இயேசு எளிமையாக பரலோகத்தின் இரகசியங்களை கதையின் மூலமாகவும், இயற்கையிலுள்ள பாடங்கள் மூலமாகவும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக உவமைகள் மூலம் பேசினார். இயேசுவானவர் தேவராஜ்ஜியத்தின் இரகசியங்களை நாம் புரிந்து கொள்ளும்படி பூலோக உதாரணங்களைக்கூறி விவரித்தார். இயேசு தம்மையும் வெளிப்படுத்தி தம்முடைய செய்தியையும் வெளிப்படுத்தினார். அவரை அறிந்து கொள்வோர் எவரும் அவரின் செய்திகளையும், அவரது செயல்களையும் புரிந்து கொள்வர். சத்தியத்தைத் தாகத்தோடு தேடுகிறவர்களுக்கு மட்டுமே இந்த உவமையின் பொருள்கள் புரியும். மற்றவர்களுக்கு வெறும் கதைப்பகுதி போன்று தெரியும். நாம் நினையாத நாழிகையில் மனுஷகுமாரனாகிய இயேசு வரப்போகிறார். நாமும் ஆயத்தமாக இருக்க வேண்டும். இஸ்ரவேல் மக்களுக்காக இரண்டாம் வருகைக்குப் பின் பூமியில் அவருடைய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்போவதைக் குறித்துக் கூறப்படுகிறது. இயேசுவின் வருகையைப் பொறுத்தமட்டில் நமது பொறுப்பை உணர்த்தும் அற்புதமான உவமை.
இயேசுவின் வருகைகள்:
இந்த உவமை இயேசுவின் இரகசிய வருகையைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையில் மூன்று விதம் உள்ளது. பழைய ஏற்பாடு முழுவதும் இயேசுவின் முதல் வருகையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர் இரட்சகராய்ப் பிறந்து, ஊழியம் செய்து, காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிலுவையில் தன் ஜீவனைக் கொடுத்து, பாதாளம் சென்று, உயிர்த்தெழுந்து, பரமேறி பிதாவின் வலதுபாரிசத்தில் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை விளக்குகிறது. ஆதியாகமம் 3 : 15ல் ஸ்திரீயின் வித்தாக வருவார் என்றும், மோசேயைப் போல தீர்க்கதரிசியாக வருவார் என்றும், ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு விதமாகக் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் இரகசிய வருகையில் மணவாளனாக, மணவாட்டியாகிய சபைக்காக வருகிறார் சபையை மத்திய ஆகாயத்தில் அழைத்துச் செல்லப் போவதற்காக வருகிறார். மூன்றாவது பகிரங்கமாக வருவார். இதில் வெள்ளை சிங்காசனத்தில் உட்கார்ந்து நியாயாதிபதியாக இருப்பார். அவரை அறியாத ஜனங்கள் தேவனற்ற இடத்திற்கு அனுப்பக் கூடிய காரியம் இங்கு நடைபெறும்.
இயேசுவுக்காய் காத்திருக்க வேண்டிய முறை:
லூக்கா 12 : 35 “உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,”
பொதுவாக ஒரு நபர் வருகிறார் என்றால் அந்த நேரத்தை அவர்கள் அறிவித்திருப்பார்கள், அதற்காக காத்திருப்பார்கள். ஆனால் இயேசுவோ இந்த வருடம், இந்த மாதம், இந்த நாள், இந்த மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறவில்லை. நாம் அதற்காக ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு ஆயத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். இயேசுவானவர் வரும்போது உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மணவாளன் இயேசு வரும்போது மணவாட்டியாகிய சபையார் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள், விசுவாசிகள் அரைகள் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறார். அரைகள் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்றால் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பதாகும். இயேசு நடுவானில் விசுவாசிகளை எடுத்துக்கொள்ளும்படியாக எப்பொழுது வருவாரென்று தெரியாததால் அவர் வரும் போது இரட்சிப்பின் வஸ்திரத்தைத் தரித்தவர்களாக அவருக்காகச் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறவர்களாக அவருடைய வருகையை எதிர்பார்க்கிறவர்களாக காத்திருக்க வேண்டும். அதாவது சத்தியத்தை அறிந்தவர்களாக, கட்டப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இரட்சிக்கப் பட்டால் மட்டும் போதாது. நாம் சத்தியத்தை அறிந்து, அதில் நிலைத்திருக்கிறவர்களாய், அதைப் பின்பற்றுகிறவர்களாய், சத்தியத்தை மற்றவர்களுக்கு போதிக்கிறவர்களாய் இருக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் இரட்சிக்கப்பட்ட பின்பு சத்தியத்தில் ஒரு தளர்வு வரக்கூடாது. யாருக்காகவும் சத்தியத்தை விட்டுக்கொடுக்கவோ, தடுமாற்றம் அடையவோ கூடாது என்பதைத்தான் அறைகள் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நம்முடைய ஆவியை வளர்ப்பது சத்தியம்.
