இந்த உலகத்தில் தனியாக விடப்படுகிறவர்கள், விதவைகள் ஆகியோர் மேல் இயேசுவுக்கு விசேஷித்த அனுதாபமும் இரக்கமும் உண்டு. தேவன் தகப்பனற்றவர்களுக்குத் தகப்பனாகவும், விதவையின் காரியங்களை விசாரிக்கிறவருமாயும் இருக்கிறார். இயேசு ஒரு விசை நாயீன் என்னும் ஊருக்கு திரளான ஜனங்களுடன் சென்ற போது, அந்த ஊரின் வாசலை சமீபித்த போது மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ண கொண்டு வந்தனர். அவன் ஒரு விதவையின் ஒரே மகன். இயேசு கைம்பெண்ணின் ஒரே மகன் மரணமடைந்த அவல நிலையை, அந்தப் பெண் யாருமற்ற அனாதையாகிவிட்டதை இயேசு கண்டார். மரித்தவனை உயிரோடு எழுப்பும்படி யாரும் கேட்கவில்லை. இயேசு தாமாகவே மனதுருகி “அழாதே” என்றார். பாடையைத் தொட்டார். மரணமடைந்தவனை உயிரோடெழுப்பினார். பாடையைத் தொட்டால் தீட்டுப்பட நேரிடும் என்று அறிந்தும் இயேசு தொட்டார். வாலிபன் உயிரோடு எழுப்பப் பட்டதால் தீட்டுப்படவில்லை.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில்: விதவைகளிடம் இயேசு அன்பு செலுத்தியது போல நாமும் திக்கற்றவர்களிடமும், அனாதைகளிடமும், விதவைகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். கூப்பிடாமலேயே இயேசு தானே சென்று உயிரோடெழுப்பியது போல, நாமும் துன்பத்தில், வேதனையில் இருப்பவர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு சுகம் கிடைக்க இயேசுவிடம் மன்றாடி ஜெபம் பண்ண வேண்டும்.