Menu Close

ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவியை விரட்டினார்

தேவாலயத்தில் இயேசு:

லூக்கா  4:31 – 33  “பின்பு  இயேசு  கலிலேயாவிலுள்ள  கப்பர்நகூம்  பட்டணத்துக்கு  வந்து,  ஓய்வு  நாட்களில்  ஜனங்களுக்குப்  போதகம்  பண்ணினார். அவருடைய  வசனம்  அதிகாரமுள்ளதாயிருந்தபடியால்  அவருடைய  போதகத்தைக் குறித்து  அவர்கள்  ஆச்சரியப்பட்டார்கள். ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன்  இருந்தான்.”  

இயேசு  தன்னுடைய  சொந்த  ஜனங்கள்  ஏற்றுக்  கொள்ளாததால்  தன்னுடைய தலைமை  அலுவலகத்தை  சொந்த  ஊரான  நாசரேத்திலிருந்து  கலிலேயா கடலின்  அருகிலிலுள்ள கப்பர்நகூமுக்கு  மாற்றினார்.  கப்பர்நகூமில்  ஓய்வு நாட்களில்  ஜனங்களுக்குப்  போதகம்  பண்ணினார். இயேசு  ஒரு  வேதபாரகரைப்  போல்  போதிக்காமல்,  அதிகாரத்துடன்  வசனங்களைப்  போதித்தார்.  எனவே  அவருடைய  போதகத்தைக்  குறித்தும்,  அவரது  வல்லமையைக் குறித்தும்  ஜனங்கள்  ஆச்சரியப்பட்டனர். இயேசுவின்  ஊழியங்கள்  அனைத்தும்  ஜெப ஆலயத்தை  மையமாகக்  கொண்டதாகவே  இருந்தது. அவர்  இந்தப்  பட்டணங்களுக்குச்  சென்றாலும்,  கிராமங்களுக்குச்  சென்றாலும் அங்குள்ள  ஜெப  ஆலயங்களில்  தமது  செய்தியைப்  பகிர்ந்து  கொண்டார்.  அவர்  ஒரு  நாளும்  ஜெப  ஆலயத்தைப் புறக்கணித்ததோ,  அவமதித்ததோ கிடையாது.  பாரம்பரிய  பழக்கங்களினால் அடிமைப்பட்டுக்  கிடந்த  ஜெப  ஆலயத்தலைவர்கள்  இயேசுவின்  திருத்தங்களை  ஏற்றுக்கொள்ள  மனமில்லாததினால்  அவர்கள்  மீது  இயேசு  கோபங்கொண்டாலும்  அவர்  ஜெபஆலய  ஊழியத்தை  நிறுத்தவில்லை.  அந்த  ஜெப ஆலயத்தில்  அசுத்தஆவியால்  பாதிக்கப்பட்டு  தன்னுடைய  உண்மையான நிலமையை  அறியாத  ஒருவன்  இருந்தான். இயேசு  உலகத்தில்  வந்திருந்த  நாட்களில்  அவருடைய  ஊழியம்,  போதனை,  செய்கை  எல்லாமே  பரலோக  திட்டத்தின்படியும்  பிதாவின்  திட்டத்தின்படியும்தான் செய்தார் (யோவான்  14 : 31).  இயேசு  தாம்  மேசியாவுக்குரிய  ஊழிய  நோக்கத்தை  அறிக்கையிட்ட  பின்னர்  (லூக்கா  4 : 17 – 19)  முதலில்  செய்த  செயல்  நேரிடையாகப்  பிசாசை  எதிர்த்ததாகும்.  

