உப்பானது உணவுக்கு ருசியைக் கொடுத்து பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் திறன் பெற்றிருக்கிறது. அதுபோலவே சபையும் விசுவாசிகளும் தேவபக்திக்குரிய நல்ல முன்மாதிரியாக இந்த உலகில் காணப்படவேண்டும். சமுதாயத்தில் காணப்படும் ஒழுக்கச் சீர்கேடுகள், அக்கிரம செய்கைகளுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதற்கு இரு பொருட்கள் உண்டு. ஒன்று சுவையின்மையால் குப்பையில் போடப்படுதல் ஆகும். இரண்டாவது உப்பில்லாமையால் சீக்கிரம் கெட்டுப்போன பண்டம் குப்பையில் போடுதல் ஆகும்.
நாமும் உப்பைப்போல பிறருடைய வாழ்க்கைக்கு சுவையூட்டுகிறவர்களாக, மக்கள் கெட்டுப்போகாதவாறு நமது ஜெபத்தினால் அவர்களைத் தாங்குகிறவர்களாக இருக்க வேண்டும். உப்பு சாரத்தோடு இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுபோல தேவனும் தன்னுடைய பிள்ளைகள் தேவபக்திக்குரிய நல்ல முன்மாதிரியாக உலகில் காணப்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். உப்பு சாரமற்றுப் போனால் வெளியே கொட்டப்படுவதுபோல நாமும் தேவனுடைய பிள்ளைகளாக மாறாவிட்டால் பரலோகத்தை விட்டுத் தள்ளப்படுவோம்.