இயேசு சில கதைகளை உவமைகளாகக் கூறினார். இந்த உவமையைக் கேள்வியோடு ஆரம்பிக்கிறார். இது இயேசு மூன்றரை ஆண்டுகள் தன்னுடைய ஊழியத்தை முடித்து எருசலேமில் தன்னை வெளிப்படுத்துகிற நேரத்தில் நடந்தது (மத்தேயு 21 : 9). மனம் திரும்பாத ஜனங்களுக்கும், இயேசுவை எதிர்த்த மதத் தலைவர்களுக்கும், பரிசேயர் சதுசேயர்களுக்கும் இயேசு தெளிவாக இந்த செய்தியைக் கொடுக்கிறார். பக்தியுள்ள யூதஜனங்கள் பஸ்கா பண்டிகைக்காக யூதேயா, கலிலேயா போன்ற இடங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் மேசியாவாக கிறிஸ்து உலகிற்கு எப்பொழுது வருவார்? அவர் எப்போது யூதர்களுக்கு விடுதலை தருவார்? எப்போது யூதேயா ரோம ஆட்சியிலிருந்து விடுதலை பெறும்? இப்படிப்பட்ட அரசியல் ரீதியான கண்ணோட்டத்தோடும், ஏக்கத்தோடும் வந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்திலே தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று பாடிக்கொண்டு வந்தனர்.
இதைக்கேட்ட சனகெரிப் சங்கத்தாரரால் இயேசுவை அவர்கள் புகழ்வதையும், அவர் அற்புதம் செய்வதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் இயேசுவைக் குழப்பவேண்டுமென்று நினைத்து உமக்கு இந்த அதிகாரத்தைக் யார் கொடுத்தது என்று கேட்டனர். அவர்களுடைய அறியாமையை, மாய்மாலத்தை வெளிப்படுத்த இயேசு வேறு ஒரு கேள்வியை கேட்டார். யோவான் கொடுத்த ஸ்நானம் யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். குழப்ப நினைத்த அவர்கள் இயேசு கேட்ட கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் குழம்பி நின்றனர். அவர்களோ தங்களுக்குத் தெரியாது என்று பொய் சொன்னார்கள். ஆகையால் இயேசுவும் தானும் எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று சொல்வதில்லையென்றார் (மத்தேயு 21 : 23 – 27). இந்த உவமையை மத்தேயு 21 : 28 – 32ல் பார்க்கலாம்.
தகப்பனும் மூத்த குமாரனும்:
மத்தேயு 21 : 28, 29 “ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.”
“அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.”
ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். அந்த மனிதனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அந்த திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்குப் போகச் சொல்லி தன்னுடைய மூத்த மகனிடம் ஒரு கட்டளை கொடுக்கிறார். இந்த உவமையில் கூறப்பட்ட தகப்பனை பிதாவுக்கும், திராட்சைத்தோட்டத்தை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கும், வேலை என்பது தேவனுடைய சித்தத்தைச் செய்வதையும் ஒப்புமைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. இதில் மூன்று காரியங்களைக் குறிப்பிடலாம். தோட்டத்திலுள்ள வேலைகளைச் செய்யக் கூலியாட்களை வைக்கலாம். அவர்கள் சம்பளத்திற்காக வேலை செய்வர். மகனைப் போல வேலை செய்ய மாட்டார்கள். தகப்பனுக்கு மகனிடம் வேலை வாங்க உரிமை இருப்பதால் கட்டளையிடுகிறார். சோம்பேறியாக இருக்கக் கூடாது என்பதினால் அவனுக்கு வேலை கொடுக்கிறார். மேலும் அதை இன்றைக்குப் போய் வேலை செய் என்கிறார். போன காலம் திரும்பி வராது என்பதைத் தகப்பன் அறிந்திருந்ததால் இன்றைக்குப் போ என்கிறார். இன்றைக்குச் செய்ய வேண்டியதை இன்றே செய்ய வேண்டும். இதை
யோவான் 9 : 4ல் “ பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.”