பிசாசினுடைய  கிரியைகளை  அழிப்பதற்கே  தேவனுடைய  குமாரன்  வெளிப்பட்டார்  என்று  1 யோவான்  3 : 8 ல் பார்க்கிறோம். அந்த  மனிதனுக்கு  விடுதலை  கொடுப்பதற்காகவே  இயேசு  அன்று  அந்த  ஆலயத்துக்குப்  போனார்.  38  வருட  வியாதியஸ்தனை  குணமாக்கவே  பெதஸ்தா  குளத்திற்குச்  சென்றார் (யோவான் 5 : 6).  6000  பிசாசு  பிடித்தவனை  சுகமாக்கவே  சூறாவெளியைக்  கடந்து  கதரேனருடைய நாட்டிற்கு  வந்தார் (லூக்கா  8 : 26, 27).  மரித்துப்போன  ஒருவனை  உயிரோடெழுப்பவும்  அந்த  விதவை தாய்க்கு  ஆறுதலளிக்கவும் நாயீன்  என்ற  ஊருக்கு  கடந்து  போனார் (லூக்கா 7 : 11 –  15). இவன் ஜெபஆலயத்தில்  இருக்கும்போதும்  அசுத்தஆவி  அவனுக்குள்  இருந்ததைப்  பார்க்கிறோம். இதிலிருந்து  சாத்தான்  எங்கேயும்,  எந்த  ரூபத்திலும்  இருப்பான்  என்றறிகிறோம். 

நாம்தான்  பிசாசுக்கு எச்சரிக்கையாக  இருக்க  வேண்டும். அந்த  ஜெப  ஆலயத்துக்குள்  வல்லமையுள்ள  ஊழியர்கள்  இல்லாதபடியால்  இந்த அசுத்தஆவியை  அவர்களால்  துரத்த  முடியாமல்  போய்விட்டது.  பிரதான  ஆசாரியனான  யோசுவாவின்  வலதுபக்கத்தில்  கூட  சாத்தான்  நின்றதை  சகரியா  3 : 1ல்  பார்க்கிறோம்.  அன்று  ஆசாரியத்துவம்  ஒழிந்து  விட்ட  நேரம்  .ஆசாரியர்கள்  இல்லை,  ஆலயமில்லை,  பலிகளில்லை. தேசம்  சீர்கெட்டிருந்ததால்  சாத்தான்  வந்து  நின்றான்.  நமது  ஜீவியமும்  சரியாக  இல்லாவிட்டால்  சாத்தான்  உட்புகுந்து  விடுவான்.  உங்கள்  இருதயத்துக்குள்  இயேசுவும்  அவருடைய  வார்த்தையும்,  பரிசுத்த  ஆவியானவரும்  இருந்தால்  சாத்தான்  உங்களை  நெருங்க  முடியாது (எபேசியர்  4 : 27).  

இயேசு பிசாசுக்குக்  கொடுத்த  கட்டளை:

லூக்கா  4 : 34,35  “அவன்:  ஐயோ  நசரேயனாகிய  இயேசுவே, எங்களுக்கும்  உமக்கும் என்ன?  எங்களைக்  கெடுக்கவா  வந்தீர்? உம்மை  இன்னார்  என்று அறிவேன்;  நீர் தேவனுடைய  பரிசுத்தர்  என்று  உரத்த சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல்  இவனை  விட்டு  புறப்பட்டு  போ  என்று  அதை அதட்டினார்; அப்பொழுது  பிசாசு  அவனை  ஜனங்களின்  நடுவே  விழத்தள்ளி  அவனுக்கு  ஒரு சேதமுஞ்  செய்யாமல்  அவனை  விட்டுப் போய்விட்டது.”

