நாமம் சூட்டப்பட்ட தலைவர்கள் ஒருவரும் இல்லை. கடவுள் இரட்சிக்கா விட்டால் மனிதன் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியாது. இதைப் பவுல்,

எபேசியர் 2 : 5, 8 “அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;” 

என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் மத்தேயு 1 : 23 ல் இமானுவேல் என்று இன்னும் ஒரு பெயரையும் யோசேப்பிடம் தூதன் கூறியிருப்பதைக் காண்கிறோம். இது ஏசாயா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும் (ஏசாயா 7 :14). இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று பொருள். அவருடைய வருகையின் மூலமாக மனித குலத்திற்கு ஒரு புது காரியம் தோன்றிற்று. கடவுள் மனிதன் நடுவிலே வாசம் பண்ணும்படியாக வந்தார். இதைத்தான் யோவான் தனது நற்செய்தி நூலில் யோவான் 15 : 4 ல் “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; ..” என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியிலே தேவன் தரிசனமாகி அவர்களோடு வாசம் பண்ணினார் அவர்கள் நடுவிலே அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாகவும், மேகஸ்தம்பத்தின் மூலமாகவும் தம்முடைய பிரசன்னத்தை அவர் எடுத்துக்காட்டினார். ஆசரிப்புக் கூடாரத்திலே தேவனுடைய பிரசன்னம் இருந்தது. தேவன் நம்மோடு கூட இருக்கிறார் என்பதை ஆண்டவரும் உறுதிப்படுத்தும் வண்ணமாக தம் சீடர்களுக்கு “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார் (மத்தேயு 28 : 20). மத்தேயு முதல் அதிகாரத்தில் இமானுவேலைராய் நம்மோடிருக்கும் தெய்வம், மத்தேயு கடைசி அதிகாரத்தில் இயேசுவாகவே உலகத்தின் முடிவு வரை நம்மோடு கூட இருக்கிறார். துவக்கம் முதல் முடிவு வரை அவர் கூட இருப்பது நாம் பெற்ற பெரும் பாக்கியமாகும். 

பெத்லகேமில் இயேசு:

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்ற சட்டத்தை கர்த்தர் ரோமாபுரி அரசு மூலமாகக் கொண்டுவரச் செய்தார். ஜனங்கள் எல்லோரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பு தாவீதின் வம்சத்தானாக இருந்தபடியால் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டு, கர்ப்பவதியான மரியாளுடன் குடிமதிப்பு எழுதும்படி நாசரேத்து ஊரிலிருந்து, யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்கு 100 கிலோ மீட்டர் கழுதையின் மேல் பயணம் பண்ணிச் சென்றனர். அப்பொழுது மரியாளுக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டதால், சத்திரத்திற்கு அழைத்துச் சென்றான். ஆனால் அந்தச் சத்திரத்தில் இடம் இல்லாதபடியினால் குழந்தை பிறந்தவுடன் குழந்தையைத் துணிகளில் சுற்றி அங்குள்ள மாட்டுத் தொழுவத்தின் முன்னணையிலே கிடத்தினாள். இந்தக் கஷ்டத்திற்காக யோசேப்பைப் பார்த்து மரியாள் கோபப்படவோ, முறுமுறுக்கவோ இல்லை. இவ்வாறு எந்தக் குறையும் மரியாளிடம் இல்லாததால்தான், இஸ்ரவேல் தேசம் முழுவதும் தேடிக் கர்த்தர் இந்தப் பக்தியுள்ள இளம் கன்னிப்பெண்ணான மரியாளை இயேசுவுக்குத் தாயாகத் தெரிந்தெடுத்தார். எத்தனையோ தீர்க்கதரிசனங்களை இயேசு பிறப்பதற்கு முன்பே உரைக்க வைத்த கர்த்தருக்கு ஒரு நல்ல அறையை ஆயத்தம் பண்ணுவது கடினமான காரியமல்ல. தன்னுடைய மகன் ஒரு ஏழையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்து முன்னணையில் கிடத்தப்பட வேண்டும் என்பதுதான் பிதாவின் விருப்பம். சரித்திரத்தில் ஒரு மனிதன் கூட மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததாக இல்லை. 

