Menu Close

போஷிக்க வைக்கும் தேவ வார்த்தை

கர்த்தருக்குப் பிரியமானவர்களே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எந்த நிலமையில் இருக்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கண்ணாடியில் நிழலாட்டமாய்ப் பார்ப்பதைப் போல நம் தேவன் நம் ஒவ்வொருவரையும் கவனிக்கிறவர். இப்படிப் போஷித்த ஒரு ஏழை விதவையைப் பற்றியும், ஒரு தேவ மனிதனைப் பற்றியும் வேதாகமத்தில் கூறப்படுள்ளதைப் பார்ப்போம்.

ஆகாப் ராஜாவின் நாட்களில் எலியா தீர்க்கதரிசி அந்த வருடம் முழுவதும் அந்த நாட்டில் மழையும், பனியும் பெய்யாது எனத் தீர்க்கதரிசனம் உரைத்தார். இதைக் கேள்விப்பட்ட ஆகாப் ராஜா எலியாவைக் கொலை செய்யத் தேடினான். அப்பொழுது கர்த்தர் எலியாவிடம் யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் தங்கியிருக்கக் கட்டளையிட்டார் (1 இரா 17:34)

ஆற்றங்கரையைப் பார்த்தவுடன் இதில் தான் உண்பதற்கு உணவு இல்லையே என எலியா கலங்கியிருக்கலாம். ஆனால் தேவன் எலியாவைப் பட்டினியாய் இருக்க விடவில்லை . தாவீது சங்கீதத்தில் கூறுகிறார். “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்மாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும் , பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும் கர்த்தருடைய கண்கள் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கிறது”. (சங் 33:18,19) தேவன் எலியாவைக் காகங்களைக் கொண்டு போஷித்தார். ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் காகம் எலியாவுக்கு இறைச்சியையும், அப்பத்தையும் கொண்டு வந்து கொடுத்தது. தாகத்துக்கு கேரீத் ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். கர்த்தர் எப்படிப்பட்ட அற்புதத்தை எலியாவுக்குச் செய்தார் எனப்பாருங்கள். நாய், குரங்கு, கிளி, யானை, ஆடு போன்ற மிருகங்களை மனிதர்கள் தன்னுடைய விருப்பத்துக்குப் பழக்குவிப்பதைப் பார்க்கிறோம். ஆனால் காகமோ மனிதர்களால் பழக்குவிக்க முடியாத ஒரு பறவை. அப்படிப்பட்ட குணம் உடைய காகத்தைத் தேவன் இரண்டு வேளையும் உணவு கொண்டு வந்து கொடுப்பதற்குக் கட்டளையிட்டதைப் பார்க்கிறோம்.

நீங்களும் நாளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலையோடிருக்கலாம். என் மகளின் கல்யாணத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என்ற கலக்கத்தோடிருக்கலாம். என் பிள்ளைகளை எப்படி படிக்க வைக்கப்போகிறேன் என்ற வேதனையோடிருக்கலாம். இனி நீங்கள் கவலைப்படவோ, கலங்கவோ, வேதனைப்படவோ தேவையில்லை. கர்த்தரை உண்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள் அவர் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன தேவை என அறிந்திருக்கிறார். உங்கள் தேவைகளை அவரே சந்திப்பார். கேரீத் ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டதால் கர்த்தர் எலியாவை போஷிப்பதற்காக,

“நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கேயிருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்” (1 இரா 17:9). இதில் தேவன் இரண்டு பேரின் உள்ளங்களைப் பார்த்து அவர்களுக்கு என்ன தேவை என்றறிந்து அதற்கு உதவி செய்ததைக் காண்கிறோம். அந்த இரண்டு பேர் யாரெனில் ஒன்று எலியா, இன்னொன்று சாரிபாத் ஊரிலுள்ள ஒரு விதவை.

சாறிபாத் ஊருக்குச் சென்றவுடன் எலியா மிகவும் சோர்ந்து போயிருப்பார். ஏனெனில் அந்த ஊர் செழிப்பாக இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்பட்டது. அங்கு ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த உடனே அவளிடம் தான் தேவன் தன்னை அனுப்பியிருக்கிறார் என எலியா உணர்ந்து கொண்டார்.