விளக்குகள் எறியப்பட வேண்டுமென்கிறார். பத்து கன்னிகைகள் உவமையில் இதைப் பார்க்கிறோம். அதில் விளக்கு அணைந்து விட்டதால் புத்தியுள்ள 5 பேரிடம் எண்ணை இருந்ததால் அதை ஆயத்தப்படுத்தி மணவாளனோடு விருந்துக்கு உள்ளே போய் விட்டனர். மற்ற 5 பேர் போகவில்லை. காரணம் அவர்களின் விளக்குகள் எரியவில்லை. விளக்கு என்பது இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளைக் குறிக்கிறது. வெளிச்சம் என்பது இயேசுவைக் குறிக்கிறது. எண்ணை என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. நாம் விளக்காய் இருந்தால் மட்டும் போதாது அந்த விளக்குகள் எரிகிறதாகவும் இருக்க வேண்டும். இயேசுவையும் அவர் மூலமாக நாம் பெற்ற இரட்சிப்பையும் விட்டு விலகாமல், பின் மாற்றமடையாமல் ஆவியானவரின் சித்தத்தின்படி நடக்கிறவர்கள்தான் எப்பொழுதும் எரிகிறவர்களாக இருக்க முடியும். நம்மை எரிகிற விளக்குகளாக தேவன் தெரிந்தெடுத்திருக்கிறார். யோவான்ஸ்நானகனைப் பற்றிக் கூறும் பொழுது இயேசுவானவர் “அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான் என்றும், நீங்களும் அவருடைய வெளிச்சத்தில் சிலநாள் குளிர்காய்ந்தீர்கள்” என்றும் கூறினார். நாம் தேவனுடைய பிள்ளையாக மாறி, ஞானஸ்நானம் எடுத்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, அந்நியபாஷை பேசினாலும் ஆவியானவரின் சத்தத்தைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் தான் எரிகிறவர்கள். அபிஷேகம் பெற்றவர்கள் ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய ஜெப வாழ்க்கை எவ்வாறிருக்கிறதென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
விழித்திருங்கள்:
லூக்கா 12 : 36, 37 “தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.”
“எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரை கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
கடைசி நாட்களில் சம்பவிப்பவைகள் இன்னதென்று இயேசு ஏற்கனேவே நமக்கு எச்சரித்து உபதேசித்திருக்கிறபடியால் கடைசி நாட்களைக் குறித்த அறிவு நம்மெல்லோருக்கும் இருக்க வேண்டும். அவர் கூறிய அடையாளங்கள் சம்பவிக்கும் காலங்களைக் கணித்து நாம் விழித்திருப்பதோடு தேவனை அறியாத இவ்வுலகத்தாரையும் கர்த்தரின் வருகைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். ஐசுவரிய மயக்கத்தினாலும், லௌகீகத் கவலைகளினாலும் பெருந்திண்டியினாலும் நமது இருதயம் வலுவிப் போகாதபடி கடைசி நாட்களைக் குறித்துக் கவனமாயிருந்து ஆயத்தமாவோம். இதைத்தான் பவுல் எவைகளைத் தரித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், எவைகளில் நிலை கொண்டிருக்க வேண்டுமென்றும் அறிவுரை கூறியதை,
ரோமர் 13 : 12, 13, 14லும் “இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.”
“களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.”
“துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.”
1தீமோத்தேயு 4 : 16லும் “உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”
காணலாம். ஏனென்றால் எஜமான் வந்தவுடனே கதவைத் திறக்க ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பாதை இயேசு தனக்கு ஒப்புமைப் படுத்திக் கூறியுள்ளார். விழித்திருங்கள் என்றால் ஆயத்தமாயிருக்க வேண்டுமென்பதுதான். ஆயத்தமாயிருக்கிற ஊழியக்காரன் பாக்கியவான். இதில் கூறப்பட்ட வீடு என்பது உலகம். எஜமான் தூரதேசத்திற்குப் போயிருக்கிறார். அவர் வரும்போது அவரை வரவேற்க ஆயத்தமாக இருக்க வேண்டும். தேவனுடைய தோட்டத்தில் பணிவிடை செய்ய நாமனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். தாலந்து உவமையில் தூரதேசம் போய்விட்டு வந்த எஜமான், தன்னுடைய ஊழியக்காரர்களிடம் கணக்குக் கேட்டதைப் பார்க்கிறோம். ஆனால் இதில் ஊழியக்காரர்கள் தூரதேசத்திலிருந்து வரப்போகிற எஜமானை வரவேற்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்கிறார். அதென்னவென்றால் தேவன் நமக்குக் கொடுத்த பணிகளை உண்மையும் உத்தமுமாக, அவருடைய சித்தத்தின்படி செய்து, அவர் எப்பொழுது வருவாரென்று காத்திருக்க வேண்டும். நாம் இப்பொழுது அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். ஆனால் அவர் நம்மைச் சேர்த்துக்கொள்ள வரும்போது அவர் மணவாளனாகவும், நாம் அவரது மணவாட்டியாகவும் சேர்த்துக் கொள்ளப்படப்போகிறோம்.
மத்தேயு 20 : 28 “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.”
