Menu Close

முதலாம் கோபக்கலசம் – வெளிப்படுத்தல் 16:2

வெளிப்படுத்தல் 16 : 1, 2 “அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக் கேட்டேன். முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.”

ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்கள் பரலோகத்திலுள்ள ஆலயத்திலிருந்து புறப்பட்டதையும், அவர்களுக்குத் தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த ஏழு பொற்கலசங்கள் கொடுக்கப்பட்டதையும் வெளிப்படுத்தல் 15 : 7ல் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூதனும் கிருபாசனத்தை விட்டு வெளியே வந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறான். முதலாம் தூதன் பரலோகத்தை விட்டு வந்து தன்னுடைய கலசத்திலுள்ளதைப் பூமியின் மேல் ஊற்றினான். கோபக்கலசங்கள் “தேவனுடையவை” என்று சொல்லப்பட்டதால் இது தேவனுடைய நேரிடையான நியாயத்தீர்ப்பாகிறது. தூதர்கள் தங்கள் கிரியைகளை உடனடியாகத் துவங்காமல் தாமதித்ததாலோ என்னவோ, தேவாலயத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தம் உடனடியாகக் கோபக்கலசங்களை ஊற்றும்படியாக உத்தரவிடுகிறது. ஏசாயா 66 : 6 ல் தேவாலயத்திலிருந்து சத்தம் கேட்கப்படுமென்றும், அது நமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற சத்தந்தானே” என்று கூறியிருக்கிறார். 

தேவனுடைய உக்கிரமான கோபம் பூமியின் மேல் வெள்ளத்தைப் போல் ஊற்றப்படுகிறது. எக்காள நியாயத்தீர்ப்பை விட இது கொடுமையானது. வெளிப்படுத்தின விசேஷத்தில் கெம்பீர சத்தம் (11 : 15), மகா சத்தம் (8 : 13, 10 : 3), பலத்த சத்தம் (18 : 2), மிகுந்த சத்தம் (5 : 2), சத்தங்கள் (4 : 8, 8 : 5, 10 : 4) போன்ற பலவகையான சத்தங்களை யோவான் கேட்கிறார். பூமியின்மேல் கலசத்திலுள்ளதை ஊற்றினவுடனே, அந்தி கிறிஸ்துவின் முத்திரையைத் தரித் திருக்கிறவர்களும், அதன் சொரூபத்தை வணங்குகிறவர்களாகிய மனுஷர் களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டாயிற்று. வெளிப்படுத்தல் 13 : 14 – 17 ல் அந்திகிறிஸ்துவின் சொரூபம் கள்ளத்தீர்க்கதரிசியின் முயற்சியினால் எருசலேம் தேவாலயத்திலும், மற்ற பிரதான பட்டணங்களிலிலும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும். அதை வணங்குகிற ஜனங்கள் மட்டுமே முதலாம் கோபக்கலசத்தில் பாதிக்கப்படுகிறார்கள். 

எகிப்தில் மோசே ஆரோன் மூலமாகக் கர்த்தர் கொடுத்த ஆறாவது வாதையில், எகிப்தியர்களுக்குச் சொந்தமான மிருகஜீவன்கள் மேல் மட்டும் எரிபந்தமான கொப்பளங்கள் உண்டானதை யாத்திராகமம் 9 : 8 – 12 ல் பார்க்கிறோம். அப்பொழுது எகிப்திலுள்ள இஸ்ரவேலர் ஒருவரும் பாதிக்கப் படவில்லை. ஆனால் இதில் மனிதர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். பூமி பாதிப்படையவில்லை. அந்நேரத்தில் முத்திரையைத் தரித்துக் கொள்ளாதவர்களும் கஷ்டப்பட்டார்கள். அவர்கள் முத்திரையைத் தரித்துக் கொள்ளாததால், எந்த ஒரு பொருளையும் வாங்க முடியாமல், பட்டினியால் வாடினர். ஆனால் உபத்திரவ கால முடிவிலே முத்திரையைத் தரித்து எல்லாவித வாய்ப்புகளையும் அனுபவித்தவர்கள் தேவனால் நியாயந்தீர்க்கப்படப் போகிறார்கள். மோசே இதை முன்னமே, 

உபாகமம் 28 : 27 ல் “நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.”

உபாகமம் 28 : 35 ல் “உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.”

வெளிப்படுத்தல் 14 : 9, 10 ல் “ ….மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினை யாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தி னாலும் வாதிக்கப்படுவான்.”

மேலுள்ள வசனங்கள் தேவன் எவ்வாறு வாதிப்பாரென்று கொடுக்கப்பட்டுள் ளது. மகா உபத்திரவ காலத்தில் ஏற்படும் இந்தக் கொடிய புண்களினால் ஜனங்கள் வேதனைப்பட்டாலும் அவர்கள் தேவனிடம் திரும்பவில்லை.

Related Posts