மேய்ப்பர்கள்: (லூக்கா 2 : 8 – 14) 

இயேசு பிறந்த இந்த நற்செய்தியை அரச மாளிகையில் இருப்பவர்களுக்கோ, வேதபாரகர்களுக்கோ, சதுசேயர்களுக்கோ, முதலில் அறிவிக்கப்படாமல் மந்தை மேய்த்துக் கொண்டிருந்த சாதாரணமான மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அந்த நாட்டில் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, தங்களுடைய மந்தையை ஓநாய்களுக்கு பயந்து இரவு காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கர்த்தருடைய தூதன் அவர்களுக்கு முன் வந்து நின்றான். அப்பொழுது அவர்களைச் சுற்றிலும் கர்த்தருடைய மகிமை பிரகாசித்தது. அதனால் அவர்கள் அனைவரும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி பயப்பட வேண்டாம் என்று கூறி, எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்காக வந்திருக்கிறேன் என்றும், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்றும், அதற்கு என்ன அடையாளம் என்றால் அந்தப் பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தி இருப்பார்கள் என்றான். அப்பொழுது பரமசேனையின் திரள் கூட்டமானது, அந்தத் தூதனுடனே தோன்றி உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லித் தேவனைத் துதித்தனர். இந்த நற்செய்தி கிறிஸ்துவை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அனைத்து சமயத்தினருக்கும் கூறப்பட்ட நற்செய்தியாகும். இயேசு ஒரு மதத்தை ஸ்தாபிப்பதற்கு வரவில்லை. பாவத்தில் வாழ்கிறவர்களை மீட்டெடுக்கவே வந்தார். இதை மீகா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக இயேசு பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, 

மீகா 5 : 2 ல் ”எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.” 

என்று உரைத்திருப்பதைப் பார்க்கிறோம். மேய்ப்பர்கள் தாவீதின் ஊராகிய பெத்லகேமை நோக்கிச் சென்று, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையியில் கிடத்தியிருக்கிற பிள்ளையையும் .தரிசித்தனர். பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என்று பொருள். பெத்லகேமின் மறுபெயர் எப்பிராத்தா. இந்தக் கிராமம் மிகவும் சிறிய தாழ்த்தப்பட்ட கிராமம். இங்குதான் இயேசு பிறந்தார். இயேசுவின் பிறப்பினால். இது சரித்திரப் புகழ் பெற்றுவிட்டது. இயேசு பிறந்த பின் முழு உலகமே பெத்லகேமை நோக்கிப் பார்த்தது. மேய்ப்பர்கள் இயேசுவைக் கண்டபின் அங்குள்ளவர்களிடம் அவர்களுக்குச் சொல்லப்பட்ட சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியைக் கூறினார்கள். அதைக் கேட்ட யாவரும் ஆச்சரியப்பட்டனர். மேய்ப்பர்கள் தங்களுக்குத் தூதன் சொல்லப்பட்டதைக் கேட்டு அதைக் கண்டு அதற்காகத் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள் (லூக்கா 2 : 15, 16). சாஸ்திரிகள் இயேசுவை வீட்டுக்குள் சென்று பணிந்தனர் (மத்தேயு 2 : 11). இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் சந்திக்க வில்லை. ஆனால் இருவருடைய எண்ணமும், நோக்கமும் இயேசுவை சந்திக்க வேண்டும் என்பதுதான்.

