Menu Close

சத்துருக்களிடம் அன்பு காட்டுவது பற்றி இயேசு: மத்தேயு 5:39-48 லூக்கா 6:27-36

இயேசு “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு  மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” என்கிறார். இதன் பொருள் என்னவெனில் ஒருவன் தன் எதிரியை வலது கன்னத்தில் அறைந்தால் அது அவனை வேதனைப் படுத்த அல்ல, அது அவனை அவமதிப்பதற்காகச் செய்யும் செயல். நீங்கள் அவமதிக்கப்பட்டாலும் பிறரை அவமதிக்க முயல வேண்டாம் என இயேசு உபதேசிக்கிறார்.

மேலும் உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை ஒருவன் எடுத்துக்கொள்ள வந்தால், அது எனக்குச் சொந்த்தமானது என்று நீ வாதிடாமல் அவன் கேட்காத உன் அங்கியையும் அவனிடத்தில் கொடுத்துவிட இயேசு கூறுகிறார். ஒருமைல் தூரம் நம் விருப்பத்துக்கு மாறாக, அநியாயமான முறையில் நடக்கும்படியாக எவரேனும் வற்புறுத்தினால், கிறிஸ்தவர்களாகிய நாம் இரண்டுமைல் தூரம் போவதற்கும் ஆயத்தமாயிருக்க வேண்டும் — மத் 5 : 39,40, 41.

உன்னிடத்தில் கடன் ஒருவன் கேட்டால் உனக்கு அது முடியுமானால் முகங்கோணாமல் கொடுக்கச் சொல்லுகிறார். நாம் எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்கிறோமோ அந்த அளவிற்கு தேவன் நமக்கு ஆசீர்வாதங்களைத் திரும்பத் தருவார். மேலும் இயேசு சத்துருக்களை  சிநேகியுங்கள் என்றும், சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் என்றும், பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்றும், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்றும் உபதேசித்தார். நாம் உலகில் உள்ள அத்தனை பேரையும் நேசித்துத்தான் ஆக வேண்டும். இப்படிச் செய்வதினால் பரலோக பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள் – மத் 5: 42-44.

பரலோகத்திலிருக்கிற பிதாவை இயேசு “உங்கள் பிதா” என்று கூறுவதிலிருந்து நமக்கும் தேவனுக்குமிடையே உள்ள நெருக்கமான உறவை வலியுறுத்துவதைக் காணலாம். உலகம் பாவத்தினால் நிறைந்திருந்தாலும், உலகத்துக்கு தன்னுடைய சூரியன் மூலமாக வெளிச்சத்தைக் கொடுக்கிறார். ஏற்ற காலங்களில் மழையையும் அனுப்பி நீதிமானையும், அக்கிரமக்காரரையும் போஷிக்கிறார். அப்படிப்பட்ட பிதாவின் புத்திரர்களாகிய நாம் சத்துருக்களை நேசிக்க வேண்டியது அவசியமாகிறது.

நமக்கு வேண்டாதவர்களையும் நாம் நேசிக்க வேண்டும், வாழ்த்த வேண்டும். அவர்கள் காரியங்களில் கரிசனையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்மை சிநேகிக்காதவர்களை நாம் சினேகிக்கும் போது, அதற்குத் தேவனுடைய சமூகத்தில் நிச்சயமான பலன் ஒன்று உண்டு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.  அவர்களுக்குத் தீமைக்குப் பதில் நன்மை செய்ய வேண்டும் – 5 : 45-47 நீதி 20:22,24:29 மத் 5:39-45 ரோ 12:17 1தெச 5:15 1பே3:9

இயேசு பூரண சற்குணராக இருப்பது போல் நாமும் பூரண சற்குணராக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பூரண சற்குணம் எப்படி உண்டாகிறது என்றால் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருமணி நேரமும், தேவையானால் ஒவ்வொரு வினாடியும் பாவமன்னிப்புக்காக கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தத்தை நோக்கிப் பார்க்கும்போது (1யோ 1:7,9) கல்வாரியில் வெளிப்பட்ட தேவநீதியை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது (ரோ 4:25,26) நாம் சற்குணராகிறோம். நாம் சற்குணராக வேண்டும் என்ற நம்முடைய இலக்கை தோல்விகளின் மத்தியிலும் நம்முடைய கண்களுக்கு முன்பாக வைத்து அந்த பந்தயப்பொருளை நோக்கியே ஓடிக்கொண்டிருக்க வேண்டும் – மத் 5:48.

Related Posts