கல்யாணவீடும் அழைக்கப்பட்டவர்களும்:
யோவான் 2:1,2 “மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கல்யாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்”
இந்த அற்புதம் யோவானில் மட்டுமே உள்ளது ஏனெனில் அப்பொழுது மத்தேயு இயேசுவால் அழைக்கப்படவில்லை. மாற்குவும், லூக்காவும் சீஷர்கள் இல்லாததால் அவர்கள் அந்த இடத்தில் இல்லை. ரோமர்கள் இஸ்ரவேலை கலிலேயா, சமாரியா, யூதேயா என்று 3 பகுதிகளாகப் பிரித்திருந்தனர். கலிலேயா என்பது வடக்கு எல்லையுடன் சேர்ந்த பகுதி. 60 மைல் நீளம், 30 மைல் அகலம் கொண்டது. இயேசுவின் ஊழியம் பெரும்பாலும் கலிலேயாவை மையமாகக் கொண்டதாயிருந்தது. இப்பகுதி இயேசுவின் ஊழியத்துக்கு ஏற்றதாயிருந்தது. ஏனெனில் அங்கு ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட பட்டணங்களும் ஏராளமான ஜெப ஆலயங்களும் காணப்பட்டன. கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. கானாவூர் மரியாள் வசித்து வந்த நாசரேத்துக்கு அருகே 5 மைல் தூரத்தில் உள்ளது. எனவே இயேசு தான் இருந்த பெத்தபராவிலிருந்து கானா ஊருக்கு வர மூன்று நாள் ஆகியிருக்கும் (யோவான் 1 : 28) அதனால்தான் மூன்றாம் நாள் என்று உள்ளது. இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கானாவூரில் ஏன் செய்தாரென்றால் கானாவூர் நாத்தான்வேலின் ஊர். இயேசு மிகவும் நாத்தான்வேலை நேசித்தார். அவர்கள் இருவரும் சந்தித்த முதல் சந்திப்பில் யோவான் 1 : 47 – 50 ல் நாத்தான்வேலிடம் “இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” என்று தான் சொன்ன வார்த்தையை கானாவூர் திருமண வீட்டில் காணச்செய்தார். பாலஸ்தீனாவில் திருமணவிழா மிகவும் சந்தோஷமாக ஒருவார காலம் நடக்கும். அதில் கலந்து கொள்ள ஊர் முழுவதற்கும் அழைப்பு கொடுப்பார்கள். கலந்து கொள்ள முடியாதவர்களைத் திருமண வீட்டார் அவர்களை அவமதித்ததாக நினைப்பர்.
இயேசுவும், மரியாளும், அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இயேசு அவர்களின் அழைப்பைக் கனம்பண்ணி அங்கு சென்றார். இயேசு யாராயிருந்தாலும் கனம் பண்ணுகிறவர் என்று இதிலிருந்து அறிகிறோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றபின் தன் தாயை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய மகன் கானாவூருக்கு வருவான் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு வந்திருக்கலாம். இயேசு இந்த உலகத்தில் திருமணவீட்டில் தான் முதன்முதலில் தனது ஊழியத்தை ஆரம்பித்தார். இயேசு தனது ஊழியத்தைத் தொடங்கின மூன்றாவது நாளில் இந்த அற்புதம் நடந்தது. இந்தத் திருமண விழாவில் இயேசு கலந்து கொண்டதால், திருமணம் செய்வதை இயேசு ஆதரிக்கிறவர் என்றறிகிறோம். இங்கு கூறப்பட்ட மூன்றாவது நாள் என்பது செவ்வாய் கிழமையைக் குறிக்கிறது. தேவன் உலகத்தைப் படைத்த போது, மூன்றாவது நாளான இந்த நாளை இருமுறை நல்லது என்று கண்டார்.
திருமணவீட்டில் நடந்தது:
யோவான் 2 : 3 – 5 “திராட்சைரசங் குறைவுபட்ட போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள் என்றாள்.”