அசுத்த  ஆவியானது  தான்  பிடித்திருந்த  மனுஷனுக்குள்ளிருந்து  பேசியதைப்  பார்க்கிறோம். பிசாசின்  ஆவிகளென்பது  விழுந்துபோன  தூதர்களைக்  குறிக்கிறது. பிசாசு  “எங்களுக்கும்  உமக்கும்  என்ன”  என்றால்  இருவருடைய  ராஜ்ஜியமும்  வேறுவேறு  என்பதாகும்.  சாத்தானுக்கும்  ஒரு  ராஜ்ஜியம்  இருக்கிறது.  அந்த  ராஜ்ஜியம்  இருளின்  ராஜ்ஜியம்,  அந்தகார  ராஜ்ஜியம்,  அது  மக்களை  அழிக்கக்கூடிய  ராஜ்ஜியம்.  இயேசுவின்  ராஜ்ஜியமோ  ஒளியின்  ராஜ்ஜியம்,  மக்களை  வாழவைக்கும்  ராஜ்ஜியம்,  விடுதலையாக்கும்  ராஜ்ஜியம்  என்பதாகும். மாற்கு  1 : 26 ல்  இயேசுவின்  வார்த்தையைக்  கேட்டு  அந்த  அசுத்த  ஆவி  அவனை  அலைக்கழித்தது  என்றுள்ளது.  பிசாசின்  பிடியில்  ஒருவன்  அகப்பட்டால்  அவனுடைய  சிந்தையும், மனதும்  அலைக்கழிக்கப்படும்.  லூக்கா  9 : 39 ல்  அவ்வாறு  அலைக்கழிக்கப்பட்டவனை  அது  கசக்கிப்  பிழிந்தது என்று  பார்க்கிறோம்.  

அவைகளுக்கு  இயேசு  பரிசுத்தர்  என்று  அறிந்திருந்ததால்,  அதைத்  தன்  வாயால்  அறிக்கையிட்டதைப் பார்க்கிறோம். இயேசு  எப்படிப்பட்ட வல்லமையுடையவர்  என்பதை  அசுத்த  ஆவிகள் “உம்மை  இன்னார்  என்று  அறிவேன்”  என்று  கூறியதிலிருந்து  அறிகிறோம். அவைகளுக்கு  இயேசு நம்மை  இந்த  உடலிலிருந்து  விரட்டி  விடுவார்  என்பதால் “எங்களைக்  கெடுக்கவா  வந்தீர்”  என்று  கேட்டது.  இதன்  பொருள்  இயேசு  சாத்தானின்  கிரியைகளை  அழித்து  மனிதர்களை  வாழ  வைக்கிறவர்  என்பதைப் பிசாசுகள்  அறிந்திருந்தன.  இயேசு  அசுத்த  ஆவிகளைப் பேசவிடாமல் அதட்டினார்.  ஏனெனில்  இயேசு  பிசாசின்  மூலம்  சாட்சிபெற  விரும்பவில்லை.  அந்த  மனிதனை  விட்டு  அசுத்த  ஆவிகளைப்  போகக்  கட்டளையிட்டார்.  அதற்கு  மேல்  அந்தப் பிசாசுகளால்  அந்த  மனிதனுக்குள்  இருக்க  முடியாமல்  கோபத்துடன்,  அவனை  ஜனங்களின்  நடுவே கீழே தள்ளியது.  ஆனால்  வேறு  எந்த  சேதமும்  செய்வதற்கு  இயேசு  அனுமதிக்காததால்  அவனை  விட்டுப்  போய்  விட்டது.  

இயேசுவின்  வார்த்தைக்கு, வல்லமைக்கு  அசுத்தஆவியால்  எதிர்த்துநிற்க  முடியாமல்  உடனே கீழ்படிந்து  போனதைப் பார்க்கிறோம். மாற்கு 9 : 20 ல் ஊமையான  ஆவியை இயேசு விடுதலை கொடுத்தபோது அது அவனை அலைக்கழித்து, நுரைதள்ள  வைத்துத் தரையிலே புரள வைத்தது. யாக்கோபு 2 : 19 ல் பிசாசுகளும்  தேவனை  விசுவாசித்து  நடுங்குகின்றன  என்றும்,  லூக்கா 8 : 28 ல்  பிசாசு தேவனைப் பார்த்து உன்னதமான தேவனுடைய குமாரன் என்றழைத்து தம்மை வேதனைப் படுத்த வேண்டாமென்று வேண்டிக் கொண்டான்  என்றும்,  மாற்கு 3 : 11 ல் அசுத்த ஆவிகள்  இயேசுவைக் கண்டபோது அவருக்கு முன்பாக விழுந்து  தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டதையும் பார்க்கிறோம்.  

