இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக வேதத்தில் பார்க்கிறோம். இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது. இதை லூக்கா 11 : 5 – 13ல் பார்க்கலாம். இயேசு ஒருநாள் ஜெபித்து முடித்தவுடன் சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி யோவான் தன்னுடைய சீஷருக்குக் ஜெபம் பண்ணைக் கற்றுக் கொடுத்தது போல எங்களுக்கும் ஜெபம் பண்ணைக் கற்றுத்தரக் கேட்டனர் (லூக்கா 11 : 1). அவர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்த பின் இந்த உவமையைக் கூறினார். தனக்காக எவ்வாறு ஜெபிக்க வேண்டுமென்று கற்றுக் கொடுத்த இயேசு, பிறருக்காக எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்காக இதைக் கூறினார்.
நண்பனுக்காகக் கடன் கேட்டவன்:
லூக்கா 11 : 5, 6 “பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,”
“என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.”
ஜெபத்தை வலியுறுத்த இயேசு இந்த உவமையைக் கூறினார். இதில் கூறப்பட்ட “உங்களில் ஒருவன்” என்பது பிள்ளைகளாகிய நம்மைக் குறிக்கிறது. சிநேகிதர் யாரென்றால் இயேசு கற்பிக்கிறவைகளைச் செய்கிறவர்கள். ஒருவன் தன் சினேகிதனின் வீட்டுக்குப் பாதி ராத்திரியிலே போகிறான். ஏனெனில் அவன் வீட்டுக்கு இன்னும் ஒரு சிநேகிதனாகிய விருந்தாளி வந்திருக்கிறான். ஆனால் அவனிடம் அவனுக்குக் கொடுக்க உணவு இல்லாததால், தன் சிநேகிதனுடைய வீட்டுக்குப் பாதி ராத்திரியில் போய் அப்பம் கேட்கலாமென்று போகிறான். ஆனால் இவன் பொய் சொல்லவில்லை உண்மையிலேயே அவன் வீட்டுக்கு வந்த நண்பனுக்குக் கொடுக்க ஒன்றுமில்லாததால் கேட்கிறான். மேலும் அவன் தேவையான மூன்று அப்பங்களை மட்டுமே கேட்கிறான். நாம் ஜெபத்தில் அனேக தடவை தேவையில்லாததை எல்லாம் கேட்கிறோம். அத்தியாவசியத்திற்காகத்தான் நண்பனிடம் கேட்கிறான். என்ன தப்பு பண்ணுகிறான் என்றால் கடனாகப் கேட்கிறான். யூதர்கள் கடன் வாங்கவே மாட்டார்கள். யூதர்களின் மரபு அப்பங்களை ஒருவன் கேட்டால் கண்டிப்பாக அவனுக்குக் கொடுக்க வேண்டும்.
நண்பனின் பதிலும், செயலும்:
லூக்கா 11 : 7, 8 “வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.”
“பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
கடன் கேட்டு வந்த அந்த நண்பனிடம் என்னைத் தொந்தறவு செய்யாதே என்று கூறி, தன்னுடைய பிள்ளைகள் தன்னோடு கூடப் படுத்திருப்பதால் அவர்களுக்குத் தொந்தரவு ஆகிவிடும் எனவே தர முடியாது என்கிறான். இவன் நண்பன் என்ற உரிமையோடு கேட்டிருக்க வேண்டும். ஆனால் இவன் உரிமையோடு கேட்காமல் வருந்திக் கேட்கிறான். வேதத்தில் வேறு எங்கும் அப்பத்தைக் கடனாகக் கேட்டதாகக் கொடுக்கப்படவில்லை. இவன் தன்னுடைய நண்பன் கொடுப்பானோ, கொடுக்க மாட்டானோ என்ற சந்தேகத்தில் இருப்பதால் அவனிடம் கடனாகக் கேட்கிறான், அது தவறு. இரண்டாவது கேட்பது நண்பனிடமாதலால் அதை உரிமையோடு கேட்டிருக்கவேண்டும் அவன் அவ்வாறு கேட்கவில்லை, அது தவறு. அந்த நண்பன் கடனாகக் கேட்டதால் கொடுக்கவில்லை. வருந்திக் கேட்டதால்தான் கொடுக்கிறான். ஒரு கிரேக்க ஸ்திரீ புறஜாதியானவள் அவள் தன்னுடைய மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிட இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் வருந்திக் கேட்டதால் இயேசு அவளுடைய மகளுக்கு சுகம் கொடுத்தார். இதே போல் அநேகர் ஜெபத்தில் தேவனிடம் கேட்கிறார்கள் (மாற்கு 7 : 26 — 29). ஆனால் நாம் கேட்பதை தேவன் கொடுப்பாரோ இல்லையோ என்று சந்தேகம் கொள்கிறார்கள். தேவன் எனக்குக் கொடுக்கிற மாதிரி தெரியவில்லை என்று நினைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் கேட்கிறதைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
இயேசு கூறியது:
லூக்கா 11 : 9, 10 “மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்டும்.”
“ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.”
வேதம் என்ன கூறுகிறதென்றால் கேட்டதைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள் என்கிறது. விசுவாசத்துடன் ஜெபத்தில் கேட்கும் போது அதைப் பெற்றுக் கொள்வீர்களென்று இயேசு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். தேவனிடம் பெற்றுக்கொள்ளும்வரை கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள் என்பது, தேவனைக் கண்டடைகிறது வரை தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படுமென்பது நாம் கேட்பது கிடைக்கும் வரை தட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். நீங்கள் கடன் கொடுப்பீர்கள், கடன் வாங்க மாட்டீர்கள் என்றும் வாக்களித்திருக்கிறார். ஒரு மனுஷனே வருந்திக் கேட்கும்போது கொடுத்தால், நீங்கள் உரிமையோடு கேட்கும்போது கொடுப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் வேண்டாம். நாம் அடிமைகள் அல்ல, தேவனின் பிள்ளைகள். பிள்ளைகளானால் தேவனுடைய அனைத்துக்கும் நாம் சுதந்தரராக இருக்கிறோம். தேவனுடைய சமூகத்திற்குப் போகும்போது அப்பா என்கிற உரிமையில் போய் அமர்ந்து உரிமையோடு, இயேசுவின் சித்தத்தின்படி இயேசுவிடம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கும் போது நிச்சயமாக கேட்பது கிடைக்கும்.
லூக்கா 11 : 11 – 13 “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?”
“அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?”
“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.”
ஒரு தகப்பனிடத்தில் போய் அப்பம் கேட்ட மகனுக்கு கல்லைக் கொடுக்க மாட்டானென்றும், அவன் மீனைக் கேட்கும் போது அவனுக்குப் பாம்பைக் கொடுக்கமாட்டானென்றும், முட்டையைக் கேட்டாலும் தேளைக் கொடுக்க மாட்டானென்றும் இயேசு கூறியிருப்பதைப் பார்க்கிறோம். முதலில் சோதனைகாரன் இயேசுவைச் சோதிப்பதற்காக “நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும்” என்று கூறினான். ஏனெனில் இயேசு அந்த நேரத்தில் 40 நாட்கள் இரவும், பகலும் உபவாசமிருந்திருந்தார். எனவே அவருக்குப் பசியுண்டாயிற்று. அதையறிந்த சாத்தான் அந்த கேள்வியைக் கேட்டான். அப்போதுதான் இயேசு ஞானஸ்நானம் பெற்றுக் கரையேறி இருக்கிறார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது. இவர் என்னுடைய நேசகுமாரன் என்று பிதா கூறியிருக்கிறார். ஆனாலும் சாத்தான் இயேசுவை சோதித்துப் பார்ப்பதைப் பார்க்கிறோம். இயேசு வார்த்தையினால் அவனை ஜெயித்தார். கர்த்தர் நல்லவர் என்பதற்கு மாறாக எந்த உணர்வும் நம்மிடம் இருக்கக் கூடாது.
கருத்து:
ரோமர் 13 : 12ல் “ இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.”