சாஸ்திரிகள்: 

இயேசு இந்த உலகத்தில் பிறந்த போது அவரைத் தேடி மூன்று சாஸ்திரிகள் இயேசுவைப் பணிந்து கொள்ள வந்தனர். சாஸ்திரிகள் தத்துவ சாஸ்திரத்திலும், மருத்துவத்திலும் இன்னும் பலவிதமான விஞ்ஞான கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். வானத்தை ஆராய்ந்து பார்த்து நட்சத்திரங்களைக் கண்காணிப்பதும், அவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு நட்சத்திரம் வழிகாட்டியது. நட்சத்திரம் என்பது தேவனுடைய வார்த்தைக்கு உருவகமானது. அது நம்மை இயேசுவிடம் எப்போதும் நடத்தும். இயேசு பிறந்த செய்தியை அறிவிப்பதற்கு தேவன் ஒரு நட்சத்திரத்தை வானில் தோன்றப் பண்ணினார். அது சத்தமிடாமல் ஒளி வீசினாலும், சாஸ்திரிகளுக்கு யூதரின் ராஜா பிறந்திருக்கிறார் என்ற செய்தியைக் கொடுத்தது. எல்லா நட்சத்திரத்தையும் போல அந்த நட்சத்திரம் இல்லை. அந்த நட்சத்திரமானது ஞானிகளை ஈர்த்தது. அது அவர்களைக் கவனிக்க வைத்தது. ஏனெனில் வெளிப்படுத்தல் 22 : 16 ல் இயேசுவானவர் தான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருப்பதாகக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சாஸ்திரிகளின் பிரயாணத்தில் அவர்களுக்கு ஒரு தெளிவான நோக்கம் இருந்தது. அது என்னவென்றால் ராஜாதிராஜாவைப் பணிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். 

அந்த நட்சத்திரத்தைப் பற்றிப் படித்து அதற்காகக் காத்திருந்தனர். அது அவர்களுக்கு தென்பட்ட போது அதைப் பின்பற்ற ஆரம்பித்தனர். ஆச்சரியமான விதத்தில் ஒரு நட்சத்திரம் சாஸ்திரிகளுக்கு வழிகாட்டியதைப் பார்க்கிறோம். அந்த நட்சத்திரம் ஏரோதின் அரண்மனையைக் கடந்து சென்றபோது, சாஸ்திரிகள் அதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு சுய புத்தியினாலும், மதியீனத்தாலும் யூதருடைய ராஜா என்றால் அரண்மனையில் தானே பிறப்பார் என்று நினைத்து உள்ளே சென்றனர் யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே என்று எரோது ராஜாவிடம் கேட்டனர். இதைக் கேட்ட பொழுது ஏரோதும், அவனோடு கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவர்களுக்குப் புதியதாய் பிறந்த ராஜாவைப் பற்றி யாதொரு செய்தியும் தெரியவில்லை. பிறக்கும்போதே ராஜாவாக பிறந்தவர் யாரும் கிடையாது. ஆனால் இயேசுவோ பிறக்கும்போதே ராஜாவாகப் பிறந்தார். உடனே ஏரோது பிரதான ஆசாரியரையும், வேதபாரகரையும் அழைத்து வரச்சொல்லி அவர்களிடம் கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று விசாரித்தான். அதற்கு அவர்கள் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார் என்று கூறினர். மீகா தீர்க்கதரிசி 5 : 2 ல் …….கூறியிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அப்பொழுது ஏரோது சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து பிள்ளையை கண்டபின் அதைத் தான் புணிந்து கொள்ளும்படி தனக்கு அறிவிக்கச் சொல்லி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். பெத்தலகேம் கிராமத்தில் போய்ச் சேருகிற வரை அந்த நட்சத்திரம் அவர்களுக்கு வழிகாட்டியது. சாஸ்திரிகள் சந்தோஷப்பட்டு அந்த வீட்டுக்குள் பிரவேசித்து குழந்தையை சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொண்டார்கள்.

