Menu Close

சர்தை சபையிலிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 5 “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.”

சிமிர்னாவுக்குக் கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் சர்தை உள்ளது. பழைய நாடான லிதியாவின் தலைநகரமாக இது இருந்தது. ஆசியா பகுதியின் ஒரு பகுதிதான் இந்த லிதியா. அங்குள்ள ஹெர்மீஸ் நதி சமவெளிப் பகுதியின் நடுவிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக “மோளேஸ்” மலை உருவாகி உயரம் அதிகமாகி வருகிறது. மலை அடுக்குகளிலிருந்து பெரிய பாறை அடுக்குகள் மீண்டும் உயருகின்றன. ஒவ்வொரு பெரும்பாறை அடுக்குகளின் உச்சியிலும் விரிவான பீடபூமி உள்ளது. அத்தகைய 1500 அடி உயரமான ஒரு பாறை அடுக்கின் உச்சியிலுள்ள ஒரு பீடபூமியில்தான் சர்தை பட்டணம் அமைந்திருந்தது. எதிரிகள் வெற்றிகொள்ள முடியாத நகரம். ரோம சபையின் குறைபாடு களை நிவிர்த்தி செய்ய 16ம் நூற்றாண்டில் சமயச் சீர்திருத்த இயக்கம் ஒன்று மார்ட்டின் லூதரால் உருவானது. சர்தை சபையின் குணாதிசயங்கள் சரித்திர ரீதியாக புரட்டஸ்டாண்டு சபையோடு இணைந்து காணப்படுகிறது. இப்பட்டண த்தின் இடிபாடுகளிலிருந்து பலநாட்டு நாணயங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இங்கிருந்த அர்தேமிஸ் தேவதையின் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. சர்தை சபையின் ஸ்தாபகர் யோவான் என்பர். இங்கு பொன், வெள்ளி, ஜவுளி வியாபாரங்கள் நடந்து செல்வச் செழிப்பாக விளங்கியது. 

தொடர்ச்சியான பூமியதிர்ச்சிகளும், பெர்சிய ஆட்சிக்குப் பின்னர் ஆண்ட துருக்கியர் செய்கையும் சர்தையை புழுதிக்குச் சமமாக்கின. இன்று சர்தை இருந்த இடத்தை ஸாட் என்று அழைக்கின்றனர். இன்று பின்தள்ளப்பட்ட கிராமப் பகுதியாக உள்ளது. பழங்கால பெருமைக்கு நினைவாக இன்று அங்கு உயர்ந்து நிற்கும் இரண்டு கருங்கல் தூண்கள் மட்டும் உள்ளன. சர்தை சபைக்கு இயேசு தன்னை ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவராக அறிமுகப்படுத்துகிறார். யோவான் 3 : 34 ல் “தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். என்ற வசனத்தின்படி பரிசுத்த ஆவியானவரின் சம்பூர்ண நிறைவு அவரிடம் காணப்பட்டது. எனவே அவர் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் கிருபை வரங்களும், கனிகளும் வெளிப்பட்டது. ஏழு ஆவிகள் என்பது சத்திய ஆவியானவரின் பரிபூரணத்தையும் அவருடைய ஏழு வித்தியாசமான கிரியைகளையும் வெளிப்படுத்துவதாக வெளிப்படுத்தல் 1 : 4 ல் உள்ளது. சர்தை சபையின் பரிதாபமான நிலைக்கு காரணம் இந்தச் சபையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் ஏற்றுக்கொள்ளப் படாததேயாகும். 

