Menu Close

நூற்றுக்கதிபதியின் விசுவாசம்: மத்தேயு 8:5-13 லூக்கா 7:1-10

ஒரு நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருந்தான். அவன் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு “தன் வேலைக்காரன் குணமாக வேண்டுமென்று இயேசுவை வேண்டிக்கொள்ளும்படி” யூதருடைய மூப்பரை இயேசுவிடம் அனுப்பினான். அவர்கள் இயேசுவிடம் “இந்த நூற்றுக்கதிபதி நம் ஜனங்களை நேசிக்கிறான். நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான்” என்றனர். அப்பொழுது இயேசு அவர்களுடனே அவனுடைய வீட்டிற்குச் சென்றார். வீட்டுக்குச் சமீபமானபோது நூற்றுக்கதிபதி தன் சிநேகிதனை நோக்கி

  • “ஆண்டவரே நீர் வருத்தப்பட வேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;”
  • “நான் உம்மிடத்தில் வரவும் என்னை பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.”

என்று கூறக் கோரினான். இந்த நூற்றுக்கதிபதியின் விசுவாசம் ஆழமானது. அவர் ஒரு அதிகாரி என்ற நிலையின் அதிகாரத்தையும், வல்லமையையும் நன்கு உணர்ந்திருந்தார். அதேபோல் கிறிஸ்துவுக்கு நோயின் மீதிருந்த அதிகாரத்தையும், வல்லமையையும் உணர்ந்த போது அவரை முற்றும் பற்றிக் கொண்டார். வல்லமையுள்ள அதிகாரத்தின் செயல்பாட்டை அவரிடம் விசுவாசத்துடன் எதிர்பார்த்தார். தனது வேலைக்காரனையும் நேசித்த நூற்றுக்கதிபதியின் குணநலனை இங்கு நாம் பார்க்கிறோம். மேலும் அதிகாரியான அவன் “நான் பாத்திரவானல்ல” என்று தன்னைத் தாழ்த்துகிறதைப் பார்க்கிறோம்.  அவனது விண்ணப்பம் என்னவெனில் “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்” தேவகுமாரனின் அதிகாரமுள்ள வார்த்தை தூரங்களைத் தாண்டி வந்து அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் என அவன் விசுவாசித்தான். அந்த நூற்றுக்கதிபதியிடம் கண்ட விசுவாசத்தை இயேசு எந்த யூதரிடத்திலும் கண்டதில்லை என்று கூறி அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார். அவிசுவாசிகளான யூதர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி இதன் மூலம் நம்மை எச்சரிக்கிறார். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிய போது இயேசுவின் வல்லமையால் அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில்:

  1. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் இதே போன்ற விசுவாசத்துடன் “உம்முடைய சித்தம் என்ன ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே” என்று கர்த்தரிடம் மன்றாடுவோம்.
  2. நம்மிடம் வேலைபார்ப்பவர்களை நாம் நேசிப்பது மட்டுமல்ல, அவர்களுடைய துன்பத்தைத் துடைக்கவும் பிரயாசப்பட வேண்டும்.
  3. நூற்றுக்கதிபதியைப் போல மனத்தாழ்மையுடன் இருக்க முயலுவோம்.

Related Posts