சாஸ்திரிகள் இயேசுவை தேடினார்கள், கண்டுபிடித்தார்கள், வணங்கினார்கள், கொடுத்தார்கள். இயேசுவின் பாதத்தில் தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து அவர்கள் கொண்டு வந்த பொன்னையும், துப வர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும் வைத்தார்கள். பொன் கிறிஸ்துவின் ராஜரீக த்தையும், ஆளுகையையும், தூபவர்க்கம் கிறிஸ்துவின் ஆசாரிய ஊழியத்தையும் தெய்வீகத்தையும், வெள்ளைப்போளம் கிறிஸ்துவின் பாடு மரணத்தையும் வெளிப்படுத்துகிறது. அவர்களின் இலட்சியம் அதோடு முடிவடைந்தது. அதன்பின் அவர்கள் சொப்பனத்தில் தேவன் சாஸ்திரிகளிடம் திரும்ப ஏரோதிடம் போக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு வேறு வழியாய் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள் (மத்தேயு 2 : 12). அதன் பின் அவர்களைப் பற்றி வேதத்தில் எதுவும் கூறப்படவில்லை. சாஸ்திரிகள் செய்த மதியீனமான செயலினால் ஏரோது தனது வீரர்களை பெத்தலகேமிற்கு அனுப்பி இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளைகள் அனைத்தையும் கொன்று குவித்தான் ( மத்தேயு 2 : 16). வேதத்தில் இன்னும் சில இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் ஆபிராகாமைக் கர்த்தர் ஆசீர்வதிக்கும் பொழுது ஆதியாகமம் 15 :5ல் வானத்து நட்சத்திரங்களைப் போல அவனுடைய சந்ததி இருக்கும் என்று ஆசீர்வதித்தார். தானியேல் 12 :3 ல் அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போல என்றென்றைக்கும் சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் என்றார். கர்த்தருடைய வழிகளை விட்டு விலகி போனவர்களை யூதா 13 ல் மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறியிருப்பதையும் பார்க்கிறோம்.

தேவாலயத்தில் இயேசு: 

இயேசு பிறந்த எட்டாவது நாள் இஸ்ரவேலில் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுவார்கள். அந்த நாளில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். மரியாளும் யோசேப்பும் அதற்காக இயேசுவை எருசலேம் தேவாலயத்துக்கு ஒரு ஜோடி காட்டுப்புறாவுடன் கொண்டு சென்றனர். அவர்கள் ஏழைகளாக இருந்ததால் வெறும் புறாவை எடுத்துக் கொண்டு சென்றதைப் பார்க்கிறோம். அங்கு இரண்டு வயதானவர்கள் மட்டும் இயேசுவை மேசியா என்று அடையாளம் கண்டு கொண்டனர். அதில் ஒருவன் சிமியோன். இந்த சிமியோன் ஆவியின் ஏவுதலால் அங்கு வந்திருந்தான். கிறிஸ்துவைக் காணுமுன் மரணமடைய மாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சிமியோன் இயேசுவைக் கைகளில் ஏந்தி மூன்று தீர்க்கதரிசனங்களை உரைத்தார். 1. புற ஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியானவர் என்றும் 2. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மகிமையானவர் என்றும் 3. சகல ஜனங்களுக்கும் தேவனால் ஆயத்தம் பண்ணின இரட்சணியம் என்றும் லூக்கா 2 : 27 – 32 ல் கூறினார். வேதவாக்கியங்களை ஆராய்ந்து படியுங்கள். அப்பொழுது சிமியோனுக்கு காண்பித்தது போல காணக் கூடாதவைகளை இயேசு காணும்படி செய்வார். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்லாதவராக இருந்தாலும், கிரேக்க ஞானிகளுக்கு வெளிப்படுத்தியதைப் போல உங்களுக்கும் வெளிப்படுத்துவார். தன்னைத் தீவிரமாய் தேடுகிறவர்களுக்குத் தேவன் தன்னைக் காணச் செய்வார்.