என்று யோவான் அப்போஸ்தலன் கூறியதைப் பார்க்கிறோம். கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வரப்போவதால் அதற்கு முன் தேவன் கொடுக்கிற வேலையை நாம் செய்ய வேண்டும். இன்றைக்கு அவர் கொடுத்த காலங்களைக் கொண்டு, திறமையைக் கொண்டு, பலத்தைக் கொண்டு, தரிசனத்தைப் பார்த்து அவருக்காகப் பாடுபட வேண்டும். நீங்கள் செய்யவில்லை என்றால் வேறு யாரைக் கொண்டாவது தேவன் செய்வார். ஆசீர்வாதத்தை இழந்து போவீர்கள். உலகத்தில் இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறலாம். நாட்களையும், காலத்தையும் திரும்பப் பெற முடியாது. நாட்கள் பொல்லாதவைகள் ஆனதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். மூத்தவன் சுதந்ததிரமாக வாழ நினைக்கிறவன். கோபத்தில் மாட்டேன் என்று கூறிப் போக மறுக்கிறான். ஏனெனில் அவனுக்கு அதில் விருப்பமில்லை. இரண்டாவது கஷ்டப்பட்டு வேலை செய்ய அவனுக்கு மனமில்லை. மூன்றாவது வேறு காரணங்களும் இருக்கலாம். அது அவனது கீழ்ப்படியாமையைக் காட்டுகிறது. கர்த்தர் சொன்னதை நாம் செய்யாவிட்டால், அது நன்றியற்ற தன்மையைக் காட்டும். நமக்குள்ள வழியில் போக நினைத்தால் அவர் தருகிற ஆசீர்வாதத்தை நிராகரித்து கீழ்ப்படியாமல் போகிறோம் என்று பொருள். அதனால் நித்தியத்தில் உள்ள பலனும் கிடைக்காமல் நஷ்டப்பட்டுப் போய் விடுவோம். மூத்த மகன் தகப்பன் கூறியதை நிராகரித்து விட்டேனே என்ற உணர்வடைந்து மனஸ்தாபப்பட்டான். அதன்பின் திராட்சைத் தோட்டத்திற்குப் போய் தகப்பன் சொன்ன வேலையைச் செய்தான். இது மூத்தவன் எடுத்த நல்ல முடிவு.
தகப்பனும் இளைய குமாரனும்:
மத்தேயு 21 : 30 “இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.”
இளையவனிடத்திலும் தகப்பன் அதேபோல் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் போய் வேலை செய்யச் சொல்லிக் கட்டளையிடுகிறார். அதற்கு இளையவன் போவதாகத் திட்டமாகக் கூறுகிறான். ஆனால் செயலில் அவன் காட்டவில்லை. அவன் வாக்குறுதி கொடுத்தும் போகவில்லை. அது பொய்யான வாக்குறுதி. மனதிலே விருப்பம் இருந்தாலும் அதை நிறைவேற்றும் தன்மை அவனிடம் இல்லை. போகிறேன் என்று சொல்லியும் போகவில்லை. இதுவும் கீழ்ப்படியாமையைக் காட்டுகிறது. இப்படிப்பட்டவர்கள் எப்படியிருப்பார்களென்று பவுல்,
தீத்து 1 : 16 “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.” என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
தேவன் சொல்லியும் நாம் அதை செய்யவில்லையென்றால் கீழ்ப்படியாத பிள்ளைகளாக, அருவருக்கத்தக்கவர்களாகத்தான் இருப்போம். சுயநீதியுடைய பரிசேயர்களும், சதுசேயர்களும் இளையவனைப்போல யோவான்ஸ்நானகனைப் பார்த்தும், அவனுடைய போதனைகளைக் கேட்டும் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னால் இயேசுவின் போதனைகளைக் கேட்டும் அவர்கள் மனந்திரும்பவில்லை. அதற்காக மனஸ்தாபப்படவுமில்லை. அதன்பின் இயேசு பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பரிசேயர்களிடமும், சதுசேயர்களிடமும் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அது என்னவென்றால்
மத்தேயு 21 : 31 “இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள்.”
