இயேசு ஜனங்களுக்கு இந்த உவமையைக் கூறினார். ஒரு பட்டணத்தில் தேவனுக்குப்
பயப்படாத மனிதனை மதியாத ஒரு நியாயாதிபதி இருந்தான். அந்த பட்டணத்தில் ஒரு
விதவை தனக்கும் தன் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் நியாயஞ்செய்ய ஓயாமல் அவனைத் தொந்தரவு செய்தாள். அவள் அடிக்கடி தொந்தரவு செய்ததால் “இவளுக்கு நியாயஞ்செய்ய வேண்டுமென்று” தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அவளுக்கு நியாயம் விசாரித்தான். ஜெபத்திற்கு பதில் கிடைக்க காலதாமதமானால் சோர்ந்து போகக்கூடாது. தேவனை நோக்கி இரவும், பகலும் கூப்பிடுகிறவர்களின் விஷயத்தில் நீடியபொறுமையுட னிருந்து தேவன் சீக்கிரத்தில் நியாயஞ்செய்வார். பயம், சந்தேகம், சோர்வு ஆகியவற்றை விட்டுவிட்டு உரிமையோடு விடாமல் கேளுங்கள். தோல்வி என்ற எண்ணத்தை அகற்றி பதில் வரும் என்ற விசுவாசத்தோடு, உறுதியோடு கேளுங்கள்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில் இயேசு வரும்வரை இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களை இயேசு வரும்போது உலகத்தில் அனுபவித்த துன்பம், பாடுகள் அனைத்துக்கும் முடிவுகட்டி தம்மோடு சேர்த்துக்கொள்வார்.