அவளைப் பார்த்து எலியா குடிக்கிறதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொல்கிறார். அவள் கொண்டு வரப் போனபோது திரும்பவும் அவளைப் பார்த்து கொஞ்சம் அப்பமும் கொண்டு வா” என்கிறார் (1 இரா 17:10, 11 ) அந்த விதவையோ உடைந்து போன உள்ளத்தோடு அவருடைய அவல நிலமையையும் துக்க நிலமையையும் கூறுகிறாள். அது என்னவெனில்,

“அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணையுமல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச்செத்துப் போக அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்” (1இரா 17:12) இந்த வசனத்தில் அந்த ஏழை விதவை தன்னிடம் என்ன உள்ளது அதை என்ன பண்ணப் போகிறேன் என்று கூறுவதைப் பார்க்கிறோம். அதோடு வந்திருக்கிறவர் கர்த்தருடையவர் என அவள் அறிந்திருந்ததை “உம்முடைய தேவனாகிய கர்த்தர்” என கூறுவதிலிருந்து அறியலாம். அது மட்டுமல்ல இருக்கிற அந்த அடையைத் தேவமனிதனுக்குக் கொடுக்க முதலில் விருப்பம் இல்லை. எனவே தன்னிடத்திலில்லை என்கிறாள்.

எலியா அந்த ஏழையைப் பார்த்து “நீ நினைத்தபடியே ஆயத்தப்படுத்து ஆனாலும் ஒரு சிறிய அடையைப் பண்ணி முதலில் எனக்குக் கொடு ” உடனே கர்த்தர் அவரிடம் கூறிய வார்த்தையைக் கூறுகிறார். அந்த வார்த்தையைக் கூறா விட்டால் அந்த ஏழையிடம்தான் ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடியாது என தேவ மனிதர் அறிந்திருந்தார். அது என்ன வார்த்தை என்றால். “கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையில் மா செலவழிந்து போவதும் இல்லை ; கலசத்தில் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.” (1 இரா 17:14)

எலியாவின் வார்த்தையின் படியே அந்த விதவை முதலில் அடையைப் பண்ணி எலியாவிடம் கொடுத்தாள். கர்த்தரின் வார்த்தை அவளை விசுவாசத்திற்குள் அழைத்துச் செல்ல வைத்தது. எனவே கொடுத்தாள். கர்த்தரின் வார்த்தையின்படியே அந்த ஊரில் மழை வருகிற வரை சாறிபாத் விதவையின் வீட்டில் மாவு செலவழிந்து போகவுமில்லை. கலசத்தில் எண்ணெய் குறையவுமில்லை. நம் தேவன் எப்படிப் பட்டவரெனில், பரதேசிகளைக்கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும், விதவையையும் ஆதரிக்கிறார்;… (சங் 146:9) “விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.” (நீதி 15:25) இந்த வாக்குத்தத்தின் படி கூப்பிடாமலேயே தேவன் தன்னுடைய தாசர்களை அனுப்பி அந்த விதவையின் குடும்பத்தை எப்படிப் பஞ்சகாலம் முடியும் வரை ஆதரித்தார் என்று பார்க்கிறோம்.

நாங்களும் திக்கற்றவர்களாகத் திசை தெரியாமல் வாழ வழி தெரியாமல் இந்த பட்டணத்திற்கு வந்தோம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை கர்த்தர் தான் எங்களைப் போஷிக்கிறார். எத்தனையோ நெருக்கமான நேரத்திலும், துன்பம் சூழ்ந்து கொண்ட நிலமையிலும், பிள்ளைகளுக்குப் படிப்பதற்கு எப்படிப் பணம் கட்ட முடியும் என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலமையிலும் நாங்கள் நோக்கிப் பார்ப்பது கன்மலையான தேவனையே. நான் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறும் வசனம், “… பயப்படாதே, மகிழ்ந்து களிகூறு; கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.” (யோவே2:21) எந்த நேரமும் நான் துதித்துக் கொண்டேயிருப்பேன். என் கண்களும் என் உள்ளமும் கன்மலையான இயேசுவையே நோக்கிக் கொண்டிருக்கும். அதனால் தான்.