இயேசுவின் கரத்திலிருக்கும் ]ஏழு நட்சத்திரங்கள் ஏழு சபையின் தூதர்கள், அதாவது சபைத்தலைவர்கள். வெளிப்படுத்தல் 3 : 1 ம் வசனத்திலேயே சர்தை சபையின் கிரியைகள் தவறானவை என்பதைக் கூறியிருக்கிறார். “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்ற பயங்கரமான குற்றச்சாட்டை சபை பெறுகிறது. . சர்தை சபை பயனற்ற செத்த சபை. ஆவிக்குரிய பிரகாரம் இது மரித்திருந்தது. அங்குள்ள சிலர் மட்டுமே சுவிசேஷத்துக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தனர். வெளிப்புறத்தில் ஜீவனுள்ளதாகவும், செயல்புரிவதாகவும் தோன்றி மற்றவர்களால் ஜெயமுள்ள சபையென்றும், உயிருள்ள கிரியை நடப்பிக்கும் சபையென்றும் போற்றப்பட்டது. இந்த சபையில் வெளிப்படையான எந்தக் குறைகளும், மாய்மாலங்களும் இல்லை. சபையில் பாலாம், யேசபேல், நிக்கொலாய் இவர்களின் ஆதிக்கம் இல்லை. வேசித்தனமான விக்கிரக வழிபாடுகள் இல்லை. விசுவாசிகள் வேத வாசிப்பிலும், தியானங்களில் கவனம் செலுத்தினார்கள். ரோம சபையின் பாரம்பரியங்கள் கைவிடப்பட்டன. சபை ஆராதனைகள், பாடல்கள், தேவ செய்திகள் எல்லாவற்றிலும் ஒழுங்கு காணப்பட்டது. அருமையான ஆராதனை முறை அங்கிருந்தாலும் பரிசுத்த ஆவியின் உண்மையான வல்லமையும், நீதியும் அங்கு இல்லாதிருந்தது. 

ஆனால் இயேசுவோ மனிதர்களின் இருதயத்தையும் உள்ளான வாழ்வையும் காண்கிறார். ஒரு சிலரைத் தவிர மற்ற உறுப்பினர் யாவரும் பெயர்க் கிறிஸ்தவர்களாக இருக்கும் சபை. இந்த சபைக்கு வெளிப்படுத்தல் 3 : 1 – 6 வரையுள்ள வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சரித்திர ரீதியாக 31 – 10 – 15 17 ல் மார்ட்டின் லூதர் என்ற ரோம சபையின் பாதிரியார் சபையின் சர்வாதிகாரத்துக்கும், தவறான உபதேசங்களுக்கும், ஆணவப் போக்குக்கும் எதிராக 95 சட்ட விதிகள் அடங்கிய அறிக்கையை ஜெர்மனி தேசத்தின் விட்டன்பெர்க் தேவாலயத்தின் வாசலில் ஆணி வைத்து வெளிப்படுத்திய போது சர்தை உருவானது. உடனடியாக சபை மிகப்பெரிய சீர்திருத்தத்தை அனுபவித்தது என்பது உண்மைதான். வசன எழுப்புதல் உருவாயிற்று. சம்பிரதாயங்கள் உடைக்கப்பட்டன. லத்தீன் மொழியில் ஆராதனைகள் தடை செய்யப்பட்டன. வேத புஸ்தகம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. வேத வாசிப்பு உற்சாகப்படுத்தப்பட்டது. விக்கிரக ஆராதனை ஒழிந்தது. 1520ல் லூதர் ரோம சபையை விட்டு நீக்கப்பட்டபின் ஜெர்மனியிலும், மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் அரசர்களையும், அதிபதிகளையும் திருப்திப்படுத்தும் முயற்சியில் சபை ஈடுபட்டதினால் பாரம்பரியக் கோட்பாடுகளை முற்றிலும் மேற்கொள்ள முடியாமல் போயிற்று. 