இயேசுவானவர் பூமிக்கு வந்தபோது நம்மைக் கரைதிரையற்றவர்களாக நம்மைக் கழுவி சுத்தப்படுத்தும்படியாக தமக்குப் பிரியமான மணவாட்டியாக நம்மைச் சேர்க்கும்படியாகவும் தம்முடைய ஜீவனைக் கொடுக்கும்படியாகவும் வந்தார் (எபேசியர் 5 : 26 – 28). நாம் அவருக்காகக் காத்திருக்கிற அவருடைய வேலைகளை முழுமையாகச் செய்து அவருடைய வருகைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் மணவாட்டியாக இருக்க வேண்டும். அவர் வந்த பின் அரை கட்டிக்கொண்டு அவருக்காகக் காத்திருக்கிறவர்களைப் பந்தியிருக்கச் செய்து அவர்களுக்கு ஊழியம் செய்வாரென்று உண்மையாகச் சொல்கிறார். அப்பொழுது அங்கு சென்றவர்கள் எவ்வாறிருப்பார்களென்றால்,
வெளிப்படுத்தல் 7 : 15 – 17 “ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.”
“இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.”
“சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.”
நமக்காக இயேசு அங்கு எல்லாவற்றையும் செய்கிறார்.
ஆயத்தமாயிருங்கள்:
லூக்கா 12 : 38 – 40 “அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.”
“திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.”
“அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.”
ரோமர்கள் நேரத்தை ஜாமம் என்ற கணக்கில் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை முதல் ஜாமமென்றும் 9 – 12 இரண்டாம் ஜாமம் என்றும் 12 – 3 மூன்றாம் ஜாமமென்றும், 3 – 6 நான்காம் ஜாமமென்றும் கூறுவர். யூதர்கள் ஜாமத்தை 3 பகுதிகளாகப் பிரித்தனர். மாலை 6 – 10 முத்லஜாமமென்றும், 10 – 2 இரண்டாம் ஜாமமென்றும், 2 – 6 மூன்றாம் ஜனமென்றும் என்றும் கணக்கிடுவர். யூத கணக்காகிய 10 – 2 அல்லது 2 – 6ல் தான் வருவார். அவ்வாறு இயேசு வரும்போது அவரைக் காண்கிற ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள் என்கிறார். திருடன் எந்த நேரத்தில் திருட வருவான் என்று எஜமானுக்குத் தெரிந்தால் தன் வீட்டை கொள்ளையிட விடமாட்டான். இயேசுவோ திருடுவதற்கு வருவதில்லை. நம்மைக் கூட்டிப்போக வருகிறார். எதிர்பாராத நேரத்தில் இயேசுவின் வருகை இருக்கப்போவதால், நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறபடியால் மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல் தெளிந்த புத்தியுடன் விழித்திருப்போம் (1தெசலோனிக்கேயர் 5 : 5, 6). வெளிப்படுத்தல் 16 : 15ல் தான் திருடனைப்போல வரப்போவதாகவும் நம்முடைய மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடக்காமல், நம்முடைய வஸ்திரங்களைக் காத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்களென்றும் கூறியிருக்கிறார்.
இயேசு நமக்காய் வந்தார், நமக்காய் வாழ்ந்தார், நமக்காய் மரித்தார், நமக்காய் உயிர்த்தார், நமக்காய் பரமேறினார். நமக்காய் திரும்பவும் வரப்போகிறார். அவர் அன்புள்ளவராய் முதன்முறை வந்ததைப்போல அப்படியே இரண்டாம் முறையும் அன்புள்ளவராய் நம்மை அவரிடம் சேர்த்துக்கொள்ள நினையாத நேரத்தில் வருவார். அதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அது தேவபக்திக்குரிய இரகசியம். இதை தேவ பக்தர்களே அறிந்துகொள்ள முடியும். இயேசு,
லூக்கா 9 : 23 – 26 “பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.”
“தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.”
“மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?”
“என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.”
இந்த வேத பகுதியில் கூறியதைப் போல நம்முடைய சிலுவையை எடுத்துக்கொண்டு, அவர் திரும்ப எப்பொழுது வருவார் என்று ஆவலோடு அனுதினமும் காத்திருந்து அவர் வரும்போது அவரோடு இணைந்துகொள்ளும்படி நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோமாக.
கருத்து:
நாம் ஒவ்வொருவரும் இயேசுவை நேசிக்கிறவர்களாய், அவரை சேவிக்கிறவர்களாய் சத்தியத்தில் நடக்கிறவர்களாய், ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கிறவர்களாய் இயேசுவின் வருகைக்காக விழித்திருக்க வேண்டும். அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். இது ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானதாகும். என்றைக்கும் விசுவாசிகள் விழிப்போடும், ஜாக்கிரதையோடும், எச்சரிக்கையோடும், நம்பிக்கையோடும் கர்த்தருடைய பிள்ளைகளானதால் அவருடைய மகிமையான பிரசன்னமாக்குதலுக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இது ஒவ்வொரு விசுவாசிக்கும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பாயிருக்கிறது.