வெளிப்படுத்தல் 2 : 7 “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்.”
ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகப் பட்டணமாக எபேசு பட்டணம் விளங்கியது. இங்குள்ள டயானா என்று அழைக்கப்படும் காம தேவதையின் ஆலயம் உலகப்புகழ் பெற்றது (அப்போஸ்தலர் 19 : 24). இந்தப் பட்டணத்திலிருந்த மிகப் பெரிய நூலகத்தில் மந்திர, தந்திரங்களைக் குறித்த ஆயிரக்கணக்கான புஸ்த கங்கள் இருந்தன (அப்போஸ்தலர் 19 : 19). விக்கிரக ஆராதனையும், பாவமும் நிறைந்த இங்கு கி. பி 55 ல் பவுல் முதல் சபையை ஸ்தாபித்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பவுல் அங்கு ஊழியம் செய்தாரென்று அப்போஸ்தலர் 18, 19 அதிகாரங்கள் தெரிவிக்கின்றன. யோவானும், தீமோத்தேயுவும் இங்கு கண்காளி களாக இருந்தனர். யோவானுடைய கல்லறை இங்கு தான் உள்ளது. கடிதங்கள் ஒவ்வொரு சபைகளுக்காகப் பெயர் எழுதி அனுப்பப்பட்டாலும், செய்திகள் சபை அனைத்துக்கும் பொதுவானவை. எல்லோருடைய பலத்தையும், பெலவீனத் தையும் இயேசு அறிகிறார். ஒவ்வொரு சபையின் தனித்தன்மையும் செயல் முறையும் தொடக்கத்திலேயே நினைவு படுத்தப்படுகிறது. இந்த சபையின் தூதனுக்கு இயேசு தன்னை ஏழு நட்சந்திரங்களைத் தன் கையில் ஏந்தினவரா கவும், ஏழு போன் குத்து விளக்குகளின் நடுவில் உலாவி வருகிறவாகவும் அறிமுகப்படுத்துகிறார்.
லேவியராகமம் 26 : 12 ல் கர்த்தர் “நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.” என்றார்.
இயேசு மத்தேயு 18 : 20 ல் “ ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று வாக்களித்தார்.
சபையின் ஆவிக்குரிய வளர்ச்சியைக் கண்காணிக்கும்படியாக இயேசுவானவர் சபை நடுவே காணப்படுகிறார். எபேசு சபையில் பல மெச்சத்தக்க விஷயங்கள் இருந்தன. எபேசு சபையினரின் மிகவும் சிறப்பான கிரியைகளையும், ஊழியத்தில் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும், விசுவாசிகளின் பொறுமை யையும், அவர்கள் பொல்லாதவர்களை ஏற்றுக்கொள்ளாததையும், போலி ஊழி யர்களை அவர்கள் இனம் கண்டு கொண்டதையும் இயேசு பாராட்டுகிறார். 50000 வெள்ளிக்காசு விலையுள்ள மாயவித்தைக்காரரின் புஸ்தகங்களை சபை அழித்துப் போட்டது (அப்போஸ்தலர் 19 : 19). ஆனாலும் ஆதியில் அவர்கள் கொண்டிருந்த அன்பு இல்லையென்று குற்றம் சாட்டுகிறார். விசுவாசிகள் இரட்சி க்கப்பட்டவுடன் மிகவும் அன்பு செலுத்துவார்கள் ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த அன்பு குறைந்து போகிறது அதைத் தேவன் எதிர்பார்க்கிறார். எபேசு சபை கட்டப்பட வேண்டுமென்பதற்காக இயேசு வெளிப்படுத்தல் 2 : 5 ல் மூன்று ஆலோசனைகளைத் தருகிறார். அவைகள் என்னவென்றால் 1. ஆதிநிலையை நினைக்க வேண்டுமென்றும், 2. மனந்திரும்ப வேண்டுமென்றும், 3. ஆதியில் செய்த கிரியைகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார். இந்த ஆலோசனை நமக்கும் பொருந்தும். மேலே கூறப்பட்ட வசனம் எபேசு சபையாருக்குக் கூறப்பட்டது.
