Menu Close

பத்து இராத்தல் – லூக்கா 19 : 11 – 27

இயேசு எரிகோவிலிருந்து எருசலேமை நோக்கி பதினேழு மைல் தூரம் சீஷர்களுடன் பயணமாகும் போது, இந்த உவமையைக் கூறினார். மத்தேயு 25 : 14 – 30ல் கூறப்பட்ட தாலந்து உவமை வேறு. இந்த உவமை வேறு. தாலந்து உவமை ஒலிவமலை சம்பவத்திற்குப் பின் கூறப்பட்டது. எருசலேம் தேவனுடைய ராஜ்ஜியம். எருசலேமில் ஒவ்வொரு ஆண்டும் பஸ்காவை ஆசரிக்கும் போது தேவன் தம்மை ரோமரிடமிருந்து விடுவிக்க மேசியாவை வருவார் என்று எதிர்பார்த்தனர். இயேசு தம்முடைய ராஜ்ஜியத்தைச் சீக்கிரமாய் ஸ்தாபிப்பார் என்று நினைத்தனர். ஆனால் இயேசுவோ ஜனங்களுக்காக சிலுவையில் மரிக்கப் போகிறார் என்பதை அறியாதிருந்தார்கள். இது ஊழியர்களுக்கும், சத்துருவுக்குமிடையே நடக்கின்ற ஒரு பெரிய போராட்டத்தைக் குறிக்கின்றது. இந்த உவமையை லூக்கா 19 : 12 – 26ல் பார்க்கிறோம். ஊழியர்கள் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பணியில் உண்மையாக இருக்க வேண்டுமென்பதை இந்த உவமை கூறுகிறது. 

பிரபு தூரதேசத்துக்குப் போகும்போது செய்தது:

லூக்கா 19 : 12, 13 “பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.”

“புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.’

இதில் கூறப்பட்ட பிரபு என்பவன் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவன். இவன் தூரதேசத்திற்கு ராஜாவாக போகிறானென்றால் அன்றைக்குள்ள காலகட்டத்தின்படி அநேக ராஜாக்கள் இருந்தனர். அநேக ராஜாக்கள் இருந்தாலும் அவர்களுக்குள் தெரிந்தெடுத்து ஏரோது என்ற பெயர் சூட்டப்படுவார்கள். அதற்குப் பதிவு செய்ய வேண்டுமென்பதற்காக ரோமாபுரிக்குப் போகிறான். ஆனால் இயேசு தானாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை. பிதாவே அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார் (பிலிப்பியர் 2 : 9 – 11) இயேசு பிறந்தவுடன் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கேயென்று சாஸ்திரிகள் ஏரோது ராஜாவிடம் கேட்டனர் (மத்தேயு 2 : 2). 

அவன் தூர தேசத்திற்குப் புறப்படும் போது தன்னுடைய ஊழியக்காரரில் உண்மையுள்ள 10 பேரை கூப்பிட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய திரவியத்திலிருந்து 10 ராத்தல் திரவியங்களைக் கொடுத்து ஒரு கட்டளையிடுகிறான். ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி முதலீடு கொடுக்கப்பட்டது. தான் திரும்பி வருகிற வரை அதை வைத்து வியாபாரம் பண்ணுங்கள் என்று கூறிச்சென்றார். இதில் 10 ராத்தல் என்பது பெரிய தொகை. இந்தப் பணம் அவர்களுக்கு மூன்றுமாத சம்பளமாகும். இந்த உவமையில் பிரபுவாகிய ஒருவன் என்பது இயேசுவைக் குறிக்கிறது. ராத்தல் என்பது சுவிசேஷத்தைக் குறிக்கிறது. 

பிரபு தூரமாய் செல்லும்போது அவனது ஊழியக்காரர் கையில் ஒவ்வொருவருக்கும் ராத்தல்களைக் கொடுத்ததைப் போல, இயேசுவும் தம்முடைய ஊழியக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் தாலந்துகளை, வரங்களை, வாய்ப்புகளை, திறமையைக் கொடுத்திருக்கிறார். அதைக் குறித்து நாம் அவருக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அவைகளை வைத்து சுவிசேஷம் அறிவிக்க வேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கடமை. வியாபாரம் பண்ணுங்கள் என்பது தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படுவதாகும். தேவனுடைய ராஜ்ஜியத்துக்குத் திரளான ஜனங்களைச் சேர்க்கப் பாடுபட வேண்டும் என்பதுமாகும். பரலோகத்திற்குச் செல்ல அவர்களைத் தகுதிப் படுத்த வேண்டும். உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்றும், அவர்களுக்குப் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்றும் இயேசு மகாப்பெரிய கட்டளையைக் கொடுத்துப் பரலோகம் சென்றதை மத்தேயு 28 : 19, 20ல் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவரின் வரங்களும், ஊழியங்களும், திறமைகளும் வித்தியாசமாக இருந்தாலும், அவைகளைக் கொண்டு தேவனுடைய ராஜ்ஜியத்தின் பணியைச் செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர், வெவ்வேறு மொழி, வெவ்வேறு தேசமாயிருக்கலாம். ஆனால் பணி ஒன்றே. நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு ஒரு பெரிய பட்டணமாகவோ, ஒரு சில மக்களாகவோ இருக்கலாம், அல்லது உங்கள் வீட்டை உங்கள் கரத்தில் கொடுத்திருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் நீங்கள் அதில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். 