இயேசுவைக் கண்ட நான்கு வித குழுவினர்:

பூமியில் பிறந்த இயேசு பாலனைக் காண வந்த நான்கு விதமான குழுவினருக்கு மட்டுமே தன் மகனின் பிறப்பைப் பற்றிக் கர்த்தர் முன்னறிவித்தார். அதில் சில ஏழை மேய்ப்பர்கள், பெர்சிய நாட்டைச் சேர்ந்த சில சாஸ்திரிகள், ஆவியில் நிறைந்த வயது முதிர்ந்த சிமியோன், இடைவிடாது ஜெபித்து வந்த வயது முதிர்ந்த அன்னாள். தேவன் தெரிந்து கொண்ட இந்த நான்கு வித குழுவினரில், மூன்று குழுவினர் இரவுநேரத்தில் பாடுபடும் ஜனங்களாக இருந்தனர். மேய்ப்பர்கள் இரவு நேரத்தில் மந்தைகளை மேய்த்தனர். கிரேக்க சாஸ்திரிகள் இரவிலே நட்சத்திரத்தைப் பின்பற்றியே பயணம் செய்தனர். பகலில் நட்சத்திரம் தெரியாது. இராத்திரியில் உபவாசித்து ஜெபித்தவள் அன்னாள். இவர்கள் வெவ்வேறு விதமான ஜனங்கள். வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். வித்தியாசமான வயது உடையவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தாழ்மை நிறைந்து தெய்வ பயம் கொண்ட ஜனங்கள். இன்றும் இதுபோன்ற ஜனங்களையே தன்னுடைய இரண்டாம் வருகையைக் குறித்துக் கூறக் கர்த்தர் ஆயத்த படுத்துகிறார். 

இயேசு செய்யப்போவது முன்னறிவிக்கப்பட்டது:

  1. பிலேயாம் எண்ணாகமம் 24 : 17 ல் இஸ்ரவேலில் இருந்து எழும்பும் இயேசுவானவர் மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லோரையும் நிர்மூலமாக்குவார் என்று கூறினார்..
  2. ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 9 :7 ல் இயேசுவானவர் தாவீதின் சிங்காசனத்தையும், அவருடைய ராஜ்ஜியத்தையும் திடப் படுத்துவார் என்றும், அவர் அதை நியாயத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்துவார் என்றும் கூறினார்.. 
  3. ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 11 :4 ல் இயேசுவானவர் நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரிப்பார் என்றும் யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்கு தீர்ப்பு செய்வார் என்றும், பூமியை தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார் என்றும் கூறினார்.. 
  4. தூதன் மத்தேயு 1 : 21 ல் இயேசுவானவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.. 
  5. தூதன் லூக்கா 1 :33 ல் இயேசுவானவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாள்வார் என்றும் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவு இராது என்றும் கூறினான். .

இந்தத் தீர்க்கதரிசனங்களனைத்தும் இயேசுவானவர் பிறப்பதற்கு முன்னமே என்ன செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசுகிறிஸ்து வந்ததன் நோக்கம்:

  1. தேவனது வாக்குறுதிகளையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற (ஆதியாகமம் 3 : 15, சங்கீதம் 16 : 10, 40 : 7, 8, ஏசாயா 9 : 6, 7, 52 : 13 – 15, 53 : 2 – 12, மீகா 5 : 2, சகரியா 9 : 9, 11 : 12, 13, ரோமர் 15 : 8 – 12, 1கொரிந்தியர் 5 : 7, 2கொரிந்தியர் 1 : 20). :
  2. காணமுடியாத தேவனை வெளிப்படுத்த (யோவான் 1 : 18, 3 : 2, 16,17, 14 : 8 – 10, 16 : 27, 7 : 46, 2கொரிந்தியர் 4 : 6, 1யோவான் 3 : 16).
  3. சாத்தானையும் அவனது செயல்களையும் அழிப்பதற்காக யோவான் 12 : 31, 14 : 30, 16 : 11, கொலோசெயர் 2 : 15, எபிரேயர் 2 : 14 15, 1பேதுரு 2 : 24).
  4. மனிதனின் பாவங்களைப் போக்குவதற்காக (லேவியராகமம் 16 : 20, 22, ஏசாயா 53 : 4 – 6, மாற்கு 10 : 45, யோவான் 1 : 29, 36, 2 கொரிந்தியர் 5 : 21, கொலோசெயர் 1 : 14, எபிரேயர் 2 : 17, 1 பேதுரு 2 : 24, 1யோவான் 1 : 7, 2 : 2, 3 : 5). 
  5. உலகம் இரட்சிக்கப்பட (மாற்கு 10 : 45, யோவான் 3 : 17).
  6.  மனிதர்கள் நித்தியஜீவனை அடைய (யோவான் 3 : 16, 36, 10 : 10, 27,28, 1யோவான் 5 : 11, 12).
  7. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தர் ஆவதற்காக (1தீமோத்தேயு 2 : 5, 6, எபிரேயர் 8 : 6, 9 : 15, 12 : 24).
  8. மனிதனைத் தேவனோடு ஒப்புரவாக்குவதற்காக (ரோமர் 5 : 10, 2கொரிந்தியர் 5 : 18, 19, எபேசியர் 2 : 16, கொலோசெயர் 1 : 20, 21, எபிரேயர் 2 : 17).
  9. சாபங்களை முற்றிலும் நீக்க (எரேமியா 22 : 30. 36 : 30, ரோமர் 5 : 12). 
  10. பரிசுத்த வாழ்க்கைக்கு முன் மாதிரியைக் காண்பிக்க (யாத்திராகமம் 34 : 29, மத்தேயு 11 : 29, 19 : 3, 4, 27 : 24, லூக்கா 23 : 4, யோவான் 14 : 11, 13 : 14, 15, 1பேதுரு 2 : 21, 1யோவான் 2 : 6). 
  11. ஒடுக்கப்பட்டோரை விடுவிக்க (லூக்கா 4 : 18).
  12.  மனிதர்களின் நோய்களைக் குணமாக்க (ஏசாயா 53 : 4, 5, மத்தேயு 8 : 16, 17, 1 பேதுரு 2 : 24).
  13.  முழுமையான வாழ்வு வழங்க (யோவான் 3 : 36, 10 : 10).

வேதத்தில் இயேசு:

ஆதியாகமத்தில் பெண்ணின் வித்தாக, யாத்திராகமத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டியாக, லேவியராகமத்தில் பாவப் பரிகாரப் பலியாக, எண்ணாகமத்தில் அடிக்கப்பட்ட கன்மலையாக, உபாகமத்தில் தீர்க்கதரிசியாக, யோசுவாவில் இரட்சிப்பின் அதிபதியாக, யோபுவில் மீட்பராக, நீதிமொழிகளில் ஞானமாக, தீர்க்கதரிசனங்களில் சமாதான பிரபுவாக, மத்தேயுவில் யூதருக்கு ராஜாவாக, மாற்குவில் யோகாவாவின் பணியாளராக, லூக்காவில் மணமகனாக, யோவானி ல் இறைமகனாக, அப்போஸ்தலரில் அறுவடையின் ஆண்டவராக, நிருபங்களில் திருச்சபையின் ஆண்டவராக, வெளிப்படுத்தலில் நாடுகளின் ஆண்டவராக இருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட தேவன் நம் நடுவிலும் யோவான் 1:14, நம்முடனும் மத்தேயு 1 : 23, நமக்குள்ளும் ரோமர் 8 : 9, 10, கொலோசெயர் 1 : 27, 28, நமக்காகவும் ரோமர் 8 : 31, 35 1 யோவான் 2 : 1 லும், நம்மீதும் அப்போஸ்தலர் 1 : 8, நமக்கப்பாலும் 1தீமோத்தேயு 6 : 16, ரோமர் 11 : 33, மத்தேயு 6 :1, 6, 18 நம்மை நோக்கியும் 1 தெசலோனிக்கேயர் 1 : 10 வெளிப்படுத்தல் 22 : 7, 12, 20 இருக்கிறார். இத்தனை பேர்பெற்ற இயேசு அழுக்கான மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். அவமானத்துக்குரிய சிலுவையில் மரித்தார். இயேசுவைப் போல் ஆணின் துணையில்லாமல் யாரும் பிறந்ததில்லை. இயேசுவைப்போல் பாவம் செய்யாமல் யாரும் இருந்ததில்லை. இயேசு போதித்ததைப் போல் யாரும் போதித்ததில்லை. இயேசு வரலாற்று இரண்டாகப் பிரித்தது போல் கிமு, கிபி என்று யாரும் பிரித்ததில்லை. இயேசு மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்ததைப் போல் யாரும் எழுந்ததில்லை. இன்றும் ஜீவிக்கிறார்.