யூதர்களின் கல்யாணத்தில் வருபவர்களுக்குத் திராட்சைரசம் அருந்தக் கொடுப்பது வழக்கம். ஆனால் அந்தக் கல்யாணத்தில் திராட்சைரசம் குறைவு பட்டது. இதனால் திருமணவீட்டாரின் மகிழ்ச்சி குறைகிறது. அந்த வீட்டாருக்கு வேதனை நிறைந்த காரியமாகவும், மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெருத்த அவமானமாகவும் இருந்திருக்கும். இதேபோல்தான் நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாமிருந்தும் சில விஷயங்களில் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறோம். யாரும் மரியாளிடம், இயேசுவிடம் போய் இந்தக் குறையைக் கூறச்சொல்லிச் சொல்லவில்லை. ஆனால் மரியாளாகவே இயேசுவிடம் வந்து, அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்பதை ரகசியமாகக் கூறினாள். அதனால் இந்த திருமண வீட்டார் மரியாளுக்கு உறவினராக இருந்திருக்க வேண்டும். அந்தப் பிரச்னையை இயேசுவிடம் கொண்டு சென்றால் பரிகாரம் கிடைக்கும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. எவ்வாறென்றால் தன்னுடைய மகன் உண்மையில் தேவ குமாரனாகிய மேசியா என்பதையும், அவரால் எந்த அற்புதத்தையும் அந்தக் கூட்டத்தில் செய்ய முடியுமென்பதையும் தேவதூதனின் அறிவிப்பின் அடிப்படையில் அறிந்திருந்தாள் (லூக்கா 1 : 30 – 32). மேலும் மேய்ப்பர்கள் அறிவித்தது (லூக்கா 2 : 12 – 18), அன்னாள் கூறிய தீர்க்கதரிசனத்தையும், சிமியோன் கூறிய தீர்க்கதரிசனத்தையும் கேட்டிருந்ததை நினைவு படுத்தியிருப்பாள். மரியாள் இதை யாருக்காகக் கேட்கிறாளென்றால் உள்ளேயிருக்கிற யூதர்களுக்காகக் கேட்கிறாள்.
இந்தக் கல்யாணம் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிற கல்யாணம். திருமண வீட்டாரின் பிரச்சனையை தேவ சமூகத்துக்குக் கொண்டு சென்றதோடு மரியாளுடைய வேலை முடிந்து விட்டது. மரியாள் அவ்வாறு கூறியதற்குக் காரணம் அங்குள்ளவர்களின் உள்ளத்தைக் கவருவதற்காக அல்ல. இயேசு அங்கு ஒரு அற்புதத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்ததால் தான். அந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு மரியாள் ஒரு காரணமாக இருந்திருக்கிறாள். அவள் செய்த ஞானமான செயல் இதேபோல் . அன்னாளும் தனக்குப் பிள்ளையில்லாதபோது ஞானமாக கர்த்தருடைய ஆலயத்தில் சென்றுதான் பரிகாரம் தேடினாள் (1 சாமுவேல் 1 : 9 – 11). அதற்கு இயேசு மரியாளிடம் “ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.” அந்த வார்த்தைகள் மரியாளுக்கு கடினமாக இருந்தாலும் அதை அவள் பொருட்படுத்தவில்லை. இதை இயேசு தன் தாயிடம் கோபத்தில் பேசுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேசமயத்தில் மேசியா என்ற முறையில் இனி அவர் தன்னுடைய தாயாரின் அதிகாரத்துக்குட்பட்டவர் அல்ல என்பதையும் அவள் அறிந்து கொள்ளச் செய்கிறார். ஆனால் மரியாளுடைய விசுவாசம் வேளை வந்ததை உறுதிப்படுத்தியது. இயேசு இந்த இடத்தில் தன்னுடைய தாயை ஸ்திரீயே என்று தான் அழைத்தார். இயேசு எந்த இடத்திலும் மரியாளைத் தனது தாய் என்று குறிப்பிடவேயில்லை.