அதற்குக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தகப்பனின் சித்தத்தின்படி செய்தவன் மூத்தவன் தான் என்று சரியான பதிலைக் கூறினர். மூத்தவன் பரவாயில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது. இரண்டு பேரும் தகப்பனைக் கனவீனப்படுத்தினர். மூத்தவன் வார்த்தையினால் கனவீனப்படுத்திச் செயலில் கனப்படுத்தினான். இளையவன் வார்த்தையில் கனப்படுத்தி செயலில் கனப்படுத்தவில்லை.
இயேசு கொடுத்த விளக்கம்:
மத்தேயு 21 : 31, 32 “அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
“ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.”
பரலோகராஜ்ஜியம் மதத்தலைவர்களுக்கு உரியதல்ல. தேவனுடைய சித்தத்தைச் செய்தவர்களுக்குத்தான் அது உரியது. பணிவிடைக்காரனாக இருப்பவனே பரலோகராஜ்ஜியத்தில் நுழைய முடியும். இயேசு அதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார் என்றால் மூத்த குமாரனை சமுதாயத்தில் மட்டரகமான பாவிகளாகக் கருதப்பட்ட ஆயக்காரர்களுக்கும், பாவிகளுக்கும் ஒப்பிடுகிறார். இன்னொரு பக்கத்தில் தங்களையே நீதிமான்களாகக் கருதிக்கொள்கிற மதவாதிகள் வேதபாரகர் பரிசேயர்களுக்கு இரண்டாவது மகனை ஒப்பிடுகிறார். ஆயக்காரரும், வேசிகளும் யோவான்ஸ்நானகனின் செய்தியைக் கேட்டு அநேகர் மனம் திரும்பினார்கள். அதன்பின் இயேசுவின் போதனையைக் கேட்டுத் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்து விட்டனர் (லூக்கா 3 : 12, 7 : 29 – 30). மத்தேயுவும், சகேயுவும் ஆயக்காரர்கள்தான். மத்தேயு மனந்திரும்பி சீஷனானான். சகேயு மனந்திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டான். பரிசேயரும் வேதபாரகரும் நியாயம் பேசினார்கள். ஆனால் யோவான்ஸ்னானகனின் வார்த்தைகளை விசுவாசிக்கவில்லை. யோவான்ஸ்நானகனிடம் ஞானஸ்தானமும் பெறவில்லை. அவர்களைப் பார்த்தாவது இயேசுவை விசுவாசிக்கவோ, அதற்காக மனஸ்தாபப்படவோ இல்லை. அதனால் தான் இயேசு பிந்தினோர் முந்தினோராக இருக்கிறார்கள் என்றார். இதை இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில்,
மத்தேயு 7 : 21 “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” என்று கூறியதைப் பார்க்கிறோம்.
கர்த்தருடைய சித்தத்தின்படி நடந்தால் மட்டுமே பரலோகத்தில் பிரவேசிக்க முடியும் என்று இயேசு கூறியதைப் பார்க்கிறோம். திராட்சைரசம் குறைபட்டபோது மரியாள் அவர் என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்யுங்கள் என்று கூறியதை யோவான் 2 : 5ல் பார்க்கிறோம். அவர்களைப் பார்த்துதான் இயேசு
மத்தேயு 23 : 12 , 13 “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”
“மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.”
என்று சொல்லுகிறார். கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தர் சொல்லுகிறபடி தன்னைத் தாழ்த்த வேண்டும். யூதர்கள் புறஜாதிகளை அடிமைகளாக வைத்திருந்தனர். யூதர்கள் தங்களைத் தேவனுடைய பிள்ளைகள் என்கின்றனர். யூதர்கள் மேசியாவாக இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. . பரிசேயர்களும், சதுசேயர்களும் பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைய இடங்கொடாதது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அதில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று இயேசு கூறுவதைப் பார்க்கிறோம்.