ஊரார் செய்ததும், பிரபு ஊழியரை அழைத்ததும்:

லூக்கா 19 : 14 – 15 “அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.”

“அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.”

ஆனால் அவனுடைய ஊரார் அவன் ராஜாவாகிறது தங்களுக்குப் பிரியமில்லையென்று சொல்வதற்காக அவனுக்குப் பின்னே ஸ்தானாதிபதிகளை அனுப்பினர். இங்கு ஊரார் என்பது சத்துருக்களைக் குறிக்கிறது. அதேபோல் இயேசுவை எதிர்த்து பெரும்பான்மையான மக்கள் நின்றனர். எருசலேமில் ராயனேயல்லால் எங்களுக்கு வேறே ராஜா இல்லையென்றனர் (யோவான் 19 : 15). அவர்கள் தேவனுக்கும், மேசியாவுக்கும் விரோதமாகக் கலகம் பண்ணினார்கள், எதிர்த்தார்கள், புறக்கணித்தார்கள். அவர்கள் மேல் இயேசு அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. எனவே சிலுவையில் அவரை ஆணி அடித்தனர் (மாற்கு 15 : 24). சீஷர்கள் மட்டும் அவரோடிருந்தனர். அந்தப் பிரபு ராஜ்ஜியத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்தபின்தான் திரவியம் கொடுத்த நபர்கள் சம்பாத்தியம் பண்ணியது எவ்வளவு என்றறிய அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் கணக்கு கேட்கிறார். பத்து பேரிடம் கொடுத்தாலும் 10 பேரில் மூன்று பேரை மாத்திரமே இயேசு இந்த உவமையில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆண்டவர் காட்டுகிற மூன்று காரியங்களை இதில் பார்க்கலாம். ஒன்று இந்த எஜமான் ஒவ்வொருவரிடமும் பத்து இராத்தல்கள் கொடுத்து சம்பாத்தியம் பண்ணக் கூறுகிறார். ஆனால் அவர்களைக் கண்காணிக்க யாரையும் நியமிக்கவில்லை. கண்காணி இல்லா விட்டாலும் எப்படிப்பட்டவர்களாக நடந்து கொண்டார்களோ, அதன்படி அவர்களுக்கு அதற்குரிய பிரதிபலனை எஜமான் இந்த உவமையில் கொடுத்தார். அதேபோல் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நம்மிடம் கணக்கு கேட்பார். அதற்கேற்ற பலனையும் கொடுப்பார். 

இரண்டு ஊழியர்களின் பதிலும் பிரபு கொடுத்த வெகுமதியும்:

லூக்கா 19 : 16 – 19 “அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.”

“எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.”

“அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.”

“அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.”

பிரபு 10 நபருக்கு கொடுத்தாலும் 7 பேர் கணக்கு கொடுக்கவில்லை. 3 பேர் மட்டுமே கொடுத்தனர். 10 குஷ்டரோகிகள் இயேசுவிடம் தன்னுடைய வியாதியை குணமாக்க வேண்டினர். அனைவரையும் குணமாக்கி இயேசு அனுப்பி ஆசாரியர்களிடம் காட்டச் சொன்னார். அதில் 9 யூதனும் திரும்பி வந்து இயேசுவிடம் நன்றி கூறவில்லை. ஒரு சமாரியன் மட்டுமே திரும்பி வந்து நன்றி சொல்லி இரட்சிப்பைப் பெற்றான். ஊழியத்தில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது முக்கியமல்ல. கடைசிவரை எத்தனைபேர் நிற்கிறார்கள் என்பது தான் முக்கியம். வியாபாரம் செய்து பெருகப் பண்ணினர். வெகுமதி எதுவும் தருவதாகக் கூறாவிட்டாலும் 3 பேர் அதை பெருக்கமடையச் செய்கின்றனர். இது அவர்களது உண்மையையும், உத்தமத்தையும் காட்டுகிறது. முதல் நபரை அழைத்து அவன் தான் கொடுத்ததை என்ன செய்திருக்கிறானென்று கேட்டான். பத்து இராத்தல் வாங்கினவன் தான் உழைத்து வியாபாரம் பண்ணி பத்து இராத்தலைக் கூடுதலாக சம்பாத்தியம் பண்ணியதாகக் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட எஜமான் மிகவும் சந்தோஷமடைந்தான். அந்த சந்தோஷத்தில் அவனைப் பார்த்து உத்தம ஊழியக்காரனே என்றழைக்கிறார். அவன் கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருப்பதை அறிந்து அவனை பத்து பட்டணங்களுக்கு அதிகாரியாக நியமித்தான். பின் இரண்டாவது நபரை அழைத்து பிரபு கேட்கிறான். இரண்டாவது நபரும் பத்து இராத்தல் கொடுத்தும் அவன்தான் உழைத்து சம்பாதித்து மேலும் 5 இராத்தல் சம்பாதித்ததாகக் தன்னுடைய பிரபுவிடம் கூறுகிறான். அதைக் கேட்ட பிரபு அவனை ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாக நியமித்தான். 