இயேசுவின்  கீர்த்தியும்,  ஜனங்களின் வியப்பும்: 

லூக்கா 4 : 36, 37 “எல்லோரும்  ஆச்சரியப்பட்டு:  இது  என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும்  அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள்  புறப்பட்டுப்  போகிறதே  என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவருடைய  கீர்த்தி  சுற்றிலுமிருந்த  நாடுகளிலுள்ள இடங்களில் எல்லாம் பிரசித்தமாயிற்று.”

ஜனங்கள்  இயேசு  தங்களுக்குத்தான்  அதிகாரத்தோடும்  வல்லமையோடும் போதகம்  பண்ணினாரென்றால்,  அதேபோல்  அசுத்தஆவிகளுக்கும்  கட்டளையிடுகிறாரே  என்று  வியந்தனர். அவைகளும்  அந்த  வார்த்தைக்கு  நடுநடுங்கி  அந்த மனிதனை  விட்டுப் போகிறதே  என்று  ஆச்சரியப்பட்டு  ஒருவரோடொருவர்  பேசிக்கொண்டார்கள்  இயேசுவினுடைய  அற்புதங்களையும், அடையாளங்களையும்,  அதிகாரமுள்ள  போதனைகளையும்  அனேகர்  பார்த்ததாலும்,  கேட்டதாலும்  அவருடைய  கீர்த்தி  சுற்றிலுமுள்ள  இடங்களிலெல்லாம் பரவியது.  அநேகர்  வெவ்வேறு  இடங்களிலிருந்தும் இயேசுவைத் தேடி வந்தார்கள். இயேசு  ஒரு  மனிதனின்  வாழ்க்கையை  மாற்றுகிறவர்  (மாற்கு 1 : 16 – 20), சாத்தானின்  கிரியைகளை  அழிக்கிறவர் (மாற்கு 1 : 23 -28),  வியாதிகளை  நீக்கி  சுகம்  கொடுக்கிறவர் (மாற்கு 1 : 29 – 34, 40 – 45),  இரட்சிப்பின்  செய்தியை  அறிவித்து  ராஜ்ஜியத்தைக்  கட்டுகிறவர்  (மாற்கு 1 : 35 – 39)  என்று  இதில்  பார்க்கிறோம்.  குமாரனாகிய  இயேசு  தான்  சிலுவையில்  சிந்திய  இரத்தத்தினால்  சாத்தானின்  தலையை  நசுக்கி  நுகத்தடியை முறிக்கிறார்.  பவுல் கொலோசேயர் 2 :  15  ல் “துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.”  என்றும்  கூறியுள்ளதைப் பார்க்கிறோம்.  

மாற்கு சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட முதல்  அற்புதம்  இது.  ஆவி  உலகம் தொடர்புடைய  பிசாசுகளை  இயேசு  தன்னுடைய  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததைப் பார்க்கிறோம்.  ரோம சாம்ராஜ்ஜியத்தில்  பிசாசுகள்  அதிகமாக ஜனங்களுக்குள்  .புகுந்திருந்தது.  இந்த அற்புதத்தின்  மூலம்  எந்த  நிலைமையில் ஒருவன்  இருந்தாலும்  அவனை  சந்திக்கக்கூடிய,  அதிலிருந்து  விடுதலை கொடுக்கும் வல்லமை  கிறிஸ்துவுக்கு மட்டுமே  உண்டு  என்று  அறிகிறோம்.  ஏனெனில்  மரணத்துக்கு  அதிகாரியான பிசாசானவனை இயேசு  தனது  சிலுவை  மரணத்தினால்  அழித்தார்  (1 யோவான் 3 8,  எபிரேயர்  2 : 14). இயேசுவால்  மட்டுமே  இப்படிப்பட்ட  அதிகாரத்துடனும்,  வல்லமையுடனும்  செயல்பட  முடியும். நாமும்  அசுத்தஆவி பிடித்தவர்களை  இயேசுவண்டை  கூட்டி  வந்து  விடுதலை  கொடுக்கப் பாடுபடுவோம்.  ஆமென்.

Related Posts