குழந்தை ஞானஸ்நானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இங்கிலாந்து மன்னன் ஹென்றி 8 தன் சொந்தக் காரணங்களுக்காக போப்பை விரோதித்துக் கொண்டு தன்னை இங்கிலாந்து சபையின் தலைவனாக முடிசூட்டிக் கொண்டதை சபை அங்கீகரித்து, உலகத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. சர்தை சபைக்கு கிறிஸ்து ஐந்து ஆலோசனைகளை வழங்குகிறார். 1. விழித்துக்கொள் (3 : 2), 2. ஸ்திரப்படுத்து (3 : 2), 3. நினைவுகூர் (3: 3, கைக்கொள் (3 : 3), மனந்திரும்பு (3 : 3) என்பதாகும். எபேசு சபைக்கு இயேசு நீ என்ன நிலைமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைவுகொள் என்று 2 : 5 ல் கூறினார். நினைவு கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சபை தான் தேவனிடமிருந்து அறிந்து கொண்ட காரியங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தாங்கள் பெற்றுக்கொண்ட தெய்வீக வெளிச்சத்தைப் பயன்படுத்தாமல் விட்டதே சர்தை சபை செய்த பெரும் தவறு. அது பாவமாக இருப்பதினால் சபை மனந்திரும்ப வேண்டும். சர்தை சபை இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் இயேசு அறிவிக்கிறார். இயேசு மனதுருக்கமும், நீடிய பொறுமையும் உள்ளவராக இருந்தாலும், சபை தனக்குக் கீழ்ப்படிய ஆயத்தமாயிராத போது அவர் தீவிரமாகச் செயல்படுவார். 

திருடனைப்போல் வருவதாகவும், தான் வரும் வேளையை சபை அறியாது என்றும் சொல்கிறார். எபேசு சபைக்கும் தான் சீக்கிரமாய் வந்து, சபையின் விளக்குத்தண்டை நீக்குவதாக எச்சரித்ததையும் (வெளிப்படுத்தல் 2 : 5), பெர்கமு சபைக்கு சீக்கிரமாய் வந்து வாயின் பட்டயத்தால் யுத்தம் பண்ணுவதாக எச்சரித்ததையும் (வெளிப்படுத்தல் 2 : 16) ல் நினைவு கூறுகிறோம். எந்தத் திருடனும் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி எதிர்பாராத வேளையில் தான் வருவான். திருட்டு நடந்து முடிந்தபிறகுதான் வீட்டு எஜமானுக்குத் தன்னுடைய வீடு திருடப்பட்டது தெரியும். ஆனால் கிறிஸ்துவோ தன் சபை தவறை உணர்ந்து மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக முன்னதாகவே தன்னுடைய வருகையைத் தெரிவிக்கிறார். தேவனிடமிருந்து ஒரு பாராட்டும் பெற்றுக்கொள்ளாத சர்தை சபையிலும், சபையின் பரிசுத்தக் குலைச்சலோடு தொடர்பில்லாமலிருந்து வெண் வஸ்திரம் தரித்தவர்களாய் கிறிஸ்துவோடு நடக்கும் சிலர் இருந்திருக்கின்றனர். 

யாக்கோபு 1 : 27 ல் “ உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” என்றார். “

யாக்கோபு 4 : 4 “ உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?” என்றும் கூறுகிறார்.” 

“ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை.”. என்று 1 யோவான் 2 : 15 ல் யோவான் கூறுகிறார். 

இவர்கள் மட்டுமே வெண் வஸ்திரம் தரித்து கிறிஸ்துவுடனேகூட நடப்பதற்கு பாத்திரவங்களாகிறார்கள். இது அவர்கள் பெற்றுக்கொண்ட முதலாவது ஆசீர்வாதம். ஜெயம் கொண்டவர்கள் இரட்சிப்பின் வஸ்திரத்தைத் தரித்தவர்கள். அவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினால் தோய்த்து வெளுத்தவர்கள் (வெளிப்படுத்தல் 7 : 14). கலியாண வஸ்திரம் தரித்திராத மனுஷன் விருந்து சாலையிலிருந்து நீக்கப்பட்டது போல, அங்கு நடைபெறாது. அவர்களது இரண்டாவது ஆசீர்வாதம் ஜெயங்கொண்டவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்திலிருந்து நீக்கப்படாது. ஜீவபுத்தகத்தில் எழுதப்படாதவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான் என்று வெளிப்படுத்தல் 20 : 15 ல் உள்ளது. புது ஜீவனைப் பெற்றும் பிற்காலத்தில் விசுவாசத்தில் நிலைத்திராமல் ஜெயம்பெறாதவர்களின் பெயர் ஜீவ புத்தகத்திலிருந்து கிறுக்கப்படும். ஜீவபுத்தகத்திலிருந்து பெயர் கிறுக்கப்படுத்தல் என்பது நித்தியஜீவனை இழப்பதும் (வெளிப்படுத்தல் 2 : 7, 10, 11), அக்கினிக்கடலில் தள்ளப்படுவதற்கான தண்டனையைப் பெறுவதுமாகும் (வெளிப்படுதல் 20 : 15). 