இயேசு வேளை வரவில்லையென்று சொன்னதன் பொருள் இயேசு மனிதனாக பூமியிலிருந்ததால், பரலோகத்திலிருந்து இன்னும் தனக்கு உத்தரவு வரவில்லை என்பதுதான். பிதாவின் கட்டளைக்காகக் காத்திருந்தார். மேலும் திராட்சைரசம் என்பது உடன்படிக்கை. இயேசு திராட்சைரசத்தை எப்பொழுது எடுத்துக் கொடுக்க வேண்டுமென்றால் சிலுவைக்குப் போவதற்கு முன் அதைத் தன் கையால் எடுத்துக் கொடுக்க வேண்டும். அதுவரை அதை எடுக்கக் கூடாது. அதைத்தான் இயேசு வேளை வரவில்லையென்றும் கூறினார். யோவான் 13 : 1, மத்தேயு 26 : 18, லூக்கா 22 : 14 இந்த இடங்களில்தான் இயேசு வேளை வந்தது என்கிறார். இயேசு பூமியில் மனுஷ குமாரனாக வந்தாலும் 30 ஆவது வயதில் தான் ஞானஸ்நானம் பெற்றார். பின் 40 நாட்கள் உபவாசம் இருந்த பின் தான் ஊழியத்திற்கு இறங்கினார். எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டும். இதைத் தான் பிரசங்கி 3 : 1 – 8 ல் கூறுகிறார். இயேசு வேளை என்பதை யோவானில் பல இடங்களில் கூறுகிறார். யோவான் 7 : 6, 8, 30, 8 : 20, 12 : 23, 27, 13 : 1,17 : 2 மரியாளை மரியாதைக்குரிய பெண்ணாகவே இயேசு கருதினார். மரியாள் அற்புதத்தை நம்பாத தாயாக இருந்திருந்தால், திராட்சைரசம் குறைவு பட்டவுடன் கடைக்கு யாரையாவது அனுப்பிப் பொருட்களை வாங்கிவரக் கூறியிருப்பாள். அதைத் தயார் பண்ணுகிறவரை எல்லோரையும் காத்திருக்கச் சொல்லியிருப்பாள்.
ஆனால் மரியாள் அற்புதங்களைப் பார்த்தவள், உணர்ந்தவள். இயேசு பிறந்தது அற்புதம், இயேசுவைக் குறித்து வாக்குப்பண்ணியது அற்புதம். இயேசுவின் வார்த்தைகள் அற்புதம். இயேசு கண்டிப்பாக உதவி செய்வார் என்ற நம்பிக்கை மரியாளுக்கு இருந்ததால் வேலைக்காரரைப் பார்த்து, “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள் என்றாள்.” இந்த மகா பெரிய உண்மையை இயேசுவின் சீடர்களுக்கும் மரியாள் தெரிய வைத்ததைப் பார்க்கிறோம். வேதத்தில் மரியாள் கூறப்பட்டதாக கூறப்பட்ட ஒரே செய்தி இதுதான். அதுவரை யூதர்கள் மோசேயின் வார்த்தையின்படி செயல்பட்டனர். இனி இயேசு சொல்லுகிறபடி செய்யுங்கள் என்கிறாள். பழைய ஏற்பாட்டிலிலுள்ள நியாயப்பிரமாண உடன்படிக்கையை வேறு யாராலும் நிவிர்த்தி பண்ண முடியாது. அதை நிவிர்த்தி பண்ணி முடித்தவர் புதிய பிரமாணத்தில் வந்த இயேசுதான் (மத்தேயு 5 : 17). அதனால் தான் மரியாள் அவ்வாறு கூறினாள். எசேக்கியேல் 20 : 25 ல் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகள் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளென்றும், அதனுடைய நியாயங்கள் ஜீவனுக்கேதுவல்லாததென்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டுப் பிரமாணமானது கிறிஸ்துவால் துவங்கப்பட்டு நடைமுறையிலிருக்கிறது. பழைய ஏற்பாட்டிற்கும் , புதிய ஏற்பாட்டிற்கும் கிறிஸ்து ஒருவரே பாலமாக இருக்கிறார். நாம் கிறிஸ்துவினால் புதிய ஏற்பாட்டு கிருபைக்குள் வாழ்கிறோம்.
இயேசுவின் கட்டளை:
யோவான் 2 : 6 – 8 “யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீரை நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்தி விசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார். அவர்கள் கொண்டு போனார்கள்.”