மூன்றாவது ஊழியனின் பதிலும் பிரபுவின் கோபமும்:

லூக்கா 19 : 20 – 23 “பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.”

“நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.”

“அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,”

“பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;”

மூன்றாவது நபரிடம் பத்து இராத்தல் கொடுத்தும் அவன் உழைக்கவோ சம்பாத்தியம் பண்ணவோ இல்லாமல் ஒன்றுமே பண்ணவில்லை என்று கூறுகிறான். இந்த மூன்றாவது நபர் தன்னுடைய எஜமானைப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தான். ஆனால் பயந்ததாகக் கூறுகிறான். மேலும் அவரைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறுகிறான், தன்னுடைய எஜமான் வைக்காததை எடுக்கிறவரென்றும், விதைக்காததை அருக்கிறவரென்றும், கடினமுள்ள மனுஷனென்றும் கூறுகிறான் அத்தனை பயத்தில் இருந்தும் அவன் உழைக்கவோ அதற்கான முயற்சி செய்யவோ இல்லை. எஜமான் எப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை அதனால் எஜமான் அவனைப் பார்த்து தன்னைப் பற்றி இத்தனை அறிந்தும் தன்னுடைய பணத்தை ஏன் காசுக்கடையில் போட்டு வைக்கவில்லையென்று கேட்கிறார். அவ்வாறு அவன் போட்டிருந்தால் தான் வட்டியோடு வாங்கியிருப்பேனே என்கிறார். ஒன்றுமே சம்பாத்தியம் பண்ணாத மூன்றாவது நபருக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதைப் பார்க்கிறோம். இவன் “மன்னிக்கவும் நான் எவ்வளவோ முயன்றேன். ஆனால் என்னால் வியாபாரத்தில் வெற்றிபெற முடியவில்லை என்று கூறியிருந்தால் எஜமானின் கருணை கிடைத்திருக்கும். ஆனால் அவன் அவ்வாறு சொல்லவில்லை. யாருமே பார்க்காத போது அவர்கள் எப்படிப்பட்டவர்களாக சம்பாத்தியம் பண்ணினார்கள் என்று வேதம் காட்டுகிறது. யாருமே பார்க்காத போது எப்படிப்பட்டவர்களாக நாம் இருக்கிறோம். நாம் தலைமை அதிகாரிகள் பார்க்காத போது நாம் எவ்வாறு வேலை செய்கிறோம். நம்முடைய பெற்றோர்கள் பார்க்காத போது நம்முடைய நடத்தை எப்படி இருக்கிறது இருந்தது, இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கவேண்டும். 

கர்த்தருடைய கண்கள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் பார்த்துக் கொண்டே இருக்கிறது கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய அசைவையும் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாமும் அதேபோல் நமக்குத் தேவன் கொடுத்திருக்கிற ஊழியம், குடும்பம், நண்பர்கள், சொந்தங்கள், வரங்கள், தாலந்துகள் எல்லாவற்றிற்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இந்த எஜமானைப் போலல்லாமல் நம்முடைய தேவன் எல்லாவற்றையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். நமக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்த பின்தான் மனுஷனை படைத்தார். நமக்கு இவைகள் அனைத்தும் போக தாலந்துகளையும் கொடுத்திருக்கிறார். அவைகள் அனைத்திற்கும் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். சாதாரண நேரங்களில் நல்லவர்களாக வாழ முடியும். ஆனால் நெருக்கடியான காலங்களில் நாம் எவ்வாறு வாழ்கிறோம், அந்த நேரத்தில் தேவனோடு நமக்கு இருக்கிற விசுவாசம் எவ்வாறு இருக்கிறது என்பதை உணரவேண்டும். நாம் உபத்திரப்படும் பொழுது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதைப் பார்த்து தேவன் நமது எதிர்காலத்தை நியமிக்கிறார். கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தவன் 10 பட்டணங்களைப் பெற்றுக் கொள்ளுகிறான். நாமும் ஏழைகள் படிப்பறிவில்லாதவர்கள் என எந்தத் திறமையும் இல்லாதவர்களாக இருக்கலாம். நமக்குக் கொடுத்திருக்கிற கொஞ்சத்தில் உண்மை உள்ளவனாக இருந்தால், நாம் அநேக ஆசிர்வாதங்களைப் பெறமுடியும். 

