Menu Close

மரியாள் இயேசுவைப் பார்த்து வடித்த கண்ணீர்: (யோவான் 20 : 1 – 18)

மகதலேனா மரியாள்:

மரியாள் என்பவள் மகதலேனா என்ற பட்டணத்தை சேர்ந்தவள். இந்தப் பட்டணம் கலிலேயா கடற்கரையின் மேற்கு கரையோரம் உள்ளது. இயேசு தன்னுடைய துவக்க கால கலிலேயா ஊழியத்தின் போது இந்த மரியாளை சந்தித்தார். இவளிடம் ஏழு கொடிய பிசாசுகள் உட்புகுந்து அவளை வேத னைப் படுத்திக்கொண்டிருந்தது. அந்தப்பிசாசின் பிடியிலிருந்து மரியாளை விடுவித்தவர் இயேசு (லூக்கா 7 : 2). அதனால் அவள் இயேசுவின் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்தாள். தன்னை விடுவித்த ஆண்டவரை முழுமனதோடு பின்பற்றினாள். அவர் சென்ற இடங்களிலெல்லாம் தானும் அவரோடு சென்றாள். தன்னுடைய நேரத்தையும், பணத்தையும் இயேசு வின் ஊழியத்திற்காகக் கொடுத்தாள். இவளைப் பற்றி வேதத்தில் 14 இடங் களில் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். இயேசுவை அநியாயமாய் குற் றம் சுமத்தி சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தபோது இயேசுவோடு இருந்தவர்களும், சீஷர்களும் பயத்தினால் ஓடிப் போனார்கள். ஆனால் இவள் ஒரு பெண்ணாக இருந்தாலும் தைரியமாக இயேசுவின் மீது தனக்கு ள்ள அன்பினால் சிலுவைமரணம், அடக்கம்வரை கூடவே சென்றாள். இயேசுவை வைக்கப்பட்ட கல்லறையையும், வைக்கப்பட்ட விதத்தையும் நேரில் சென்று பார்த்தவள் மரியாள்.

மரியாள் கல்லறையினருகில்:

யோவான் 20 : 1,2 “வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.”

மூன்றாம் நாள் வாரத்தின் முதல் நாள் மற்ற மரியாள்களுடன் இந்த மரி யாளும் கல்லறைக்குப் போனாள். இவர்கள் இயேசுவின் மீது வைத்திருந்த அன்புக்கும், தங்களின் அர்ப்பணிப்புக்கும் அடையாளமாக வாசனைத் திர வியங்களை எடுத்துக்கொண்டு இயேசுவின் சடலத்தில் போடுவதற்காகப் போனார்கள். எந்த ஆண் துணையும் இல்லாமல் அவர்கள் இருட்டோடு எழுந்து போனதிலிருந்து இவர்கள் இயேசுவின் மீது வைத்திருந்த அன் பைப் பார்க்கிறோம். இந்தச் செயல் அவர்களுடைய மன உறுதியையும், தைரியத்தையும் நமக்குக் காட்டுகிறது. அங்கு அவள் பார்த்த போது கல்ல றையை அடைத்திருந்த பெரிய கல் எடுத்துப் போட்டிருப்பதையும், இயேசு வின் சரீரம் அங்கு இல்லாததையும், காலியான கல்லறையையும் பார்த் தாள். எனவே போன அனைவரும் மிகுந்த கலக்கம் அடைந்தனர். இயேசு உயிரோடிருக்கும் போது தனது மரணம், உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசி இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர்களுக்கு அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனவே அந்த இருட்டான நேரத்திலும் உடனே அவள் தனியாக ஓடி சீமான் பேதுருவிடத்திலும் இயேசுவுக்கு அன்பாய் இருந்த சீஷனிடத்திலும் போய் கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்றும், அவரை வைத்திருக்கிற இடமும் தெரியவில்லை என்றும் அவள் பார்த்த அந்த செய்தியை அறிவித்தாள். லூக்கா24:9,10ல் இயேசுவின் சரீரம் இல்லாத செய்தியை பதினொருவருக் கும், மற்றெல்லாருக்கும் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யாக் கோபின் தாயாகிய மரியாளும் இவர்களோடிருந்த மற்ற ஸ்திரீகளுமே என்றுள்ளது. எல்லா அப்போஸ்தலர்களும் அங்கு குடியிருந்தாலும் பேதுரு வும் யோவானும் மட்டுமே கல்லறையைப் பார்க்கும்படி ஒருமித்து ஓடிய வர்கள். அதைக் கேள்விப்பட்ட சீஷர்களும் கல்லறைக்கு ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு இயேசு இல்லை என்று தெரிந்தவுடன் சீஷர்கள் அனை வரும் திரும்பிப் போய்விட்டார்கள். ஆனால் மரியாளோ சீஷர்களைப் போலத் திரும்பிப் போகாமல் கல்லறையின் அருகே நின்று மனம் கசந்து அழுது கொண்டிருந்தாள்.

