Menu Close

யோவான் சுவிசேஷ புத்தகத்தின் முன்னுரை

யோவான் என்றால் யேகோவாவின் கிருபை என்று பொருள். இவனுடைய தந்தையின் பெயர் செபதேயு. தாயின் பெயர் சலோமே. சலோமே இயேசுவுக்கு ஊழியம் செய்த உத்தமப் பெண்மணி. கர்த்தரின் சிலுவை மரண நேரத்திலும் அங்கிருந்தவள் – மாற் 15:40,41 யோவான்ஸ்நானகனின் சீடர்களில் ஒருவனாக இருந்தவன். இவனுடைய ஊர் கப்பர்நாகூம். இவனுடைய சகோதரன் பெயர் யாக்கோபு. இவன் யூத குலத்தைச் சேர்ந்தவன். இவனுடைய தொழில் மீன்பிடித்தொழில். யோவானை இயேசு அழைத்து தமது சீடனாக்கினார் – யோ 1: 19,20  இயேசு தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களில் ஒருவன். இயேசுவின் 12 சீடர்களில் பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரை மட்டுமே இயேசு தமது சிறப்புச் சூழல்களில் தம்முடன் அழைத்துச் சென்றதைப் பார்க்கலாம்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு பேதுரு, யாக்கோபுவுடன் எருசலேம் சபையின் தூண்களாகக் கருதப்பட்டவன் – கலா 2:9 அப்போஸ்தல நடபடிகளில் மூன்று இடங்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது – அப் 3 :1, 4:13, 8:14 பிற்காலத்தில் எபேசுவுக்குச் சென்று அங்குள்ள சபையில் ஊழியம் செய்தான். முதுமையில் ரோம அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு பதமூ தீவிலிருந்தான். அங்கு வைத்து வெளிப்படுத்தின புத்தகத்தை எழுதினான். இந்த சுவிசேஷம் கிறிஸ்தவர்களுக்கென்று எழுதப்பட்டது. இதில் இயேசுவை தேவகுமாரனாகவும், இஸ்ரவேலின் மேசியா என்றும் காட்டுகிறார். யோவான், வெளிப்படுத்தின விசேஷம்,  1யோவான்,  2யோவான்,  3யோவான், ஆகிய  5புத்தகங்களை தொகுத்தளித்தான். இதில்  7 பிரசங்கங்களைக் காணலாம்.

  1. புதுப்பிறப்பு, புதுஜீவன் – 3:1-21
  2. ஜீவத்தண்ணீர் – 4 :4 –42
  3. கிறிஸ்துவின் தெய்வீக குமாரத்துவம் – 5 :19 –47
  4. ஜீவஅப்பம்  6:22-59
  5. ஜீவன் தரும் ஆவி 7:37—52
  6. உலகத்தின் ஒளி – 8:12-30
  7. நல்ல மேய்ப்பன் – 10:1-21.

இதில் உள்ள  90% செய்திகள் பிற சுவிசேஷ நூல்களிலிருந்து தனித்தன்மை வாய்ந்தது. இயேசு பாவஞ்செய்யவில்லையென 8:46, 18:38, 19:4,6 ல் காணலாம். இதில் “நானே” என்ற  7 அறிக்கைகளைக் காணலாம்.  6:35, 8:12, 10:7,9  10:11,14, 11:25, 14:6, 15:1,5 தேவத்துவத்தைக் குறித்த முக்கியமான அறிக்கைகளை 1:1,  8:58, 10:30, 14:9, 20:28ல் காணலாம். யோவானை கொதிக்கும் எண்ணையில் போட்டனர். ஆனால் ஆச்சரியமான விதமாய் பிழைத்து, பின் ஆள் சஞ்சாரமற்ற பதமூ தீவிற்குக் கடத்தப்பட்டார். இவனையும் இவனுடைய சகோதரனையும் “இடிமுழக்கத்தின் மக்கள்” என்றழைத்தனர்.

யவீருவின் மகள் உயிரோடே எழுப்பப்பட்ட நேரத்திலும், இயேசு மறுரூபமடைந்த போதும், பேதுருவின் மாமியைக் குணமாக்கின போதும், தேவாலயத்தின் அழிவை முன்னறிவித்த சமயத்திலும், கெத்செமனே தோட்டத்திலும், வியாகூலமடைந்த வேளையிலும் யோவான் இயேசுடன் இருந்தவர். இவன் பிற்காலத்தில் “இயேசுக்கு அன்பாயிருந்த சீடன்” என்றழைக்கப்பட்டான் – யோ 13:23, 19:26, 20:2, 21:7, 20, 24  யூதர்கள் இயேசுவைப் பிடித்தபோது இவனும், பேதுருவும் அவர்களுக்குப் பின் சென்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட காட்சியைக் கண்ணாரக் கண்டவன். இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் கல்லரைக்கு ஓடிப்போய் அதை நிச்சயப்படுத்திக் கொண்டான்.

Related Posts