நாம் தேவனிடம் உண்மையும் உத்தமுமாக இருக்க வேண்டும். கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கிறவர்களுக்கு தேவன் அநேக ஆசிர்வாதங்களைக் கொடுப்பார் தேவனுடைய ராஜ்ஜியம் சீக்கிரம் வரப் போவதால் நாம் எப்படி இருக்கிறோம் என்று நினைக்க வேண்டும். இயேசு என்னையல்லாமல் உங்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம் அதனால் தேவனிடம் நம்மிடமிருப்பதை ஒப்புக் கொடுப்போம். சிலர் அதைக் கொண்டு 5 லட்சம் சம்பாதிக்கலாம். சிலர் அதைக் கொண்டு 10 லட்சம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கலாம். நினைப்பில் அல்ல செயலில் செய்து காட்ட வேண்டும். இயேசு திரும்பி வரும்போது நமது திறமைக்கேற்ற பலனைக் கொடுக்கிறவராக இருக்கிறார் அவர்கள் ஒவ்வொருவரின் உண்மைக்குத் தக்கதாகவும் பலனளிப்பார். அவர் திரும்ப வரும்போது ஒன்று அவர்களை ஏற்றுக் கொள்வார் அல்லது அழிக்கப்படுவார்கள். முதல் முறை இயேசு வரும்போது ஒரு இரட்சகராக வந்தார். அடுத்த முறை அவர் ராஜாதி ராஜாவாக வரப்போகிறார். 

எஜமான் கொடுத்த தண்டனை:

லூக்கா 19 : 24 – 27 “சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.”

“அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.”

“அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

“அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.” 

எஜமான் கொடுத்த பணத்தை மூன்றாவது நபர் பெருகப் பண்ணாததால் அவனிடம் கொடுத்த பணத்தை எடுத்து பத்து ராத்தல் சம்பாத்தியம் பண்ணினவனுக்குக் கொடுக்க எஜமான் கட்டளையிட்டார். அதற்கு மற்றவர்கள் “அவனிடம் ஏற்கனவே பத்து ராத்தல் இருக்கிறதே” என்றனர். அதற்கு எஜமான் உள்ளவனுக்கு அதாவது எஜமானின் சித்தத்தைச் செய்தவனுக்கு மறுபடியும் கொடுக்கப்படுமென்றும், இல்லாதவனிடத்தில் அதாவது எஜமான் கொடுத்ததை விருத்தி பண்ணாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். அவனுக்குத் தண்டனை கொடுத்ததைப் போல, எஜமான் தான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களை சத்துருக்கள் என்று கூறி அவர்களைத் தனக்கு முன்பாக வெட்டிப்போடக் கட்டளையிட்டார். அதேபோல் இயேசுவின் இரண்டாம் வருகையில் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதராயினும், புறஜாதியராயினும் அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நிச்சயம். தேவனுடைய ராஜ்ஜியத்திற்குரியவர்கள் இயேசுவை ராஜாவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நாம் கற்றுக் கொண்ட பாடம்:

தேவன் நமக்கு முதலில் சிறிய சிறிய வாய்ப்புகளை வழங்குகிறார். அவைகளை நாம் உண்மையுடனும், சிரத்தையுடனும், முழு ஈடுபாடுடனும் செய்யும் போது நமக்குப் பெரிய பொறுப்புகளைத் தருவார். எனவே தேவன் தருகிற சிறிய பொறுப்புகளை ஆத்மார்த்தமாகச் செய்வோம். நாம் நமக்குக் கொடுத்திருக்கிற தாலந்துகள், திறமைகள், ஆசீர்வாதங்கள், ஐசுவரியங்கள் அபிஷேகங்கள், வரங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தின் பணியில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். தேவனுக்குப் பிரியமான பாத்திரராக விளங்கப் பாடுபட வேண்டும். தேவனுடைய விரிவாக்கப் பணிக்காக நம்மைப் பயன்படுத்தும் போது தேவன்சியளிப்பார். நாம் இரட்சிக்கப்படும்போது நம்முடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படும். நாம் செய்கிற எல்லா கிரியைகளும் ஞாபகப்புத்தகத்தில் எழுதப்படப் போகிறார். எனவே இந்தப் புத்தகங்களில் நம்முடைய பெயர் எழுதப்பட பிரயாசப்படுவோம். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Related Posts