மரியாளும் கல்லறைக்குள் இருந்த தூதர்களும்:

யோவான் 20 : 2, 3 “ இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.”

அப்பொழுது இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெள்ளை உடை தரித்த இரண்டு தூதர்கள் மரியாளிடம் ஏன் அழுகிறாய் என்று கேட் டனர். அதற்கு மரியாள் “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய் விட் டார்கள். அவரை வைத்த இடமும் எனக்குத் தெரியவில்லை ”என்று சொன் னாள். சீஷர்களிடம் கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்றவள், தூதனிடம் “என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்கிறாள். லூக்கா 24 : 4 ல் “பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்த இரண்டுபேர் அவர்களருகே நின்றார்கள்” என்றுள்ளது. மாற்கு 16 : 5ல் “அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனை க்கண்டு பயந்தார்கள்.” என்றுள்ளது. மரியாள் இன்னும் இயேசு உயிரோடு எழுந்து விட்டார் என்று உணரவில்லை. அவளுடைய விசுவாசம் குறைவாக உள் ளதைப் பார்க்கிறோம். “உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோ ரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்”.லூக்கா 24:5,6 ல் தூதன் சொன்னதைப் பார்க்கிறோம்.இதிலும் அவள் இயேசுவோடு வைத்திருந்த அன்பைப் பார்க்கிறோம். அந்த அன்பினால் தான் எல்லோ ரும் கல்லறையை விட்டுப் போனாலும் தான் மட்டும் தனியாக நின்று அழுது கொண்டிருந்தாள். 

மரியாளுக்கு முதல் தரிசனம்:

யோவான் 20 : 15,16,17 “இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத்தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக் காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனது ண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத் திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.”

அதே சமயத்தில் உயிர்த்தெழுந்த இயேசு தனக்குப் பின்னால் நிற்பதை அவள் அறியவில்லை. இயேசுவின் உயிரற்ற சடலத்தைக் காண வந்த மரி யாள் உயிர்த்தெழுந்த இயேசுவை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவருடைய சரீரம் மகிமை நிறைந்து காணப்பட்டிருக்கலாம். மரியாள் இயேசுவை தோட்டக்காரன் என்று தவறாக எண்ணினாள். இயேசு மரியா ளைப் பார்த்து “ஸ்திரீயே ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்” என்று இரண்டு கேள்விகளைக் கேட்டார் அப்போது கூட மரியாள் அவர் இயேசு என்று அறியாதவளாய் பார்த்தாள். இயேசு சிலுவையின் அடியில் நின்ற தன் தாயையும் ஸ்திரீயே என்றுதான் அழைத்தார் (யோவான் 19 : 26). ஸ்திரீ என்ற சொல் பெண்களை மரியாதையாக அழைப்பதாகும். “ஐயா நீர் அவரை எடுத்துக் கொண்டு போனதுண்டானால் அவரை வைத்த இட த்தை எனக்குச் சொல்லும் நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன்” என்றாள். அவளது அன்பின் ஆழத்தை இயேசு அறிந்தார். ஒரு பெண் ஒரு சடலத்தை எடுத்துக்கொண்டு போவேன் என்று துணிச்சலுடன் கூறியதை யும் பார்த்தார். 