“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.” (சங் 34:10) என்று வாக்களித்ததைப் போல ஒருநாளும் தேவன் எங்கள் குடும்பத்தைப் பட்டினியால் வாட விட்டதில்லை. அதுமட்டுமல்ல,

“இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீக்கலாக்கி இரட்சித்தார் ” (சங் 34:6)

என்ற வாக்கின்படி எங்கள் குடும்பத்தை எல்லா இடுக்கண்களுக்கும் நீக்கலாக்கி இரட்சித்தவர் கர்த்தர். தேவ மனிதனுக்குக் கொடுத்து சாறிபாத் ஊரின் விதவை ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதைப்போல நீங்களும் ஊழியங்களுக்கும், ஊழியக்காரர்களுக்கும் தாராளமாகக் கொடுங்கள். கொடுக்க, கொடுக்க நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஒரு ஏழை விதவை போட்ட காணிக்கையை ஆண்டவர் பாராட்டியதை நாம் (லூக் 21:3)ல் காணலாம். அதே போல் நீங்களும்

“உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக்கனம் பண்ணு”… அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும். உன் ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்”. (நீதி 3:9,10)

ஆண்டவரைக் கனப்படுத்த,கனப்படுத்த உங்களை அவர் கனப்படுத்துவார். இந்த பகுதியோடு ஒரு சிறுகதையை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். நாங்கள் ஊட்டிக்குச் சென்றிருந்த பொழுது ஒரு சுற்றுலா வழிகாட்டி எங்களோடு கூட இன்னும் 5 குடும்பங்களுக்கும் வழிகாட்டிக் கொண்டே வந்தார். ஒரு சரிவு வந்த போது எங்கள் கூட்டத்தில் இருந்த ஒரு செல்வந்தன் மிகவும் பயந்தார். கீழே சறுக்கி விழுந்து விட்டால் ஒரு எலும்பும் தேறாது, என்ற மரணபயம் அவரை ஆட்கொண்டது. “நான் விழுந்து விடுவேன்” என்று அலறினார்.

அதற்கு அந்த வழிகாட்டி “ஐயா நான் 20 வருடங்களாக இந்த இடத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன் ஆயிரக்கணக்கான மக்களை சுற்றிக் காண்பித்திருக்கிறேன். ஆனால் ஒருவர் கூட என் கரத்திலிருந்து கீழே விழுந்ததில்லை என் கரங்களைப் பாருங்கள்” என்று காண்பித்தார். அந்த செல்வந்தன் அந்த வழிகாட்டியின் கரத்தைப் பார்த்த போது அவருடைய மரண பயம் அவரை விட்டு மறைந்தது.

கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் வாழ்க்கையிலும் வந்த எல்லா கசப்புகளையும், கை விடப்பட்ட நிலமையையும் கர்த்தர் அறிவார். அதுமட்டுமல்ல கர்த்தர் ஒருவரே உன்னை கை விடாதவராயிருக்கிறார். அவருடைய கரத்தை நோக்கிப் பாருங்கள். அவருடைய கரம் வழுவாமல் கடைசிவரையிலும் வழிநடத்த வல்லமையுள்ளதாய் இருக்கிறது. அவருடைய பலத்த கரத்திலிருந்து உங்களை யாரும் பறித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் நம் தேவன் நம்மை ஒவ்வொரு நாளும் நித்திய வழியிலே நடத்தி கனப்படுத்துகிறார்.

“நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை” (யோவா 10:28) என இயேசு கூறுவதைப் பார்க்கிறோம். எனவே நாம் நம்மை இயேசுவின் கரத்தில் ஒப்படைப்போம். கர்த்தர் தாமே உங்களை வழிநடத்தி கனப்படுத்துவாராக. ஆமென்.

Related Posts