ஆபிரகாம், மோசே, ஏசாயா, பவுலின் வாழ்க்கையில் நடந்தது:
கர்த்தர் ஆபிரகாமிடம் அவனுடைய ஒரே மகனை மோரியா தேசத்திலுள்ள மலைக்குப் போய் அவனைத் தகனபலியிடக் கட்டளையிட்டார். அதுவும் கர்த்தர் ஆபிரகாமிடம் கூறும்போது முதலாவது மகனை அழகாய் வர்ணித்தார். உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனும் என்று கூறி அவனைப் பலியிடக் கட்டளையிட்டதைப் பார்க்கிறோம். அது எவ்வளவு கொடுமையான காரியம். தூர தேசத்திற்கு மகனை நடத்திக் கொண்டு போக வேண்டும். 3 நாட்கள் பிரயாணப்பட வேண்டும். தன்னுடைய செல்ல மகனல்லவா எவ்வாறு என்னுடைய கையால் பலியிடுவேன் என்று மறுப்பு ஏதும் சொல்லாமல், கர்த்தரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து சென்று, அவர் கூறியபடி செயல்பட்டார். கர்த்தர் அவனைத் தடுத்து நிறுத்தி அவனுடைய கீழ்படிதலைப் பார்த்து ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதத்தைக் கொடுத்து விசுவாசத்தின் தகப்பனாக்கினார் என்று பார்க்கிறோம் (ஆதியாகாம் 22 : 1 – 18) .
இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையிலும் அவர்கள் கட்டளையை மீறினதைப் பார்க்கலாம். யாத்திராகமம் 19 : 3ல் மோசேயிடம் தேவன் கற்பித்த அந்த வார்த்தைகளை ஜனங்களிடம் சொல்லச் சொன்னார். ஜனங்கள் எல்லோரும் செய்வோம் என்று பிரதியுத்தரம் செய்தார்கள். மோசே இதைக் கர்த்தரிடம் தெரிவித்தான். யாத்திராகமம் 32ஆம் அதிகாரத்தில் மோசே வரத் தாமதமானதால், இனி அவர் வரமாட்டாரென்று அவர்களுக்கென்று தெய்வத்தை உண்டாக்குவோம் என்று ஆரோனிடம் சொல்லி கன்றுக்குட்டியைச் செய்தனர். இந்தத் தெய்வம் தான் நம்மைக் கொண்டு வந்தது என்று கூறினர். கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல் கர்த்தரின் கட்டளைகளை மீறினர். இதை பவுல்
1 கொரிந்தியர் 4 : 20ல் “தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.”
என்று கூறுகிறார். இதை அந்த ஜனங்கள் அப்போது உணரவில்லை. மேலும் ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 29 : 13ல் “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.” என்றார்.
இதன் பொருள் முழுமனதோடு கர்த்தரைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான். மோசே தேவனைப் பற்றும் விசுவாசத்தினால் பார்வோனுடைய குமாரத்தியின் மகனாக இருப்பதைவிட தேவ ஜனங்களோடு துன்பத்தை அனுபவிப்பதைத் தெரிந்து கொண்டான். ஜனங்களை அவர் எவ்வாறு நேசித்தார் என்பதை இதிலிருந்து அறிகிறோம். பவுலை தேவன் அழைத்து பரம தரிசனத்தை பார்க்கச் செய்தார். உலகம் அனைத்தையும் நஷ்டமும் குப்பையுமாகப் பார்த்தான். பரலோக ராஜ்யத்திற்காக அத்தனை பாடுபட்டான். சிறையில் அடைக்கப்பட்டான் . கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் எதற்காக சிருஷ்டிக்கப் பட்டோமென்று பவுல்
எபேசியர் 2 : 10ல் “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.”