சபையில் மீண்டும் அன்பு உருவாகாத பட்சத்தில் சபையின் விளக்குத்தண்டு அகற்றப்படுமென்று எச்சரிக்கிறார். விளக்குத்தண்டு இல்லாத விளக்கு வெளிச்சத்தைத் தரமுடியாது. அன்பற்ற சபை இயேசுவைப் பிரதிபலிக்க முடியாது. எபேசுவைப் பொறுத்தவரை அந்த சபையின் விளக்குத்தண்டு நீக்கப்பட்டது. எபேசு பட்டணம் இருந்த இடத்தில் அயசலுக் என்ற பாழடைந்த குக்கிராமம் காணப்படுகிறது. அங்கு ஒரு கிறிஸ்தவன் கூடக் காணப்படவில்லை. வெளிப்படுத்தல் 2 : 1 லிருந்து 2 : 7 வரை அவர்களுக்காகப் பேசிய வார்த்தைகள். நிருபங்கள் குறிப்பிட்ட ஒரு சபையின் தூதனுக்கு எழுதப்பட்டாலும், அவைகள் எல்லா சபைகளிலுமுள்ள சகல விசுவாசிகளும் அறிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்ற அறிவிப்பு ஏழு நிருபங்களிலும் காணப்படுகிறது. யோவா னுடன் பத்மூ தீவில் பேசிக்கொண்டிருப்பது இயேசு தான் என்றாலும், சபையின் காலத்தில் பரிசுத்த ஆவியானவர் மூலமாக மட்டுமே இடைபடுகிறார் என்பதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்” என்ற அறிக்கை இயேசுவிடமிருந்து பலமுறை வெளிப்படுவதை மத்தேயு 11 : 15, 13 : 9, 43, மாற்கு 4 : 9, 23, லூக்கா நாலு 8 : 8, 14 : 35 ல் காணலாம். காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சொல்லும்போது, ஆவிக்குரிய காதுள்ளவன் கேட்பானாக என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஏழு நிருபங்களில் ஜெயம் கொள்கிறவர்களுக்கு தேவனிடமிருந்து ஆசீர்வாதங்கள் வாக்களிக்கப் படுகின்றன. ஆதி அன்பை நினைத்து மனம் திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைப் புதுப்பித்துக் கொண்டவர்களே எபேசு சபையில் ஜெயம் கொண்டவர்கள் ஆகிறார்கள். ஆவிக்குரிய வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் (எபேசியர் 6 : 12), அதில் கலந்து கொண்டால் மட்டும் போதாது, ஜெயம் கொள்ள வேண்டும். சாத்தான் (காணக் கூடாத சத்துரு), உலகம் (நமக்கு புறம்பே நிற்கும் சத்துரு), மாமிசம் (நமக்கு உள்ளே இருக்கும் சத்துரு) ஆகிய மூன்று விரோதிகளை சபை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு ஜெயம் கொள்கிறவர்கள் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருஷத்தின் கனியை ருசிக்கும் படி தருவதாக இயேசு கூறுகிறார். ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாமுக்கென்று ஜீவவிருட்சத்தை முளைக்கப் பண் ணினார் (ஆதியாகமம் 2 : 9). கர்த்தர் அதன் கனியைப் புசிக்க அனுமதிக்காததால் அதற்குப் போகிற வழி அடைக்கப்பட்டது (ஆதியாகமம் 3 : 24). இந்த நிகழ்ச்சிக்குப் பின் இந்த விருஷத்தைப் பற்றி வேதத்தின் கடைசி புத்தகத்தில் தான் வாசிக்கிறோம்.
வெளிப்படுத்தல் 22 : 2ல் “நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.”
என்று அந்த விருட்சத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பரதீசு என்பது மனிதன் சுகமாகவும், பத்திரமாகவும், சகல வசதிகளோடும், மன மகிழ்ச்சியோடும், நித்திய நித்தியமாக வாசம் செய்யும்படியாக தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்ட இடமாகும். இதைக் குறித்து வேதத்தில் மூன்று இடங்களில் சொல்லப்படுகிறது (வெளிப்படுத்தல் 2 : 7, லூக்கா 23 : 43, 2 கொரிந்தியர் 12 : 3). எபேசு சபையின் தூதனிடம் இயேசு ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்று வாக்களிக்கிறார். புதிய எருசலேமில் வாசமாயிருப்பவர்கள் எல்லோரும் ஜெயங்கொண்ட பரிசுத்தவான்கள். ஆதாமின் பாவத்தின் விளைவாக மறுக்கப்பட்ட கனிகள், புதிய நகரமாகிய எருசலேமில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதிலிருந்து ஜெயங் கொண்டவர்கள் உலகத்தில் புசிக்க முடியாத ஜீவவிருஷத்தின் கனியைப் பரலோகத்தில் புசிப்பார்கள். அதன் இலைகள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று,
வெளிப்படுத்தல் 22 : 14 ல் “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களா வதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.”
என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எசேக்கியேலுக்குக் காண்பித்த தரிசனத்தில்,
எசேக்கியேல் 47 : 12 “ நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.”
என்று காட்டியிருப்பதைப் பார்க்கிறோம். தேவனுடைய சபையிலுள்ள ஜெயம் கொண்டவர்கள் மட்டுமே ஜீவவிருட்சத்தின் கனியை உண்டு இரண்டாம் மரணத்தினால் சேதப்படாதிருப்பான். அவன் மறைவான மன்னாவைப் பெறுவதுடன், புதிய நாமத்தையும் பரலோகில் அடைவான். ஆயிர வருட அரசாட்சியில் நாமும் ஜெயங் கொண்டவர்களாக அங்கு செல்லும் போது அதைப் பார்ப்போம். ஆமென்.