நாம் செய்ய வேண்டியவைகள்:

இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, வெறும் பூமிக்குரிய வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அது நித்திய நித்திய காலத்திற்காகவும் என்றென்றைக்குமுள்ள நித்தியஜீவனை நமக்குப் பெற்றுத் தரும். நீங்கள் இயேசுவுக்குள் வந்தபின் பழைய பாவங்கள் ஒழிந்து விட்டதா என்று உங்களை நீங்களே சோதிக்க வேண்டும். இயேசுவின் சுபாவங்கள் நமக்குள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். மேய்ப்பர்கள் நற்செய்தியைக் கேட்டவுடனும், சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பார்த்தவுடனும் இயேசுவை வந்து பார்த்து, பணிந்து கொண்டதைப் போல நாமும் இயேசுதான் உண்மையான தெய்வம் என்று தொழுது கொள்ள வேண்டும். இரண்டாவதாக அறிந்துகொண்ட இயேசுவை மற்றவர்களுக்குப் பிரசித்தம் பண்ண வேண்டும் லூக்கா (2 : 16 17). கிறிஸ்மஸ் செய்தியை தேவன் தமது தாசர்கள் மூலம் அறிவிக்கிறார். அதை நாம் கேட்டு அதைப் பின்பற்றிச் சென்று இயேசுவை கண்டடைவோமானால் மரித்தாலும் பிழைக்க முடியும். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் அவரது அதிகாரத்தை நாமும் பெற்று மக்களைக் கட்டியிருக்கிற சாத்தானின் மேலும், அவனது சகல வல்லமைகளின் மேலும் ஜெயமெடுத்து, மக்களை விடுவித்து கிறிஸ்து தந்த வல்லமையோடும், அற்புத அடையாளங்களோடும் அவரது பணியைச் செய்ய முற்படுவோம். 

இயேசுவே உண்மையான தெய்வம் என்ற சத்தியத்தை பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் அறியும்படி எடுத்துச் சொல்வோம். நாம் பாவத்திற்கு மரித்திருந்தால் அவரின் வருகையிலும் உயிர்த்தெழுவோம் என்பதை ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துரைப்போம். உங்கள் வாழ்க்கையிலும் காயங்களும், முட்களும் அழுத்திக் கொண்டிருக்கிறதா, பற்றாக்குறையினாலும், வியாதியினாலும், வசதிக் குறைவினாலும் கஷ்டப்படுகிறீர்களா இவைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு ஒரேவழி இயேசுவிடம் செல்வதுதான். நம்முடைய பாவங்களுக்காகப் பாவ நிவர்த்தி செய்வதற்காக சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடெழுந்து இன்றைக்கும் நமக்குள் ஜீவிக்கிறவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்பணியுங்கள். கண்ணீர் களிப்பாகும், கஷ்டம் நீங்கும், சந்தோஷமும், சமாதானமும் உண்டாகும். சிலுவை சிங்காசனமாக மாறும். எரேமியா 15 : 20 ல் நம்மை இரட்சிப்பதற்காகவும், சத்துருக்கள் கைக்குத் தப்புவிப்பதற்காகவும் நம்முடனே இருக்கிறேன் என்று இயேசு உரைத்திருப்பதைப் பார்க்கிறோம். எனவே நாம் சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமானவர் என்று (சங்கீதம் 46 : 7) திரும்ப திரும்ப சொல்லுவோம். நாமும் இரட்சகர் சென்ற அதே வழியில் செல்ல வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Related Posts