என்று நாம் நற்கிரியைகள் செய்வதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுகிறார். தொற்காள் நற்கிரியைகளைச் செய்தாள். அதனால் அவளுடைய ஜீவன் திரும்ப வந்தது. ஏனெனில் இயேசு வாக்கிலும், செய்கையிலும் வல்லமையுள்ளவராக இருந்தார் (லூக்கா 24 : 19). எல்லோரையும் தேவன் அழைக்கவில்லை தேவன் அழைக்கும் நபர் எவ்வாறிருக்க வேண்டுமென்றும், யாராக இருக்க வேண்டுமென்றும் அழைத்திருக்கிறாரென்று
எபேசியர் 1 : 4 – 6 “தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,”
“பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,”
“தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.”
இயேசுவின் நாமத்தினாலே பரலோகம் நம்மை முன் குறித்திருக்கிறது. சுவிசேஷம் அறிவிப்பது நம்முடைய தலையில் விழுந்த கடமை. நாம் ஆண்டவருடைய திராட்சைத் தோட்டத்தில் நமக்கென்று ஆண்டவர் வைத்திருக்கிற வேலையைச் செய்ய வேண்டும். ஆண்டவர் கேட்பார் “உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாயென்று.” கர்த்தருக்காகச் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். கிதியோனைப் பார்த்து பராக்கிரமசாலியே உனக்கிருக்கிற பலத்தோடு போ என்கிறார். அவனும் போய் ஜெயம் பெற்றான். நாம் போனால் நமக்கு முன்னால் கர்த்தர் சென்று கோணலானவைகளைச் செவ்வையாக்குவார். மோசேயையும், யோசேப்பையும் எகிப்துக்கு கர்த்தர் அனுப்பி அவர்களோடு கூடப் போனார். சிறைச்சாலையில் யோசேப்போடு கூட கர்த்தர் இருந்தார். தேவ காரியத்தை நாம் செய்தால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
நாம் கற்றுக் கொண்ட பாடம்:
இதில் தகப்பன் இருவருக்கும் ஒரே வேலையைத்தான் கொடுத்தார். ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. தேவனின் திராட்சைத்தோட்டமாகிய பரலோகத்தில் வேலை செய்ய பிள்ளைகளாகிய நம்மை அழைக்கிறார். “என் வேலைக்கு நீ ஆயத்தமா என்றும், சுவிசேஷப் பணிக்கு நீ ஆயத்தமா என்றும், பரலோக ராஜ்யத்திற்கு ஒரு கூட்டத்தைச் சேர்க்க நீ ஆயத்தமா என்றும் தேவன் நம்மைப் பார்த்துக் கேட்கிறார். இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட அனைவரும் இயேசுவின் பிள்ளைகள்தான். ஊழியத்திற்குப் போக அனேகருக்குப் பயம். அதேபோல்தான் மூத்த மகனும் மனஸ்தாபப்பட்டு போனான் இரண்டாவது மகன் மாய்மாலமான வாழ்க்கை வாழ்கிறவன். சரி என்று கூறியும் போகவில்லை. கர்த்தர் அவனை வெறுக்கிறார். தேவனுடைய பணிக்கு தேவன் நம்மை அழைக்கும் பொழுது போகிறேன் என்று சொல்லி, ஊழியம் செய்யத் தயாராகச் செல்ல வேண்டும். தேவன் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நம்முடைய தொழில், பணம், புகழ், அழகு இவைகளைப் பார்த்துக் கர்த்தர் நம்மை அழைக்கவில்லை. நம்மை நம்பி அழைத்திருக்கிறார். நம்முடைய அழைப்பு மாறாதது. தேவனுடைய காரியத்தைத் தள்ளிப்போடக் கூடாது. நாளைக்குப் பிறப்பதை நாம் அறியோம். இன்றைக்கே ஒப்புக்கொடுப்போம். நன்மையும், ஆசீர்வாதமும் நம்மைத் தேடி வரும். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.