இராக்காலம் என்பது பாவம் நிறைந்த உலகத்தில் ஜீவிப்பதைக் காட்டுகிறது. இரவு சென்று போயிற்று. கிருபையின் காலம் வந்தாயிற்று இந்தக் காலத்தில்தான் பரிசுத்தத்திற்காக நாம் எழும்பிப் பிரகாசிக்க வேண்டும். இது ஒரு எதிர்மறையான உவமை. தேவன் தூங்குவதில்லை. நமது ஜெபத்திற்கான பதிலை அவர் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார், ஜெபத்திற்கான பதிலை தேவன் கண்டிப்பாகக் கொடுப்பார். முதல் நண்பன் மனிதனைக் காட்டுகிறது. இரண்டாவது நண்பன் இயேசுவைக் காட்டுகிறது. அந்த மூன்று அப்பமென்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. “நான் போகாதிருந்தேனானால் தேற்றரவாளன் வரார்” என்று சீஷர்களிடத்தில் அதைத்தான் இயேசு கூறினார். இயேசு போய் பரிசுத்த ஆவியானவரை அனுப்பியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவருக்கு மூன்று அப்பங்கள் என்ற பெயரும் இருக்கிறது. 1. புளித்த மாவு 2. அக்கினி 3. புறா. இப்படி பல பெயர்கள் ஆவியானவருக்கு உண்டு. பரிசுத்த ஆவியை ஒரு மனிதன் பெறும் போது அவனது ஆவி ஆத்துமா சரீரம் பலன் பெறுகிறது. 2 தீமோத்தேயு 1 : 7ல் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல் பலமுள்ள, அன்புள்ள, தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் என்று பார்க்கிறோம். பவுலை அநேக அடிகள் அடித்து நகரத்துக்கு வெளியே போட்டனர். ஆவியானவர் அவரை எழுப்பி விட்டார். அவர் எழுந்து பட்டணத்துக்குள் போனான். மரித்தோரை உயிரோடு எழுப்பும் வல்லமை அவருக்கு மட்டுமே உண்டு. இயேசு ஒருவரே மீட்பர். சரீரத்துக்குரிய பலனையும், ஆத்மாவுக்குரிய பலனையும், அன்பையும் கொடுக்கிறவர் அவரே. இயேசுவின் அன்பானது இச்சைகளை அழித்து, மனதுக்குள் தெளிந்த புத்தியைக் கொடுக்கிறது. இயேசுவிடம் வருந்திக் கேட்கும்போது அதை நிச்சயமாகத் தந்தருளுவார்.
நாம் அறிந்து கொள்ள வேண்டியது:
தேவன் நம்முடைய ஜெபத்தைக் குறித்து அக்கறையுள்ளவராயிருக்கிறார். சிலர் தங்கள் ஜெபத்தைத் தேவன் கேட்பதில்லையென்றும் அதற்குப் பதில் கொடுப்பதில்லையென்றும் நினைக்கின்றனர். சில ஜெபங்களுக்குத் தேவன் இல்லை என்று பதில் சொல்வார். அந்தப் பதிலைக் கேட்க நமக்கு விருப்பமில்லை. ஏன் இல்லையென்கிறாரென்றால் நமக்கு எது சிறந்ததோ அதையே நாம் கேட்கிறோம். தேவனுடைய சித்தத்தின்படி கேட்பதில்லை. அவர் அதைத் தராதது நல்லதென்று பின்னால் நம்மால் உணர முடியும். தேடுங்கள், கேளுங்கள் தட்டுங்கள் என்று கூறியிருப்பதால் எல்லா விண்ணப்பங்களையும் கர்த்தருடைய பாதத்தில் கொண்டு செல்வோம். நமக்குத் சரியான பதிலை மாத்திரமே அவர் தருவார். ஜெபிக்கப் போவதற்கு முன்பே அவர் என்னுடைய தகப்பன் என்ற உறுதியுடன் கேட்க வேண்டும். இயேசு நமக்காக மரித்து உயிரோடெழுந்தார். அவருடைய நீதியினாலே நாம் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோம். இந்த சத்தியத்தை நாம் விசுவாசிக்கும் போது, அவரது பரிசுத்தமான சபையில் ஞானஸ்தானம் பெறும்பொழுது பிதாவே என்று அழைக்கும் உரிமையைப் பெறுகிறோம். தன்னுடைய பிள்ளை மீனைக் கேட்டால் பாம்பை எந்த தகப்பனும் கொடுக்க மாட்டான். அதேபோல் இங்கே பரிசுத்தஆவியைக் கேட்கும்படியாக இயேசு கூறுகிறார். பரிசுத்த ஆவியை அவர்கள் கேட்டதாக வேதத்தில் இல்லை. யோவான் 20 : 22ல் இயேசுவே அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பெந்தகோஸ்தே நாள் வரை அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவில்லை. அந்த நாளில் இயேசு அவர்களுக்கு பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவரே ஒருவனை கிறிஸ்துவுக்குள் கொண்டு வருகிறவர். அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள். இந்த பரிசுத்தாவியின் நிறைவு நம் எல்லோருக்கும் தேவை (1 கொரிந்தியர் 12 : 13). நாம் அந்த பரிசுத்த ஆவியானவரின் நிறைவைப் பெற்று தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக எழும்பிப் பிரகாசிக்க வாஞ்சிப்போம். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.