யூதர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தங்கள் கை,கால்களை கழுவிவிட்டுத் தான் செல்வர் (மாற்கு 7 : 3, 4). அதற்காகக் கற்ஜாடிகளில் தண்ணீர் வைத்திருப்பர். கல்யாண வீட்டிலும் அதற்காக ஆறு கற்சாடிகள் வைக்கப்பட்டிருந்தது. அவைகள் ஒவ்வொன்றும் இரண்டு, மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாக இருந்தது. இதனால் யூதர்களுக்கு முதல் சுத்திகரிப்பு முடிந்தது. இன்னுமொரு சுத்திகரிப்பு அவர்களுக்குத் தேவை. முதல் ஞானஸ்நானம் யோவான்ஸ்நானனால் தண்ணீரில் கொடுக்கப் பட்டது. இரண்டாவதாக இயேசுவினால் அக்கினியினால் சுத்திகரிப்பு கொடுக்கப்பட்டது. இந்த இரண்டாவது சுத்திகரிப்பு யூதர்களுக்குத் தேவை. இந்தக் கற்ஜாடிகளில் ஒன்று இன்றும் கானா ஊரில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, ஜனங்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இயேசு அற்புதம் செய்வதற்கு வெறுமையான ஜாடிகளைத்தான் தெரிந்தெடுத்தார். அந்தக் காலியான கற்ஜாடிகளில் “எதுவுமில்லாமலே” இயேசு அந்த புதியரசத்தை உண்டாக்கியிருக்க முடியும். ஆனால் அவரோ அப்படிச் செய்யாமல், இயேசு வேலைக்காரர்களிடம் அந்தக் கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார்.
ஆனால் இயேசு தன்னுடைய சீஷர்களைத் தண்ணீர் நிரப்பும்படியாகக் கட்டளையிடவில்லை. இன்றும் இயேசு தாழ்மையான ஜனங்களையே தன்னுடைய உடன் ஊழியர்களாய்ப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு ஊழியக்காரர்களுக்கும் தாங்கள் இயேசுவின் வேலைக்காரர்கள் என்ற எண்ணத்துடன் ஊழியம் வேண்டும். அவ்வாறு உள்ளம் உடையவர்களின் மூலம் இயேசு அற்புதங்களைச் செய்வார். திராட்சரசம் இல்லை என்றதற்குத் தண்ணீரை நிரப்பச் சொல்லுகிறாரே என்று வேலைக்காரர்கள் நினைத்தாலும், அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இயேசு சொன்னபடியே தண்ணீரை நிறைய நிரப்பினார்கள். வேலைக்காரர்கள் நிறைய நிரப்பினார்களென்றால் அதனுடன் எதையும் கலக்கவில்லையென்று அறிகிறோம். இயேசு தான் அந்தத் தண்ணீரைத் தொடவோ, ஊற்றவோ இல்லை. நிரப்புகிற வரை பார்த்துக் கொண்டிருந்த இயேசு, அவர்களிடம் இப்பொழுது மொண்டு பந்தி விசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்று கூறினார். வேலைக்காரர்கள் தண்ணீரைத் தானே நிரப்பினோம். அதை மொண்டு கொண்டு போகச் சொல்லுகிறாரே, அதுவும் பந்தி விசாரிப்புக்காரனிடம் கொண்டு போகச் சொல்லுகிறாரே என்று நினைத்துக் கலங்கி இருக்க வேண்டும்.
ஆனால் இயேசுவிடம் அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல், இயேசு சொன்னபடியே கற்சாடியிலுள்ள தண்ணீரை மொண்டு பந்தி விசாரிப்புக் காரனிடத்தில் கொண்டு போனார்கள். அதுவரைத் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்த கற்சாடி இப்பொழுது திராட்சரசத்தைப் பார்த்தது. இயேசு உங்களுக்கு ஒரு அற்புதம் செய்ய வேண்டுமானால் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செயல்பட வேண்டும். அப்பொழுது அற்புதம் நடக்கும். லாசருவை உயிரோடு எழுப்பும் போது கல்லைப் புரட்டிப்போட இயேசு கூறினார் அவர்கள் புரட்டிப்போட்ட போது லாசரு உயிரோடு வெளியே வந்தான் (யோவான் 11 : 39, 41). இயேசு இந்த இடத்திற்கு வேலைக்காரர்களை மட்டும் தான் அழைத்துக் கொண்டு போனார். மற்ற யாரையும் அழைத்துக் கொண்டு போகவில்லை. இந்த அற்புதத்தை இயேசு யாருக்கும் தெரியாமல், யாருக்கு முன்பாகவும் செய்யாமல் வேலைக்காரர்களுக்கு மட்டும் தெரியும்படி செய்தார். இயேசு எதைச் செய்தாலும் மற்றவர்கள் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காகச் செய்வதில்லை. பிதா தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைச் செய்தார். மரியாள் நிச்சயமாக இயேசு உதவி செய்வார், குறைவை நிறைவாக்குவார், அற்புதம் நடக்கும் என்ற வைராக்கியத்துடன் காத்திருந்தாள். அவள் நினைத்தது நடந்தது.