இதையே ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறார் (யாத்திராகமம் 32 : 32, வெளிப்படுத்தல் 3 : 6, 13 : 8, 17 : 8, 20 : 12, 21 : 27). இஸ்ரவேலரின் பாவத்தைத் தேவன் மன்னிக்காவிட்டால் “நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப் போடும்” என்று மோசே சொன்ன போது தேவன் “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ அவன் பெயரை என்னுடைய புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவேன்” என்று யாத்திராகமம் 32 : 32, 33 ல் கூறியுள்ளார். ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்ட பெயர்கள் நீக்கப்படுவது நடக்கக்கூடியது என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது. ஜீவ புஸ்தகத்திலிருந்து எழுதப்பட்ட பெயர் நீக்கப்படக்கூடும் என்பதினால்தான் தாவீது துன்மார்க்கர்களைக் குறித்து சங்கீதம் 69 : 28 ல் “ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறு க்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.”என்று ஜெபிக்கிறார். மூன்றாவது ஆசீர்வாதம் ஜெயங்கொண்டவர்களின் நாமம் பிதாவின் முன்பாகவும், தூதர்களின் முன்பாகவும் அறிக்கை பண்ணுவார். 

இதைத்தான் இயேசு மத்தேயு 10 : 32 ல் “ மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.” (மாற்கு 8 : 38, லூக்கா 12 : 8, 9 : 26) என்றார். இயேசு ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு வெண்வஸ்திரத்தைத் தரிப்பித்து அவர்களுடைய பெயரை தன்னுடைய ஜீவபுத்தகத்தில் எழுதி, பிதாவுக்கு முன்பாக அதை அறிக்கை பண்ணுவார். ரோமப் பேரரசின் வெற்றி வீரர்களான படை வீரர்களுக்கும் வெண்ணாடை பரிசளிக்கப்படும். போர் வெற்றியைக் கொண்டாடுவோரும் வெண்ணாடை அணிவது வழக்கம். வெற்றியின் சின்னமாக வெள்ளை நிறம் காணப்படுகிறது. பரிசுத்தத்தை அடையாளமாகவும் வெள்ளை நிறம் உள்ளது. வெண் வஸ்திரம் பரிசுத்தத்தையும், வெற்றியையும், பரலோக பேரின்ப பாக்கியத்தையும், ஆவிக்குரிய மேன்மையையும் குறிப்பிடுகிறது. வெண்வஸ்திரத்தைக் குறித்து ஏழு குறிப்புகள் வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ளது (வெளிப்படுத்தல் 2 : 5, 3 : 18, 4 : 4, 6 : 11, 7 : 9, 13, 19 : 4). வெண் வஸ்திரம் தரித்துக் கொள்வதைவிட கிறிஸ்துவோடு நடப்பதே அவர்கள் பெற்றுக்கொள்ளும் மேலான சிலாக்கியம். 

ஆமோஸ் 3 : 3 ல் “ இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?” என்கிறார். 

கிறிஸ்துவோடு நடப்பது அவர்கள் அவரோடு கொண்டிருக்கும் நெருக்கமான உறவை வெளிப்படுத்துகிறது. ஏனோக்கு இந்தப் பாவ உலகத்திலிருக்கும்போதே தேவனோடு 300 ஆண்டுகள் சஞ்சரித்ததைப்போல நாமும் இந்த உலகத்திலிருக்கும்போதே கிறிஸ்துவோடு நடக்கும் பாக்கியத்தைப் பெற வாஞ்சி ப்போம். ஆமென்.

Related Posts