அவளது அழுகையை ஆனந்தக் களிப்பாக மாறுவதற்காக தன்னை யார் என்று இயேசு வெளிப்படுத்தினார். “மரியாளே” என்று அழைத்தார். இந்த அழைப்பு சரியான உணர்வுக்குள் அவளைக் கொண்டு வந்தது. உடனே மரியாள் இயேசுவைப் பார்த்து “போதகரே” என்று அழைத்தாள். நல்ல மேய் ப்பன் தன்னுடைய ஆடுகளை பேர்சொல்லிக் கூப்பிடுகிறான். ஆடுகளும் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகி றது என்று யோவான்10:3,4 என்று நல்ல மேய்ப்பனான இயேசுவே கூறியி ருக்கிறார். உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது தரிசிக்கும் பாக்கியம் மகதலேனா மரியாளுக்குத்தான் கிடைத்தது என்பதை மாற்கு16 : 9 ல் பார்க்கிறோம். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை மற்றவர்களுக்கு அறிவி த்த முதல் பெண்மணி மகதலேனா மரியாள். அவள் மிகுந்த சந்தோஷம டைந்தாள். இயேசு மரியாள் தன்னைத் தவறான இடத்தில் தேடியதையும் அவளது அறியாமையையும் குறித்துக் கடிந்து கொள்ளவில்லை. தன் மீது வைத்த அளவற்ற அன்பை அறிந்து அவளுக்கு வெளிப்படுத்தினார். 

அவர் அதுவரை தன்னை அனுப்பின பிதாவிடத்திற்கு ஏறிப் போகவில்லை. அதற்கு முன்பே மகிமையடைந்த சரீரத்தோடு அவளுக்குத் தரிசனமாகி அவளோடு பேசினார். எனவே அவளிடம் “என்னைத் தொடாதே” என்றார். அவர் பரிசுத்தத்தோடு பிதாவிடம் செல்ல வேண்டுமாதலால் அவ்வாறு கூறினார். லாசரு மரித்து உயிரோடெழும்பியபின் மறுபடியும் தன்னுடைய பழைய சரீரத்தைப் பெற்றான் (யோவான்11:43,44,12:2).ஆனால் இயேசுவோ மகிமையின் சரீரத்தில் வெளிப்பட்டார். மேலும் அவளிடம் தன்னுடைய சகோதரர்களாகிய சீஷர்களிடம் தான் தன்னுடைய பிதாவினிடத்திற்கும், அவர்கள் பிதாவினிடத்திற்கும் ஏறிப்போவதாகக் கூறச் சொன்னார். அவர் சொன்னபடியே மரியாள் சீஷர்களிடம் சென்று தான் இயேசுவைக் கண்ட தையும், அவர் தன்னிடம் சொன்னவற்றையும் அறிவித்தாள். இதேபோல் நாமும் அவளைப் போலவே இன்றும் நம்மோடு கூட இருக்கும் ஆண்ட வரை மறந்து அழுகிறோம். 

நம்மையும் பார்த்து இயேசு நமக்குத் தம்மை வெளிப்படுத்தி ஏன் அழுகி றாய்? என்று கேட்பார். மரியாளின் அழுகையைக் களிப்பாய் மாற்றியவர், நம்முடைய துயரங்களையும் மாற்றுவார். மரியாளுக்குப் பிசாசின் பிடியி லிருந்து விடுதலை கொடுத்த ஆண்டவர், நமக்கும் பாவத்திலிருந்தும், கண் ணீரிலிருந்தும் விடுதலை கொடுத்து இரட்சிப்பார். மரியாள் தனக்கு விடு தலை கொடுத்த இயேசுவோடு நடந்து ஊழியம் செய்தது போல, நாமும் ஊழியம் செய்வோம். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை முதலில் சீஷர் களுக்கும், மற்றவர்களுக்கும் அறிவித்தது மரியாள். இதேபோல் நாமும் இயேசுவின் நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் அறிவிப்போம். ஆமென்.

Related Posts