பந்திவிசாரிப்புக்காரன் ஆச்சரியத்தில் கூறியது:
யோவான் 2 : 9 – 11 “அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்தி விசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்போது, மணவாளனை அழைத்து எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து ஜனங்கள் திருப்தியடைந்த பின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.”
ஜாடிகளில் ஊற்றப்பட்ட தண்ணீர் எப்பொழுது திராட்சை ரசமாக மாறியது என்று சொல்லப்படவில்லை. ஜாடிகளில் உள்ள அனைத்துத் தண்ணீரும் உடனடியாக ரசமாக மாறியதா அல்லது அதை மொண்டு பந்தி விசாரிப்புக்காரனிடம் கொண்டு போனபோது மாறியதா என்பதும் தெரியவில்லை. இயேசு ஜாடிகள் ஒவ்வொன்றையும் தொட்டு ஜெபம் பண்ணினார் என்றும் சொல்லப்படவில்லை. தண்ணீர் திராட்சை ரசமாக மாறவேண்டும் என்று விரும்பினார். அந்த விருப்பத்தை பிதா நிறைவேற்றினார். நாம் தேவன் கூறும் லெகுவான பகுதியைச் செய்தால் கடினமான பகுதியைத் தேவன் செய்து முடிப்பார். பந்திவிசாரிப்புக்காரன் அந்த திராட்சைரசத்தை ருசி பார்த்தான். அது முந்தின திராட்சைரசத்தை விட அதிகமான ருசியுடன் இருந்ததை அறிந்தான். அது இயேசு செய்த அற்புதம் என்று அவனுக்குத் தெரியாது. எனவே அவன் மணவாளனை அழைத்து “முதன்முதலாக நல்ல ருசியுள்ள திராட்சைரசத்தைத் தான் கொடுப்பார்கள். அவர்கள் திருப்தியடைந்த பின் ருசி குறைந்ததைக் கொடுப்பார்கள். நீரோ முதலில் ருசி குறைந்ததைக் கொடுத்துவிட்டு, இப்பொழுது ருசியுள்ள நல்ல திராட்சைரசத்தைக் கொடுக்கிறீரே” என்று கேட்டான். மணமில்லாத, சுவையில்லாத, நிறமில்லாத தண்ணீரானது இயேசுவின் வார்த்தையால் மணமுள்ள, சுவையுள்ள, நிறமுள்ள திராட்சைரசமாக மாறியது.
இது நமக்கு ஆவிக்குரிய சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. நம்மையும் இயேசு தள்ளி வைக்கப்பட்ட கற்ஜாடிகளாகப் பார்க்கிறார். ஜாடிகளில் தண்ணீரை நிரப்பியதைப் போல, நம்மையும் அவருடைய வார்த்தையினால் நிரப்ப விரும்புகிறார். தண்ணீரை மொண்டு மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அது திராட்சைரசமாய் மாறியதைப் போல, நம்மையும் வார்த்தைகளினால் நிரப்பிய பின்னர் பரிசுத்தஆவியானவர் மூலமாக அந்த வார்த்தைகளைத் தேவையுள்ளவர்களுக்கு போய்ச்சேர வைக்கிறார். அது அவர்களுக்குச் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், விடுதலையையும் கொடுக்கிறது. மணமில்லாத, ருசியில்லாத தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றியது போல, ஞானமில்லாத, படிப்பில்லாத, ஒதுக்கி வைக்கப்பட்ட நம்மையும் மற்றவர்கள் வியக்கத்தக்க அளவுக்கு உயர்த்துவார்.
இதனால் நாம் தெரிந்து கொண்டது, கிறிஸ்து செய்த அற்புதங்கள் ஏராளம். அவைகள் முக்கியமாக இரண்டு காரியங்களை நோக்கமாகக் கொண்டது. 1) அவரது மகிமையின் வெளிப்பாடு. 2) சீடர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துதல். இந்த முதலாம் அற்புதத்தில் இவைகள் இரண்டும் நிகழ்ந்தன. இந்த அற்புதத்தில் அற்பமானதைக் கொண்டு அதிசயமான காரியங்களை இயேசு செய்ததைப் பார்க்கிறோம். திருமணமானவர்கள் ஊழியத்தில் பிரவேசிக்கக் கூடாதென்று வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை. சபை ஊழியம் போன்ற சில ஊழியங்களுக்குத் திருமணம் செய்வது நல்லது. திருமணமான ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தார். திருமணமாகிக் குடும்பமாக இருந்த நோவா, ஆபிரகாம், லோத்து ஆகியோர் தேவனுடைய கண்களில் கிருபை பெற்றவர்கள். ஜாடியில் தண்ணீரை நிரப்ப வேண்டியது நமது கடமை. திராட்சைரசமாய் மாற்றுவது தேவனுடைய விருப்பம். இந்த அற்புதத்தில் தம்முடைய மகிமையை வெளிப்படுத்தி, தான் மனிதனாக வந்ததாலும் தேவனாக இருப்பதைக் காட்டினார். யோவானின் கொடுக்கப்பட்டுள்ள அற்புதங்களில் இரண்டு அற்புதங்கள் தண்ணீரோடு சம்பந்தப்பட்டது. அதில் ஒன்று இந்த அற்புதம். இவைகள் இயற்கைக்கு மாறாக செய்யப்பட்ட அற்புதங்கள். இன்று நமக்கு முன்பாக எத்தனையோ ஜாடிகள் வெறுமையாக நிற்கின்றனர். அவைகள் ஒவ்வொன்றையும் வசனத்தினால் நாம் நிரப்ப வேண்டும்.
இயேசு அனேக ஜனங்களுக்கு முன்பாக இந்த அற்புதத்தைச் செய்தார். அப்போஸ்தலர்கள் இதற்கு சாட்சி. திருமணவீட்டார் இயேசுவை அழைத்ததால், இயேசுவின் மூலம் நன்மைகளைப் பெற்றனர். இந்த அற்புதம் ஒரு பயனுள்ள அற்புதம். எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்த அற்புதம். இந்த அற்புதத்தின் மூலம் இயேசு குறைவை நிறைவாக்கினார். நம்முடைய குறைவுகளையும் இயேசு நிறைவாக்குவார். இதன் மூலம் இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று சீஷர்கள் விசுவாசம் வைத்தனர். நாமும் அதேபோல் இயேசுவைத் தேவனுடைய குமாரனாக விசுவாசிக்க வேண்டும். இயேசு தம்மிடம் வருகிறவர்களை பாவமான வாழ்க்கையிலிருந்து மாற்றி ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தகுதிப்படுத்துவார். அதேபோல் நாமும் ஒவ்வொரு நாளும் இயேசுவை நோக்கி ஜெபிக்க வேண்டும்.
இயேசு இந்த முதலாவது அற்புதத்தில் துவக்கத்திலிருந்தே, நாம் எவ்வாறு ஊழியம் செய்ய வேண்டும் என்பதை நமக்குக் கற்றுத்தருகிறார். எவ்வாறு சோம்பேறித்தனமில்லாமல் ஆறு (600லிட்டர் கொள்ளளவு) கற்ஜாடிகளில் தண்ணீரை நிரப்பினார்களோ அதே போல் மிகுந்த பிரயாசத்துடன் வேத வாக்கியங்களை நன்கு கற்றறிய வேண்டும் என்றெண்ண வேண்டும். இயேசு தன்னுடைய ஊழியத்தை சோம்பேறிகளிடம் ஒப்படைப்பதில்லை. அந்த வீட்டிலுள்ள வேலைக்காரர்களைத் தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்திட அழைத்தார். இன்றும் தாழ்மையான ஜனங்களையே இயேசு தன்னுடைய உடன் ஊழியர்களாய் பயன்படுத்துகிறார். முடிந்ததை நாம் செய்தால், நம்மால் முடியாததை கர்த்தர் செய்வார். ஆமென்.